2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

அரசியல் கலகப்பாதை அல்ல

Editorial   / 2020 ஜனவரி 13 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விரான்ஸ்கி

ஜனாதிபதித் தேர்தலுடன் ஸ்ரீ லங்காவில் வெளிப்பட்டிருக்கும் கசப்பான உண்மை என்ன என்று கேட்டால், சிறுபான்மைக் கட்சிகளுக்கான பெறுமதி, முற்றிலும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதே ஆகும்.   

இது சகலருக்கும் தெரிந்த, ஒரு வெளிப்படை உண்மை. ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக இருந்தாலும், ஸ்ரீ லங்கா அரசியலின், இன்றைய கள யதார்த்தம் இதுதான்.  

இருந்தாலும், அரசியல் நாகரிகம் கருதி,  வெளிப்படையாக ‘ஜனநாயகம் முலாம்’ பூசிய அறிக்கைகளை வெளியிட்டுக் கொள்ளவேண்டும் என்ற வழமை கருதி,  வெற்றிபெற்ற தரப்பும் சரி, தோல்வியடைந்த சிறுபான்மைக் கட்சிகளும் சரி, இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள் இல்லை.  ஆனால், இது மக்களுக்கே மிகத்தெளிவாகப் புரிந்துபோன உண்மை.  

அப்படியானால், இது எந்த வகையில், நாட்டுக்கு ஆபத்தானது? இது எவ்வாறு, வரலாற்றை மீள்திருத்தம் செய்யப்போகிறது அல்லது, மீண்டும் குழியில் தள்ளிவிடப் போகிறது.  

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர், கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதுபோல, இம்முறை, அவர் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம்தான், அரியணை ஏறியிருக்கிறார். சிறுபான்மைக் கட்சிகள், அவரை முற்றாகப் புறக்கணித்திருந்தாலும், எதிர்காலத்தில் அதைத் தான் கணக்கெடுக்கப்போவதில்லை என்பதை, அவரே சொல்லாமல் சொல்லிவிட்டார்.  

ஆனால், சிறுபான்மைக் கட்சிகளின் கடந்தகால நிலைப்பாடுகளை எடுத்து நோக்கினால், அவற்றில் பெரும்பாலானவை, ஏற்கெனவே தங்களின் இருப்பைச் சிங்களப் பெருந்தேசியத்தின் காலடியில், அடகுவைத்துக் கொண்டுதான், அரசியல் நடத்தியவை என்பது எல்லோருக்கும் தெரியும்.  

அதாவது, மலையகக் கட்சிகள், மஹிந்தவுடன் ஒன்றித்துப்போய் நின்றன. கொழும்பில், மனோ கணேசன் ஐக்கிய தேசிய கட்சியுடன் நின்றார். முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில்தான் தேர்தல்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.  

ஆக, இந்தக் கட்சிகள் அனைத்தும் தனித்தனியே அரசியல் தத்துவங்களை, மேடைகளில் பேசிக்கொண்டாலும், தங்களுக்குப் பெருமைமிக்க அரசியல் கொள்கைகள் உண்டு என்று, வார்த்தைக்கு வார்த்தை பீற்றிக்கொண்டாலும், தேர்தல் என்று வருகின்றபோது, கூட்டுச்சேர்வது என்ற பெயரில், பேரினவாதக் கட்சிகளின் காலடியில் சரணாகதியடைந்து கிடந்து, மக்களிடம் வாக்குக்கேட்பது வழமையாகிவிட்டது.  

இதில், தமிழ் கட்சிகள் மாத்திரம்தான், சுயமாகத் தங்கள் சின்னத்தில், தேர்தலில் போட்டியிட்டு, ஏகோபித்த வெற்றியைப் பெற்று வந்திருக்கின்றன. அவர்கள், தங்கள் சுயத்தை இழக்கவுமில்லை; கொள்கையில் சோரம்போகவுமில்லை. 

இதற்குக் காரணம், தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்கான நியாயப்பாட்டைத் தமிழர்கள் மத்தியில் வலியுறுத்திச் சென்ற ஆயுத வழியிலான போராட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, வியாபித்த அரசியல் அடித்தளத்தை வழங்கியிருந்தது; 

அந்தக் கட்சிக்கு, அசைக்க முடியாத அரசியல் தகுதியைக் கொடுத்திருந்தது;

மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருந்தது;

அந்தத் தரப்பினரே, மக்களின் நேர்மையான பிரதிநிதிகளாக முன்நிற்பர், முன் நிற்கவேண்டும்  என்ற உறுதியைக் கொடுத்திருந்தது.  

நாடெங்கும் தேர்தல், சூறாவளிப் பெரும் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம், சிறுபான்மைக் கட்சிகள், கூட்டணிக்காகக் குத்துக்கரணம் அடிக்கும்போதெல்லாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் திமிரோடு, தனது அரசியலைத் தங்களின் மக்களிடம் போய்ச்சொல்லக்கூடிய திராணி இருந்தது.  ஆனால், அப்படிப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல், இறுமாப்புக்கு இன்று பெரும் அடியைக் கொடுத்திருக்கிறது, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்.  

அதாவது, எல்லாத் தேர்தல்களிலும் தனித்துவத்துடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தென்னிலங்கையில் தீர்மானிக்கும் சக்தியாகத் தன்னை முன் நிறுத்தியது. எதிர்க்கட்சி ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் வரைக்கும் தன்னை முன் நகர்த்தியிருந்தது.  

ஆனால், ஒட்டுமொத்தச் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவே தேவையில்லை என்றளவுக்கு, சிங்கள மக்கள் வாக்களித்து, கோட்டாபயவை என்றைக்கு ஆட்சிக்குக் கொண்டு வந்தார்களோ, அன்றைக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. 

குதிரை, எவ்வளவு வேகமாக ஓடக்கூடியதாக இருந்தாலும், பந்தையமே நடைபெறாவிட்டால், எப்படி வீரத்தைக் காட்டுவது; தனியேதான் மைதானத்தில் ஓடவேண்டும்; அதில் என்ன இலாபம்?  இது உண்மையில், 1970 - 1980 காலப்பகுதியில் காணப்பட்டதோர் அரசியல் நிலைவரம் ஆகும். அதாவது, பெருந்தேசியக் கட்சிகளின் கைகள், சிறுபான்மைக் கட்சிகளின், சிறுகட்சிகளின் தயவு எதுவுமின்றி, ஒற்றைப்படையாகக் கோலோச்சிய காலம். 

ஜே.ஆரின் காலத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு, நினைத்ததை எல்லாம் நிறைவேற்றுவதற்குச் சிங்கள ஆட்சி இயந்திரத்துக்கு அங்கிகாரம் கொடுத்த காலம். எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று, ஒரு ஜனநாயகக் கட்டமைப்புக்குப் பெரும்பான்மை மக்கள் அனுமதி கொடுத்த காலம்.  இது ஆபத்தானது; அபாயகரமானது.  

இப்படியானதொரு காலத்தில், மிதவாத கட்சிகளின் பங்களிப்பென்பது, அரசியலிலும் தங்களின் நலனிலும் எந்தப் பங்களிப்பையும் வகிக்கப்போவதில்லை. இந்தக் கட்சிகள் கையாலாகாதவை என்று, சிறுபான்மை சமூகங்கள் முடிவுக்கு வந்து, நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் வெடித்தன.   

அந்த ஆயுதப் போராட்டத்துக்கு ஏற்ற, இறுக்கமான அரசியல் கொள்கைகளுடன்  இயக்கங்கள் உருவாகின. இந்த உருவாக்கத்தை வெளிச்சக்திகளும் பயன்படுத்திக் கொண்டன. பிரித்தாளும் தங்களது சூத்திரத்தை அரங்கேற்றிப் பார்ப்பதற்கு இந்த ஆயுத இயக்கங்கள் பயன்படுத்தப்பட்டன.  

ஆக, தற்போது முகிழ்ந்து கொண்டு வருகின்ற இந்த அரசியல்சூழல், மிகவும் ஆபத்தானது.  
ஆனால், சிங்களதேசம் இதைக் கவனத்தில் கொள்ளவோ, கருத்தில் கொள்ளவோ இல்லை என்பது, மிகத்தெளிவாகத் தெரிகிறது.  

கோட்டாபய தரப்பு, தற்போது தமக்குக் கிடைத்திருக்கும் அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்தி, நாட்டின் நிர்வாகத்தை மேலும் மேலும் எவ்வளவு சிக்கலாக்க முடியுமோ, அந்த வழிகளில்தான் சிந்திப்பதாகத் தெரிகிறது.  

அதாவது, ஏற்கெனவே பெறுமானம் இழந்து போயுள்ள சிறிய கட்சிகளின் வகிபாகத்தை, அரசியலில் இன்னும் குறைக்கும் வகையில், தேர்தல் முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்குத்  திட்டங்களைத் தயார் செய்கிறது.   

தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறையை நீக்கிவிட்டு, தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்கு வியூகங்களை வகுக்கிறது.  

இது சிறிய கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகளையும் சிறுபான்மை நலனை முன் நிறுத்துகின்ற தரப்புகளும்  தேர்தலில் பெரும் அடியைக் கொடுக்கப்போகின்றன.

தற்போதைய நிலையில், ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்றால், ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு, புதிய தேர்தல் முறையில், 12.5 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் ஆசனம் என்ற, புதிய தேர்தல் சமன்பாட்டுடன் வந்து நிற்கப்போகிறது.  

இவ்வாறானதொரு நிலையில், சிறுபான்மைத் தரப்புகள், பெரும்பான்மைத் தரப்புகளுக்கு முன்னால், பார்த்திருக்கப் பதங்கமாகப் போவதுதான் உண்மை.  

இந்தப் பேராபத்திலிருந்து, சிறுபான்மைத் தரப்புகள், தங்களைச் சுதாரித்துக்கொள்வதற்கு, இப்போதிருக்கக்கூடிய ஒரேயோர் உடனடி வழி, கோட்டா தரப்பினரை, நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதைத் தடுப்பதுதான்.   

அதற்கு, எப்படியான முன் அரண்களை வகுத்து, வரப்போகும் அபாயத்தைத் தடுப்பது என்பதைப் பார்க்கவேண்டும்.  

இப்போதிருக்கும் சூழ்நிலையில், ஜே.வி.பியினருடன் சிறுபான்மை கட்சிகள், சிறிய கட்சிகள் ஓர் உடன்பாட்டுக்குச் செல்வதுதான் உசிதமான வியூகமாக இருக்கும்.  

அந்த உடன்பாடு, தேர்தல் கூட்டணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை.  

கொள்கைகளை விட்டுக்கொடுத்து, மேற்கொள்ளவேண்டிய சரணாகதி அரசியலும் இல்லை.  
ஆட்சியை கைப்பற்றும், கைப்பற்ற வேண்டும் என்ற முயல்கொம்புகளுக்கு இலக்குவைக்க வேண்டிய அவசியமும் இல்லை.  

புதிலாக, நாடாளுமன்றத்தில் அரசின் செல்திசையைத் தீர்மானிக்கும் தரப்பாக, இந்தக் கூட்டை உருவாக்கிக்கொள்வது முக்கியமாகும்.  இடதுசாரிகளின் அரசியல் செல்நெறி எப்போதும், அரசுக்குக் கடிவாளம் போடுவதாகவும் அதிகார மமதையில் வெறியாட்டம் போடுகின்ற அரசுகளுக்கு சரியான வழியைப் போதிப்பதாகவும்தான் இருந்திருக்கிறது.  

 இந்தத் தரப்புகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆட்சிக்கு வருவதில்லை. ஆனால், ஆட்சிக்கான கடிவாளக் கட்சிகளாக இருந்திருக்கின்றன. அமைப்புகளாக, இயக்கங்களாகச் செயற்பட்டிருக்கின்றன. இந்த அரசியல் சூத்திரம், பெரும்பாலான நாடுகளில் தற்போதும் பயனில் இருக்கின்ற வெற்றிச்சமன்பாடுதான்.  

ஆக, தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள், ஜே.வி.பியுடன் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய இந்தக் கடிவாளக் கூட்டமைப்புக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் மெல்லிய ஆதரவும் இருந்துகொண்டால், நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்புக்கு முன்றிலிரண்டு பெரும்பான்மை என்பது, வெறும் கனவாகவே போய்விடும்.  

ஆனால், இதற்கு முதலில், அந்தந்தக் கட்சிகள், தங்களுக்குள் ‘குஸ்தி’ போட்டு, வேறு திசைகளில் குதிரையோடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

தமிழர் தரப்பில், தற்போது இடம்பெறுகின்ற அரசியல் இழுபறிகளைப் பார்க்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட்டு, அதிலிருந்து 10, 15 தரப்புகளாகப் பிரிந்து, வேறு முன்னணிகளை உருவாக்குவதற்கு, முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.  

இந்தப் புதிய கூட்டணிகளின் நோக்கம், சிங்கள ஆட்சி அதிகாரத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்கு அப்பால், சம்பந்தனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. சரி, சம்பந்தனுக்குப் பாடம் புகட்டுவதன் மூலம், மஹிந்தவின் வியூகத்தை, இந்தப்புதிய கூட்டணி உடைக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்குமா என்றால், புதிய கூட்டணியாகத் தங்களை, அவ்வப்போது பிரகடனம் செய்துகொண்டிருக்கும் கட்சிகள் எதுவும், தென்னிலங்கைத் தரப்புகளுடன் மருந்துக்கும் அரசியல் உறவைப் பேணிக்கொள்ளாதவை. சிங்களத் தரப்புகளுடன் பேச்சுகளை நடத்தி, சில காரியங்களைச் செய்துகொண்டுதான் முன்னேற வேண்டும் என்றால், உடனே திரும்பியிருந்து குளிகை போடுகின்ற கட்சிகள்தான் இவை.  

அப்படி இருக்கும்போது, எந்தப் பாதையில் சென்று, மஹிந்த தரப்பைத் துவம்சம் செய்யப் போகிறார்கள். பிச்சை எடுப்பதாக இருந்தால்கூட, ஓட்டையில்லாத பாத்திரம் வேண்டுமல்லவா? அந்த அடிப்படை அரசியல் அறிவைக்கூட, தங்களின் கபாலங்களில் ஏற்றிக்கொள்ளாதவர்கள், அறிக்கைகளுக்குள் ஆட்லறிகளைப் பூட்டிவைத்து, அடித்துக் கொண்டிருப்பதால், எந்தப் பயனும் இல்லை.  

அரசியல் என்பது அறிவும் தெளிவும்கொண்ட பாதையில் நெறிப்படுத்தப்படவேண்டியது. கலகப்பாதையில் அல்ல.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--