2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்பது உண்மையா, மிரட்டலா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஜூலை 26 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களில் 18 பேர், அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்ல இருப்பதாகக் கூட்டு எதிரணி எனப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் அண்மையில் கூறியிருந்தனர்.  

அவ்வாறு, அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்பவர்கள், தம்மோடு இணையவிருப்பதாகவும் கூட்டு எதிரணியினர் கூறி வருகின்றனர்.   

அதேவேளை, இரண்டு வாரங்களில் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கப் போவதாக, முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையாளுமான டலஸ் அழகப்பெரும, கடந்த வார இறுதியில் கூறியிருந்தார்.  

அரசாங்கம் ஓரிரு வாரங்களில் சரிந்துவிடும் என்பதையே, அவர்கள் இக்கூற்றுகளின் மூலம் கூற முயல்கிறார்கள். ஆனால், எந்த அடிப்படையில் அவர்கள் இவ்வாறு ஆரூடம் கூறுகிறார்கள் என்பது தெளிவில்லை.  

அடுத்த ஜனாதிபதித் தேர்தல், 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்தான் நடைபெற வேண்டும். பொதுத் தேர்தலும் 2020 ஆம் ஆண்டிலேயே நடைபெற வேண்டும்.  

 இவ்வாறிருக்க, அந்தத் தேர்தல்களுக்கு முன்னர், இன்னும் சில மாதங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வரப் போகிறது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்கே, அவர்கள் அடிக்கடி இவ்வாறான எதிர்வுகளைத் தெரிவித்து வருகின்றனர்.   

உண்மையிலேயே அவ்வாறானதோர் நிலைமை இருந்தால், இந்நாட்டுச் சிறுபான்மை மக்கள், அது தொடர்பாகக் கூர்ந்து, கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போதைய மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் மீது, சிறுபான்மை மக்கள் ஓரளவுக்கு அதிருப்தியைக் கொண்டிருந்தாலும், மேலும் சில காலம் செல்லும்வரை, அவர்கள் மஹிந்தவின் தலைமையிலான ஆட்சி, மீண்டும் வருவதை விரும்ப மாட்டார்கள்.  

உண்மையிலேயே, அவ்வாறு சிலர் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவிருந்தால், அவர்கள் தற்போதே, அவ்வாறு பிரிந்து செல்லாமல் ஏன் காலம் கடத்திக் கொண்டிருக்க வேண்டும்?   

டலஸ் கூறுவதைப்போல், அவர்கள் இன்னும் மூன்று வாரங்களில்தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வார்களாயின், இப்போது வெளியேறுவதற்கும், மூன்று வாரங்களில் வெளியேறுவதற்கும் இடையே, என்ன வித்தியாசம் இருக்கின்றது என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.  

இவ்வாறு அரசாங்கத்திலிருந்து சிலர் வெளியேறவிருந்தால், அதைப்பற்றி, முன்கூட்டியே ஆரூடம் கூறி, ஜனாதிபதியையும் அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களையும் உசுப்பிவிட்டு, அவர்கள் வெளியேற்றத்தைத் தடுக்க, கூட்டு எதிரணி ஏன் அவகாசம் கொடுக்க வேண்டும்?   

ஆனால், அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள், பிணக்குகள் எதுவுமே இல்லை என்று கூற முடியாது. ஆளும் கட்சியில், அதிகப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர். அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனாசிங்க ஆகியோர், தமது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.   

தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்ந்து, அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். அண்மையில், பொது பல சேனா அமைப்பு மீண்டும் தலைதூக்கி, நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது.   

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்துக்குச் சென்று அமைச்சரை மிரட்டினார்.   

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை தொடர்பாக, அரசாங்கம் மிகவும் மந்தகதியிலேயே செயற்பட்டு வருகிறது.   

அதேவேளை, அரசாங்கம் இன்னமும் வில்பத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. போதாக்குறைக்கு ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் மாதம் வில்பத்துப் பிரதேசத்தில், முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களையும் வன பரிபாலனத் திணைக்களத்துக்கு வழங்கி, வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுபோன்ற பிரச்சினைகள் காரணமாக, தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பற்றி திருப்தியோடு இல்லை.   

அதேவேளை, அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க உறுப்பிர்கள் பலரும், பல விடயங்கள் தொடர்பாக, மனக் கசப்படைந்து இருக்கிறார்கள். ஆளும் கட்சியில் இருக்கும் இருபிரதான கட்சிகளிடையேயான முரண்பாடாகவே இது வெளிவருகிறது. ஒரு கட்சியின் உறுப்பினர் ஒருவர் அமைச்சராக இருக்க, மற்றைய கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரதி அமைச்சராகவோ அல்லது இராஜாங்க அமைச்சராகவோ இருக்கும் இடங்களில்தான் இந்த முரண்பாடு, மிகத் தெளிவாகத் தெரிகிறது.  

அண்மையில், ஐ.தே.ககாரரான அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கும் அவரது பிரதி அமைச்சராகப் புதிதாக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் இடையே, அமைச்சு அலுவலகத்தின் அறைகளைப் பகர்ந்து கொள்வது தொடர்பாக, ஒரு பிரச்சினை உருவாகியிருந்தது. அந்தப் பிரச்சினையின்போது, கருத்துத் தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாஷிம், “ஸ்ரீ ல.சு.ககாரரான டிலான் பெரேரா, தமது அமைச்சுக்கு நியமிக்கப்படுவதையும் தாம் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.  

பட்டம், பதவி, அந்தஸ்து, வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக, அரசாங்கத்தில் உள்ள இரு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிணக்குகளை விவரிக்கும்போது, அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அதைக் கொள்கை முரண்பாடாகச் சித்திரிக்க முற்படுகின்றனர். ஐ.தே.கவுக்கும் தமக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் இருப்பதனால், தாம் விரைவில் தனியாக அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.   

ஆனால், மைத்திரி குழுவாக இருந்தாலும் மஹிந்த குழுவாக இருந்தாலும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையே அடிப்படையில் கொள்கை ரீதியான வித்தியாசங்கள் இல்லை.   

இரு கட்சிகளிடையே, சில விடயங்கள் தொடர்பில், கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும், அவை கொள்கை முரண்பாடுகள் அல்ல. உதாரணமாக, ‘சைட்டம்’ நிறுவனத்தை மூடிவிட வேண்டும் என ஸ்ரீ ல.சு.ககாரரான அமைச்சர் தயாசிரி ஜயசேகர போன்றோர்கள் கூறி வருகின்றனர். அதேவேளை, ஐ.தே.க அமைச்சர்களான லக்ஷ்மன் கிரிஎல்ல மற்றும் ராஜித்த சேனாரத்ன போன்றோர், அந்நிறுவனம் தொடர வேண்டும் எனக் கூறுகின்றனர்.   

ஆனால், அடிப்படையில் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் விடயத்தில், இரண்டு கட்சிகளினதும் கொள்கை ஒன்றே. இரு சாராரும் தனியார் உயர் கல்வி முறையை ஏற்றுக் கொள்கின்றனர்.   

இரு கட்சிகளும் தாராள சந்தைப் பொருளாதாரத்தையே தமது பிரதான பொருளாதாரக் கொள்கையாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த விடயத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலும் வித்தியாசம் இல்லை.  

 ஏனெனில், 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி, கிளிநொச்சியில் நடைபெற்ற புலிகளின் ஊடக மாநாட்டின்போது, வெளிநாட்டு நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், “தமது அமைப்பின் பொருளாதாரக் கொள்கை, சந்தைப் பொருளாதாரமே” எனக் குறிப்பிட்டார்.  

ஐ.தே.கவும் ஸ்ரீ. ல.சு.கவும் இனப்பிரச்சினை விடயத்திலும் ஒரே கொள்கையையே கடைப்பிடித்து வந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல், 2000 ஆம் ஆண்டுவரை, அவற்றில் ஒரு கட்சி, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, ஏதாவது ஆலோசனையை முன்வைத்தால், மற்றைய கட்சி, இனவாதத்தைத் தூண்டி, அந்த முயற்சியைக் குழப்பியடித்து வந்துள்ளது.   

ஸ்ரீ ல.சு.க 1957 ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டபோது, ஐ.தே.க இனவாதத்தைத் தூண்டியது. 1966 ஆம் ஆண்டு, ஐ.தே.க முன்வந்து டட்லி-செல்வா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டபோது, ஸ்ரீ ல.சு.க மட்டுமன்றி மாக்ஸியவாதிகள் என்று தம்மை வர்ணித்துக் கொள்ளும் இடதுசாரிகளும் இனவாதத்தைத் தூண்டி அதைக் குழப்பினர்.   

2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான ஸ்ரீ.ல.சு.கவோ, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.கவோ அவ்வாறு இனவாதத்தைத் தூண்டவில்லை. ஆனால், இப்போது ஸ்ரீ ல.சு.கவின் மஹிந்த அணி பழையபடி, இனவாதத்தைத் தூண்டி வருகிறது.  

இரு கட்சிகளும் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், தீர்க்கமான முடிவுகளை எடுக்க அச்சப்படுகின்றன. மஹிந்தவின் அரசாங்கமும் மைத்திரியின் தலைமையில் ஐ.தே.க பெரும்பான்மை கொண்ட தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் முன்னேற்றம் காணாததற்கு அதுவே காரணமாகும்.  

சந்தைப் பொருளாதாரத்தை அமுலாக்கும் போது, ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.கவும் அரசாங்க நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகின்றன. ஊழல் என்று வரும்போதும் இரு கட்சிகளும் ஒன்றுதான்.  

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக இரு கட்சிகளும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது கூறுகின்றன. ஆனால், பதவிக்கு வந்ததன் பின்னர், இழுத்தடித்துக் கொண்டே செல்கின்றன. இரு கட்சிகளும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் பாதிக்கும் வகையிலேயே தேர்தல் சீர்திருத்தத்தை விரும்புகின்றன. எனவே, அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீ ல.சு.ககாரர்கள் கூறுவதைப்போல் ஐ.தே.கவுக்கும் அவர்களுக்கும் இடையே கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை.   

ஆனால், அவர்கள் விரக்தியடையக் கூடிய ஒரு விடயம் இருந்தால், அது அரசாங்கத்தின் சகல விடயங்களிலும் ஐ.தே.க தமது ஆதிக்கத்தை செலுத்துவதாக இருக்கலாம். அல்லது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்து இருப்பதாகக்கருதி, தாம் அந்த அதிருப்தியிலிருந்து தப்பித்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாக இருக்கலாம்.  

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகள் அனைத்தும் ஐ.தே.க அமைச்சர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிதி, நீதி, வெளியுறவு, கல்வி, சட்டம் ஒழுங்கு, கொள்கைத் திட்டமிடல், வர்த்தகம் போன்ற அனைத்துத் துறைகளில் எதுவும் ஸ்ரீ ல.சு.க அமைச்சர்களிடம் இல்லை. முக்கிய முடிவுகள் அனைத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் தலைவர்களில் சிலரும்தான் எடுக்கிறார்கள்.  

2001 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, அவர் கொள்கை வகுக்கும் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்து, ஜனாதிபதியையும் புறக்கணித்து, புலிகளுடன் பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார்.   

சிலவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐ.தே.க இவ்வாறு முடிவெடுக்கும் அதிகாரத்தை, தம் வசமாக்கிக் கொண்டதை விரும்பவில்லைப் போலும். “ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது” என்பதாக அவர் கடந்த ஒக்டோபர் மாதம் கூறியதற்கும் ஐ.தே.க தலைவர்கள், ராஜபக்ஷ குடும்பத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக இம்மாத ஆரம்பத்தில் கூறியதற்கும் காரணம் அதுவாக இருக்கலாம்.  

ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவார்களா என்பதை ஆராயும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயமும் இருக்கிறது. அவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகினாலும் அரசாங்கம் மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதே அதுவாகும்.   

ஏனெனில், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து நாலரை ஆண்டுகள் செல்லும் வரை, ஜனாதிபதியால் அதைக் கலைக்க முடியாது.   

ஸ்ரீ ல.சு.க உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களிடம் 95 ஆசனங்கள் மட்டுமே உள்ளன. ஐ.தே.க ஏற்கெனவே பதவியில் இருப்பதனால், 2010 ஆம் ஆண்டு செய்ததைப்போல், மஹிந்தவினால் அக்கட்சியிலிருந்து எம்.பிக்களை விலைக்கு வாங்கவும் முடியாது.அதாவது 2020 ஆம் ஆண்டுவரை ஸ்ரீ ல.சு.க பதவிக்கு வரும் வழி எதுவுமே தென்படவில்லை.   

ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலகினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிடும். அக்கட்சி, மஹிந்தவை ஆதரிக்கும் என எதிர்பார்க்க முடியாது.   

ஸ்ரீ ல.சு.க.காரர்கள் அனைவரும், அரசாங்கத்திலிருந்து விலகினால் சிலவேளை தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தைப் பாதுகாக்க வெளியிலிருந்து ஆதரவு வழங்கக் கூடும்.

ஏற்கெனவே அரசாங்கத்துடன் இணைந்து, தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததாகச் சிறு தமிழ்க் கட்சிகளினதும் சில புலம்பெயர் குழுக்களாலும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், கூட்டமைப்பு நேரடியாக அரசாங்கத்தில் சேரும் என எதிர்ப்பார்க்க முடியாது.  

எனவே, ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அரசாங்கத்திலிருந்து விலகினால், ஐ.தே.க, தமிழ்க் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்கும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளியிட்டு இருக்கும் கருத்து, ஓரளவுக்கு உண்மையானதாகும். ஆனால், ஐ.தே.க, தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதைத் தடுக்கவே, தாம் அரசாங்கத்தில் சேர்ந்தோம் என அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  

2015 ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும், பொதுத் தேர்தலுக்குப் பின்னரும், ஸ்ரீ ல.சு.ககாரர்கள் இரண்டு காரணங்களுக்காகவே அரசாங்கத்தில் இணைந்தனர். சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகச் சேர்ந்து கொண்டனர். அரச பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் ஆசை மற்றைய காரணமாகும்.   

தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன ‘வெளிநாட்டுச் சக்திகளின் ஏஜன்டு’ என்றும் ‘புலிகளின் ஏஜன்டு’ என்றும் கூறியவர்களும் மைத்திரிபாலவின் தேர்தல் மேடைகளைத் தீவைத்து அழித்தவர்களும் அவ்வாறு அரசாங்கத்தில் சேர்ந்தவர்களுள் அடங்குவர்.  

 எனவே, இங்குள்ள விடயத்தில் கொள்கை என்பதற்கு சம்பந்தமே இல்லை. ஒரு வகையில் பாரத்தால், கொள்கை மட்டுமல்ல, அரசியல் நாகரிகமே தெரியாதவர்கள்தான் அரசாங்கத்தில் சேர்ந்த பல ஸ்ரீ ல.சு.ககாரர்கள்.  

ஐ.தே.க சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளும் அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 113 ஆசனங்களைப் பெற்றிருக்கவில்லை. அக்கட்சிகள் 105 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டன. எனவே, தாமே ஊழல் பேர்வழிகள் எனக் கூறியவர்களையும் சேர்த்துக் கொண்டு, ஐ.தே.க 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அரசாங்கத்தை அமைத்தது.  

ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அரசாங்கத்தில் சேர்ந்த இவ்விரண்டு காரணங்களைத்தவிர இன்னமும் இருக்கின்றன. முன்னரைப்போல், இல்லாவிட்டாலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தம்மை விரட்டிவரும் என அவர்கள் இன்னமும் அச்சமடைந்து இருக்கலாம். அதைவிட, மஹிந்த அணியினரோ அல்லது வேறு கட்சியோ பதவிக்கு வரும் வாய்ப்பும் இல்லாத நிலையில் அரசாங்கத்திலிருந்து விலகி, வசதி வாய்ப்புகளை இழக்க, அவர்கள் விரும்புவார்களா என்பதும் கேள்விக்குறியே.எனவே, அரசாங்கத்தில் உள்ள 
ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவார்களா என்பது பெரும் சந்தேகமே.  

அரசாங்கத்துக்குள் ஐ.தே.கவினால் தாம், இரண்டாந்தரப் பிரஜைகளைப்போல் நடத்தப்பட்டு வருவதால், பேரம்பேசி தமது நிலையைச் சற்று உயர்த்திக் கொள்ளவே, அவர்கள் வெளியேறுவதாக மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .