அரசியல் கட்சிகளின் புதிய இலக்கணம்

சல்லிக்கட்டுக்காக நடைபெற்ற ‘மெரினா’ போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாடு அரசியல் களம், போராட்டக் களமாக மாறிக் கொண்டிருக்கிறது.   

மாணவர்களும் மக்களும், தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் ‘சல்லிக்கட்டு’ என்றால், அதன் பிறகு, மக்களும் அரசியல் கட்சிகளுமாக நடத்தும் போராட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றன.   

அந்த வரிசையில், முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில், எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் பணியை எதிர்த்து, அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளும் போராடி வருகிறார்கள்.   
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்ட ரீதியிலான போராட்டங்கள் என்றால், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் உண்ணாவிரதப் போராட்டம் என்று அனல் பறக்கிறது.   

தமிழ்நாடு சட்டமன்றம் கூடி, பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்ற சூழலில்,  மாவட்டங்களில் இடம்பெறும் போராட்டங்கள், அரசாங்கத்துக்கு நிம்மதியிழப்பை தந்திருக்கிறது.   

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘ஹைட்ரோ கார்பன் போராட்டம்’, தஞ்சை மண்டலத்தில் ‘கதிராமங்கலம் ஒயில் குழாய்கள் பதிப்பு’ உள்ளிட்ட போராட்டங்கள், அனைத்தையும் தாண்டும் வகையில், காவிரி நதி நீர் மேலாண்மைச் சபையை அமைக்கக் கோரி, ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களிலும் நடைபெற்ற போராட்டங்கள் - நடை பயணங்கள், தென் மாவட்டமான, தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற 100 நாள்கள் உண்ணாவிரதப்போராட்டம் போன்ற போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கின்ற நிலையில், தொடங்கியிருப்பதுதான் சேலம் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் போராட்டம்.   

சென்னை முதல் சேலம் வரை உள்ள இந்தச் சாலையால், மக்களுக்குப் பயனிருக்கும் என்பது அரசாங்கத்தின் வாதம். நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கவில்லை; நிறைய நட்டஈடு கொடுத்துத்தான் நிலங்கள் எடுக்கப்படுகிறது. 90 சதவீத பேர் நிலங்களை மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  

 வளர்ச்சித் திட்டத்தை தடுக்கலாமா என்பதெல்லாம் அதிமுக அரசின் வாதங்களாக இருக்கின்றன. ‘சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்’ என்று முதலைமச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் திட்ட வட்டமாக அறிவித்து விட்டார்.   

அதனால், அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோரை, பொலிஸார் முன்கூட்டியே கைது செய்து வருகின்றார்கள்.  

அதேநேரத்தில், எதிர்கட்சிகளோ ‘ஏற்கெனவே சேலத்துக்கு நல்ல சாலைகள் இருக்கும் போது, இந்தப் பசுமை வழிச்சாலை திட்டம் எதற்காக? பத்தாயிரம் கோடி ரூபாய் திட்டத்தை, மக்கள் கருத்துகளைக் கேட்காமல், அவசரமாக அறிவித்து நிறைவேற்ற முயற்சிப்பது ஏன்? விவசாயிகளின் நிலத்தைப் பறிக்கலாமா?’ என்று வாதிடுகின்றன.   

பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ‘திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை; போராடும் விவசாயிகள், மக்களிடம் கருத்துக் கேளுங்கள்’ என்பதுதான் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. 

வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில், இவ்வளவு சிரமங்கள் இருக்குமோ என்ற எண்ணம் மாநில அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, மத்திய அரசாங்கத்துக்குக் கூட இந்நேரம் வந்திருக்கக் கூடும்.   

அதேநேரத்தில், மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்ற மத்திய அரசாங்கத்தின் அறிவிப்புக்கு, முதன் முதலாகத் தமிழகத்தில் பாராட்டுக் கிடைத்திருக்கிறது.  

ஆகவே, இப்போது தமிழகத்தில் வளர்ச்சித் திட்டமா, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பா அல்லது விவசாயிகளின் நலனா போன்ற கேள்விகள், பல்வேறு திட்டங்களிலும் உருவெடுத்து நிற்கின்றன; அனைத்திலும் ஒரே மாதிரி எண்ணவோட்டம்தான் எதிரொலிக்கிறது.   

அதாவது, முக்கிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு, அரசாங்கம் மக்களிடம் முறையான கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதுதான். இது, ஏதோ விருப்ப அடிப்படையில் அல்ல; சுற்றுப்புறச் சூழல் சட்டமே, இதைத் தெளிவுபடுத்துகிறது.  

 ஆனாலும், எந்த அரசாங்கமுமே வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான, மக்கள் கருத்துகளைக் கேட்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் உண்மை. மக்களுக்காகவே இந்தத் திட்டங்கள் என்பதை, முதலில் மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்றைய அரசியல் வாதிகள் இருக்கிறார்கள்.   

அதற்கு மிக முக்கியக் காரணம், அரசியல் கட்சி தலைவர்கள் மீது, மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையிழப்பு என்றுதான் பார்க்க வேண்டும். 

ஆளுங்கட்சியாக தி.மு.க இருந்தாலும் சரி; அ.தி.மு.க இருந்தாலும் சரி, மக்கள் கருத்து என்பதை, நடைமுறைக் காரணங்களுக்காகவே செய்கிறார்கள் என்ற சந்தேகம், மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.   

மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, இப்போது பா.ஜ.க ஆளும் போதும் சரி, இதேநிலைமைதான்  என்றே மக்கள் எண்ணுகிறார்கள். ஆகவே, ஆட்சி செய்யும் அரசியல் கட்சி தலைமை மீது நம்பிக்கையிழக்கும் போது, மக்கள் இது போன்ற வளர்ச்சித் திட்டங்களைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம், ‘ஸ்டெர்லைட் ஆலை’. இது, அ.தி.மு.க ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் தொடர்ந்தது, இப்போது அ.தி.மு.க ஆட்சியில் போராட்டம் நடைபெற்று மூடப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் திட்டத்தை எடுத்துக் கொண்டால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அ.தி.மு.க ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற்றது.   

ஆனால், கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்து போராட்டம் வெடித்தவுடன், பணிகளை நிறுத்தி வையுங்கள் என்று, முதலில் அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார்.   

ஆனால், அதே அணு மின் திட்டம் மீண்டும், அவர் ஆட்சியில் இருந்த போதே தொடங்கி நடைபெற்றது. ஆகவே, முக்கிய வளர்ச்சித் திட்டங்களில், மக்களின் நலன் பற்றியோ, பாதிக்கப்படுவோரின் நலன் பற்றியோ, கவனிப்பதற்குப் பதில், ஆளும் அரசியல் கட்சியின் முதலமைச்சர்களாக இருப்பவர்கள், தங்கள் அரசியலை மட்டுமே பார்க்கிறார்கள் என்று, மக்கள் கோபப்படுகிறார்கள்.   

இதன் விளைவே, திட்டத்தால் பாதிப்பு இருக்காது என்று ஆளும் கட்சியின் தலைமை கூறுவதை, மக்கள் நம்ப மறுக்கிறார்கள். ஆகவே, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு, அர்த்தமுள்ள வகையில் மக்கள் கருத்துகளை நடத்தினாலேயே, இது போன்ற போராட்டங்களைத் தவிர்த்து விட முடியும்.  

ஏனென்றால், கொள்கைகளை வைத்துக் கட்சி நடத்தியது ஒரு காலம்; தலைவர்களின் தலைமைப் பண்புகளை மய்யமாக வைத்துக் கட்சி நடத்தியது ஒரு காலம்; தலைவர்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை வைத்துக் கட்சி நடத்தியது ஒரு காலம்.   

ஆனால், இன்றைக்கு இவை எல்லாம், நாடு முழுவதுமே மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்வது என்றால், மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணிக்கை, மிகமிகக் குறைந்து, விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு, அனைத்து மாநிலங்களிலும் வந்து விட்டது.  

 தமிழ்நாட்டுக்கும் அதிலிருந்து விதிவிலக்கு இல்லை. இதனால், அரசியல் கட்சிகள், பரபரப்பூட்டும் பிரச்சினைகளை முன் வைத்துப் போராட்டத்தைத் தொடங்கினால், தங்கள் பக்கம், மக்கள் வருவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.   

அதில் முதல் அம்சமாக இருப்பது, ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதிப்போ, பலனோ அளிக்கும் வளர்ச்சித் திட்டம், ஒரு ‘பிரசார ஆயுதமாக’ கிடைத்திருக்கிறது. எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திலும் பாதிப்பும் இருக்கும்; பலனும் இருக்கும்.   

ஆனால், பலனை ஒதுக்கி வைத்து விட்டு, பாதிப்பை மட்டும் பிரசாரப்படுத்துவதுதான், அரசியல் கட்சிகளின் முக்கிய கடமையாக இருக்கிறது.   

ஆகவே, வளர்ச்சித் திட்டங்களைப் பெருமளவில் எதிர்த்து, அரசியல் செய்வது ஒரு தனிக் கலையாக, ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாகி வருகிறது. அதை, ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர்களும் முறையான மக்கள் சந்திப்பு மூலம், தடுத்து நிறுத்திடத் தயாராக இல்லை.  

 ஏனென்றால், பின்னாளில் எதிர்க்கட்சியாகும் போது, இதே பிரச்சாரம் தமக்கும் தேவைப்படும் என்ற ஒரே உள்நோக்கமே தவிர, வேறு ஒன்றுமில்லை. ஆகவே, தமிழகம் போராட்டங்களின் களமாகிறது என்றால், விரைவில் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.   

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு, ஆறு முதல் எட்டு மாதங்களே உள்ள நிலையில், இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களும் வாக்கு வங்கிக்கு ஒரு கருவியாக மாறி விடுகின்றன. ஆகவே, ‘வாழும் வரை போராடு மனிதா’ என்பது, அரசியல் கட்சிகளின் இலக்கணமாக மாறி விட்டது.  

 “இப்படியே போராட்டம் நடைபெற்றால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” என்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்டியை, எதிர்த்தும் போராட்டம் என்ற நிலை! 

ஆகவே, இதைத் தவிர்க்கும் சூழல், இன்றைக்குப் பல மாநிலங்களில் எப்படி இல்லையோ, அதேபோல்த்தான், தமிழகத்திலும் இல்லை.   

அதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை, தமிழகத்தில் எந்தத் திட்டம் வந்தாலும் அதை எதிர்த்து ஒரு போராட்டக் களம் உருவாகும் வாய்ப்புகளே இப்போதைக்கு அதிகம் தென்படுகின்றன.   


அரசியல் கட்சிகளின் புதிய இலக்கணம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.