2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இந்தியப் பிரயத்தனம்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 166)

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இலங்கை அரசாங்கமும் மாறிமாறி வன்முறைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த, அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும் சேர்த்துப் பலிகொண்டிருந்த, 1985 மே - ஜூன் காலப்பகுதியில்தான், இலங்கை தொடர்பிலான தன்னுடைய காய்நகர்த்தல்களை, இந்தியா முடுக்கிவிட்டிருந்தது.   

இந்தியாவின் காய்நகர்த்தல் பற்றி, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயின் அறிக்கையொன்றில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை தொடர்பிலான இந்தியக் கொள்கையை, ராஜீவ் காந்தி மென்மையாக்கி உள்ளார். இந்தியாவின் இந்த மாற்றத்துக்கு, எதிர்வினையாற்றும் வகையில், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, மீண்டும் தமிழ்த்தரப்போடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று, இந்தியா நம்புகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

மேலும், அதில், யுத்தத்தைத் தவிர்க்கவே இந்தியா முயற்சிப்பதாகவும் இரத்த ஆறு பாய்ந்தால் அது இந்தியாவுக்கு அதிகளவிலான அகதிகளைக் கொண்டு வரும் என்பதோடு தென்னிந்தியாவில் பெரும் அரசியல் எழுச்சியையும் ஏற்படுத்தும் என்பது இந்தியா யுத்தத்தை விரும்பாமைக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிடுகிறது.   

மேலும், அளவில் சிறிய தனிநாடொன்று உருவானால், அது அரசியல், பொருளாதார ரீதியில் திராணியற்றதாகவே இருக்கும் என்பதுடன், தொடர்ந்தும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் என்பதும், மேலும் இனரீதியில் தனிநாட்டுப் பிரிவினை உருவாவதானது, இந்தியாவுக்குள் அதிகரித்த தன்னாட்சி கோரி நிற்கும் இனக்குழுக்களுக்கு, தவறான சமிக்ஞையை அளிக்குமென்று, புதுடெல்லி அஞ்சுவதாகவும் அந்த அமெரிக்க உளவுத்துறை அறிக்கை சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  

மேலும், ராஜீவ் காந்தியின் இராஜதந்திர அணுகுமுறை பற்றி, அலசும் அந்த அறிக்கை, இலங்கை தொடர்பில் ரொமேஷ் பண்டாரி, புதியதோர் அணுகுமுறையைக் கையாள்வதாகவும், முதலில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும், அதன் பின்பே பேச்சுவார்த்தை என்ற கருத்தை பண்டாரி ஏற்பதாகவும், இந்தக் கருத்தானது, மிகநீண்ட காலமாக ஜே.ஆர் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டு வந்தபோதும், இந்திராகாந்தி அரசாங்கம் இதை எதிர்த்து வந்ததாகவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.  

தமிழ்க் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை இந்தியா கட்டுப்படுத்தும் என்ற உறுதிமொழியை, ஜே.ஆருக்குத் தெரிவிக்க, பண்டாரிக்கு ராஜீவ் காந்தி அனுமதியளித்திருந்ததாகவும் அந்த அமெரிக்க உளவுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.   

ஜே.ஆர் அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருதல்   

ஜே.ஆர் அரசாங்கத்தையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உட்படத் தமிழ்த் தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதுதான் ரொமேஷ் பண்டாரியின் திட்டம். தமிழ்த் தரப்பில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை, ராஜீவ் காந்தியிடம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

இலங்கை அரசாங்கத்துடன், எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் பற்றி, அமிர்தலிங்கம் மூன்று நிபந்தனைகளை, ராஜீவ் காந்தியிடம் முன்வைத்திருந்தார். முதலாவதாக, பேச்சுவார்த்தைகளில் சகல தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் பங்கேற்க வேண்டும்.   

இரண்டாவதாக, பேச்சுவார்த்தை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலானதாக இருக்க வேண்டும்.   
மூன்றாவதாக, எந்தத் தீர்வு எட்டப்பட்டாலும், அதற்கு இந்தியா காப்பீடாக இருக்க வேண்டும். இது, ராஜீவ் காந்திக்கும் இந்தியாவுக்கும் ஏற்புடையதாகவே இருந்தது.   

1985 மே 28ஆம் திகதி, இலங்கை வந்த இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, முதலில் குறித்த பேச்சுவார்த்தைக்கு, ஜே.ஆரைச் சம்மதிக்க வைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார்.   

இதுபற்றி, தன்னுடைய நூலொன்றில் விவரிக்கும் அன்றைய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.திட்ஷிட், ‘ஜெயவர்த்தனவைப் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்து வருவதற்காக, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பஞ்சாப் போராளிகள், அஸாம் கிளர்ச்சியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய முன்னுதாரணங்களை ரொமேஷ் பண்டாரி முன்வைத்ததுடன், ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை அடையப்பெறுவதற்காக, அந்நியப்படுத்தப்பட்ட குடிமகன்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சட்டம், சட்டரீதியான ஏற்புடைமைகளின் தொழில்நுட்பங்களுக்கு அப்பாற்பட்டதென்று எடுத்துரைத்ததாக கோடிட்டுக் காட்டுகிறார்.   

இலங்கை அரசாங்கம், ஆயுதமேந்திய போராளிகளுடன், அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை, பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தது.   

ஏனெனில், அவர்களுடன் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவதானது, அவர்களை அங்கிகரிப்பதாக அமையும் என்று இலங்கை அரசாங்கம் கருதியது.   

இந்த மனநிலையை மாற்ற வேண்டியது, ரொமேஷ் பண்டாரியின் முதல் முக்கிய வேலையாக இருந்தது.   
இதன் அடுத்த கட்டமாக, ராஜீவ் காந்தியை சந்திக்க, ஜே.ஆரைப் புதுடெல்லி வருமாறு, ராஜீவ் சார்பில், பண்டாரி அழைப்பை விடுத்திருந்தார்.   

அந்தவகையில், 1985 ஜூன் முதல்வாரத்தில், புதுடெல்லிக்கான விஜயத்தை ஜே.ஆர் மேற்கொண்டிருந்தார்.   
ஜே.ஆர் - ராஜீவ் சந்திப்பு   

பேச்சுவார்த்தை மேசைக்கான இந்தியாவின் அழைப்பை ஜே.ஆர், தனக்கு சாதகமான வாய்ப்பாக மாற்ற முனைந்தார்.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன், தான் பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டுமானால், அதற்கு சில நிபந்தனைகளை இந்தியா ஏற்க வேண்டுமென அவர் ராஜீவிடம் தெரிவித்தார்.   

முதலாவது நிபந்தனையாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதை, இந்தியா நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இரண்டாவதாக, இலங்கையின் ஆள்புலத்துக்குள் சுதந்திரமானதும் இறைமையுள்ளதுமான தமிழரசு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கையை ஒருபோதும் இந்தியா அங்கிகரிக்கக்கூடாது.  

மூன்றாவது நிபந்தனை, பாக்கு நீரிணைப் பகுதியில், இந்தியா, இலங்கை இணைந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றவாறான கோரிக்கையை ஜே.ஆர் முன்வைத்தார்.   

ஜே.ஆர், இந்தியா சென்றிருந்த நாள்களில்தான், பங்களாதேஷின் சிட்டகொங் பகுதி, கடுமையான இயற்கை அனர்த்தத்துக்கு ஆளாகியிருந்தது. இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷுக்கு விரைந்து, அன்றைய பங்களாதேஷ் ஜனாதிபதி எர்ஷாடை சந்தித்து, இந்தியாவின் ஆதரவைத் தெரிவிக்க விரும்பிய ராஜீவ் காந்தி, அந்தச் சில மணிநேர விஜயத்தில், தன்னோடு இணைந்து கொள்ளுமாறு, ஜே.ஆருக்கும் அழைப்பை விடுத்திருந்தார்.   

இது பற்றித் தன்னுடைய நூலில் விவரிக்கும் ஜே.என்.திட்ஷிட்,‘விசேட விமானத்தில், தன்னுடன் பங்களாதேஷ் செல்வதற்கு, ஜனாதிபதி ஜே.ஆருக்கு, ராஜீவ் காந்தி எதுவித முன்னறிவிப்புமின்றித் தன்னிச்சையாக அழைப்புவிடுத்ததாகவும், இரண்டு அயல்நாடுகளின் தலைவர்கள் தமது இரங்கலையும் ஆதரவையும் நேரில் சென்று தெரிவிப்பதானது, தெற்காசிய நாடுகளிடையேயான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் எடுத்துக்காட்டும் குறிப்பிடத்தக்கதோர் அரசியல் சைகையாகும் என்று ராஜீவ் குறிப்பிட்டதுடன், தெற்காசிய நாடுகளிடையே உருவாகவிருந்த சார்க் அமைப்பின் ஆரம்ப மாநாடு, 1985 டிசெம்பரில் பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெறவிருந்த நிலையில், இந்த விஜயமானது ஆரம்பிக்கப்படவிருந்த சார்க் அமைப்பு தொடர்பில் இந்தியாவினதும், இலங்கையினதும் அர்ப்பணிப்பைப் பறைசாற்றிநிற்கும் என்றும் எடுத்துரைத்ததாக ஜே.என்.திட்ஷிட் பதிவு செய்கிறார். இதற்குள் ராஜீவின் முக்கிய பிராந்திய அரசியல் காய்நகர்த்தல் இருக்கிறது.   

இந்தியாவின் இலங்கைக் கொள்கை பற்றி விவரித்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயின் 1985 மே 17 திகதியிடப்பட்ட அறிக்கையொன்று, இந்தியாவின் முக்கிய நோக்கமாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்தலும், அதை நீடித்தலுமே என்று கோடிட்டுக் காட்டுகிறது.   

சார்க் அமைப்பு என்பதும் இந்தியாவின் அந்தத் திட்டத்தின் ஒருபடிதான். இலங்கை முழுமையாக விருப்பத்துடன் சார்க் அமைப்பில் இணைந்துகொண்டது என்றும் கூறிவிட முடியாது.   

இலங்கையானது தென்கிழக்காசிய நாடுகளின் ஒன்றியமான ‘ஆசியான்’ அமைப்பில் இணைவதுதான், இலங்கைக்கு நன்மை தரக்கூடியது என்ற குரல், இன்றுவரை ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.  

கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருப்பினும், ஜே.ஆர், ‘ஆசியான்’ அமைப்பு தொடர்பில் எப்போதும் நேர்மறையான கருத்துகளையே பதிவுசெய்திருக்கிறார்.   

ஆசியானில் இலங்கை இணைய வேண்டும் என்ற கருத்து ரணசிங்க பிரேமதாஸவாலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   

ஆசியானில் இலங்கை இணைந்தால், இந்தியாவின் பெரியண்ணன் ஆதிக்கத்திலிருந்து நழுவிவிடக்கூடிய பெரும் வாய்ப்பு இலங்கைக்கு உண்டு என்பதை இந்தியா அறியும். அது நீண்டகாலத்தில் இந்திய நலன்களுக்கு முரணாக அமையும். ஆகவேதான், சார்க் அமைப்பை ஸ்தாபிப்பதில் இந்தியா குறியாக இருந்தது.

சார்க் அமைப்பின் ஸ்தாபகம் தொடர்பில், வௌிப்படையான முன்னெடுப்பு, பங்களாதேஷிடமிருந்தே வந்திருப்பினும், அதன் பின்னணியில் இந்தியாதான் இருந்தது; இருக்கிறது என்பது சில ஆய்வாளர்களது கருத்தாக இருக்கிறது.   

இலங்கையை சார்க்குக்குள் கொண்டுவந்துவிட்டால், அதனால் இலங்கைக்கும் தெற்காசியப் பிராந்தியத்துக்கும் நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, இன்னொரு மாற்றுப் பிராந்தியக் கூட்டில் இலங்கை இணைவது தடுக்கப்படுகிறது. அது யாருக்கு நன்மை பயக்கும் என்ற கேள்விக்கான விடைதான், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.  

ஜே.ஆரின் சம்மதம்   

புதுடெல்லியிலிருந்து டாக்கா வரையும், பின்னர் டாக்காவிலிருந்து புதுடெல்லி வரையுமான விமானப்பயணத்தின்போது, ஜே.ஆருக்கும் ராஜீவுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, குறிப்பிடத்தக்களவு காலம் கிடைத்ததாகத் தனது நூலில் பதிவு செய்யும் ஜே.என்.திட்ஷிட், இந்தப் பேச்சுகளின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையானது, மாவட்ட ரீதியான அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் அமைவதற்குப் பதிலாக, மாகாண ரீதியான அதிகாரப்பகிர்வு என்ற ரீதியில் அமைய ஜே.ஆரைச் சம்மதிக்க வைத்ததாக, ராஜீவ் காந்தி நம்பியதாகக் குறிப்பிடப்படுகிறது,   

 மேலும், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுடன் பேசுவதில்லை என்ற தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து இறங்கி, தமிழ்த் தரப்பின் அனைத்து இயக்கங்களுடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் தனது சம்மதத்தை ராஜீவ் காந்தியிடம் வழங்கியிருந்ததாக ஜே.என்.திட்ஷிட் பதிவு செய்கிறார்.   

ஜே.ஆர் தனது இந்திய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இலங்கை திரும்பிய பின், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜீவ் காந்தி, “இலங்கைக்குள் தனித்த அரசொன்றை ஸ்தாபிக்கும் எண்ணத்துடன் போராடும் தமிழ் கெரில்லாக்களுக்கு ஆயுதம் பெறும் வழியாக இந்திய ஆள்புலம் இருப்பதை அனுமதிக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இலங்கைத் தமிழர்கள் தனிநாடு ஒன்றை எதிர்பார்க்கக்கூடாது; அவர்கள் சமஷ்டியைக் கூட எதிர்பார்க்கக் கூடாது; அவர்கள் எதிர்பார்க்கக்கூடியதெல்லாம் இந்தியாவிலுள்ளது போன்றதோர் ஏற்பாட்டை மட்டுமே” என்றும் தெரிவித்திருந்தார்.  

எந்தத் தமிழ் அரசியல்வாதி எந்த வியாக்கியானத்தை எந்தவகை வார்த்தை ஜாலங்களில் சொன்னாலும், இலங்கை, இலங்கைத் தமிழர் தொடர்பிலான எந்தக் காலத்திலும் மாறாக இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்.

இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த வௌியுறவுக் கொள்கை ஒருபோதும் மாறாது; ஏனென்றால், இந்த வௌியுறவுக் கொள்கையின் அஸ்திபாரம் என்பது, இந்திய நலனாகும். அந்த இந்திய நலனுக்கு முரணாணதொரு நிலைப்பாட்டை, ஒரு போதும் இந்தியா எடுக்காது.   

ஜே.ஆரைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவரச் சம்மதிக்க வைத்தாலும் அதைவிட இந்தியாவுக்குச் சவாலானதாக இருந்த விடயம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதாகும்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .