இனியும் தாக்கு பிடிக்குமா கூட்டு அரசு?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க, “கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் தாக்குப் பிடிக்காது, இன்னும் கொஞ்ச நாளில் கவிழ்ந்து விடும்” என்று, அண்மையில் கூறிய தகவலை, அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.  

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான விரிசல்கள், உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்ற நிலையில்தான், அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட இப்போது, ஐ.தே.க மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார்.  

இதையெல்லாம் பார்க்கும் போதுதான், எஸ்.பி. திஸாநாயக்க கூறிய கருத்தை அவ்வளவு இலகுவானதாக எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை.  

கூட்டு அரசாங்கம், கிட்டத்தட்ட பாதிக்காலத்தை எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் கடந்து சென்றது. இரண்டு கட்சிகளும் தமது நலனுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டன.  

மத்திய வங்கி பிணை முறி மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர், ஐ.தே.கவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர்.  

தொடர்ந்து இந்த அரசாங்கத்தில் இருந்தால், தம் மீது பழி வந்து விடும் என்ற அச்சத்தில், அவர்கள் உள்ளுக்குள் இருந்தே எதிர்க்க ஆரம்பித்து, கடைசியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையுடன் வெளியில் சென்று விட்டனர். அவ்வாறு சென்ற 16 பேரில் ஒருவர் தான் எஸ்.பி. திஸாநாயக்க.  

இந்த 16 பேர் அணி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியுடன் பேச்சுகளை நடத்தி, சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறது.  

அதுபோலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்‌ஷ அணிக்கும் இடையில் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதிலும் இவர்கள், தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.  

அண்மையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர், கருத்து வெளியிட்ட எஸ்.பீ. திஸாநாயக்க, அடுத்துவரும் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் என்று கூறியிருந்தார்.  

அதுமாத்திரமன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொண்டதுதான், உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தோல்வி ஏற்படக் காரணம் என்று கூறியிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.   

உண்மையில், ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அரசியல் கூட்டணியோ, தேர்தல் கூட்டணியோ இருக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கூட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லாத பொதுவேட்பாளராகத் தான், மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டிருந்தார்.  

அதற்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தான், அவரது கட்சி போட்டியிட்டது.  

கூட்டு அரசாங்கத்தை அமைப்பதில் மாத்திரமே, இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டிருந்தன.   
உள்ளூராட்சித் தேர்தல் முடிந்தவுடன் கூட, ஜனாதிபதி இப்படியொரு கருத்தை வெளியிடவில்லை.   

பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்களை விட, ‘நல்லாட்சி’யை நடத்தும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐ.தே.கவும் பெற்ற ஆசனங்களும் வாக்குகளும் அதிகம் என்றே கூறியிருந்தார்.   

அத்துடன், இது தோல்வியல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது, அவர் உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்டது தோல்வி என்கிறார்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது இதுதான் முதல் முறையன்று.  

அண்மையில் சோபித தேரரின் பிறந்த நாள் நிகழ்வில், அவர் ஆற்றிய உரைதான் இப்போதைய அரசியல் பிரச்சினைகளுக்குக் காரணம்.  

2015 ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்ற பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கலைக்காமல் விட்டது தவறு என்றும் அவர் கூறியிருந்தார்.  

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், 100 நாள்கள் வேலைத்திட்டத்தை யார் உருவாக்கினார் என்று தனக்கு ஒன்றும் தெரியாது எனவும், அவர் கூறியிருந்தார்.  

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான விடயமாக இருந்தது, 100 நாள்கள் வேலைத் திட்டம். அது, தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றிருந்தது.   

அந்தத் தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தியே, மைத்திரிபால சிறிசேன போட்டியில் இறங்கியிருந்தார். தேர்தல் பிரசாரங்களின் போதும் அவர் அதை முன்வைத்தே, பிரசாரங்களைச் செய்திருந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, 100 நாள்கள் வேலைத்திட்டம் முடிந்து, - மூன்றரை ஆண்டுகள் கழித்து, அவர் இப்போது, “100 நாள்கள் வேலைத் திட்டம் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது” என்கிறார். முன்னரே இதுபற்றி ஒன்றும் தெரியாது என்றால், அவர் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும். அது தான் தர்மம்.  

ஆனால், அதை அவர் அப்போது செய்யவில்லை. ஏனென்றால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, பிறகெப்போதும் கிடைக்காது என்பது, அவருக்குத் தெரியும்.  

பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்திய கட்சிகள், அமைப்புகள் இணைந்தே 100 நாள்கள் வேலைத் திட்டத்தை உருவாக்கியிருந்தன.    

அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார் என்று லால் விஜேநாயக்க போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள்.  தான் கூறும் விடயங்களை, ஆதாரங்களுடன் மறுப்பதற்கு ஆள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதைக்கூற வந்தது ஏன்? அவர் யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார்? அல்லது யாரைக் குறி வைக்க எத்தனிக்கிறார்? என்ற கேள்விகள் உள்ளன.  

மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததும், தங்காலைக்குச் செல்வதற்கு ஹெலிகொப்டர் ஒழுங்கு செய்து கொடுத்தது யார் என்றும் சோபித தேரரின் பிறந்தநாள் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் ஜனாதிபதி.  
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2016ஆம் ஆண்டு, இரண்டு ஹெலிகொப்டர்களை தானே ஒழுங்கு செய்து கொடுத்திருந்ததாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். இப்போது அவர், யார் என்று கேள்வி எழுப்புகிறார்.   

இவ்வாறாக அண்மைக்காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமிழந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்.  

அவரைப் பொறுத்தவரையில், இனிமேல் பொதுவேட்பாளராகத் தம்மை யாரும் நிறுத்தி, மீண்டும் வெற்றிபெற வைக்கப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது.  

அதனால் அவர், மாற்று உத்திகளைத் தெரிவு செய்திருக்கிறாரா என்ற சந்தேகங்களும் உள்ளன.  
கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இழுக்க, அவர் முயற்சிக்கிறார் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.  

ராஜபக்‌ஷகளின் தயவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்வது தான், மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமா அல்லது, கூட்டு அரசாங்கத்தின் பழி, பாவங்களுக்குப் பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக்க, அவர் முற்படுகிறாரா என்ற பலமான சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன.  

இனிமேலும் நீண்டகாலம், கூட்டு அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருப்பதற்கு காரணம் இல்லை என்று ஜனாதிபதி கூறியதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.  

ஜனாதிபதியின் அண்மைய உரைகளை வைத்துப் பார்க்கும் போது, அவர் அப்படிக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று யாரும் துணிந்து கூறமுடியாத நிலை உள்ளது.  

அதேவேளை, கூட்டு அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும், அதன் வெற்றியிலும் தோல்விகளிலும், மைத்திரிபால சிறிசேனவுக்குப் பங்கு இருக்கிறது. கூட்டு அரசாங்கம், பல முக்கியமான இலக்குகளை நிர்ணயித்திருந்தது. அதில் அரசமைப்பு உருவாக்கம், தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் என்பனவும் உள்ளடக்கம்.  

இந்த விடயங்களில், எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. அதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரது கட்சியினரும் பொறுப்புக்கூறியாக வேண்டிய நிலையில் உள்ளனர்.  

மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக ஒரு பதவிக்காலத்தைக் கடக்கப்போகிறார். இரண்டு பிரதான கட்சிகளும், எப்படியோ அதிகார ருசியை அனுபவித்து விட்டன.  

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பங்காளர்களாக இருந்த தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது? அவர்களின் பிரச்சினைகள் ஒன்றும் தீர்க்கப்படவில்லை.  

மைத்திரிபால சிறிசேன, தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு எதைச் செய்திருக்கிறார், எதைச் செய்யத் தவறியிருக்கிறார்? என்று மதிப்பீடாவது செய்து பார்க்க வேண்டும்.  

அவற்றை அவர் செய்வார் என்ற நம்பிக்கை இப்போது இல்லை. போகிறபோக்கில் அவர், தமிழ் மக்களா என்னை ஆட்சியில் அமர்த்தினர் என்று கேள்வி எழுப்பினாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் அப்படித் தான் இப்போது நடந்து கொள்கிறார்.     


இனியும் தாக்கு பிடிக்குமா கூட்டு அரசு?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.