2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இன உறவைப் பலப்படுத்த நல்ல தருணம்

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

‘தனியாக மேய்கின்ற ஆடுகளை, ஓநாய்கள் வேட்டையாடி விடுகின்றன’ என்று சொல்வார்கள். ஒற்றுமையின் பலத்தைச் சொல்வதற்கு இதுபோல, வேறுபல பழமொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. 

உண்மைதான், ஒரு சமூகம் தனக்குள் உள்ளகமாக ஒன்றுபடுவது மட்டுமன்றி, பிற சமூகங்களுடனும் இணக்கப்பாட்டோடு பயணிப்பது கூட, தமது அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குப் பெரும் பக்கத் துணையாக அமையும்.

இலங்கைச் சூழலில், சிறுபான்மைச் சமூகங்களான முஸ்லிம்களும் தமிழர்களும் பொதுவான விடயங்களில், புரிந்துணர்வுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோன்று, பெரும்பான்மை மக்களில் கணிசமானோர், இனவாதத்தின் பின்னால் போகின்றவர்கள் அல்லர்  என்ற அடிப்படையில், சிங்கள மக்களையும் முற்போக்கு சக்திகளையும் இணைத்துச் செயற்பட வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது.  

ஆயுதக் கலாசாரம், போதைக் கலாசாரம், பயங்கரவாதம், இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், இஸ்லாமோபோபியா, பிரித்தாளும் அரசியல் தந்திரம், வெளிநாடுகளின் செல்வாக்கு என, நல்லிணக்கத்துக்கு எதிரான பல வாதங்கள், இலங்கையிலும் காலூன்றியுள்ளன.

இதைக் கருத்திற்கொண்டு,  இனக்குழுமங்கள் தேவையற்ற விதத்தில் தமக்கிடையே துருவப்படாதிருப்பதில் கவனம் செலுத்துவது இன்றைய தேவையாக உள்ளது. 

இலங்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உள்ளகமாகவும், இரு சமூகங்களைத் அவர்களுக்கிடையிலும் பிரித்து ஆளுகின்ற உத்தி, எப்போதும் நடைமுறையில் இருந்து வருகின்றது. பொதுவில், பெருந்தேசியமும் சிலபொழுதுகளில் ஆட்சியாளர்களும் கூட, ஒரு சிறுபான்மை இனத்தைத் தம்பக்கம் சேர்த்துக் கொண்டுதான், மற்றைய சிறுபான்மை இனத்துக்கு எதிரான, ஏதாவது ஒரு நகர்வைச் செய்ய முனைவதை வரலாற்றினூடு காணலாம். 

இலங்கை போன்ற நாடுகளில், சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாக இருப்பதை ஆட்சியில் இருப்பவர்கள் விரும்புவதில்லை. ஆயுதக் குழுக்கள், இனவாத அமைப்புகள், மதவாதக் குழுக்கள் போன்றவை, இதே மனவோட்டத்திலேயே செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு, சிறுபான்மை இனங்கள் சின்னாபின்னமாகப் பிரிந்து நிற்பது, மேற்சொன்ன தரப்பினருக்குச் சாதகமாகிப் போய்விடுகின்றது. 

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், எரிக்கப்படுவதை முஸ்லிம் சமூகம் ஆரம்பத்திலிருந்தே ஆட்சேபித்து வருவதுடன், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் கோரி வருகின்றது. ஆனால் அரசாங்கம், ‘உப்புச் சப்பான’ காரணங்களைச் சொல்லி, இவ்விவகாரத்தை இழுத்தடித்து வருகின்றது. 

இச்சந்தர்ப்பத்தில், அரசாங்கத்துடன் முஸ்லிம் எம்.பிக்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்குச் சமாந்தரமாக, இருவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதில் ஒன்று, ஜனாஸாக்கள் எரிப்புக்கு உடன்படுவதில்லை; சடலப் பெட்டிகளுக்கு பணம் வழங்குவதும் இல்லை என்ற நூதனப் போராட்டமாகும். இரண்டாவது, வெள்ளைத்துணி கட்டும் சாத்வீக முன்னெடுப்பாகும். 

ஜனாஸாக்களைப் பொறுப்பேற்பதில்லை என்ற பிடிவாதத்தை மேவி, அரசாங்கம் ஒரு தீர்மானம் எடுத்தது. அதன்படி, வைத்தியசாலைகளில் தேங்கிக் கிடந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன. ஆயினும் வெள்ளைத்துணி போராட்டத்துக்குப் பிறகு, அரசாங்கம் இவ்விடயத்தைக் கையாளும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. 

இதற்கு முக்கிய காரணம், முஸ்லிம் சமூகம் தமது மனவேதனையை வெளிப்படுத்தும் முகமாக, ஜனாஸாக்களைச் சுற்றுகின்ற ‘கபன்’ சீலையைக் குறிக்கும் வெள்ளைத் துணிகளை பொரளை, பொது மயானத்தின் வேலியில் கட்டி, ஆரம்பித்த அமைதிப் போராட்டத்தில் ஏனைய தமிழ், சிங்கள மக்களும் இணைந்து கொண்டமையாகும். 

ஒரு நாள் இரவு, அங்கு கட்டப்பட்டிருந்த துணிகள் எல்லாம் அகற்றப்பட்டிருந்தன. எனவே, இது யாருக்கோ ‘உறுத்தலாக’ இருக்கின்றது என்பது புலனாகியது. ஆனால், தொடர்ந்து இன்று வரையும் இன, மத பேதங்களுக்கு அப்பால், மக்கள் இம்முன்னெடுப்பில் இணைந்து கொண்டுள்ளனர். 

இது இவ்வாறிருக்க, இலங்கையிலுள்ள கத்தோலிக்க மதகுருக்களும் அங்கிலிக்கன், மெதடிஸ்த பாதிரியார்களும், கனத்தை மயானத்துக்கு வருகைதந்து, வெள்ளைத்துணி கட்டி, ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்படுவதற்குத் தமது கவலையை வெளியிட்டுள்ளமை, மிக முக்கியமான விடயமாகும். 

கிறிஸ்தவர்களும், உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையே விரும்புகின்ற சூழலில், இன்று முஸ்லிம்களின் வெள்ளைத் துணிகட்டும் சாத்வீக முன்னெடுப்பில், அந்த சமூகமும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.  

கொழும்பில் மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலும் வெளிநாடுகளிலும், முஸ்லிம்கள் முன்னெடுக்கும் வெள்ளைத் துணிகட்டும் போராட்டம், அமைதிப் பேரணிகளில் சகோதர இன மக்களும் கலந்து கொள்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதனால், இவ்விவகாரம் வேறு ஒரு பரிமாணத்தைப் பெற்றுள்ளது எனலாம்.

அதுமட்டுமன்றி, ஜனாஸா எரிப்புப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை, ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 

இச்சந்தர்ப்பத்திலேயே, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்படுவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கும், அதுவரை குளிர்பதனக் கொள்கலன்களில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரனும் முஸ்லிம்கள் சார்பாக ஆஜராகி இருந்தார். விரான் குரேவும் ஆஜரானார். அதைத் தொடர்ந்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சாணக்கியன், எம். சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் நாடாளுமன்றத்தில், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தனர்; தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கண்டன அறிக்கையை வெளியிட்டது. 

இதேவேளை, அநேகமான சிங்கள வைத்தியர்கள், புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் கொவிட்-19 நோய் காரணமாக மரணிப்போரின் உடல்களை, நிலத்தில் புதைப்பதால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்றும், இதை வைத்து அரசியல் செய்யாமல், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வெளிப்படையாகவே கூறி வருகின்றமை கவனிப்புக்கு உரியது. 

இவ்வாறு, முஸ்லிம் அல்லாதோரும், முஸ்லிம் சமூகத்துக்கு நடக்கின்ற அநியாயத்துக்காக முன்வந்து பேசுகின்றமையும், இவ்விடயம் சர்வதேசத்தின் கவனத்துக்கு வந்துள்ளமையும் ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்துக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. இது, அரசாங்கத்தின் மீது அதிகரித்த அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது என்பதை, யாரும் மறுக்கவியலாது. 

ஒரு பிஞ்சுக் குழந்தையின் மரணத்தின் பின்னர், முன்னெடுக்கப்படும் இந்த வெள்ளைத் துணி போராட்டம், இனங்களிடையே உறவு பலப்படுவதற்கு வித்திட்டுள்ளது. இது நல்ல சகுணமும் தருணமும் ஆகும். இதில், முஸ்லிம்கள் பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற முன்மாதிரிச் செயற்பாடுகளில் தாமும் ஈடுபட முன்வர வேண்டும்.

நாட்டில் வாழ்கின்ற ஒவ்வோர் இனத்துக்கும் வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள், அபிலாஷைகள் உள்ளன. பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனங்கள் என்ற பிரதான பிரிவுகளுக்கு மேலதிகமாக, மத ரீதியான வேறுபாடுகளும் உள்ளன. 

சிங்களத் தேசியம் சொல்கின்ற எல்லாவற்றுக்கும், சிறுபான்மை இனங்கள் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது. அதுபோல, தமிழர்களின் எல்லாக் கோரிக்கைகளுக்கும் முஸ்லிம் சமூகம் ஆதரவளிக்க இயலாது. முஸ்லிம்களின் எல்லா நடவடிக்கைகளையும் தமிழர்கள், ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. 

ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள், பொதுவான விடயங்களில் கைகோர்த்துச் செயற்பட முடியும். ஜனாஸா எரிப்புக்கு எதிரான சாத்வீகப் போராட்டம், அதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டாக, ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளப்படலாம். 

இன ரீதியாகவும் மத அடிப்படையிலும் சிறுபான்மையினராக வாழும் சமூகங்கள், தமக்கே உரித்தான பிரத்தியேக விடயங்களில் தனித்தனி நிலைப்பாடுகளை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், பொதுமைப்பாடான விவகாரங்களில் ஒன்றிணைந்த செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் ஒன்றிணைவது மட்டுமன்றி, அப்பாவிச் சிங்கள மக்களையும் முற்போக்கு பௌத்த சக்திகளையும் இணைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். 

ஒரு சிறுபான்மை இனத்துக்கு அநியாயம் நடக்கின்ற போது, அந்த இனத்தோடு ஏனைய சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றிணைந்து, அமைதியான வழிமுறையில் போராடும் நிலைமைகளை உருவாக்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் மட்டுமன்றி, சிங்கள மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டாலும், அதற்கெதிராக மேற்படி மூவினங்களும் குரல் கொடுக்க வேண்டும். 

இலங்கையில் வாழ்கின்ற எல்லா இன, மதங்களையும் சேர்ந்த சாதாரண மக்கள் இனவாதிகளும் இல்லை; மதவாதிகளும் இல்லை. பிரிவினைவாதிகளும் இல்லை. அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு நிம்மதியாக, சௌஜன்யமாக வாழ்வதேயாகும். 

எனவே, மேற்சொன்னவாறு சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே உறவைப் பலப்படுத்துவது சாத்தியமற்ற காரியமல்ல. அதற்காகத் தனியான ஒருமைப்பாட்டு அமைச்சோ, நல்லிணக்க அமைச்சரோ அவசியமில்லை. கூட்டம் போட்டுப் பெரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதும் இல்லை.

ஆனால், இனங்கள் ஒற்றுமைப்பட்டு விடக் கூடாது என்பதில், குறியாக இருக்கின்ற அரசியல்வாதிகள், புல்லுருவிகள், கறுத்த ஆடுகள், இன, மதவாதிகள் ஆகியோரை அடையாளம் கண்டு, விலக்கி வைத்தாலே போதுமானது; மற்றதெல்லாம் தானாக நடந்து விடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .