2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு கட்சி வெற்றி பெற்றால், நாட்டை ஆட்சி செய்ய, அந்தக் கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவே கருதப்படுகிறது. ஆனால், பதவிக்கு வரும் அக்கட்சி, விரும்பியவாறு எதையும் செய்வதற்கு, அக்கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாக அதன் மூலம் அர்த்தம் கொள்ளலாமா? 

முடியாது.  

 அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக, எவ்வாறான அரசமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரப்போகிறது என்று ராஜபக்‌ஷ குடும்பத்தினரைத் தவிர, வேறு எவரும் அறிந்திருந்தார்களா என்பது சந்தேகமே. அந்தநிலையில், தமக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என்று, எதேச்சாதிகாரமாக எதையும் செய்வதற்கு, அரசாங்கத்தின் தலைவர்கள் முயல முடியாது.  

ஆனால், அவர்கள் செய்வது எதேச்சாதிகாரமா, இல்லையா என்பதை வகைப்படுத்திப் பார்க்கும் நடுநிலையான பொறிமுறையொன்றோ அளந்தறியும் அளவுகோலொன்றோ இல்லை. எனவே, தமக்குக் கிடைத்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு, அவர்கள் நினைத்ததைச் செய்யக்கூடிய நிலை தான் உருவாகியிருக்கிறது.  

19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக, அரசாங்கம் இப்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன் வைத்துள்ளது. அதற்கு எதிராக, திங்கட்கிழமை மாலையாகும் போது 39 மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. அரசாங்கத்துக்குள்ளேயும் சிலர், 20ஆவது திருத்த வரைவில், சில குறைகளைப் பகிரங்கமாகவே சுட்டிக் காட்டுகிறார்கள்.  

20ஆவது திருத்தச் சட்டமூலமானது நாட்டில், சர்வாதிகார ஆட்சியையே மீண்டும் கொண்டு வரப்போகிறது என்றே, எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள். தனிமனிதனின் கையில், சகல அரச அதிகாரங்களையும் குவிக்கப் போகிறது என்றும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். 

இந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தையும் எதிராக முன்வைக்கப்படும் வாதங்களையும் ஆராய்வது பொருத்தமாகும்.   

20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் படி, ஜனாதிபதியே பிரதமரையும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையும் ஏனைய அமைச்சர்களையும் நியமித்து, அவர்களுக்கான அலுவல்களையும் நிர்ணயிக்க வேண்டும். எத்தனை அமைச்சுகளையும் ஜனாதிபதி, தம்மிடம் வைத்துக் கொள்ள முடியும். அந்த அமைச்சுகளின் கீழ், எந்தவோர் அரச நிறுவனத்தையும் எத்தனை நிறுவனங்களையும் கொண்டு வரமுடியும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அமைச்சர்களையும் அவர்களுக்கான பொறுப்புகளையும் ஜனாதிபதி மாற்ற முடியும்.  

அத்தோடு, நாட்டில் சகல, பிரதான பதவிகளுக்கும் ஆள்களை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கே வழங்கப்படப் போகிறது. அதன்படி, உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் நீதியரசர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், நாடாளுமன்றத்தின் மக்கள் குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்), நாடாளுமன்ற செயலாளர் நாயகம், அமைச்சரவைச் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகிய அனைவரையும் ஜனாதிபதி, தமது விருப்பப்படி நியமிப்பார்.   

பிரதமரையும் அமைச்சர்களையும் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளையும் ஜனாதிபதி நினைத்த நேரத்தில், பதவி நீக்கம் செய்யவும் முடியும். இதனால், உயர்பதவி வகிப்போர் அனைவரும், எப்போதும் ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவே முயல்வர்; ஜனாதிபதியைத் திருப்திப்படுத்தவும் முயல்வர். இதனால், ஒருபோதும் இவர்களிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாத நிலைமை உருவாகும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். ஜனாதிபதி விரும்பியபடியே, நாட்டில் சகலதும் நடைபெறும் என்பதால், இது சர்வாதிகாரம் என அவர்கள் கூறுகிறார்கள்.  

ஜனாதிபதி நினைத்த நேரத்தில், சட்ட மா அதிபரைப் பதவி நீக்கம் செய்ய முடியுமாக இருந்தால், அவர் எப்போதும் ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகாதவாறே செயற்பட நினைப்பார். எனவே, அவர் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ன குற்றத்தைச் செய்தாலும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தயங்குவார். அதேவேளை அவர், ஜனாதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய முற்படுவார் எனவும் எதிர்க்கட்சியினர் விவாதிக்கின்றனர்.   

எதிர்க்கட்சியினரின் வாதத்தின்படி, பொலிஸ் அதிகாரி ஒருவர், நியாயமாக நடந்து கொண்டு, அதனால் அரசாங்கத்தின் கோபத்துக்குள்ளாகித் தண்டிக்கப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அஞ்சுவார். ஏனெனில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நீதியரசர்களே உயர்நிலை நீதிமன்றங்களில் இருப்பர். அந்த நீதியரசர்களைக் கொண்ட நீதித்துறை ஆணைக்குழுவாலேயே, ஏனைய நீதியரசர்கள் நியமிக்கப்படுவர்; பதவி உயர்வு பெறுவர். எனவே, நீதிபதிகள் எப்போதும் அரசாங்கத்துக்கு, குறிப்பாக, ஜனாதிபதிக்கு அஞ்சியே செயற்பட வேண்டியிருக்கும். இந்த நிலையில், பொலிஸார் நீதியாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.  

இந்தநிலையில், ஆளும் கட்சியைத் திருப்திப்படுத்த, ஒரு மனிதனுக்கு எதிராகப் பொலிஸார் அநீதி இழைத்தால், அதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடுவதும் அர்த்தமற்றது என, அவர்கள் வாதிடுகிறார்கள்.  

நீதியரசர்களும் பொலிஸ் மா அதிபரும் ஏனைய உயர் பதவிகளுக்கான ஆள்களும், ஜனாதிபதியால் நேரடியாகத் தற்போது நியமிக்கப்படுவதில்லை. அப்பதவிகளுக்கான பெயர்கள் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர், அரசமைப்புச் சபையால் அப்பரிந்துரைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும். 

இதுவரை அப்பரிந்துரைகள் அங்கிகரிக்கப்படாத சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன. அவ்வாறு இருந்தும் தற்போதும் பொலிஸார், பல சந்தர்ப்பங்களில் நியாயமாக நடந்து கொள்வதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க, நேரடியாகவே ஜனாதிபதியின் கீழ், இவ்வனைத்து உயர்பதவி நியமனங்களும் வந்தால், நிலைமை எவ்வாறு இருக்கும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.   

இதுவரை நீதித்துறையை, நீதித்துறை ஆணைக்குழுவே நிர்வகித்து வந்தது. பொலிஸ் திணைக்களத்தை பொலிஸ் ஆணைக்குழுவே நிர்வகித்து வந்தது. அரச சேவை ஆணைக்குழுவே அரச சேவையை நிர்வகித்து வந்தது. அதேபோல், தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு போன்றவை தத்தமது துறைகளை நிர்வகித்து வந்தன. இவ்வாணைக்குழுக்கள் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்தின் ஏனைய கட்சிகளால் நியமிக்கப்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் சிலரைக் கொண்ட அரசமைப்புச் சபையாலேயே நியமிக்கப்பட்டன.   

ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் கீழ், அந்த ஆணைக்குழுக்களை ஜனாதிபதியே நியமிப்பார். அவர் விரும்பினால், எந்தவோர் ஆணைக்குழு உறுப்பினரையும் நீக்க முடியும். எனவே, அவர்களும் எப்போதும் அச்சத்துடனேயே செயற்பட வேண்டியிருக்கும். அதாவது, ஜனாதிபதியின் விருப்பப்படியேதான், அவை இனி நடந்து கொள்ளும்.   

அரசமைப்புச் சபையொன்று, இதுவரை இருந்ததைப் போல், 20ஆவது திருத்தத்தின் கீழ், நாடாளுமன்றச் சபை என்ற நிறுவனம் உருவாக்கப்படும். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமராலும் எதிர்க்கட்சித் தலைவராலும் நியமிக்கப்படும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச் சபையின் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்ககும் போது, அதைப்பற்றித் தமது கருத்தைத் தெரிவிக்க மட்டுமே அச்சபைக்கு முடியும்; அந்தக் கருத்தை, ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.   

கணக்காய்வு ஆணைக்குழுவொன்றும் 19 ஆவது திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்டு இருந்தது. 20ஆவது திருத்தத்தின் கீழ், அது இரத்துச் செய்யப்படும். அதேவேளை ஜனாதிபதி செயலகம், பிரதமரின் அலுவலகம், அரச கம்பனிகள் ஆகியவை, கணக்காய்வு செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.   
ஜனாதிபதி அலுவலகத்துக்கு ஓர் அமைச்சைப் போல் பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகிறது. 20ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், அங்கும் பிரதமர் அலுவலகத்திலும் அரச கம்பனிகளிலும் ஊழல் இடம்பெற்றால், அதைக் கண்டறிய கணக்காய்வு எதுவும் நடைபெறாது என்றும் எதிர்க்கட்சியினர் சுட்டிக் காட்டுகின்றனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவ்வாறு ஊழல்கiளில் ஈடுபட மாட்டார்கள் என பொதுஜன முன்னணியினர் வாதிடலாம். அப்படியேதான் வைத்துக் கொண்டாலும் எதிர்க்கால ஜனாதிபதிகள், பிரதமர்கள் ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களால் வழங்க முடியுமா?  

நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு, நாலரை ஆண்டுகள் செல்லும் வரை, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது என்று, 19ஆவது திருத்தம் கூறுகிறது. 2015ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம், நாலரை வயதை அடையும்முன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அதைக் கலைத்தார்.   

19ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதி சட்ட விரோதமாக எதையும் செய்தால், சட்ட மா அதிபருக்கு எதிரான வழக்கொன்றின் மூலம், நீதியைக் கோர முடியும். எனவே, ஐ.தே.க உள்ளிட்ட சிலர், இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம், அது சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால், 20ஆவது திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாட முடியாது. இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டியே, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X