2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

உண்மையான நல்லிணக்கவாதி: கண்டி வன்முறைகளிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனக் கலவரங்களின் போது குற்றமிழைப்போரை, அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தண்டிக்கப்படுவோரது பிள்ளைகள், அத்தண்டனைகளால் பாதிக்கப்பட்டு, பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதனைத் தடுக்கவும் வழிமுறைகளைக் காண வேண்டும்.

- இவ்வாறு கூறுகிறார், கண்டி மாவட்டத்தில் மெத மஹநுவர, அம்பால என்னும் கிராமத்தில் இருக்கும், பேரகெட்டிய ஸ்ரீ இஸிபத்தனாராமய விகாரையின் பிரதம மதகுருவான, கீனபெலெஸ்ஸே உப்பாலி ஞானிஸ்ஸர தேரர். அம்பால என்பது, கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்களுக்குக் காரணமான சம்பவத்தின் போது உயிரிழந்த சிங்களவரின் கிராமமே.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த லொறிச் சாரதியான எம்.ஜீ. குமாரசிங்கவுக்கும் ஓட்டோவொன்றில் பயணம் செய்த நான்கு முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக, தெல்தெனியவில் வைத்து, குமாரசிங்க கடுமையாகத் தாக்கப்படுகிறார். பின்னர் குமாரசிங்க, வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காது உயிரிழக்கிறார். அதனை அடுத்தே, கண்டி மாவட்டத்தில் பல இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன.

குமாரசிங்க இறப்பதற்கு முன்னரே, சம்பந்தப்பட்ட நான்கு முஸ்லிம்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகிறார்கள். அந்த நான்கு பேரைப் பற்றிக் குறிப்பிடும் போதே, ஞானிஸ்ஸர தேரர் மேற்கண்டாறு கூறுகிறார்.

இது, வித்தியாசமானமானதொரு கருத்தாகத் தெரிகிறது. பொதுவாக எவரும், “குற்றமிழைத்தவர்கள், அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்கப்பட வேண்டும்” என்பதோடு நின்றுவிடுவார்கள். தண்டனை நியாயமாகத் தென்படுவதனாலேயே அவ்வாறு கூறுவர். அதேவேளை, தண்டனையால் மற்றவர்கள் பாடம் படிக்கலாம் என்றும் கருதப்படுவதாலும் அவ்வாறு கூறுவர். ஆனால் சிலவேளை, அவ்வாறு கூறுவோர், தமது இனத்தவர்கள் தண்டிக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். நிலைமை அவ்வாறிருக்க, குற்றவாளிகளின் பிள்ளைகளைப் பற்றி, எவரும் ஒருபோதும் அக்கறை கொள்வதில்லை.  

ஞானிஸ்ஸர தேரர், தண்டனைக்கு அப்பாலும் சிந்திக்கிறார். “குமாரசிங்கவைத் தாக்கியவர்கள், தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சிறைக்குச் செல்லும்போது, அவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். அப்பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அந்தப் பாதிப்பின் காரணமாக, அந்தப் பிள்ளைகள், பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதற்கும், நாம் தான் பரிகாரம் காண வேண்டும்” என அவர் கூறுகிறார்.  இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அனுசரணையுடன், நியூஸ்வியூ நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஊடகத்துறைப் பாடநெறியொன்றைக் கற்கும் மாணவர்கள் சிலரோடு, நடைமுறைப் பயிற்சிக்காக அம்பாலவுக்குச் சென்று ஞானிஸ்ஸர தேரரைச் சந்தித்த போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். 

ஊடகத்துறை மாணவர்கள் அவரைச் சந்திப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது. மேற்படி நான்கு முஸ்லிம்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த குமாரசிங்கவின் பெயரில், கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, கட்டுகஸ்தோட்ட போன்ற பல இடங்களில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகள், கடைகள், வாகனங்கள் தாக்கி எரிக்கப்பட்ட போதிலும், குமாரசிங்கவின் பிறப்பிடமான அம்பாலவில், எவ்வித வன்செயலும் இடம்பெறவில்லை. 

அந்தப் பிரதேசத்தில், ஏழாயிரத்துக்கு அதிகமான சிங்கள மக்கள் வாழ்கிறார்கள். எனினும், 36 முஸ்லிம் குடும்பங்களே வாழ்கின்றன. எனவே, அதுபோன்றதொரு சம்பவத்தை அடுத்து, அங்கு முஸ்லிம்களுக்கு எவ்விதப் பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. இந்த நிலையில், ஞானிஸ்ஸர தேரர் எடுத்த பெரு முயற்சியின் பயனாகவே, குமாரசிங்கவின் பெயரில் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகள் பற்றியெரியும் போதும், குமாரசிங்கவின் சொந்த ஊரான அம்பாலவில், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டனர். அம்பால பள்ளிவாசலில் கடமையாற்றுவோரும் இதனை உறுதிப்படுத்தினர். 

“இந்த ஊரில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு, நீங்கள் எவ்வாறு பார்த்துக் கொண்டீர்கள்?” என்று, எம்மில் ஒருவர் அவரிடம் கேட்ட போது, நீண்டதொரு கதையை அவர் கூறினார். அதற்கு முன்னர், அதனை அவர் சாராம்சப்படுத்தினார்: “கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்ததால் காயமடைந்த குமாரசிங்க உயிரிழக்கலாம் என்ற சந்தேகம், ஆரம்பத்திலிருந்தே எம்மிடம் இருந்தது. எனவே, அதற்கு முன்னரே, பிரதேச மக்கள் கொதித்தெழாமல், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பாங்கை நாம் உருவாக்கினோம்” என, அவர் கூறினார். 

ஞானிஸ்ஸர தேரர், அந்தக் கேள்விக்கு அளித்த நீண்ட பதிலை, அவரது வார்த்தைகளாலேயே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

“குமாரசிங்கவின் குடும்பம், மிகப் பெரியது. அதாவது, அவரது உறவினர்கள், ஊர் முழுவதிலும் வாழ்கிறார்கள். எனவே, தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்த அவருக்கு ஏதாவது நடந்தால், நிலைமை விபரிதமாகிவிடும் என நாம் நினைத்தோம். எனவே, வைத்தியசாலையில் அவர் இருந்த ஒன்பது நாள்களிலும், நாம் அந்த உறவினர்களைச் சமாதானப்படுத்தினோம். எனவே, அவர் உயிரிழந்த போது, பொறுமை உணர்வை நாம் அவர்களிடத்தில் உருவாக்கியிருந்தோம்.

“அவரது பெற்றோரை நாம் பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி, பொலிஸார் மூலமாக, பொறுமைக்கான உபதேசங்களை அவர்களுக்கு வழங்கினோம். பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை இங்கு அழைத்து, இங்கு குடும்பங்களின் மூத்தவர்களுக்கு நிலைமையை விளக்கினோம். இனக் கலவரம் ஏற்பட்டால், புதிய சட்டத்தின் படி, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதையும் விளக்கினோம். 

“அதேவேளை, குமாரசிங்கவுக்காக நாம், பௌத்த சமயத்தின் படி, ஒன்பது நாள்களிலும் போதி பூஜைகளை நடத்தினோம் அவற்றின் போதும் நாம், பொறுமையையே வலியுறுத்தினோம். கட்டுப்படுத்த முடியாதவர்களை, பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்கள் ஒன்று கூடி, குரோதத்தை வளர்க்கும் சந்தர்ப்பங்களை, கூடிய வரை குறைத்தோம். இதற்காக நாம், ஊரில் உள்ள முற்போக்குக் கருத்துள்ள இளைஞர்களைப் பயன்படுத்தினோம். அவர்கள், வீடு வீடாகச் சென்று, அமைதியை வலியுறுத்தி வந்தனர். எனவே, குமாரசிங்கவின் மரணச் செய்தி வரும் போது, ஊர் மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய நிலைமையை நாம் உருவாக்கியிருந்தோம்.

“ஆனால், எதுவுமே நடக்கவில்லை என்று கூற முடியாது. இரண்டு சிறிய சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால், கிராமத்தில் மூத்தவர்களினதும் முற்போக்குக் கருத்துள்ள இளைஞர்களினதும் உதவியோடு, நிலைமையை நாம் கட்டுப்படுத்திக் கொண்டோம். குமாரசிங்க இறந்த நாள் இரவு முழுவதும், இங்குள்ள பள்ளிவாசல் அருகே தான் நான் இருந்தேன். சந்தேகிக்கக்கூடிய கடைசி நபரும் அந்தப் பகுதியிலிருந்து விலகிச் சென்றதன் பின்னர், அதிகாலை 2.45க்கே, விகாரைக்கு நான் வந்தேன். 

“மரணம் இடம்பெற்றதன் பின்னரும், இங்குள்ள முஸ்லிம் கடையொன்று திறந்து இருந்தது. நான் அதன் உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து, கடையை மூடுமாறு கூறினேன். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போது நான், பள்ளிவாசல் மௌலவிக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து, அதை மூடச் செய்தேன். அவ்வாறானதொரு புரிந்துணர்வு, சமயத் தலைவர்களிடையே இங்கு இருக்கிறது. 

“அம்பகஹ சந்தி பள்ளிவாசலில் கலந்துரையாடல் ஒன்றை நாம் நடத்தி, இறந்தவரின் குடும்பத்துக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பதை ஆராய்ந்தோம். அது, நல்லுறவுக்கு உதவும் என்பதாலேயே அவ்வாறு செய்தோம். கிராமத்தில் சுமார் 300 பேரை, பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி, பொலிஸார் மூலமாக, அமைதிக்கான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினோம். 

“குமாரசிங்கவின் இறுதிச் சடங்கின் ‘பான்சுகூல’ கிரியையின் போதும் (சடலத்தை அடக்குவதற்கு முன்னரான சமயக் கிரியைகளின் போதும்), ஒன்றாக இணைந்து வாழ்வதன் நன்மைகளையே வலியுறுத்தினோம். ‘சட்டத்தைப் பொலிஸார் கவனித்துக் கொள்ளட்டும்’ என்று எடுத்துக் கூறினோம்.

இவ்வாறு குமாரசிங்க தாக்கப்பட்ட நாள் முதல், அவரது பூதவுடல் அடக்கப்படும் வரை, அமைதியை பேணுவதற்காக நாம், அயராது உழைத்தோம். ஆனால், நான் தனியாக இவற்றைச் செய்யவில்லை. இங்குள்ள முற்போக்குக் கருத்துள்ள இளைஞர்கள் எனக்கு உதவினார்கள். எனக்கு வேண்டிய இடங்களுக்கெல்லாம், அவர்களது வாகனங்களில் அழைத்துச் சென்றார்கள். 

“வழமையாக பௌத்த பிக்குகள், அழைப்பின் பேரிலேயே மரணச் சடங்குகளில் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்த மரணத்தின் போது, மெத தும்பர பிரதேசத்தின் சகல விகாரைகளிலுமுள்ள பிக்குகள், அழைப்பின்றியே வந்தார்கள். இனக் கண்ணோட்டத்தில் பிரச்சினையை நாம் அணுகவிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் கட்டியெழுப்புவது பற்றியே கவனத்தைச் செலுத்தச் செய்தோம். வந்த பிக்குகள் எவரும், மற்ற நோக்கத்தோடு இருக்கவில்லை. அவர்களும், சுமூக நிலைமையைப் பாதுகாக்க அர்ப்பணிப்போடு செயற்பட்டனர்.

“இந்தப் பிரதேசத்தில் சமயத் தலைவர்களிடையே ஏற்கனவே நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதேவேளை, கிராமத்தில் வாழும் மூத்தவர்கள், நீண்ட காலமாக ஏனைய இனத்தவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தவர்கள். அந்த உறவு பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அந்த நிலைமை எமக்கு உதவியது” என்று அவர் விளக்கினார். 

இந்த விளக்கத்தோடு, ஞானிஸ்ஸர தேரர், இடைக்கிடையே சில முக்கிய கருத்துகளையும் கூறினார். இரு இனங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு தகாத சம்பவம் இடம்பெற்றால், அந்தப் பிரச்சினை என்ன என்று அடையாளம் காண வேண்டுமேயல்லாது, அதற்கு இனச் சாயம் பூசக்கூடாது என்பதை, பல முறை அவர் கூறினார். ஒரு சம்பவம் இடம்பெற்றால், சம்பந்தப்பட்டவர்களின் இனம் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்ற மனோபாவம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது, நாட்டில் சகல இனத்தவர்களுக்கும் பொருத்தமான ஆலோசனையாகும். 

ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே நிலவி வந்த உறவு இப்போது காணப்படாமையால், பிணக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்கிறார், ஞானிஸ்ஸர தேரர். அதற்கு அவர், சில காரணங்களையும் முன்வைத்தார். இன, மத ரீதியான பாடசாலைகள்; இன, மத ரீதியான அரசியல் கட்சிகள்; ஊடகங்களின் பக்கச்சார்பான போக்கு ஆகியன, அவர்கள் குறிப்பிட்ட காரணங்களாகும்.

 அவர் கூறுவது முற்றிலும் உண்மையே. ஆனால், இன, மத ரீதியான பாடசாலைகள், உண்மையிலேயே முன்னரும் இருந்தன. எனினும் அக்காலத்தில், எந்தவொரு மாணவனும் தாம் விரும்பிய பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். இப்போது, சகல பிரதான பாடசாலைகளிலும், குறிப்பிட்டதொரு விகிதாசாரத்திலேயே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 

அதேவேளை, சிங்களத் தலைமையுள்ள இரு பிரதான கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்தமையிலேயே, இனவாரியான கட்சிகள் உருவாகின. விகிதாசாரத் தேர்தல் முறை, மக்கள் மேலும் இன ரீதியாக நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யத் தூண்டுகிறது. எனவே, இவற்றுக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினமாகியுள்ளது.

ஞானிஸ்ஸர தேரர், சில ஆலோசனைகளை முன்வைக்கிறார். “பல இனங்களைச் சேர்ந்த மாணவர்கள், சகல பாடசாலைகளிலும் போதியளவில் இருக்க வேண்டும்; சகல இன மக்களும், சகல அரசியல் கட்சிகளிலும் இருக்க வேண்டும்; விளையாட்டு மைதானத்தில், சகல இனப் பிள்ளைகளும் ஒன்றாக விளையாட வேண்டும்; அந்தந்தப் பிரதேசங்களில் பிக்குவுக்கும் மௌலவிக்கும் இந்து மத குருவுக்கும் பாதிரியாருக்கும் இடையே, நெருங்கிய உறவு இருக்க வேண்டும்; அந்த உறவு, மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான், சாதாரண மக்களும் ஏனைய சமயத்தவர்களுடன் பழகுவார்கள். 

“சிங்கள மக்களை நேசிக்கும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் உருவாக்க வேண்டும்; தமிழர்களை நேசிக்கும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் உருவாக்க வேண்டும்; அதேபோல், முஸ்லிம்களை நேசிக்கும் சிங்களவர்களையும் தமிழர்களையும் உருவாக்க வேண்டும். 

“பௌத்தரல்லாதோர் விகாரைகளுக்கு வர வேண்டும்; முஸ்லிம் அல்லாதோர், பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும். அப்போது தான், ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் பயமும் சந்தேகமும் இல்லாமல் போகும். இப்போது, பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள், தனித் தனியாகத் தமது வேலைகளைச் செய்து கொள்கிறார்கள். அவர்கள் ஒன்று கூடுவது, சண்டையில் மட்டுமே. அந்த நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்” என, தேரர் தமது ஆலோசனைகளை அடுக்கிக் கொண்டு போகிறார்.  
சிங்கள, தமிழ் ஊடகங்கள், தமது சந்தைத் தேவைகளுக்காக, பக்கச்சார்பாகச் செயற்படுகின்றன எனக் கூறிய அவர், அதனைக் கடுமையாகச் சாடினார். 

மற்றொரு வித்தியாசமான, முக்கிய கருத்தையும் அவர் தெரிவித்தார். அதாவது, இனங்களுக்கிடையே உறவை வளர்ப்பதில், உணவகங்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதே. உரிமையாளரின் இனத்தைப் பார்க்காது, மக்கள் ஒன்றாக உணவருந்தக்கூடிய இடங்கள் இருக்க வேண்டும் என்பது, அவரது வாதமாகும். 

நாட்டுப்பற்று என்றால், தமது நடவடிக்கைகளால் நாட்டுக்கு ஏற்படப் போவது கௌரவமா, இழுக்கா என்பதைச் சிந்திக்கக் கூடிய தன்மையே என, ஞானிஸ்ஸர தேரர் கூறுகிறார். போரின் போது இடம்பெற்ற பல சம்பவங்கள், நாட்டுக்கு அவப்பெயரையே தேடித்தந்தன என்கிறார் அவர். 

நடந்து முடிந்த சம்பவங்களில், போதைப்பொருட்களின பங்கை விவரித்த அவர், சிங்கள இளைஞரைத் தாக்கியவர்களும் போதையில் இருந்துள்ளனர்; அதேபோல் முஸ்லிம்களின் உடைமைகளைத் தீயிட்டுக் கொளுத்தியவர்களிலும் பெரும்பாலானோர், குடிபோதையிலேயே தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர் என அவர் கூறுகிறார். 

ஏறத்தாழ தனிச் சிங்களக் கிராமமொன்றில் வாழும் இந்த மதகுருவின் நடுநிலை, ஒரு வகையில் ஆச்சரியத்துக்குரியது என்றே கூற வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X