2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

உரக்கப் பேசும் ‘உலகநாயகன்’; அரசியல் கனவு நனவாகுமா?

எம். காசிநாதன்   / 2017 ஜூலை 24 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் திடீர் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது.   

“அ.தி.மு.க ஆட்சியில் ஊழல்” என்று அவர் வீசிய ‘பிரம்மாஸ்திரம்’ 
அ.தி.மு.க அமைச்சர்களைக் ‘கலகலக்க’ வைத்து விட்டது. அமைச்சர்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கமல்ஹாசன் மீது, வார்த்தைப் போர் நடத்தினார்கள்.   

சட்ட அமைச்சர், “கமல்ஹாசன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று ஆவேசப் பேட்டியளித்தார்.   

இன்னோர் அமைச்சர் ஓ.எஸ். மணியன், “கமல் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் பிள்ளைக்கு நல்ல தந்தையாகவும் முதலில் இருக்க வேண்டும்” என்று பாடம் எடுத்தார்.   
நிதியமைச்சர் ஜெயக்குமாரோ, “அம்மா (ஜெயலலிதா) இருந்தவரை வாய் மூடி இருந்தவர், இப்போது ஏன் பேசுகிறார்” என்று கேள்வி எழுப்பினார்.   

இப்படி, அமைச்சர்கள் பலரும் தொடுத்த போர் முடிவதற்குள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கமல்ஹாசன் இப்போது நடிக்கிறார்; அரசியலுக்கு வரட்டும்; அவர் பேட்டிக்குப் பதில் சொல்கிறேன்” என்றார்.  

கமல்ஹாசனைப் பொறுத்தமட்டில், திடீரென்று இப்போதுதான் ஊழல் பற்றிப் பேசியிருந்தாலும், அவர் அவ்வப்போது அரசியல் கருத்துகளைக் கூறி வருபவர்தான்.   

‘விஸ்வரூபம்’ படம் சிக்கலைச் சந்தித்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை விமர்சித்தவர்தான் கமல்ஹாசன்.   

சென்னை பெரு வெள்ளத்தில் மூழ்கியபோது, இவரின் விமர்சனத்துக்குப் பதில் சொல்லும் வகையில், ‘கருத்துக் கந்தசாமி’ என்று கமல்ஹாசனை விமர்சித்தவர் ஓ. பன்னீர்செல்வம்.   
ஆனால், இன்றைக்கு கமல் மீது, அ.தி.மு.க அமைச்சர்களின் தாக்குதலுக்கு முதலில் பதிலடி கொடுத்தவர், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.  

அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதைத் தொடர்ந்து டி.டி.வி தினகரனே, கமலுக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்லி, “அமைச்சர்கள் அவரை ஒருமையில் பேசக்கூடாது” என்ற வகையில் பேட்டியளித்தார்.   

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசனை விமர்சித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மாநிலத்தில் உள்ள பா.ஜ.கவும் கமலை விமர்சிப்பதுதான் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

ஏனென்றால், அ.தி.மு.க ஊழல் பற்றி, கமல்ஹாசன் பேசுவதால், நடுநிலை வாக்காளர்கள் திசை மாறுவார்கள். அப்படித் திசை மாறும் வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவீத ஆதரவை, பா.ஜ.க மட்டுமே பெற முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதுபோல், கமலை, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சித்துக் கொண்டிருப்பது, பல பா.ஜ.க மாநில தலைவர்கள் மட்டத்தில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

ரஜினி அரசியலுக்கு வருவார் என்றும், அவர் பா.ஜ.கவில் சேருவார் என்றும் எதிர்பார்த்த மாநில பா.ஜ.கவுக்கு கமல், அ.தி.மு.க ஊழல் பற்றிப் பேசியதும், அதற்குத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு அளித்ததும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.   

அதனால்தான், தமிழிசை சௌந்திரராஜன், இந்தக் கமல் எதிர்ப்பைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், இது பா.ஜ.கவுக்கு இலாபமான பாதை அல்ல என்பதை ஏனோ உணர மறுக்கிறார் என்று கூறும் பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர், “கமல், அ.தி.மு.க ஊழலை விமர்சிக்கிறார். அவரை பா.ஜ.க விமர்சிப்பது, அ.தி.மு.க ஊழலுக்குத் துணை போவது போன்ற அர்த்தம் ஏற்படாதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.  

ஆனால், கமலின் பேச்சு, பல அரசியல் தலைவர்களின் மனதில் கலவரத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. தி.மு.கவைப் பொறுத்தமட்டில், ஜெயலலிதாவுக்கு எதிராக 1996 களில் ரஜினியை எப்படிப் பயன்படுத்திக் கொண்டதோ, அந்த அளவுக்கு மட்டுமே, கமலை அ.தி.மு.க அரசாங்கத்துக்கு எதிராகப் பயன்படுத்த நினைக்கிறது.  

அதனால்தான், ஊழல் பற்றிப் பேசிய கமலை ‘முரசொலி’யின் பவள விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த விழாவுக்கு ரஜினியும் பார்வையாளராக வருகிறார் என்றும் செய்திகள் அடிபட்டாலும், கமலின் தீவிர அரசியல், தி.மு.கவுக்கு இலாபம் தராது.   
அதற்குப் பதில், கமலின் அ.தி.மு.க மீதான விமர்சனம், தி.மு.கவுக்குப் பலன் தரும் என்றே அக்கட்சித் தலைவர்கள் நம்புகிறார்கள். 

தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் எதிரான போட்டியில், கமலின் இது போன்ற விமர்சனங்கள் தி.மு.கவுக்குக் கைகொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.  

ஆனால், அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், இன்றைக்கு குறைந்த பட்சம் மூன்று அணிகள் வெளிச்சத்தில் இருக்கின்றன. வாக்காளர்களைத் திரட்டுவதில் எடப்பாடி பழனிசாமி அணிக்கும், ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.  தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பது, அவருக்கு மத்திய அரசாங்கம் ஆதரவளிப்பது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் இலட்சம் ரூபாய் சம்பளம் உயர்த்தியது, ஆங்காங்கே கொண்டாடி வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா போன்றவற்றால் அ.தி.மு.கவுக்குள் இருக்கின்ற அணிகளுக்குள், எடப்பாடி தலைமையிலான அணிக்கு, செல்வாக்கு மெல்ல மெல்ல உயரச் செல்கிறது.  

கமலின் விமர்சனம், அதற்கு அமைச்சர்களின் பதில் என்ற கோணத்தில் களம் மாறினால், அ.தி.மு.கவுக்குள் எடப்பாடி அணிதான் முக்கியத்துவம் பெறும். அதை மனதில் வைத்துத்தான், அமைச்சர்கள் கமலை விமர்சிக்கிறார்கள்.   

இதன் மூலம், தமிழக அரசியல் களத்தை, எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போட்டியாக மாற்றும் முதற்கட்ட முயற்சிகளுக்கு, கமலுக்கு பதிலடி கொடுப்பது உதவுகிறது.  

இதனால், பதற்றம் அடைந்திருப்பவர்கள், சசிகலாவின் நிழலாக இருக்கும் 
டிடிவி தினகரனும், சசிகலாவை வெறுத்து ஒதுங்கி நிற்கும் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வமும்தான்.   

ஏனென்றால், எடப்பாடிக்கு போதிய அளவு மக்களிடத்திலும் தொண்டர்களிடத்திலும் செல்வாக்கு இல்லை என்ற மகிழ்ச்சியில்தான், ஓ. பன்னீர்செல்வம் ஊர் ஊராகச் சென்று, பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.   

ஆட்சியில் இருப்பதை வைத்துக் கொண்டு, அ.தி.மு.க தொண்டர்களை முழுக்க எடப்பாடி அணி இழுத்து விடக்கூடாது என்பதற்காகவே, “எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் இரகசியக் கூட்டணி” என்று ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.   

அதன் அடுத்த கட்ட முயற்சியாக, எடப்பாடியை விமர்சித்த கமல்ஹாசனை ஓ.பன்னீர் செல்வம் அணி பாராட்டுகிறது. சசிகலா மீண்டும் முதலமைச்சராக முயன்றபோது, “ஓ. பன்னீர்செல்வம் திறமையாக ஆட்சி செய்வார்; அவருக்கு முதலமைச்சர் வாய்ப்புக் கொடுக்கலாம்” என்று கமல் கூறியதற்குப் பிராயச்சித்தமாக ஓ.பி.எஸ் அணியின் ஆதரவு இருந்தாலும், அரசியல், ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்று மாறி விடக்கூடாது என்பதன் வெளிப்பாடாகவே கமலுக்கு ஆதரவளித்துள்ளது.  

கமலுக்கு எதிர்பாராத திசையில் இருந்து வந்த ஆதரவு என்பது, சசிகலாவின் டி.டி.வி தினகரன் அணியும் பாராட்டுகிறது. அ.தி.மு.கவுக்குள், ஓ. பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஓரங்கட்டிவிட்டுத் தாங்கள்தான் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற சிந்தனையில் தினகரன் அணி செயல்படுகிறது.   

37 சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை தினகரனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இது எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’ வைப்பதாக அமைந்திருக்கிறது. அதுபோல், அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கும் விரைவில் தினகரன் வரவிருக்கிறார்.   

அதற்கு முன்னோடியாக, இப்போது ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிக்கையில் 
டி.டி.வி.தினகரனுக்கு முக்கியத்துவம் அளித்துச் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய செய்தி, ஒரு நாளைக்கு இருட்டடிப்பு செய்யப்படுகிறது; வேறு ஒரு நாளில் பிரசுரிக்கப்படுகிறது.   

தலைமைக் கழகத்துக்கு தினகரன் வரப் போகிறார் என்பதற்கு முன்னோடியாக இப்போதே தினகரனின் ஆதரவு பெற்ற அ.தி.மு.கவினர், தலைமைக் கழகத்துக்குச் சென்று, தொண்டர் குறைகளைக் கேட்டு வருகிறார்கள்.   

இதுபோன்ற, சூழ்நிலையில் கமலை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்க வேண்டும் என்று தினகரன் அணி நினைக்கிறது. அப்படிச் செய்தால், அங்கு உள்ள மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள், தினகரன் அணியை நோக்கி வரக்கூடும் என்று வியூகம் வகுக்கப்படுகிறது.  

ஆகவே, கமலின் விமர்சனத்துக்கு அ.தி.மு.கவுக்குள் உள்ள ஓர் அணி எதிர்ப்புத் தெரிவிப்பதும், வேறு இரு அணிகள் ஆதரவு தெரிவிப்பதும் இந்த பின்னணியில்தான். 

அரசியல் கட்சிகளின் கணக்கு இப்படியிருக்க, கமலின் கணக்கோ வேறு விதமாக இருக்கிறது. அவருக்கு அரசியல் ஆசை இருக்கிறது, என்பது அவரது விழாக்களுக்கு வைக்கப்படும், ‘கட்அவுட்’கள், ‘பேனர்’கள், அவ்வப்போது பொதுப் பிரச்சினைகளில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் சாட்சியமாக இருக்கின்றன.   

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பேச்சு அடிபட்டு, அந்தப் பேச்சு இப்போது மௌனமாகிவிட்ட நிலையில், கமலின் ‘அரசியல் ஆவேசம்’, தமிழக அரசியலில் சினிமா பிரபல்யத்துக்கு ஓர் இடம் உண்டு என்பதை உணர்த்துகிறது.   

அந்த இடத்தைப் பிடிக்க ரஜினி முயலுகிறார். கமல் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் விஷாலுக்கும் கூட ஆசை இருக்கிறது. ஆனால், ரஜினி தவிர வேறு யாருக்கும் பெரிய அளவிலான செல்வாக்கு தமிழக மக்கள் மனதில் இல்லை என்பதுதான் உண்மை.   

ஜெயலலிதாவும் இல்லை; கருணாநிதியும் முழுமூச்சாக அரசியலில் இல்லை என்ற களம் மட்டுமே இந்த நடிகர்களில் ஒருவரை முதலமைச்சராக்கி விடும் என்பது வண்ணமிகு கனவாக இருப்பதற்கு மட்டும் உதவுமே தவிர, வெற்றி பெறும் அளவுக்கு வாக்காளர்களைத் திரட்ட உதவாது.   

இன்றைய திகதியில் கமலின் ஆளுங்கட்சி விமர்சனம், தி.மு.கத்துக்கு மட்டுமே பேருதவியாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .