2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்?

Johnsan Bastiampillai   / 2020 ஜூன் 06 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை.

சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள், இடைவெளிகள் காணப்படுகின்றன.

இலங்கையில், ஏனைய இனங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இல்லாத மேலதிக பொறுப்புகளும் கடமைகளும் அவற்றை நிறைவேற்றும் பக்குவமும் துடிப்பும் தூரநோக்குப் பார்வையும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடத்தில் பெருமளவு தேவைப்படுகின்றன. இத்தகையோரையே தெரிவு செய்ய வேண்டிய தேவை, தமிழினத்தின் முன்னால் குவிந்துபோய்க்கிடக்கின்றன. 

தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதுடன், தமக்கு வாக்களித்த மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்வதற்கு அப்பால், தனது இனத்தையும் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையையும் கொண்டிருக்கிறார்கள்; தாங்கியிருக்கிறார்கள். 

கடந்த காலங்களில், தமிழ்மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தகுதியானவர் இவர்தான் என்ற கனவுடன் தெரிவுசெய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனைபேர், தமது மனச்சாட்சிக்குத் துரோகமிழைக்காமல் செயற்பட்டிருந்தார்கள் என்பது, தமிழ்த் தேசியத்தின் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும்.

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய தொழில், நிலம், இருப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதே முக்கியமாகும். பேசும் மொழியால் அன்றி, மதத்தாலேயே அவர்களது இனத்துவ அடையாளம் வெளிப்படுத்தப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது. அவர்கள், சிங்கள மொழி பேசுவோராக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தால், அவர் முஸ்லிம் இனமாகவே அடையாளப்படுத்தப்படுவார். தமிழ் மொழி பேசுவதால்தான், ஒருவர் முஸ்லிமாக இனத்துவ அடையாளப்படுத்தப்படுகின்றார் என்ற வரையறையோ தாற்பரியமோ கிடையாது. முஸ்லிம்களை, மொழிவழி இனக்குழுமமாகப் பார்க்கும் வரலாற்றுப் பாரம்பரியம், இங்கு இல்லை என்பதுவே யதார்த்தமாகும்.

எனவே, முஸ்லிம் இனத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கு, ஆளும் பெரும்பான்மையினக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது, ஒத்துப்போவதே அனுகூலமானது எனச் சிந்திக்கின்றார்கள். ஒரு பிரச்சினை எழுகின்றபோது, வெளியில் இருந்து பேசுவதைவிட, அரசாங்கத்துக்குள் இருந்து பேசுவது, அனுகூலமானது என்பது அவர்களது நிலைப்பாடு; இதில் தவறில்லை. 

சிங்கள மொழிவழியில் கல்வி கற்று, சிங்கள மொழியையே வீட்டிலும் வெளியிலும் உரையாடி, சிங்கள மொழியிலேயே பள்ளிவாசலில் தொழுகை செய்தாலும், அவர்கள் முஸ்லிம் இனஅடையாளத்தைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எனவே, அவர்கள் அரசுடன் கலந்து பயணிப்பதன் மூலம், தமது இனத்துவ அடையாளங்களை இழந்து விடுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை. அவர்கள், சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்தாலும், முஸ்லிம் என்ற இன அடையாளத்துடன் வாழமுடியும்.

ஆனால், தமிழர்களின் நிலை அவ்வாறில்லை. தமிழர்களின் இன அடையாளம், மதம் சார்ந்ததில்லை; மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசுவதன் ஊடாகவே, தமிழர், தமது இனத்துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.

தமிழர் ஒருவர், சிங்கள மொழி வழியில் கல்விகற்று, சிங்கள மொழியையே வீட்டுமொழியாகப் பேசி வாழ்ந்தால், அவரின் அடுத்த தலைமுறை, எந்த மொழிபேசும் ஒருவராக இருப்பார்? அதன்போது, அவர் தமிழர் என்ற இன அடையாளத்தை இழந்து விடுகின்றார். தற்போது, எந்த இன அடையாளத்தோடு வாழ்கின்றாரோ, அதுவே அவரது இன அடையாளம் ஆகின்றது. 
எனவே, இனத்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டால்த்தான், அந்த இனம் நின்று நிலைக்கும்.

வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்கள், தமது இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்றத் தவறியதால் அல்லது, இனத்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதைப் பல்வேறு வழிகளிலும் தடுக்கப்பட்டதால், தமிழர்கள் பல இலட்சம் பேரைத் தமது மொத்த சனத்தொகைக் கணிப்பிலிருந்து இழந்துவிட்டார்கள்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. குறிப்பாக, குருநாகல், கண்டி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை உட்பட, மேற்குக் கடற்கரையோரப் பிரதேசங்களான புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களில், பல இலட்சம் பேர், சிங்களவர்களாக இனமாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற பதிவுகள், பல இடங்களில் காணப்படுகின்றன. இவர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

புத்தளம்-சிலாபம் மறைமாவட்டத்தைத் மய்யமாகக் கொண்ட கத்தோலிக்க தேவாலயங்கள், பாடசாலைகள் ஊடாக, படிப்படியாக சிங்கள மயமாக்கல் இடம்பெற்றது. ஆனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கிராமங்களான உடப்பு, முன்னேஸ்வரம் ஆகியவை, தமிழர்கள் என்ற மொழி அடையாளத்தை இன்றுவரை பல இடர்பாடுகள், இன்னல்களுக்கு மத்தியில் பேணி வருகின்றார்கள். 

கொழும்பின் வடக்கே, சிலாபம் வரையுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் செறிவாக வாழ்ந்த மக்கள், போர்த்துக்கேயரால் கத்தோலிக்கர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். போர்த்துக்கேய காணிப்பதிவுப் பத்திரங்களில் காணப்படும் விவரங்களின்படி, மதமாற்றத்துக்கு முன்னர், இவர்களுடைய பெயர்கள், இந்துமதத்தைத் சார்ந்தவையாகக் காணப்பட்டுள்ளன.

1915ஆம் ஆண்டு மே 28இல், சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரம் இடம்பெற்றது. இதன்போது, முஸ்லிம்களின் பெறுமதியான பல சொத்துகள் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட சொத்துகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் சிங்களவர் மீது, தண்டம் விதித்தது. இதன்போது, கொழும்பின் வடக்கே மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் புத்தளம் வரை வாழ்ந்த மக்கள், தாங்கள் சிங்களவர் இல்லை என்றும், தாங்கள் தமிழர்கள் என்றும் பிரித்தானிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார்கள். இந்த விண்ணப்பம், இன்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகத்தில் காணப்படுவதாக அறியமுடிகிறது. 

இவர்கள் தமிழர்களாக இருந்தால், எத்தகைய ஆபத்துகளை, அழிவுகளை எதிர்கொண்டார்கள் என்பது குறித்த பதிவுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, எத்தகைய ஆபத்துகள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதால், அவர்கள் தங்களது அரச பதிவுகளில், 'சிங்களவர்' என்று பதிவுசெய்து கொள்கின்றார்கள் என்பதை, இலக்கையின் இனநெருக்கடி வரலாற்றை அறிந்து கொண்டவர்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கை முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயற்படும் பேரினவாதக் குழுக்களையும் இவர்களின் விருப்பு வெறுப்புகள், அபிலாஷைகளுக்காகவே செயற்படுவதற்காக, அரசியல் அதிகாரத்துக்கு மாறிமாறிவரும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் யார் தடுத்தாலும் குறித்த அச்சிலேயே சுழல்வார்கள். 

எனவே, தமிழர்கள் தமது இனம் அழிவதைத் தடுக்க, அவர்கள் போராடியே ஆகவேண்டும். அத்தகைய போராட்டம், எத்தகைய தன்மையானது, எந்தச் செல்நெறியினூடானது என்பதே தமிழர்கள் முன்னுள்ள மிகப்பெரிய வினா?

எனவே, தமிழர்கள் முன்னுள்ள சவால்களை எதிர்கொண்டு, முன்கொண்டு செல்லக்கூடிய தமிழ்க்கட்சி எது, அரசியல்வாதி யார் என்பது குறித்துச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவுகளைத் தமிழ்மக்கள் எடுத்தல் வேண்டும். அது, ஒன்றுபட்டதும், ஒற்றுமைப்பட்டதுமாக இருக்கவேண்டும். 

தமிழ்த் தேசிய அரசியல், தொடர்ந்தும் அபிவிருத்தி அரசியலிலா, உரிமை அரசியலிலா பயணிக்க வேண்டும் என்ற குழப்பம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. போராடிப்போராடி நாம் பெற்றுக் கொண்டது என்ன என்று கேள்வி கேட்பவர்கள், இனஅழிப்பு, ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடாமல் விட்டிருந்தால், இன்று, இலங்கையில் ஒரு தமிழ் எழுத்தைக் கூடக் காணமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. 

'தமிழர்களுக்கு இப்போது எந்தப் பிரச்சினைகளும் கிடையாது; அவர்கள் எம்முடன் இணைந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்கள்' என்று வெளிநாடுகளுக்குத் தேனொழுகச் சொல்லிக் கொண்டே, இலங்கையை முழுமையாகச் சிங்கள-பௌத்த நாடாக மாற்றும் கைங்கரியம் நிறைவேற்றப்பட்டிருக்கும். 

எனவே, தமிழர்களின் எதிர்கால அரசியல், தொடர்ந்தும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும், இனஅடையாளங்களைப் பாதுகாப்பதற்கான வன்முறையற்ற போராட்ட அரசியலாகவே இருக்க வேண்டும் என்பது கடந்த கால வரலாறு கற்றுத்தரும் பாடமாகும். 

இராணுவ நெருக்கடிச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அஹிம்சாவாத வழிமுறைகள் ஊடாக, மக்கள் எவ்வாறு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள் என்பதற்கு, போலந்து மக்களின் வெற்றிகரமான ஒருமைப்பாட்டு போராட்டம், இன்றைய நிலையில் தமிழர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் ஆகும்.  

    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .