உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள்

ஆரோக்கியம் என்றால் என்ன? “நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்” என ஒருவர் கூறினால், அது வெறுமனே உடல் சார்ந்த ஆரோக்கியமா? அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? ஆகவே, இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பின்வருமாறு விளக்கம் தருகின்றது.   

ஆரோக்கியம் என்பது, நோயினால் பீடிக்கப்படாததும் இயலாமையில் இருந்து விடுபட்டதுமான நிலை மாத்திரமல்ல; ஒருவர் தம் உடல், உளம், சமூகம் மற்றும் ஆன்மீகத் தளங்களில், அடையக்கூடிய அதி உயர்ந்த நிலையே ‘ஆரோக்கியம்’ எனலாம். ஆரோக்கியம், மனிதனின் அடிப்படைப் பிறப்புரிமைகளில் ஒன்று ஆகும்.   

இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் தற்போது ஈழத் தமிழ் மக்கள் ஆரோக்கியமான ஒரு மக்கள் கூட்டமாக, சமூகமாக உள்ளனர் எனக் கூற முடியுமா?   

யுத்தம் முடிந்து ஆண்டுகள் எட்டு உருண்டு ஓடி விட்டன. ஆனாலும், மக்கள் தங்கள் மனதளவில் ஒரு பெரும் முடிவில்லாத போருக்குள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையே, அண்மைய வடக்கு மாகாணத்தின் தற்கொலை தொடர்பான புள்ளி விவரங்கள் சுட்டி நிற்கின்றன.  

அன்றாட ஜீவனோபாயத்துக்கே அல்லல்படும் நிலை, யுத்தத்தில் உறவுகளைப் பறி கொடுத்துவிட்ட நிரந்தரப் பிரிவுத்துயர், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற கழிவிரக்கம், வாழ்வாதாரத்தைப் பறி கொடுத்து, பொருளாதாரத்தில் ஏழ்மை, வறுமை நிலைவரம், ஆயிரக்கணக்கில் அந்தரிக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்; அவர்களின் துயர் நிலை, அதிகரித்த மது, புகைத்தல், போதைவஸ்துப் பாவனையும் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையும், வீட்டுத் திட்டங்கள் மற்றும் இதர தேவைகளால் ஏற்பட்ட, தங்களது சக்திக்கு அப்பாற்பட்ட அதிகரித்த கடன் சுமை, அதனோடு இணைந்த வட்டிக்கொடுப்பனவு, மாறி வரும் பண்பாட்டுச் சிதைவுகளால் வாழ்க்கை முறையில் நடக்கும் ஒழுக்க சீர்கேடான நடத்தைப்போக்குகள். அதாவது வேண்டத்தகாத கர்ப்பம், பதின்ம வயதுக் கர்ப்பம், உறவுகளை இழந்து தனிமை நிலை, முற்றிலும் நம்பிக்கை அற்ற எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள், சிந்தனைகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான தொடர் கவலைகள், அவர்கள் வெளிப்பட மாட்டார்களா என்ற ஏக்கம், படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் விடுவிக்கப்படாத தமது நிலம் தொடர்பான நிம்மதியற்ற நிலை, பாடசாலை செல்லாத சிறார்கள் அதிகரித்த பாடசாலை இடை விலகல்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பற்ற சூழல், சிறு வயதுத் திருமணம் என நாளாந்த வாழ்வில் எதிர்நோக்கும் சவால்கள்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இவ்வாறான பிரச்சினைகளைச் சுமந்த வண்ணம், மக்கள் நடைப்பிணங்களாக வாழ்வது கண்கூடு.   

பாடசாலை மற்றும் பல்கழைக்கழக மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியாக அவ்வப்போது தற்கொலைகள், அத்துடன் தற்கொலை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் வவுனியாவில் இருபது வயதுடைய இரண்டாம் தடவையாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் தற்கொலை புரிந்துள்ளார். இவர் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பெற்றோருடன் உரையாடியதாகவும்  இம்முறை எப்படியான பரீட்சை முடிவுகள் வரப்போகின்றதோ எனப் பெற்றோருடன் ஆதங்கப்பட்டதாகவும் அம்மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.  

 பரீட்சை முடிவுகள் வரும் முன்னரே குறித்த மாணவன் தன் உயிரை முடிவுக்குக் கொண்டு வந்தது, மிகவும் மூடத்தனமான விடயமாகும். ஆகவே, சமூகத்தையே வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள இளைஞர்கள், இவ்வாறான வழி தவறிப்போகும் நிலை அதிகரித்துச் செல்கின்றது.   

ஆகவே, இவ்வாறான வேண்டப்படாத துன்பியல் சம்பவங்கள் ஏன் எம் மண்ணில் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என அனைவரும் பலமாக, பலமுறை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். விடுதலைக்காகத் தாமாகவே தற்கொடையாளர்களாக முன்வந்தவர்களைக் கொண்ட அதே மண்ணில், இந்தத் துன்பியல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.    

முல்லைத்தீவு மாவட்டத்தில், இவ்வருடம் (2017) தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் 117 பேர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அந்த மாவட்ட சுகாதார பிரிவினரின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களில் ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் சிகிச்சை பெற்று தம் இல்லங்கள் திரும்பி உள்ளனர்.   

மேலும், இவ்வாறாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர், மீண்டும் அதே முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஏது நிலைகள் அவர்களது வீட்டிலும் சமூகத்திலும் நிறையவே உள்ளன. 

அத்துடன் இந்தப் புள்ளிவிவரங்களில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்களின் விவரங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

அதிர்ச்சி, அச்சம், குற்ற உணர்வு, இனம் புரியாத சோகம் எனப் பல காரணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகளாக அமைகின்றன. அவ்வாறான நிலைகள் காணப்பட்டு, அவற்றிலிருந்து விடுபட முடியாத நிலை தொடர்ச்சியாக நீடிக்கும்போது, தற்கொலை முயற்சிகளுக்குத் தூண்டப்படலாம் அல்லது எத்தனிக்கலாம்.  

மிக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் பெண் (வயது 36) ஒருவர் தனது ஆறு மற்றும் இரண்டு வயதுப் பிள்ளைகளுக்கு முன்னால் தற்கொலை புரிந்துள்ளார். குழந்தைகள் சத்தமிட்டு, அவலக் குரல் எழுப்பவே, அயலவர்கள் காப்பாற்ற முனைந்துள்ளனர். அவ்வாறான போதும் அது பயனளிக்கவில்லை. இவர் ஏற்கெனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் காப்பாற்றப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

குறித்த தாய் மரணித்து விட்டார். ஏனோ தற்கொலை தனது பிரச்சினைகளுக்கு நிரந்தர பரிகாரம் எனப் பிழையாக எடை போட்டு விட்டார். தனது தற்கொலை அவலக் காட்சியை நேரடியாகக் கண்ட தன் பிள்ளைகளின் மனத்தாக்கம், மன உளைச்சல் தொடர்பில் அவர் எள்ளளவும் கருதாமை பெரும் துயரம். ஆகவே, தற்கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் தொடர்பில், அதிசிறப்புக் கவனம் தொடர்ச்சியாக செலுத்தப்பட வேண்டும்.   

மத்திய சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம் நாளாந்தம் தேசிய அளவில் சராசரியாக எட்டுப் பேர் தமது உயிரை மாய்த்துக் கொள்வதாகத் தெரியவருகின்றது. 

அதிலும், கூடுதலாக இளம் வயதினேரே இவ்வாறான முடிவுகளை எடுப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, சமூகப் பொருளாதார காரணிகளே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இவ்வாறான சம்பவங்களுக்கான பிரதான காரணங்களாக அமைவதாக சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.    

ஆனால், கொடும் யுத்தமும் அதன் கோர விளைவுகளும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்கொலையின் சதவீத அதிகரிப்புக்கு பெரும் காரணங்களாகின்றன. இம்மாகாணங்களில் நெருக்கீட்டுக்கு பிற்பட்ட மனவடு நோய் (Post Traumatic Stress Disorder - PTSD), அதாவது கொடூரமானதும் ஆபத்தானதுமான சம்பவங்கள் மற்றும் பயங்கர அனுபவங்களின் பின் ஏற்படுகின்ற உளவியல் குணங்குறிகளை குறிக்கும். 

இவ்வகையான தாக்கங்கள் அதிகளவில் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன.  
ஆகவே, இவற்றிலிருந்து எவ்வாறு சமூகத்தை வழிப்படுத்துவது என ஆராய வேண்டி உள்ளது.   

முதலாவதாக, தற்காலத்தில் குடும்பம் குடும்பமாகக் கூடி வாழும் நிலை வெகுவாக அருகிச் சென்று விட்டது. முன்பு, எம் சமூகத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை கணிசமான குடும்பங்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இறுக்கமாக அணைத்து வைத்திருந்தது. 

ஆனால், இக்காலத்தில் பொருளாதாரம் ஈட்ட, கணவன், மனைவி என இருவரும் பணிக்குச் செல்வது; இலத்திரனியல் பொழுதுபோக்கு சாசனங்களின் அதிகரித்த வருகை, அதில் பால் மற்றும் வயது வேறுபாடு இன்றி அனைவரும் மூழ்கும் போக்கு போன்ற காரணங்கள், ஒரு குடும்பத்தையே ஒன்று கூட விடாமல் குழப்பி விட்டன.

ஆகவே ஒவ்வொரு குடும்பமும் குறைந்த பட்சம், இரவுப் போசனத்தை மட்டுமாவது ஒன்றாகக் கூடிக் குழாவி உண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.   

அடுத்து, மக்களுக்கிடையில் அறுபட்டுப் போயிருக்கும் சமூக இணைவை, இணைப்பை உருவாக்குதல் மற்றும் அதிகரித்தல். 

ஒரு வீட்டில் மரண சடங்கு நடைபெற்றால், அதன் பின்னரான ஒரு மாத காலம் (அந்தியேட்டி தினம்) வரை, குறித்த வீட்டில் சமையல் நடைபெறுவதில்லை. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் என அனைவர் வீடுகளிலும் இருந்து சாப்பாடு வரும். 

அயலவர்கள் ஒரு மாத காலம் வரைகுறித்த வீட்டில் முகாமிட்டு விடுவார்கள். அக்காலப்பகுதி முழுதும் இறந்தவரை நினைவுகூருவார்கள். இவ்வாறான நிகழ்வுகள் உறவைப் பறிகொடுத்த குடும்பத்தவருக்கு பெரும் ஆசுவாசப்படுத்தலாக அமையும். என(ம)க்காக என்(ம்) ஊரே ஒன்று கூடி விட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும். அவர்கள் மீண்டும் துயரத்திலிருந்து மீண்டு வழமையான நிலைக்கு வர வழி வகுக்கும். ஆறுதலாக அமையும். மாறுதலை ஏற்படுத்தும். இப்பொழுது இவ்வாறான வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. ‘ஏதோ சடங்குக்கு, கடமைக்கு வந்தோம்; முகத்தைக் காட்டினோம்; வீடு சென்றோம்’ என நடைமுறைகளும் மற்றவர்களுக்கான அர்ப்பணிப்புகளும்  சுருங்கி விட்டன.  

இவ்வாறான பாரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அனைவருக்குமானது. ஏனெனில், ஒரு தனி மனிதனின் உள ஆரோக்கியக் குறைபாடு, அவன் வாழும் சமூகத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தும். ஆகவே, இதற்காகப் பரந்துபட்ட அணுகுமுறை அவசரமாகத் தேவைப்படுகின்றது. 

சமூக ரீதியான மாற்றத்தை, படிப்படியாக ஏற்படுத்த வேண்டி உள்ளது. எமது சமூகம் என்னைக் காப்பாற்றும் என்ற பாரிய நம்பிக்கை எங்கள் ஒவ்வொருவரது மனங்கள் மத்தியில் வளர்க்கப்பட வேண்டும்.   

ஆரோக்கியமான சமூக உறவை, சமூகப் பிணப்பை உடையவர்கள், ‘எனது சமூகம், எனது வெற்றிக்கான படிக்கற்களாக, எனது ஒவ்வொரு முயற்சியிலும் எப்போதும் இருக்கும்’ எனத் திடமாக நம்புவார்கள். ‘சந்தோசமாக இருப்போம்; சந்தோசம் கொடுப்போம்’ என்றவாறான சிந்தனைகள் செதுக்கப்பட வேண்டும். 

அழிவடையும் நிலையிலுள்ள தமிழர் கலைகளான கூத்துக்கலை, நாட்டார் பாடல்கள் என எமது பாரம்பரிய கலைகளைப் பேணுவதுடன், அடுத்த சந்ததியிடம் அதைப் பாதுகாப்பாகக் கையளிக்க வேண்டும். 

ஏனெனில், இவற்றினால் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கற்பிக்கும் பண்பு, உருவாகுவதுடன் கவலைகளை வெகு தூரத்துக்குத் துரத்தும் சக்தியும் உள்ளது.   

தங்களுக்கு மிக நம்பிக்கையானவர்களுடன் மனம் விட்டுக் கதைக்கலாம். ‘எனக்காக ஒருத்தரும் இல்லை’ என்ற எண்ணங்கள் ஏற்படாதவாறு கவலைகளை பகர்ந்து கொள்ள, உன்னத உறவுகளைக் கட்டியெழுப்புதல் வேண்டும். 

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆயிரம் சோகக் கதைகள் மனதில் நிறைந்து புதைந்து கிடக்கும். நாம் சிலவற்றை மிகுந்த பொறுமையுடன் செவிமடுத்தால், அவர்கள் மனதில் உள்ள பாரம் குறையும். ஏனெனில், கோபத்தை வெளிப்படுத்தினால் அது அதிகரிக்கும். மாறாக கவலைகளை வெளிப்படுத்தினால் அது குறையும்.   

யுத்தம் சந்ததிகளைச் சிதறடித்து விட்டது. வம்சங்களைத் துவம்சம் செய்து விட்டது. பல இலட்சம் எம் மக்களை ‘புலம் பெயர்ந்தோர்’ என ஆக்கிவிட்டது. ஆகவே, மீதியாக எம் மண்ணில் வாழத்துடிப்பவர்களை, வளப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும்  மிக முக்கியமானது. 

சிறார்கள் தொடக்கம் வயோதிபர்கள் வரை ஆற்றுப்படுத்தல் ஆரம்பிக்கப்படல் வேண்டும். கர்ப்பிணிகளுக்கான சிறப்பான ஆற்றுப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் எம் பெரும் பொக்கிஷமான அடுத்த சந்ததியை சுமப்பவர்கள் அவர்களாவர். அவர்களது உள்ளத்து குமுறல்கள் உருவாகப் போகும் புதிய உறவுக்கும் பாதிப்புகளை உருவாக்கலாம்.   

ஆகவே, பல சவால்கள் நிறைந்த இப்பணியை வெறுமனே ஒரு சில திணைக்களங்களோ அல்லது சில பல தனியார்களோ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாது. இலக்கை அடைய முடியாது. ஊர் கூடி தேர் இழுப்பது போல ஊர் திரள வேண்டும்.   

  • வெற்றிச்சல்வி Saturday, 21 October 2017 06:27 AM

    கட்டுரையில் குறிப்பிட்டவை மிக உண்மையான கருத்துகளாகும். உள ஆராேக்கியத்தைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவாேம்.

    Reply : 0       0


உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.