2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊர்கூடித் தேரிழுப்போம்

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன.   

முதலாவது, கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்தும் தொற்றுக்கான தீர்வு குறித்தும் பரப்பப்படும் செய்திகள், அறிவியலுக்கு முரணாக இருக்கின்றன. இவ்வாறான தீர்வுகளை மக்கள் பின்பற்றுமிடத்து, ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, இவை சமூகத்தில் ஏற்படுத்தவுள்ள பாதிப்புகளின் தீவிரத்தை, நாம் அனுமானிக்க இயலாது.   

இரண்டாவது, தொடர்ந்து சொல்லப்படும் செய்திகளும் அச்சமூட்டல்களும், மக்கள் மத்தியில் ஒருவித பயத்தையும் நிச்சயமின்மையையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், இந்தச் செய்திகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது, ஒருவகையான கையறுநிலையைத் தோற்றுவிக்கும்; மனஅழுத்தத்துக்கு வழி செய்யும்.   

சமூக வலைத்தளங்களில் பலர், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையை, கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகள் சரிவது போல, சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமான ஆள்கள் பாதிக்கப்படுவது, எதிரணி விக்கெட்டுகள் சரிவது போன்ற ஒரு மனப்போக்கை, இங்கு காணமுடிகிறது; இது வருந்தத்தக்கது.  

இன்னும் சிலர், தொடர்ச்சியாக, அவநம்பிக்கையை ஏற்படுத்தும் பதிவுகளைப் பதிவேற்றுகிறார்கள். நெருக்கடியான நேரங்களில்தான், மனிதர்களின் குரூரமுகம் வெளித்தெரிகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.   

சில ஊடகங்கள், இதைத் தங்களை விளம்பரப்படுத்துவதற்கான களமாகப் பயன்படுத்துகின்றன. ‘ஒரு குடும்பத்துக்கு உதவுவோம்’ என்று தொடங்குகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில், மிகச்சாதாரணமாக மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுகிறார்கள்; கைகொடுக்கிறார்கள். இது இலங்கையர் அனைவரும் எப்போதுமே பெருமைப்படும் ஒரு அம்சம். இதைத் தாங்கள் தான் முன்னெடுத்தோம் என்று, உரிமை கோரும் கேவலமான விளம்பர உத்தியை என்னவென்னது. இந்தக் கேவலத்தின் உச்சம் என்னவென்றால், இதை அவர்கள் ‘புரட்சி’ என்று விளிக்கிறார்கள். அனைத்தையும் சினிமாவுக்குள் பார்த்துப் பழகிப்போனவர்களுக்கு, எல்லாம் புரட்சியாகவே தெரிகிறது.   

இன்று தேவைப்படுவது, அரசாங்கம் தனது கடமையைச் சரிவரச் செய்வதும், இலங்கையர்கள் சகோதரத்துவத்துடன் செயற்படுவதுமே ஆகும். இதையே நாம் இன்று வலியுறுத்த வேண்டியுள்ளது. இலங்கையர்கள் அனைவரதும் நலன்களைக் காக்க வேண்டியதும் உறுதிப்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகும்.   

நாட்டில் உள்ள எளிய மக்களை, பொருளாதார ரீதியாக நிர்க்கதியாகி உள்ளவர்களைக் காக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உரியது. அதை நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும். சாதாரண உழைக்கும் மக்கள் இப்போது நடைமுறையில் உள்ள ஊடரங்கால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள். அதற்கான நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.   

இதேவேளை, இன்று இந்த நோய்த்தொற்றைத் தடுப்பதில் முன்னணியில் நிற்கும் மருத்துவப் பணியாளர்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்கள் வீடுகளில் இருப்பது, எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பும், உடல்,உள நலனும் பாதுகாக்கப்படுவதும் அவர்களது நலன்கள் பேணப்படுவதும் ஆகும். இதற்கு நாம் எல்லோரும் இணைந்து குரல் கொடுத்தாக வேண்டும்.   

ஊடரங்கு தளர்த்தப்பட்ட வேளை, மக்கள் வரிசையில் நின்ற காட்சி கவலையானது. பலர் மணிக்கணக்காக கால்கடுக்க நின்றும் பலன் கிடைக்கவில்லை. பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றாக வேண்டும். தூரநோக்கிலான ஒரு திட்டம் தேவைப்படுகிறது. இந்த நிமிடம் வரை, அது அரசாங்கத்திடம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.   

நாங்கள், இதைத் தாண்டி வந்தாக வேண்டும். இதைத் தனியே செய்ய இயலாது என்ற உண்மையும் நமக்கு விளங்க வேண்டும். இந்த நெருக்கடி நேரத்தில், நாம் இணைந்து பணியாற்றுவதும் சகோதரத்துவத்தை வளர்ப்பதும் அவசியமானது. அதுவே இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழியாகும். 

அதேவேளை, கொரோனா வைரஸை முன்னிறுத்தி, அரச இயந்திரம் மெதுமெதுவாக இராணுவமயமாகும் அபாயத்தையும் நாம் எதிர்நோக்கி உள்ளோம் என்பதை எச்சரிக்கை உணர்வுடன் குறிப்பிட வேண்டியுள்ளது.   

மக்கள் வேண்டி நிற்பது, பற்றிப் படர்வதற்கு நம்பிக்கை என்ற கொடியைத் தான். அதை நாம் செய்வோம்; ஊர்கூடித் தேரிழுத்தால், முடியாதது ஏதுமில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .