2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாவது  ‘எழுக தமிழ்’ப் பேரணி, திங்கட்கிழமை (16)  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ‘எழுக தமிழ்’ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை மக்களின் பங்கேற்பு என்பது, கணிசமாகக் குறைந்திருக்கின்றது. 

ஓர் அரசியல் கட்சி, தன்னுடைய கூட்டங்களுக்குத் தொண்டர்களைத் திரட்டுவதற்கும்,  எழுச்சிப் போராட்டங்களில் மக்களைப் பங்கேற்க வைப்பதற்கும் இடையில், நிறைய வித்தியாசங்கள் உண்டு. 

அரசியல் கட்சியின் தொண்டர்களுக்கு, கட்சி நலன் மாத்திரமல்ல, தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த சுயநல விடயங்களும் முக்கியம் பெறும். அதன்சார்பில், கட்சிக் கூட்டங்களை நோக்கித் திரள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 

ஆனால், எழுச்சிப் போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சி என்பது, சுயநல அடிப்படைகள் சார்ந்ததாக அமைவதில்லை. அது, இன- சமூக விடுதலை, அரசியல் உரிமை, நீதி உள்ளிட்ட விடயங்களை முதன்மைப்படுத்தி நிகழ்வன. 

சுயநலத்தைத் தாண்டிய கடப்பாட்டை, ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கான நம்பிக்கையை அந்தப் போராட்டங்களும், அதற்கான காரணங்களும் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அந்தப் போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தரப்புகள், அதற்கான அர்ப்பணிப்பைச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதுதான், போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சியை அதிகப்படுத்தும்.

‘எழுக தமிழ்’ப் பேரணியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தின் இறுதிப் பகுதி, “...எமது மக்களின் தொடர் போராட்டங்களையும் எழுச்சிகளையும் நமது தேசத்தின் பலமாக மாற்றுவது தொடர்பாக, நாம் காத்திரமான யோசனைகளை முன்வைத்துச் செயற்பட வேண்டியுள்ளது. அந்தவகையில், இந்த ‘எழுக தமிழ்’ப் பரப்புரையின்போது, நாம் சந்தித்த மக்கள், பொது அமைப்புகளுடனான உரையாடல்களின்போது, அவர்கள் முன்வைத்த கருத்துகளை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தில், அதற்கான காத்திரமான செயற்றிட்டங்களை முன்வைத்து, எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என உறுதி பூணுவோமாக....”  என்று கூறுகிறது.

போராட்ட வடிவமொன்று, வெற்றிபெறுவதற்கும் தோற்றுப்போவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு போராட்ட வடிவத்தை, வழிமுறையை ஏற்படுத்திய தரப்புகளே, அந்தப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்து, மக்களை விலகிப்போக வைப்பது என்பது, என்றைக்குமே ஜீரணிக்க முடியாதது.  

தமிழ் மக்கள் பேரவை மீதான ஆதரவு, எதிர்ப்பு மனநிலைகளுக்கு அப்பால் நின்று, ‘எழுக தமிழ்’ப் பேரணியை நோக்கி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் திரண்ட போது, அந்தப் போராட்ட வடிவம், அடுத்த கட்டங்களை நோக்கிப் பயணப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்தது. 

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, கானல் வெளியைக் கடக்கும் கட்டங்களில், சிவில்- புலமைத் தரப்பின் பங்களிப்பு என்பது, தவிர்க்க முடியாதது.  அப்படியான நிலையில், பேரவை போன்ற அமைப்பின் தேவை, உண்மையிலேயே தவிர்க்க முடியாதது. ஆனால், அதைப் பேரவை உணர்ந்து செயற்பட்டிருந்தால், ‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்வியின் காரணங்களைப் பற்றி, யாரும் பேச வேண்டி ஏற்பட்டிருக்காது.

‘எழுக தமிழ்’ப் பேரணியின் தோல்வி என்பது, ‘எழுக தமிழ்’ என்ற ஒன்றை வடிவத்தின் தோல்வி மாத்திரமல்ல; அது, மக்கள் போராட்டங்களின் தோல்வி. ஏனெனில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், காணி விடுவிப்புப் போராட்டம், போர்க்குற்ற விசாரணைகளுக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், அரசியல் தீர்வுக்கான போராட்டம் என்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமை, நீதிக் கோரிக்கைப் போராட்டங்களின் அனைத்து வடிவங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்ட போராட்ட வடிவமாகவே, ‘எழுக தமிழ்’ போராட்ட நிகழ்வைப் பேரவை முன்னிறுத்தியது.

இது, ‘பொங்கு தமிழ்’ போராட்டத்தின் இன்னொரு வடிவமாக இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, பல கடப்பாடுகளை, ‘எழுக தமிழ்’ கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கடப்பாடுகளை, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவதிலிருந்து தவறிவிட்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிப் பிரகடனத்திலும், “மக்களின் கருத்துகளை அறிவோம்; மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற வெற்று வார்த்தைகளில், விடயங்களைக் கடக்க நினைப்பதை எவ்வாறு எதிர்கொள்வது?

முதலாவது, ‘எழுக தமிழ்’ப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக, பேரவை செயற்பட ஆரம்பித்து இருந்தாலே, பேரவை தவிர்க்க முடியாத மக்கள் இயக்கமாக வளர்ந்து இருக்கும்.ஆனால் பேரவை, “மக்கள் சந்திப்புகளை நடத்துவோம்; கருத்துகளை அறிவோம்; அதன்பால் இயங்குவோம்” என்று, சி.வி.விக்னேஸ்வரனை வைத்து அறிக்கைகளை வெளியிட்டதைத் தவிர, செயற்பாட்டு வடிவத்தில் எதையும் செய்திருக்கவில்லை. 

அத்தோடு, தேர்தல் அரசியல் சார்ந்து, தன்னுடைய நிலைப்பாடுகளின் பக்கத்தில் இயங்கியதன் விளைவாலேயே, ஒட்டுமொத்தமான நம்பிக்கையீனங்களையும் சந்தித்து நின்றது. தங்களுக்குள் பிளவுபட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் திட்டித் தீர்க்கும் கட்டத்தையும் எட்டியது. தேர்தல் அரசியல் என்பது, தீர்க்கமாகத் தாக்கம் செலுத்தும் சூழலில், அது தொடர்பில் பேசுவதோ, செயற்படுவதோ தவறில்லை. ஆனால், அதில், குறைந்தபட்ச நேர்மையாவது இருந்திருக்க வேண்டும். 

ஓர் அமைப்பு, தனியொரு மனிதனில் தங்கியிருக்கும் சூழல் ஏற்படுவதென்பது, எவ்வளவு அபத்தமானது? அதைத்தான், விக்னேஸ்வரன் பேரில், பேரவை செய்தது. அது, இன்றைக்கு பேரவையை மாத்திரமல்ல, எழுச்சிப் போராட்டங்களையும் தோல்வியின் கட்டங்களுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.

தேர்தல், வாக்கு என்ற அரசியல் சிந்தனைகளோடு இயங்கும் கட்சிகளிடமும் தரப்புகளிடமும் ‘பொறுக்கித்தனங்கள்’ நிறைந்திருக்கும். அதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் கூட விதிவிலக்கானவை அல்ல. அ.இ.த.கா, தமிழரசுக் கட்சி தொடங்கி, த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.கூ என்று யாருமே விதிவிலக்கு அல்ல. 

முதலாவது ‘எழுக தமிழ்’ப் பேரணியைத் தமக்கான அச்சுறுத்தலாக உணர்ந்த தமிழரசுக் கட்சி, அதற்கு எதிரான கைங்கரியங்களில் ஈடுபட்டது. ஆனால், மக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டங்களின் அவசியத்தை உணர்ந்து பங்கேற்றார்கள். ஆனால், மூன்று வருடங்களுக்குள், ‘எழுக தமிழ்’ நிகழ்வை எதிர்க்கும் கட்டங்களில் இருந்து, தமிழரசுக் கட்சி விலகிவிட்டது; அமைதியாக வெளியில் இருந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டது. 

ஆனால், மூன்றாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வைப் பேரவைக்குள் இருந்த தரப்புகளே எதிர்த்து, விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன. அதனை, ஓர் அறமாக, அந்தத் தரப்புகள் கருதின.

குறிப்பாக, பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகளில், ‘தேசம், சுயநிர்யணம்’ என்கிற வார்த்தைகளைச் சேர்க்கக் கூடாது என, விக்னேஸ்வரன் எதிர்த்தார் என்கிற விடயத்தை, ஒரு பிரசாரமாகத் த.தே.ம.மு, ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு எதிராக முன்னெடுத்தது. 

கடந்த வாரம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வாறு விக்னேஸ்வரன் செய்த திருத்தங்களின் ‘மின்பிரதி’யை வெளிப்படுத்தினார். அந்தப் பிரதியை, விக்னேஸ்வரன், கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, வெளியிட்டிருந்தால், மக்களுக்கு இன்னும் தெளிவு கிடைத்திருக்கும் அல்லவா? 

அதனையெல்லாம் செய்யாமல், தேசத்தை எதிர்த்த விக்னேஸ்வரனோடு, இரண்டாவது, ‘எழுக தமிழ்’ மேடையில் ஏறியதும், விக்னேஸ்வரனைக் கட்சித் தலைமையாக ஏற்க விரும்பியதும், தேசியத் தலைவராக முழங்கியதும் கஜேந்திரகுமாரினதும், அவரின் தொண்டர்களினதும் எவ்வாறான நிலைப்பாடு? இது இரட்டை நிலைப்பாடு இல்லையா?

இன்னொரு பக்கம், விக்னேஸ்வரன் என்கிற தனிமனிதனை நோக்கி, பேரவையின் அடையாளத்தை வரைந்துவிட்டது, யாழ். மய்யவாத அரசியல் ஆய்வாளர்களும் புலமைத் தரப்புகளும்தான். அதன்பின்னால், கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளும் படையெடுத்தன. 

என்றைக்குமே, தன்னுடைய ஆளுமையை நிரூபிக்காத, அதனை நிரூபிப்பதற்காக உழைக்காத ஒருவரை நோக்கி, மேட்டுக்குடிச் சிந்தனைகளின் போக்கில், ஜனவசிய கற்பனைக் கதைகளை எழுதிய தரப்புகள் எல்லாமும் சேர்ந்துதான், பேரவையின் தோல்வியையும் எழுதின. 

போராட்டமே, ஈழத் தமிழ் மக்களின் அடையாளம்; அதுவே, அவர்களின் அரசியல் கருவி. அப்படிப்பட்ட மக்களிடம், போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துவதும், மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல் கற்பனைக் கதைகளில் உழல்வதும், தோல்வியின் கட்டங்களையே அதிகப்படுத்தும். பேரவையும் ‘எழுக தமிழ்’ நிகழ்வும் அதன் சாட்சிகளாக, இன்று மாறி நிற்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .