2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஒளி ஏற்றும் நாளில் இருள் அகற்றுவார்களா?

காரை துர்க்கா   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நத்தார் தினம். உலக மாந்தரின் பாவஇருள் அகற்றி, புண்ணிய ஒளியேற்ற, உதித்த இயேசுபாலன் பிறப்பை, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள், சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.   

அந்தவகையில், பரந்து விரிந்த இந்தப் பூமிப்பந்தில், ஈழத் தமிழ் மக்களும்  கௌரவமாகவும் சுயத்தை இழக்காமலும் நிம்மதியாகவும் சமாதானத்துடனும் வாழ, இந்த இயேசுபாலன் பிறப்பு, வழி வகுக்க வேண்டும் என அங்கலாய்க்கின்றனர்.  ஆனால், ஈழத் தமிழ் மக்கள், தாம் அவாவுறும்  அவ்வாறான வாழ்வை நோக்கி, முன்சென்று கொண்டிருக்கிறார்களா, இல்லை, பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்களா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம்.

‘சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி மரணம்’ என்பது போலவே, நாட்டில் ஆயுத மோதல்கள் இல்லை. ஆனால், தமிழ் மக்களிடம் அமைதியும் இல்லை; நிம்மதியும் இல்லை என்ற நிலைமை, தொடர்ந்தும் நீடிக்கின்றது.   

பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய, நாட்டின் அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில், பொது மக்களின் பிரச்சினைகளைக் காட்டிலும், மக்கள் பிரதிநிதிகளின் பிரச்சினைகளே, பெரும் பிரச்சினைகளுக்கு உரியவைகளாக இருக்கின்றன. ஜனநாயகம் என்ற விருட்சத்தின் வேர் கருகும் படியாக, கொதிக்கக் கொதிக்கக் வெந்நீர் ஊற்றப்பட்டு வருகின்றது.   

நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார் என்ற சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு, ஆரம்பப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மஹிந்தவா, ரணிலா என்ற பிரச்சினை நீங்கி, மஹிந்தவா, சம்பந்தனா என்ற பிரச்சினை எழுந்துள்ளது; தீர்வின்றிக் குழப்ப நிலை தொடர்கின்றது.   

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக (?)தமிழ்க் கூட்டமைப்பு போராடியது. தற்போது, தமக்கு உரித்தான எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காப்பாற்றப் போராட வேண்டிய இக்கட்டில் இருக்கின்றது.   

இதேவேளை, எவ்வித நிபந்தனைகளும் கோரிக்கைகளும் இன்றி, ஜனநாயகம் என்ற முத்திரையின் கீழ், தமிழ்க் கூட்டமைப்பைத் தனது வசப்படுத்தியது, ரணிலின் இராஜதந்திர வெற்றியாகும்.                                  

இது கூட்டமைப்பின் இராஜதந்திரமா, சரணாகதி அரசியலா, இணக்க அரசியலா? அதேவேளை, இந்த நகர்வால், தமிழ் மக்களுக்கு இதுவரை கிடைத்தது, இனிக் கிடைக்கப் போவது யாவும் வினாக்குறிக்குள்ளேயே அடங்கிப் போயுள்ளன.   

‘விட்டுக் கொடு, வீழ்ந்து விடாமல்; கட்டுப்படு, குட்டுப்படாமல்’ என்ற வாக்கியத்தின் பிரகாரம், ஜனநாயகம் வீழ்ந்து விடாமல் இருக்க, கூட்டமைப்பு தலையைக் கொடுத்துக் காப்பாற்றியது. இதனால், தானும் வீழ்ந்து, தான் சார்ந்த மக்களையும் வீழ்த்தி விடாமல்க் காப்பாற்ற வேண்டிய பெரும் வரலாற்றுப் பொறுப்பின் விளிம்பில் கூட்டமைப்பு உள்ளது.   

இது இவ்வாறிருக்க, கொஞ்சக் காலம் தூக்கத்தில் இருந்த, புதிய அரசமைப்புக் கதைகள், மீளவும் தூசு தட்டப்பட்டு வருகின்றன. இதில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, ஒற்றை ஆட்சிக்குள் ஒற்றுமையான தீர்வு போன்ற விடயங்களுக்குக் கூட்டமைப்பினர் பச்சைக் கொடி காட்டி விட்டதாகப் பச்சைக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.   

ஆனால், இது தொடர்பில் கூட்டமைப்பினர் மௌனம் சாதித்து வருகின்றனர். பல்லினங்களையும் பல மதங்களையும் பின்பற்றும் மக்களைக் கொண்ட நாட்டில், ஒரு மதத்துக்கான முன்னுரிமை என்பது, ஏனைய மதங்களை இரண்டாம் நிலைக்கு இட்டுச் செல்லும் அணுகுமுறையாகும்.   

அற்ப விடயங்களுக்காக மல்லுக் கட்டிக் கொண்டு போராடுவது, ‘அடம்பிடித்தல்’ என அர்த்தப்படும். இந்நிலையில், பெரும்பான்மையின மக்கள் பௌத்தத்தை, ஒற்றைக்காலில் நின்று முதல் நிலைப்படுத்துவதை, எந்தச் சொல்லால் அர்த்தப்படுத்துவது?    

இந்த நாட்டில் பேரினவாதம், தமிழ் மக்களது உணர்வுகளை, உரிமைகளை உண்மையாகவும் உளப்பூர்வமாகவும் ஏற்று, மதித்து, பேதங்களை மறந்து ஒன்றுபட்டு, கைகோர்த்துப் பயணிக்க இன்னும் தயாரில்லை என்பதுபோலவே அதன் பேச்சுகளும் நடத்தைகளும் அமைகின்றன.

ஆனால், இவையாவற்றுக்கும் விருப்பப்பட்டுள்ளது போலவும் தயாராகவுள்ளது போலவும் போதனைகள் பலவற்றை, உபதேசித்து வருகின்றது. உண்மையில், தூங்குபவனை துயில் எழுப்பலாம்; ஆனால், தூக்கம்போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்பது போல்த்தான், இந்த நாட்டின் நிலைமையும் காணப்படுகின்றது.   

இது இவ்வாறிருக்க, வடக்கிலும் கிழக்கிலும் கூட்டமைப்பினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலுள்ள இடைவௌி மெதுமெதுவாக அதிகரித்து வருவதான சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இதற்காக, வடக்கு,கிழக்கை மய்யமாகக் கொண்ட மற்றைய தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களது முழுமையான நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் பவ்வியமாகவும் நடக்கின்றன எனவும் கூற முடியாது.   

உண்மையில், எந்தத் தமிழ்க் கட்சிகளுமே, தங்களது கட்சியின் எதிர்காலம், தங்களது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் என்ற வரம்புக்குள்ளேயே குந்தி இருந்து குதர்க்கம் பேசி வருகின்றன. தமிழ் மக்களுக்கு ‘சேடம்’ இழுக்கையிலும் (மரணப் படுக்கை), கட்சி அரசியலையும் தனிநபர் அரசியலையும் கைவிட இன்னமும் தயாராக இல்லாத மனோநிலைகளே காணப்படுகின்றன.   

தங்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமை காரணமாக, தமிழ் மக்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமை, கலையப் போகின்றதே என்ற கவலை, கிஞ்சித்தும் இல்லாத நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் தொடர்கின்றன.   

இவ்வாறாகத் தாங்களே அமைத்துக் கொண்ட வீண் வரம்புகளை அல்லது வம்புகளை உடைத்து கொண்டு, தமிழ் மக்களது இருப்பு என்பதன் அடிப்படையில் எப்போது புது மனிதர்களாக வெளியே வருகின்றார்களோ, அப்போது மட்டுமே தமிழ் மக்களது எதிர்காலம் தொடர்பில் உரையாடக் கூடிய அடிப்படைத் தகைமைகளைப் பெறுவார்கள்.   

தமிழ் மக்களது இன்றைய கவலைக்குரிய வாழ்வியல்க் கோலங்களுக்குப் பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல; தமிழ்த் தலைவர்களது இலக்கு நோக்கிய பயணத்தில் இறுக்கமற்ற நேர்மையான பிணைப்பற்ற நிலையே, பாதிக் காரணமாக அமைகின்றது.   

தமிழ்த் தலைவர்களிடம் அறிவும் ஆற்றலும் குறைவின்றிக் காணப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்படத் தவறியதால் ஒன்றும் கிடைக்கவில்லை.                                          

தீர்வு கிடைக்கும் வரையாவது, ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும் என, ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமும் ஓலமிட்டாலும், ஒப்பாரி வைத்தாலும் ‘ஒன்றுபட மாட்டோம்’ என, அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் நிரந்தர அடம் பிடிக்கின்றன.   

நாட்டின் இரண்டு பெருந்தேசியக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழ் மக்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தியவை ஆகும். கடந்த காலங்களில், தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியவர்களுக்கும் எதிர்காலத்தில் எவ்வித ஆக்கங்களையும் ஏற்படுத்த முடியாதவர்களுக்கும், வலிந்து ஆதரவை வழங்க வேண்டிய இக்கட்டான நெருக்கடிநிலை, தமிழர் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.   

சரி! தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ இதுவே களநிலைவரம். இந்தப் பாதகமான களத்தை, எப்படித் தமிழ் மக்களுக்குச் சாதாகமான களமாக மாற்றிப் போடலாம் எனக் கணக்குப் போட வேண்டி இருக்கின்றது. இதற்குத் தமிழ்த் தலைவர்கள் கூடியிருந்து அறிவு ரீதியாகப் பேசாமல், பிரிந்து நின்று அறிவீனமாகப் பேசி என்ன பய(ல)ன் கிடைக்கப் போகின்றது.  

வடக்கு, கிழக்கில் போர் முடிந்து, பத்து வருடங்களை நெருங்கும் நிலையிலும், தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் வாழ்ந்து வருகின்றனர். சிறிய உதாரணம்: திருகோணமலை மாவட்டம், தென்னமரவடியில் தமிழ் மக்கள் பல்வேறு சிக்கல்களுடன் சீவித்து வருகின்றனர். தாங்கள் பல சிரமங்களின் மத்தியில் மேற்கொள்ளும் வேளாண்மைச் செய்கைகளை, பெரும்பான்மையின மக்களது கால்நடைகள் அழித்து வருவதாகப் பல மட்டங்களிலும் புகார் செய்தும், தீர்வில்லை எனப் புலம்புகின்றனர்.

இந்த அரசியலில்,  தமிழ் மக்கள் விடயத்தில் மிக எளிய சட்டங்கள் கூட, எளிதாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை மக்களது கால்நடைகளைக் கட்டுப்படுத்தி, தமிழ் மக்களது வேளாண்மைச் செய்கையை காப்பாற்ற முடியாத ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களது இருப்பின் எதிர்காலம் என்னவாகும்.   

தமிழ் மக்களது பெரும் பலத்தை, வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து பேரினவாதம், 2009இல் துவம்சம் செய்தது. இந்நிலையில், தனி மனித அடையாளங்கள் கலைந்து, இன அடையாளங்கள் தொலைந்து, தனித்து விடப்பட்டது போன்ற நிலையில் தமிழினம் ஊசலாடுகின்றது.  

அதேவேளை, எத்தனை இடர்பாடுகள் எம்மை எதிர்த்தாலும், சுயநிர்ணய உரிமை, தாயக அங்கிகாரம் போன்ற இலட்சியத்தில் தமிழ்ச் சமூகம் உறுதி தளராது உள்ளது. ‘தெய்வத்தால் ஆகாது; எனினும், முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’ என்பார்கள். வெற்றியின் அடிநாதமே முயற்சி ஆகும்; முயற்சி தவறலாம்; முயற்சி செய்யத் தவறலாமா? இனப்பிரச்சினை இன்று, நாளை முடியும் அலுவல் இல்லை.   

ஆகவே, இலங்கைத் தமிழ்த் தலைவர்களே, விரைவாக ஒன்றுபடுங்கள்; இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர வழி விடுங்கள். எச்சரிக்கையாக, விழிப்பாக, ஒற்றுமையாகத் தலைமை தாங்குங்கள்; வெற்றி நிச்சயம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .