2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கறுப்பு ஜூலை இன அழிப்பு

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஜூலை 12 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 100)

 தொடர்ந்த இன அழிப்பு  

1983 ஜூலை 24 ஆம் திகதி கொழும்பின் பொரளைப் பகுதியில் தொடங்கிய ‘கறுப்பு ஜூலை’, தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு 25 ஆம் திகதி கொழும்பின் மற்றைய பகுதிகளுக்கு பரவியதோடு, 25 ஆம் திகதியின் நண்பகலைத் தாண்டிய பொழுதில் கொழும்பை அண்டிய ஏனைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.  

 தமிழ் மக்களின் வீடுகள், வியாபார மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள் என்பன திட்டமிட்டுத் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு, எரியூட்டப்பட்டு, அழிக்கப்பட்டதோடு, தமிழ் மக்களும் கொடூரமான தாக்குதல்களுக்கும் சித்ரவதைகளுக்கும் உயிர்க்கொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.   

25 ஆம் திகதி காலை ஜனாதிபதி ஜே.ஆர் தலைமையில் கூடிய பாதுகாப்புச் சபை 25 ஆம் திகதி மாலை ஆறு மணி முதல் கொழும்பில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தது.   

ஆனால், அதற்கிடையில் கொழும்பெங்கும் கொடூரமாக இன அழிப்பு நடந்தேறியிருந்ததுடன், தொடர்ந்தும் கொண்டிருந்தது. ஆறு மணிக்கு என்று முதலில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பின்பு நான்கு மணிக்கும், அதன் பின் இரண்டு மணிக்கும் முன்னகர்த்தப்பட்டதாகவும் தாக்குதல்கள் கடவத்தை, களனி மற்றும் நீர்கொழும்பு ஆகிய கொழும்பு மாவட்டத்தைத் அண்டிய கம்பஹா மாவட்டத்தின் பகுதிக்கும் பரவியிருந்ததால் ஊரடங்கு கம்பஹாவுக்கும் அறிவிக்கப்பட்டதாகத் தனது 1983 இன அழிப்பு பற்றிய ‘இங்கையின் பெருந்துயர்’ (ஆங்கிலம்) என்ற நூலில்  ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.   

ஊரடங்கால் நிலைமையில் மாற்றமில்லை  

ஆனால், அரசாங்கத்தின் இந்த ஊரடங்கு அறிவிப்பு, எதையும் அடக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்புத் தொடர்ந்து கொண்டிருந்ததுடன், பரவிக்கொண்டும் இருந்தது. களுத்துறை மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.   

களுத்துறையில் தமிழ் மக்களின் வீடுகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், தமிழ் மக்களும் தாக்குதலுக்குள்ளானார்கள். குறிப்பாக களுத்துறையில் பிரபலமாக இருந்த தமிழருக்குச் சொந்தமாக இருந்த ‘ரீ.கே.வீ.எஸ் ஸ்டோர்ஸ்’ என்ற வர்த்தக நிலையம் தாக்குதலுக்குள்ளாகியதுடன், அதைத் தாக்கிய காடையர்கள் அதற்கு எரியூட்டினர்.   

அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தனது வர்த்தக நிலையத்தின் மேல்மாடியில் தஞ்சம் புகுந்திருந்தார். தீ மேல்மாடிக்கும் பரவவே, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, மேல்மாடியின் ஜன்னலினூடாக வெளியே குதித்த அவரை, வெளியிலிருந்த இன அழிப்புக் காடையர்கள் கைப்பற்றி, கடுமையாகத் தாக்கியதுடன், அவரைக் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் தூக்கியெறிந்தனர்.

இத்தகைய ஈவிரக்கமற்ற வன்முறைதான் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அரங்கேறிக்கொண்டிருந்தது.  

அழிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதார வளங்கள்  

கொழும்பு நகரின் தெற்கிலே இரத்மலானை நகரம் அமைந்திருக்கிறது. கொழும்பு நகருக்கான விமான நிலையம் அங்குதான் அமைந்திருக்கிறது (தற்போது இரத்மலானை விமான நிலையம் என அறியப்படுவது

இரத்மலானை நகரம் பல தொழிற்சாலைகளின் இருப்பிடமாகவும் இருந்தது. அங்கமைந்திருந்த தமிழருக்குச் சொந்தமான ‘ஜெட்றோ காமண்ட்ஸ்’ என்ற ஆடைத்தொழிற்சாலையும் ‘டாடா காமண்ட்ஸ்’ என்ற ஆடைத்தொழிற்சாலையும் இன அழிப்புக் காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகி முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.   

இதைவிடவும் இரத்மலானை பகுதியிலும் அதை அண்மித்த பகுதியிலும் அமைந்திருந்த எஸ்-லோன் குழாயகத் தொழிற்சாலை, பொண்ட்ஸ் தொழிற்சாலை, றீவ்ஸ் ஆடைத் தொழிற்சாலை, ஹைட்றோ ஆடைத்தொழிற்சாலை, ஹைலக் ஆடைத்தொழிற்சாலை, ஏ.ஜீ.எம். ஆடைத்தொழிற்சாலை, மன்ஹட்டன் ஆடைத்தொழிற்சாலை, பொலிபக் தொழிற்சாலை என்பனவும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, எரியூட்டி அழிக்கப்பட்டன.  

மேலும், பெரெக் தொழிற்சாலை மற்றும் மஸ்கன்ஸ் அஸ்பெஸ்ரஸ் தொழிற்சாலை என்பனவும் தாக்கியழிக்கப்பட்டன. ஏறத்தாழ இரத்மலானை பகுதியில் மட்டும் தமிழர்களுக்குச் சொந்தமான 17 தொழிற்சாலைகள் அழித்தொழிக்கப்பட்டன. கொழும்பில் அமைந்துள்ள தமிழ் மக்களின் பொருளாதார அஸ்திவாரங்கள் அழித்தொழிக்கப்பட்டன என்று சொன்னால் அது மிகையல்ல.   

மஹாராஜா நிறுவனம், சென் அந்தனீஸ் ஹாட்வெயார் ஸ்டோர்ஸ், கே.ஜீ.இண்டஸ்ட்ரீஸ், ஈஸ்வரன் பிரதர்ஸ் எனத் தமிழர்களுக்குச் சொந்தமான பல வணிக, கைத்தொழில் நிறுவனங்கள் இலங்கையில் கோலோச்சிய காலமது. இந்த அத்தனை நிறுவனங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளும் வணிக, வர்த்தக நிலையங்களும் தாக்குதலுக்குள்ளாகி அழிக்கப்பட்டன.  

அன்று இலங்கையின் மிகப் பெரிய வணிக நிறுவனமாக உபாலி விஜேவர்த்தனவுக்குச் சொந்தமான உபாலி குழுமத்துக்கு அடுத்ததாக மஹாராஜா நிறுவனமே இருந்தது. தமிழர்களுக்குச் சொந்தமான மஹாராஜா நிறுவனத்தின் இரத்மலானையில் அமைந்திருந்த எஸ்-லோன், பொண்ட்ஸ், பெரெக் உள்ளிட்ட ஆறு தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன.

இதைவிட மஹாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமாக ‘ஹெட்டியாரச்சி பிரதர்ஸ்’ என்ற நிறுவனமும் இருந்தது. சிங்களப் பெயரைக் கொண்டிருந்தாலும், இது தமிழர்களுக்குச் சொந்தமான மஹாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமானது என்ற விடயம் தெரிந்து, அது தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்தக் கலவரம் தற்செயலாக, எழுந்தமானமாக நடத்ததொன்று என்று கூறிவிடமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.   

1983 இனக்கலவரம் என்பது வெறுமனே திடீரென்று நடந்த சம்பவமொன்றின் விளைவால் ஏற்பட்ட ஆத்திரத்தினால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களது சொத்துகள் அழிக்கப்பட்டன என்று சொல்லுமளவுக்கு குறுகிய நோக்கல் பார்க்கப்பட வேண்டியதொன்றல்ல, மாறாக தமிழர்களின் அடிப்படைகளைச் சிதைப்பதற்கான ஒரு திட்டம் 1983 கலவரத்தின் அடிநாதமாக இருப்பதை அதை மீளாய்வுக்கு உட்படுத்தும் எவரும் காணலாம்.   

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரத்மலானையின் சொய்ஸாபுர பகுதியிலமைந்திருந்த அரச தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த இன அழிப்புக் காடையர்கள், அங்கிருந்த தமிழ் மக்களின் வீடுகளை அடையாளம் கண்டு தாக்கியழித்ததுடன், அவற்றுக்கு எரியூட்டினர். 

 ஏறத்தாழ 500 வீடுகள் அளவில் அமைந்திருந்த சொய்ஸாபுர தொடர்மாடிக் குடியிருப்பில் ஏறத்தாழ 92 வீடுகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. அதில் ஏறத்தாழ 81 வீடுகள் தாக்கியழிக்கப்பட்டன.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக் கலவரங்களின்போது, கொழும்பில் அமைந்திருந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பொருளாதார அஸ்திவாரங்களும் தமிழ் மக்களின் வீடுகளும் இன அழிப்பில் ஈடுபட்டவர்களின் இலக்குகளாக இருந்தன என்று ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க கருத்துரைக்கிறார்.   

இது பற்றித் தனது நூலொன்றில் கருத்துரைக்கும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹ, ‘25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மிகத் திறமாகத் திட்டமிட்ட காடையர்களின் குழுக்களானது, வாக்காளர் பதிவேடுகளின் உதவியுடன், எந்த வீடு யாருக்குச் சொந்தமென அடையாளம் கண்டு, வீதியெங்கிலுமுள்ள தமிழர்களது வீடுகளை இல்லாதொழித்துச் சென்றனர்’ என்று பதிவு செய்கிறார்.   

இதைப் பற்றி குறிப்பிடும் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க, “காடையர்கள் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பதிவேடுகளை கொண்டிருந்தனர், இந்தப் பதிவேடுகளை ஒரு சிறிய தொகையை செலுத்தி எந்தக் குடிமகனும் பெற்றுக்கொள்ள முடியும்” என்று பதிவு செய்கிறார்.  

 ஒரு சிறிய தொகையைச் செலுத்தி, எந்தக் குடிமகனும் வாக்காளர் பதிவேடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்தான், ஆனால், எந்த சாதாரண குடிமகன் வாக்காளர் பதிவேடுகளை பணம் செலுத்திப் பெற்றுக் கொள்கிறான்? பொதுவாக, இவற்றை அரசியல் கட்சிகள்தான் பெற்றுக்கொள்வது வழமை. ஆகவே, இந்தச் சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது, இரண்டு சாத்தியப்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன.  

 ஒன்று, இதன் பின்னணியில் அரசியல் கட்சி அல்லது அரசியல் கட்சிகள் இருக்கிறது. இரண்டு, 1983 ஜூலை இன அழிப்பு ஏதோ ஒரு வகையில் ஒரு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கிறது.   

துல்லியமாக நடத்தப்பட்ட இனஅழிப்பு  

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழ்ந்த வௌ்ளவத்தை மற்றும் தெஹிவளையில் இன அழிப்புக் கும்பல் புகுந்தபோது, அதன் விளைவு பாரதூரமாக இருந்தது. ஒரு திட்டமிட்ட வகையில் இன அழிப்புக் காடையர்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். 

மூன்று கட்டளைகளின் பிரகாரம் இந்த காடையர்கள் இயங்கியதாக 
ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார். முதலாவது கட்டளை “கட”; அதாவது சிங்களத்தில் உடை. இரண்டாவது “அத”; அதாவது சிங்களத்தில் இழு (இது உள்ளிருப்பவர்களை இழுத்து வெளியில் போடுதலைக் குறிக்கிறது). மூன்றாவது “கினி”; அதாவது சிங்களத்தில் நெருப்பு (இது எரியூட்டுவதைக் குறிக்கிறது). எவ்வளவு தூரம் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்யும் ஒரு சம்பவமே மிகச் சிறந்த உதாரணமாக அமைகிறது.   

தெஹிவளை, ரட்ணகார வீதியில் மொத்தம் 53 வீடுகள் அமைந்திருந்தன. இதில் 26 வீடுகளில் சிங்களவர்கள் வசித்தார்கள். 27 வீடுகளில் தமிழர்கள் வசித்தார்கள். தமிழர்கள் வசித்த வீடுகளில் 24 வீடுகள் தமிழர்களுக்குச் சொந்தமானது. 3 வீடுகள் சிங்களவர்களுக்குச் சொந்தமானவை; ஆனால், அதில் தமிழர்கள் வாடகைக்கு குடியிருந்தார்கள்.

இதில் தமிழர்களுக்குச் சொந்தமான 24 வீடுகளும் தாக்கி, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன. தமிழர்கள் வாடகைக்கு குடியிருந்த சிங்களவர்களுக்குச் சொந்தமான மூன்று வீடுகளில் இருந்த பொருட்கள் வீதியில் வீசியெறிப்பட்டு, வீதியில் எரியூட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டனவேயன்றி, சிங்களவர்களுக்குச் சொந்தமான அந்த வீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

அவ்வளவு தூரத்துக்கு இந்த இன அழிப்பு துல்லியமாகத் தமிழர்களும் அவர்களது சொத்துகளும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டன.   

தமிழர்களும் தமிழர்களின் வீடுகள், வணிக, வர்த்தக மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவெல்லாம் தாக்கியழிக்கப்பட்டபின் “அபி சுத்த கரா” - சிங்களத்தில் “நாம் சுத்தம் செய்துவிட்டோம்”, “சிங்கள ஹமுதாவட்ட ஜயவேவா” - சிங்களத்தில் “சிங்களப் படைக்கு வெற்றியுண்டாகுக” என்ற ஜய கோசங்கள் இன அழிப்புக் காடையர்களால் எழுப்பப்பட்டன என தன்னுடைய கட்டுரையொன்றில் ராஜன் ஹூல் பதிவு செய்கிறார்.  

வீதியில் இன அழிப்புக் காடையர்களிடம் சிக்கிய தமிழ் மக்களின் நிலை படுமோசமாக இருந்தது. இதற்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியரும் விதிவிலக்காகவில்லை. வௌ்ளவத்தை, விவேகானந்தா வீதியின் தொடக்கப்பகுதியில் நீள்க்காற்சட்டையும் பெனியனும் அணிந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர், காடையர் குழுவொன்றினால் கைகள் கட்டி இழுத்துவரப்பட்டார்.

அருகே ஆயுதம் தாங்கி நின்றிருந்த பொலிஸ் இதைக் கண்டும் காணாது நின்றிருந்ததாகவும் அங்கே நின்றிருந்த இராணுவ வீரன் ஒருவனைக் கண்ட முன்னாள் அமைச்சர், “தான் ஸ்ரீமாவோவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்” என்பதை எடுத்துச் சொல்ல முயன்றும், அந்த வீரம் “போய் தொலை” என்று சொல்லிக் கொண்டும் காணாது நின்றதாகவும் ராஜன் ஹூல் சில மேற்கோள்களுடன் தனது கட்டுரையொன்றில் பதிவு செய்கிறார்.  

ஸ்ரீ மாவோ அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களாலும் தமிழ் அரசியல் தலைமைகளாலும் “துரோகி” முத்திரை குத்தப்பட்ட செல்லையா குமாரசூரியர், இன்று சிங்களக் காடையர்களாலும் நட்ட நடு வீதியில் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.   

ஜே.ஆர்.செய்யாதவைகளும் செய்தவைகளும்  

1983 ஜூலை இனக்கலவரம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஜே.ஆர் அரசாங்கம் ஊரடங்கு அறிவித்ததைத் தவிர வேறெந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. ஆனால், தனக்கு நெருங்கிய தமிழர்களை மீட்க ஜே.ஆர் படைகளையும் பொலிஸாரையும் அனுப்பியிருந்த சம்பவங்களைப் பற்றிப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள்.   

பல தமிழ் முக்கியஸ்தர்களினது வீடுகள் தாக்கப்பட்டபோதும், அவர்கள் காப்பாற்றப்பட்டமையிலும் அவர்கள் பாதுகாப்பாக வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தமையிலும் ஜே.ஆரினதும் ஜே.ஆர் அரசாங்கத்தினதும் பங்கு இருந்ததாக பலரும் பதிவு செய்கிறார்கள்.   

குறிப்பாக கைகள் கட்டப்பட்டு வீதியில் இழுத்துவரப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியருக்கு விபரீதமாக ஏதேனும் நடப்பதற்கு முன்பே இராணுவப் படை ஒன்று அனுப்பப்பட்டு, அவர் மீட்கப்பட்டு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சில தமிழ் அரசியல் தலைமைகளின் வீடுகள் தாக்கப்பட்டபோதும், அவர்கள் அப்போது அங்கிருந்திருக்கவில்லை. வேறு சில தமிழ் முக்கியஸ்தர்கள் கூட அவர்களது வீடுகளிலிருந்து பாதுகாப்பாக முதலே வெளியேற்றப்பட்டிருந்ததாக சில பதிவுகளுண்டு.   

ஜே.ஆரின் மகனான ரவி ஜெயவர்த்தனவின் முதலாவது மனைவி சாமைன் வன்டர்கூன் தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்டவர். அவரைப் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல ஒரு படையை ஜே.ஆர் அனுப்பியிருந்ததாக சிலர் பதிவு செய்கிறார்கள். 

இதைவிடவும், சாதாரண சிங்கள மக்கள் பலர்கூடத் தமது நண்பர்கள், அயலவர்களான தமிழர்களுக்கு தமது வீடுகளில் தஞ்சம் அளித்துப் பாதுகாத்தார்கள். இப்படிச் செய்வது தமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தபோதும் அதை அவர்கள் செய்திருந்தமையும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியதே.   

(அடுத்த திங்கள்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .