காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடாத முஸ்லிம்கள்

சனத்தொகைப் பரம்பல் மற்றும் அதனது மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், காணிகள் இல்லாத இனக் குழுமமாக, நாட்டில் பரவலாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இழந்த காணிகளை மீட்பதிலோ அல்லது காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ, இவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கின்றமை, மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.   

பொருத்தமற்ற தலைவர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் தெரிவு செய்கின்ற சமூகமும், சமூக அக்கறையற்ற அரசியல்வாதிகளால் ஆளப்படும் மக்கள் கூட்டமும் எவ்வாறான இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் என்பதைத்தான், இலங்கை முஸ்லிம்கள் தற்சமயம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனலாம்.   

தமிழர்கள் தனிநாட்டுக்காக போராடினார்கள். அது சாத்தியப்படாது என்ற ஒரு நிலை வந்தபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்று கோரி வருகின்றார்கள். அத்துடன், இணைந்த வடக்கு, கிழக்கை அடிப்படையாக வைத்து, முன்வைக்கப்படும் தீர்வுப் பொதியில் சில அதிகாரங்கள் தமக்கு இருக்க வேண்டும் என்பதில், விடாப்பிடியாக இருக்கின்றனர். குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை அவர்கள் அவாவி நிற்கின்றனர்.   

இது கொடுபடுமா, இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், அதற்கான அவர்களது தீரா வேட்கை என்பது, வெறுமனே அதிகாரம் சார்ந்ததோ அல்லது கௌரவம் சார்ந்ததோ அல்ல. மாறாக, காணியின் அதிகாரம் இருப்பதென்பது, இவ்விரு மாகாணங்களிலும் தமிழர்களின் எதிர்கால இருப்பையும் அடுத்த தலைமுறையின் வாழ்விட உரிமையையும் உறுதிப்படுத்தும் என்ற ஒரு தார்ப்பரியம் இதற்குப் பின்னால் இருக்கின்றது.   

முஸ்லிம்கள் தரப்பில் இவ்வாறான வேண்டுதல்கள் இல்லையென்றாலும், ஒப்பீட்டளவில் சனத்தொகைப் பெருக்கத்தில் வேகமாக முன்னேறி வரும் இனமாகக் கருதப்படுகின்ற முஸ்லிம் சமூகம், எதிர்காலத்தில் தமது சந்ததிகள் வாழ்வதற்கான காணிகளைப் பெறுவதற்கு அல்லது குறைந்தபட்சம் வேறு தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளை மீளப் பெறுவதற்கு, ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கின்றதா என்ற கேள்விக்கு, இல்லையென்றுதான் விடையளிக்க வேண்டியிருக்கின்றது.   

தமிழர்களின் ஆயுதப் போராட்டம், முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் அவர்கள், தங்களது நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை, ஜனநாயக அடிப்படைகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதை, முஸ்லிம்கள் முதலில் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.   

சாதாரண மக்கள் மேற்கொண்ட கேப்பாபிலவு போராட்டம், 50 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காகவே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அது சர்வதேச அவதானத்தைப் பெற்றது. கடைசியில் அரசாங்கம் இறங்கிவர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.   

கேப்பாபிலவில் மட்டுமல்ல, தமது காணி என்று நினைக்கின்ற எல்லா காணிகளையும் மீட்டெடுப்பதற்காக,  தமிழ் மக்கள் போராடி வருகின்றார்கள் என்பது கண்கூடு. இரணைதீவில், பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை, விடுவிக்கக் கோரி தமிழர்கள் போராடி வருகின்றனர். மட்டக்களப்பு நாவலடியில், மைலம்பாவெளியில் பாதுகாப்புத் தரப்பினரின் முகாம் அமைந்துள்ள காணிகளை மீட்க, ஒரு போராட்டத்தைத் தமிழர்கள் மேற்கொண்டனர்.   

இவ்வாறு யாழ்ப்பாணம், வலிகாமம், ஊர்காவற்றுறை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், பரந்தன், கிளிநொச்சி என வடக்கிலும் கிழக்கிலும், தமது நிலத்தை மீட்பதற்கான, வெகுஜனப் போராட்டங்களைத் தமிழர்கள் தினமும் முன்னெடுத்து வருகின்றனர்.   

பொத்துவில், பாணமைக் காணிகளுக்காக குடாநாட்டில் கையெழுத்து வேட்டை நடக்கின்றது. மிக முக்கியமாக, இவற்றை மக்களாகவே பெரும்பாலும் ஏற்பாடு செய்கின்றனர். அத்துடன் ஏனையோருக்குக் கடும்போக்காகத் தெரிந்தாலும், தமிழ் அரசியல்வாதிகள் இதற்குப் பின்னால் நின்று, பக்கபலமாகச் செயற்படுகின்றனர் என்பதை மறுக்கவியலாது.   

ஆனால், முஸ்லிம்கள் தமது காணிகளை மீட்டெடுக்க, என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின்  மீட்பர்கள் என்று கூறி, மார்தட்டுகின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள், அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  மக்கள் தமக்களித்த இந்தப் பதவிகளின் ஊடாக, எதைச் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.......?   

தமிழ் மக்கள் மத்தியில், பெரிதாக அமைச்சர்களோ, அதிகமான தலைவர்களோ இல்லாத ஒரு சமூகமாகும். இவர்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை மீட்டெடுப்பதற்காக, நிராயுத பாணியாகத் தைரியமாக முன்னிற்கின்றார்கள் என்றால், அது சுலபமான காரியமல்ல. 

ஆனால், முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் இதற்காகப் போராடுவது ஒருபுறமிருக்க, குறைந்த பட்சம் வடக்கிலும், கிழக்கிலும் தென்னிலங்கையின் சில இடங்களிலும் முஸ்லிம்களுக்குரிய எத்தனை ஆயிரம் அல்லது இலட்சம் ஏக்கர் காணிகள் வேறு தரப்பினர் வசம் இருக்கின்றன என்ற புள்ளி விவரத்தையாவது மேலோட்டமாக அறிந்து வைத்திருக்கின்றார்களா என்பது கடும் சந்தேகமே. தரவுகளே இல்லையென்றால், அதற்காகக் குரல்கொடுப்பது எங்ஙனம் சாத்தியமாகப் போகின்றது என்று தெரியவில்லை.   

முஸ்லிம்களின் தேசியத் தலைமை ஆவதற்காக, அமைச்சுப் பதவிக்காக,தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்காக,கொந்தராத்துக்காக, தரகுக் கொடுப்பனவுகளை உழைப்பதற்காக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பினாமி பெயரில் சொத்துகளைக் குவிப்பதில் அக்கறை காட்டுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பராமுகமாக இருப்பதையே காண்கின்றோம்.   

அரசியல்வாதிகள் இவ்வாறு என்றால், முஸ்லிம் மக்கள் இது விடயத்தில் அதைவிட மோசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. அரசியல்வாதிகளின் நக்குண்டு நாவிழந்த தனமும்,முஸ்லிம் மக்கள், தூரநோக்கற்ற விதத்தில் தமது அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்ற விதமும், கடந்த பல தசாப்தங்களாக ஏற்படுத்தியிருக்கின்ற படுபாதகமான விளைவு என்றே, இதைக் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.   

‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்பார்கள்; தெண்டித்தவன் பெற்றுக் கொள்வான் என்பார்கள். இஸ்லாம் மதத்தில் கூட, இறைவனிடம் பிரார்த்தனை செய்து, தமது தேவைகளைக் கேட்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இப்படியிருக்க, தலையாய முக்கியத்துவம் மிக்க காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலும், அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க, ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுக்காமலும், முஸ்லிம்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.   

நிலம் அல்லது காணி என்பது, உலக சரித்திரத்தில் பல யுத்தங்களுக்கு காரணமாகிய காரணி என்பதை இப்பக்கத்தில் பலமுறை குறிப்பிட்டிருக்கின்றோம். இன்றும்கூட உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மோதல்கள், முரண்பாடுகளுக்கு நிலமும் அதற்குள் இருக்கின்ற வளங்களும் மிக முக்கிய காரணியாக இருப்பதை உன்னிப்பாக நோக்குவோர் உணர்ந்து கொள்வார்கள்.   

அத்துடன் தீவுகள், நிலப்பரப்புகளின் உரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, உலகின் பல நாடுகளுக்கு இடையில் மோதல்களும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் காண்கின்றோம். இப்படிப்பட்ட, மிகமுக்கியத்துவம் மிக்க விடயத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பராமுகமாக இருக்க முடியாது.   

கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (42 சதவீதம்) வாழ்கின்றனர். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் இனக்குழுமமாக முஸ்லிம்களே இருக்கின்றனர்.  

 அத்துடன், பாடசாலைகளில் தரம் 1 இற்குச் சேர்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து ஒப்பிட்டு நோக்குகின்ற போது, கிழக்கில் இன்னும் 15 வருடங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை 50 சதவீதத்தை தாண்டும் என்று கணித்துக் கூற முடியும்.   

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் பல ஹெக்டேயர் கணக்கான காணிகள் தொடர்பான பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு இருக்கின்றன. கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு, கிட்டத்தட்ட 90 ஆயிரம் ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளன.   

இதில் கணிசமான காணிப் பிரச்சினைகள், அம்பாறை மாவட்டத்தில் இருப்பதாகச் சொல்ல முடியும். வட மாகாணத்தை பொறுத்தவரை, 1990ஆம் ஆண்டு புலிகளால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றக் காணிப் பிரச்சினை முதன்மையானதாகும். அந்தவகையில், மொத்தமாக வடக்கைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு, சுமார் 40 ஆயிரம் ஹெக்டேயர், அதாவது ஓர் இலட்சம் ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளன.  

வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள், சுவீகாரம், அத்துமீறல்கள் மற்றும் வர்த்தமானி ஊடாக பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனப் படுத்தப்பட்ட காணிகள் என ஏகப்பட்ட பிரச்சினைகள் வடக்கில் உள்ளன. கிடைக்கப் பெறுகின்ற தகவல்களின் பிரகாரம், மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்ட காணிகளுள், முஸ்லிம்களின் காணிகள் அதிகமானவை என்று சொல்லப்படுகின்றது.   
வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களின் தலைமுறைபெருகி, சனத்தொகை மும்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான காணியை உறுதிப்படுத்துவது அவசியமானது.  

அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் 48 சதவீதமாக பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்கு வேகமாகம், கிரான்கோவை, கிரான்கோமாரி. ஒலுவில் அஷ்ரப் நகர், பொன்னன்வெளி, கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலம் ஓயா, ஹிங்குராணை, வட்டமடு ஆகிய இடங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் சிக்கலுக்குள்ளாகி இருக்கின்றன.   

அம்பாறை மாவட்டத்தில், சிங்கள இனப் பரம்பலை அதிகரிக்கும் வேறு குடியேற்றங்களாலும் பெருமளவு காணிகள் இழக்கப்பட்டுள்ளன. வனவளம், இராணுவ முகாம், தொல்பொருள் மய்யங்கள், புனித வலயப் பிரகடனம் என்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, கணிசமான காணிகள் உரிமைசார்ந்த பிரச்சினைக்குள்ளாகி உள்ளன.   

1930களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு எல்.டீ.ஓ. உத்தரவுப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கியதுடன், அடர்ந்த காடுகளை வெட்டி விவசாயம் செய்யும் நிலையும் உருவானது.   

இந்தக் காணிகளில், 30 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்தனர். பின்னர், கல்ஓயா அபிவிருத்தித் திட்டம் மற்றும் அதன் பின்னரான செயற்றிட்டங்களின் கீழ், தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்களுக்காக, இவற்றுள் கணிசமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.   

இப்படியாக..... நுரைச்சோலை, பொன்னன்வெளி, தீகவாபி, அம்பலத்தாறு, ஓமரங்காய், சேனைக்கண்டம், சேலவட்டை, வேலாமரத்துவெளி, சியத்தரவட்டை,அம்பலம்ஓயா,கிரான்கோவை, பொத்துவில், லகுகலை, கிரான்கோமாரி, அஷ்ரப்நகர் உள்ளிட்ட இடங்களில், முஸ்லிம்களுக்கு உரித்தான காணிகள், வேறு தரப்பால் அபகரிக்கப்பட்டுள்ளன அல்லது சொந்தம் கொண்டாடப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.   

இங்கு குறிப்பிடப்பட்ட காணிகள், அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்டவை மாத்திரமேயாகும். அதேவேளை, மேலும் ஒரு தொகுதி காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு உரிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிய முடிகின்றது. அத்துடன், ஹிங்குராணை சீனித் தொழிற்சாலையின் காணிகளுக்கு என்ன நடக்கும் என்பதும் நிச்சயமில்லை.   

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் 42 சதவீதமாகக் காணப்படுகின்ற முஸ்லிம்களின் இனப் பரம்பலுக்கு ஏற்றாற்போல், காணிகள் இல்லை. குறைந்த நிலப்பரப்பில் அளவுக்கதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.   

கிண்ணியா, பதவிசிறிபுர, குச்சவெளி, மூதூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் காணிப்பற்றாக்குறை காணப்படுவதுடன் இம்மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்று உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. வழக்கமான காணிப் பிரச்சினைகளை விட, அண்மைக்காலத்தில் நில ஆக்கிரமிப்புகள், பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.   

கரிமலையூற்று பள்ளிவாசலுக்கு முழுமையாக நிலத்தை வழங்க மனமில்லாத அதிகாரத் தரப்பினர், அங்குள்ள சில விகாரைகளுக்குப் பல நூறு ஏக்கர் காணிகள் இருந்ததாக உரிமை கொண்டாடுவதாகச் சொல்லப்படுகின்றது. 

சிங்கள பிரதேசங்களில் குறைந்தளவான மக்களுக்கு அதிக நிலமும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான மக்களுக்கு வரையறுக்கப்பட்ட காணி உரிமையும் இருப்பதைக் காண முடிகின்றது.   

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 20 கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள், சனத்தொகை அடிப்படையில் சிறுபான்மையாக வாழ்கின்றனர். ஆனால், அந்த மக்களுக்குக் கூட, அவர்களது சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகள் இல்லை. அத்துடன், வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள்ளேயே அவர்கள் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.  

இம்மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. அது ஒருபுறமிருக்க,வாகரை, கள்ளிச்சை, புணானை மேற்கு, வாகனேரி. காரமுனை போன்ற கிராமங்களில், வாழையடி வாழையாக வாழ்ந்து வெளியேறிய முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகன் இன்னும் தீர்க்கப்படவில்லை.   

இன விகிதாசாரத்துக்கு அமைவாகக் காணிப்பங்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சர்வதேச நியதியாகும். அதுமட்டுமன்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையிலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

அதாவது, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் காணிகளுக்கு, சட்டபூர்வ உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பல வருடங்களுக்கு முன்னரே பரிந்துரைத்துவிட்டது. ஆனால், அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்தவில்லை.   

புரையோடிப்போன இந்தக் காணிப்பிரச்சினைகளை, ஓர் இரவுக்குள் தீர்த்து விட முடியாது. சில பிரச்சினைகளை நிர்வாக ரீதியாகத் தீர்த்துக் கொள்ள முடியும். சில விவகாரங்களுக்கு உயர்மட்ட கலந்துரையாடல்களின் ஊடாகத் தீர்வைத் தேடலாம். வேறு சில காணிப் பிணக்குகளைத் தீர்க்க, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  

 சிலவற்றுக்கு, நீண்டநாள்கள் ஜனநாயக அடிப்படையில் போராட வேண்டியிருக்கும். அவ்வாறு செய்கின்ற போதுதான், கால ஓட்டத்தில் மெல்ல மெல்லக் காணிகளை மீட்டுக் கொள்ள முடியும் என்பதை, தமிழரின் காணி மீட்பு போராட்டங்களின் வெற்றிகள் நமக்கு உணர்த்துகின்றன.   

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளில் கைதட்டல்களுக்காகவும் பத்திரிகை அறிக்கைகளுக்காகவுமே காணிப் பிரச்சினையை இன்று வரையும் பயன்படுத்தி வருகின்றனர். 
முஸ்லிம் மக்களும் தங்கள் பிள்ளைகளுக்கு காணி வேண்டும்; வளவு வாங்க வேண்டும் என்று நினைக்கின்ற முஸ்லிம்கள், தமது பேரப்பிள்ளைகள் அவர்களது பிள்ளைகள் காணிக்கு எங்கு போவார்கள் என்பதைச் சிந்திப்பதில்லை.   

இப்படியாக, எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்காத சமூகமாக இருந்து, அன்றாடங்காய்ச்சிகள் போல, அன்றன்றைய நாளுக்காக வாழாமல், தற்போதிருக்கின்ற இன விகிதாசாரத்துக்கு ஏற்பவும் எதிர்கால முஸ்லிம் சனத்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்பவும் காணிகளைப் பெற்றுக் கொள்ள அனைவரும் பாடுபட வேண்டும். 

பெரும்பான்மையாக சனத்தொகை பெருகுவதில் பெருமையில்லை; அவர்கள் வாழ்வதற்கான பெருமளவு நிலமும் இருக்க வேண்டும்.   


காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடாத முஸ்லிம்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.