2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறிய நாட்டின் பெரிய பிரச்சினைக்கு வயது நூறு

காரை துர்க்கா   / 2018 மார்ச் 13 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 08, 09, 10ஆம் திகதி என மூன்று நாட்கள் நடைபெற்ற ‘வடக்கின் பெரும் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் தோன்றியது.   

ஒரே சனத்திரள்; ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கலகலப்பாக மைதானமும் சுற்றுப்புறமும் காட்சி அளித்தன. ஒரு மர நிழலில் அமர்ந்தவாறு, ஆட்டத்தை ஆர்வத்துடன் ரசித்தேன்.   
அருகில் ஒரு முதியவர், கையில் புதினப் பத்திரிகையை வைத்திருந்து, அதைப் படிப்பதும் ஆட்டத்தைப் பார்ப்பதுமாகக் காணப்பட்டார்.  

“ஐயா, துடுப்பெடுத்தாடும் பையன் செஞ்சரி (100) விளாசுவானா” எனக் கேட்டேன்.   

“அதைப் பற்றி எனக்குத் தெரியாது தம்பி; அப்படிக் கூறவும் முடியாது. ஆனால், நம் நாடு இனப்பிரச்சினை வன்முறைகளில் நூறு தாண்டி ஓடிக் கொண்டு இருக்கின்றது” எனக் கூறி, என்னை நிமிர்ந்து பார்த்தார்.   

ஆம்! அவர் கூறியது போல, இலங்கையில் முதலாவது இனக்கலவரம், சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் 1915ஆம் ஆண்டு கண்டியில் இடம்பெற்றது. இதுவே கட்டமைக்கப்பட்ட முதலாவது இனக் கலவரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, பள்ளிவாசல்கள், முஸ்லிம் மக்களின் வணிக நிறுவனங்கள் பல சாம்பலாகின.   

அதையடுத்து, டி.எஸ் சேனநாயக்க உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்கள், அன்றைய ஆட்சியாளரான பிரித்தானியரால் கைது செய்யப்பட்டனர். 

அவர்களை, பிரித்தானியர்களுடன் சமரசம் பேசி, சேர் பொன் இராமநாதன் விடுவித்தார். இவை, 103 வருடங்களுக்கு முன்னர், நம் நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் ஆகும்.   

இந்தக் கலவரம் நடைபெற்று, சரியாக நூறு வருடங்களின் பின்னர் (2015) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஆட்சியமைப்பதற்குச் சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் பங்கு மிகப் பெரியது. புதிய ஆட்சி மாற்றம் தமக்கு ஒளி ஏற்றும் என அவர்கள் பாரிய அளவிலான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.   

ஆனாலும், நூறு வருடங்கள் கடந்தாலும், ஆட்சி மாற்றங்கள் எனப் பல மாற்றங்கள் தோற்றம் பெற்றாலும், இலங்கைத் தீவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களின் மனப் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. அந்த வக்கிர மனப்பான்மை மாற்றமின்றி, அவ்வாறே நீறு பூத்த நெருப்பாக உள்ளது என்பதையே அண்மைய சம்பவங்கள், உலகத்துக்கு உரத்துக் கூறி உள்ளன.   

அதாவது, அதே கண்டி மாநகரில், அதே வடிவத்தில், அதே மக்களுக்கு எதிராகக் கலவரம் நடந்துள்ளது.   

அடுத்து, நாட்டின் பிறிதொரு சிறுபான்மை இனமான, தமிழ் மக்களுக்கு எதிராக, 1958 மற்றும் 1977ஆம் ஆண்டுகளிலும் அதன் தொடராக 1983இல் மிகப் பெரியளவில் நன்கு திட்டமிட்ட இனக்கலவரங்கள் தலை விரித்தாடின. தமிழ் மக்களது வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் சாம்பல் மேடுகள் ஆயின. பலரது உயிர்கள் கூட உருவப்பட்டன.   

பல இலட்சம் தமிழ் மக்கள் நாட்டை விட்டு ஓடினர்; ஆயுதப் போராட்டம் வலுப் பெற்றது. 1958இல், தெற்கே தமிழ் மக்களுக்கு எதிராக ஆரம்பித்த வன்முறை 2008ஆம் ஆண்டு முல்லைத்தீவு வரை ஐம்பது வருடங்களாகத் துரத்தியது.   

அதன் நீட்சியாக, 2009இல் மிகப் பெரிய மனிதப் பேரவலம் இடம்பெற்றது. பல ஆயிரம் தமிழ் உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. தமிழ் மக்களது முதுகெலும்பு உடைக்கப்பட்டது. ஆண்டிகள் ஆக்கப்பட்டு, அநாதைகளாகத் தெருவில் விடப்பட்டனர்.   

இவ்வாறாகத் தமிழர்கள் நாதியற்ற நிலையில் இருந்தவேளை, நாட்டின் மறுமுனையில் வீதியில் பால் சோறு பொங்கினர்; குதுகலத்துடன் பகிர்ந்து பரிமாறினர்; பட்டாசு கொளுத்தினர். பல உயிர்கள் பொசுங்கியதை எள்ளளவும் அவர்கள்  சிந்தையில் கொள்ளவில்லை. தமிழர்கள் என்றாலும் மனித உயிர்கள் என்ற கருணை உள்ளத்தில் எழவில்லை.   

இவ்வாறாகவே, இந்து சமுத்திரத்தில் நிறைய வளமும் குறைவின்றிய அழகும் பஞ்சமின்றிக் கொட்டிக் கிடக்கும் ஸ்ரீ லங்கா என்ற சின்னம் சிறிய நாட்டில், பெரியதாய், நீண்ட காலமாய்ப் பற்றி எரிகின்ற இனப்பிரச்சினை, அணைவதற்கான அறிகுறிகள் மிகவும் அரிதாகவே உள்ளது.   

ஏன், இப்படி? என சற்றுச் சிந்திப்பின் காலம் காலமாக, இந்தத் தேசத்தை ஆண்ட சிங்கள ஆட்சியாளர்களது மனப்பாங்கே இவற்றுக்கு எல்லாம் அடிப்படைக் காரணங்கள் ஆகும்.   

உதாரணமாக, 1970 களில் தமிழ் மாணவர்களது அதிகரித்த பல்கலைக்கழகப் பிரவேசத்தை மட்டுப்படுத்த, ‘தரப்படுத்தல்’ என்ற கொள்கையை வகுத்து அமுல்படுத்தினர். 

ஆனால், இவ்வாறு செய்வதை விடுத்து, ஏனைய மாணவர்களது கற்றல் செயற்பாட்டை, முழு வீச்சாக அதிகரிக்க, என்ன செய்யலாம் என்ற வாறாகச் சிந்திக்கத் தவறி விட்டனர். மாற்றி யோசிக்க மறுத்து விட்டனர்.   

சிறுபான்மை மக்களை மேலும் சிதைத்து அவர்களது இனப்பரம்பலை சின்னாபின்னப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்; இன்றும் மேற்கொள்கின்றனர். 

இதனால் சிறுபான்மை மக்கள் அடைகின்ற வேதனைகளையும் விரக்திகளையும் அரசாங்கங்கள் சற்றும் உணர்வதில்லை. அத்துடன், அவ்வாறாக மாற்றான் வளவில் குடியிருக்க வரும் சிங்கள மக்களும் இவற்றை உணர்வதில்லை.  

அதாவது, இலங்கை நாடு சிங்களவர்களுக்கு, அதிலும் பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்துடையது என்ற கருத்தியலை ஆட்சியாளர்கள் செறிவாக ‘அவர்கள்’ மனங்களில் விதைத்து விட்டார்கள்.   

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல, நூறு வருடங்களாகக் கொடிய விசம் போல, இனவாதமும் மதவாதமும் ஒருங்கே கொடுத்து ஊட்டி வளர்த்த விதையின் அறுவடைகளே இன்று பெரும் விளைச்சல்களை (எதிர்மறையான) கொட்டி, வழங்கிக் கொண்டு இருக்கின்றன.   

அன்று, முள்ளிவாய்க்காலில் சாட்சிகள் எதுவும் இன்றி, பெரும் இன அழிப்பு நடைபெற்றது. இன்று உலகம் பார்த்திருக்க, கண்டியில் நடைபெறுகின்றது. அதாவது, ஒருவரும் எம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற அகங்காரமே கலகக்காரர் மனதில் ஆழ அகன்று, படர்ந்து உள்ளது.   

இன்று ஆட்சியாளர்கள் கூட அருவருப்பு, அடையும் வகையில் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.   

இந்நாட்களில், ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெறும் வேளையில் கூட, மனித உரிமைகள் இலங்கையில் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன.   

சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகள் என்பவை ஒருங்கே, உடனடியாக இவற்றைத் தடுத்து நிறுத்துமாறு கூப்பாடு போடுகின்றன. இதே சர்வதேசம் 2009இல் இவ்வாறாக நடந்திருந்தால் எம் உறவுகள் பல இப்போதும் உயிருடன், உடன் இருந்திருப்பர் என ஏங்கித் தவிக்கின்றனர் தமிழ் மக்கள்.   

வாழ்வு ஒரு முறை மட்டுமே வரும். அவ்வாறான வாழ்வின் வளர்ச்சியைக் கூட்டுவது, மகிழ்ச்சி மட்டுமே. வாழ்வை அர்த்தமாக்குவது நிம்மதி ஒன்றே. ஆனால், மகிழ்ச்சி, நிம்மதி என்றால் என்ன நிறம் எனக் கேட்கும் நிலையில் தமிழ் இனம் உள்ளது. அதே நிலைக்கு முஸ்லிம் இனம் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது.   

தொடர் தோல்விகள், இழப்புகள், ஆற்றாமைகள் என்பவற்றால் தமிழ் இனம் துவண்டு போய் விட்டது; உணர்ச்சிகள் மரத்துப் போய் விட்டன.   

ஆகவே, ஆட்சியாளர்களின் இவ்வாறான செயற்பாடுகள், அர்த்தமுள்ள நியாயமான சர்வதேச தலையீடுகள் இன்றி, இலங்கையில் நீடித்த அமைதி அமுல் ஆகாது எனத் தெளிவாக அறிவிக்கின்றது.   

பிரித்தானியரால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை ஓரினம் மட்டுமே, 1948ஆம் ஆண்டு முதல் சுவைத்துக் கொண்டிருக்கிறது. மற்றைய இனங்கள், வீசப்படும் எலும்புத்துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு  காத்துக்கொண்டிருப்பதைத் தான் பெரும்பான்மை இனம் விரும்புகின்றதா?   

இலங்கை என்ற எம்தாய் நாடு, பல்வகை இனத்தவர்களுக்கும் பல்வகை மதத்தவர்களுக்கும் பொதுவான ஒரு நாடு என்ற எண்ணமும் சிந்தனையும் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்டால் மட்டுமே, அவர்கள் அதைச் செயலிலும் காண்பிப்பார்கள்.   

ஏனெனில், மனிதர்களின் எண்ணங்களினதும் சிந்தனைகளினதும் ஒட்டு மொத்த வெளிப்பாடே அவர்களின் செய்கைகளும் செயற்பாடுகளும் ஆகும். உங்களுக்கு என்ன உரிமைகள் வேண்டுமோ, அதை முதலில் மற்றவர்கள் பெறச் செய்யுங்கள் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பு.   

ஆகவே, இலங்கைத்தீவில் உண்மையான அமைதி ஊர்களிலும் நகரங்களிலும் பரவ வேண்டுமெனில், சிங்கள மக்கள் மனதில் மற்றவர்களையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஊடுருவ வேண்டும்.   

அதேவேளை, இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள், மீண்டும் ஒருமுறை, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருமித்து, ஒரே குரலில், ஒரு தாய் மக்களாக, ஒரே குறிக்கோளுக்காக, ஒரே மொழி பேசும் சிறுபான்மை மக்கள் என்ற அடிப்படையில், ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருக்கின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X