சிறுத்தைகளும் விலங்குரிமைப் பாசாங்குகளும்

  வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், எதிர்பாராத விதமாக, தேசிய செய்தியாக மாறி, விலங்குரிமைக்கான கோரிக்கைகளும் விசாரணைக்கான கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. இத்தனை கருணை மிகுந்த தேசமாக இலங்கை இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் பலருக்கு எழுப்பியிருக்கிறது.  

உயிர்களைத் தேவையின்றிக் கொல்லக் கூடாது என்பது, எம்மில் அநேகர் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் தான். அச்சிறுத்தை கொல்லப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது, மனது வலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும், சிறுத்தை கொல்லப்பட்ட பின்னர், அதனுடன் “செல்பி” எடுத்துக் கொண்டு, அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றியிருந்ததைப் பார்க்கும் போது, “இது தேவையற்றது. நாகரிகமாகத் தெரியவில்லை” என்ற எண்ணம் தான் மனதுக்கு வருகிறது.  

இவ்விடயத்தை, நண்பர் ஒருவரிடம் கூறியபோது அவர், “சிறுத்தையைக் கொன்ற பின்னர், அவர்கள் நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது தான். ஆனால், பிரபாகரனைக் கொன்ற பின்னர், எம்மில் பலரும், இவ்வாறு தான் கொண்டாடியிருந்தோம். அப்போது அவ்விடயம், எமக்குச் சரியென்று தான் தோன்றியிருந்தது” என்றார்.  

இலங்கையின் பெரும்பான்மையின மக்களுக்கு, பிரபாகரன் என்ற நபர், மிகப்பெரும் எதிரியாகத் தெரிந்திருந்தார். அவரது மரணம், அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது யதார்த்தமானது தான். அது, மறுபகுதியினருக்கு எவ்வாறிருந்தது என்பது, தனியான ஒரு விடயம். அதேபோல் தான், சிறுத்தையின் கொலையைக் கொண்டாடும் அந்நடவடிக்கை, தூரத்திலிருக்கும் எமக்கெல்லாம் நாகரிகமற்றதாகத் தெரிந்த போதிலும், அம்மக்களைப் பொறுத்தவரை, நியாயமான ஒன்றாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.  

அதிலும், சிறுத்தையின் ஆபத்துத் தொடர்பில், அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக முறையிட்ட போதிலும், அவ்விடயத்தில் தமக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்ற கோபத்தையும் ஆவேசத்தையும், அச்சிறுத்தை மீது அம்மக்கள் காண்பிக்க வழிவகுத்திருந்தது எனப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதேபோல், இச்சிறுத்தை, அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் வளர்க்கப்பட்டு வந்த சிறுத்தை தான் என்ற தகவல்களும் இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் கோபத்துக்கு அதுவும் காரணமாக அமைந்ததா என்ற பின்னணியையும் ஆராய வேண்டியிருக்கிறது.  

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இச்சிறுத்தை கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னதாக, யாழ்ப்பாணத்தின் மல்லாகத்தில் வைத்து, இளைஞரொருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டிருந்தார். குழுக்களுக்கிடையிலான மோதலை அடக்கச் சென்ற பொலிஸார் மீது, வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திக் கொண்டு துப்பாக்கியைப் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டாரென, பொலிஸார் கூறுகின்றனர். அது எவ்வாறு சாத்தியம் என்பது ஒருபக்கமாகவிருக்க, அவ்விளைஞர், அச்சண்டையில் ஈடுபட்டவர் இல்லை என, பொதுமக்கள் சொல்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது.  

பொலிஸார் சொல்வதைப் போல, பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றார் என்பது உண்மையாக இருந்தாலும், அருகில் வைத்து, அவரது உயிரைப் பறிக்குமளவுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தக் காரணம் என்ன, எச்சரிக்கை வேட்டுகள் ஏன் தீர்க்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் இன்னமும் பதிலில்லை.  

ஆனால் இச்சம்பவம், தெற்கிலிருக்கும் அநேகமான ஊடகங்களால், “வன்முறை மிகுந்த வடக்கு” என்ற காட்சியைக் காட்டுவதற்காகத் தான் பயன்படுத்தப்பட்டது. இலங்கைப் பொலிஸாரின் மனித உரிமை மீறல்களும் இனவாதப் போக்குகளும் பொய்களும் உலகறிந்தவை என்றாலும் கூட, பொலிஸார் கூறிய அனைத்தும், வேதவாக்காகப் பதிவுசெய்யப்பட்டது. “பொலிஸாரைத் தாக்கச் சென்றால் சுடத் தானே செய்வர்?” என்பது தான், இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனமாக இருந்தது.  

ஆனால், இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த பிரிவினரில் அநேகமானவர்கள், “சிறுத்தை உங்களைக் கொல்ல வந்தாலும் கூட, அதை எவ்வாறு கொல்ல முடியும்?” என்றும் கேள்வியெழுப்புகிறார்கள். 

சுருக்கமாகச் சொல்வதானால், “மனிதனை மனிதன் தாக்க முயலும் போது, தாக்க முயலும் மனிதனைக் கொல்வது சரியானது; ஆனால், விலங்கொன்று மனிதர்களைத் தாக்கி, காயப்படுத்தியிருக்கின்ற போதிலும், அதைக் கொல்ல முடியாது”.  

இந்த “விலங்குரிமை ஆர்வலர்களின்” பார்வையில், மனிதர்களை விட விலங்குகளுக்கு, அதிக கருணை காண்பிக்கப்பட வேண்டும். இதுவொன்றும், எழுந்தமானமான கூற்றுக் கிடையாது. 

சிறுத்தை கொல்லப்பட்ட இவ்விடயம் தொடர்பாக, தெற்கைச் சேர்ந்த பெரும்பான்மையின இணையப் பாவனையாளர்களுடன் இப்பத்தியாளர் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்களின் போது, ஒரு கட்டத்தில், “மனிதர்களைப் பிரதியீடு செய்யலாம். ஆனால், எங்களுடைய சிறுத்தைச் சனத்தொகையைப் பிரதியீடு செய்வது கடினமானது” என, ஒருவர் பதிலளித்திருந்தார். இதுவொன்றும் தனித்த நபரொருவரின் கருத்துக் கிடையாது. மாறாக, குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் கருத்தாக அமைந்திருந்தது.  

அதேபோல், கிளிநொச்சியில் இச்சிறுத்தை கொல்லப்பட்ட பின்னர், வேண்டுமென்றோ, இல்லாவிட்டால் புரிதல்களின்றியோ, வடக்கின் தமிழ்ச் சமுதாயத்தை, வன்முறை மிகுந்த சமுதாயமாகக் காண்பிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பக்கமாக, “போரால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த வன்முறை எண்ணத்தை இன்னமும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் இதை மேற்கொண்டார்கள்” என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. 

வடக்கிலுள்ள மக்கள், அதுவும் இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள், ஒருவரையொருவர் அடித்துக் கொன்ற வகையில், அங்கு இப்போது வாழவில்லை. வடக்கிலுள்ள மாவட்டங்களில், முல்லைத்தீவும் கிளிநொச்சியும் தான், இறுதிக்கட்டப் போரில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள். ஆனால் ஒப்பீட்டளவில், யாழ்ப்பாணத்தில் தான் வாள்வெட்டுச் சம்பவங்களும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகம் பதிவாகின்றன என்பதை, ஊடகங்கள் மூலமாக அறிய முடிகிறது.   

மறுபக்கமாக, “கிளிநொச்சியிலுள்ள தமிழர்கள், அரிய வகைச் சிறுத்தையைக் கொன்றுவிட்டார்கள்” என, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டன. தகவல்களை வைத்துப் பார்த்தால், சிறுத்தையைக் கொன்றவர்கள் தமிழர்கள் தான். ஆனால், தமிழர்களாக அவர்கள் இருப்பதற்கும், சிறுத்தை கொல்லப்பட்டமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

அதைவிட முக்கியமாக, 2016ஆம் ஆண்டில், இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஹபரதுவ எனுமிடத்தில், கழுகொன்றைப் பிடித்து, அதன் தோலை உரித்து, கால்களை வெட்டி, அதைக் கொல்லும் முயற்சி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதன்போது, “கழுகைக் கொன்ற சிங்களவர்கள்” என்று, எங்காவது விமர்சனம் எழுப்பப்பட்டதா? அப்படியாயின், சிறுத்தை விடயத்தில் மாத்திரம், இனம் முன்னிறுத்தப் படுவதற்கான காரணம் என்ன?  

இந்த விடயங்கள் எல்லாம், வில்பத்துக் காடழிப்புக் குற்றச்சாட்டுகளைத் தான் ஞாபகப்படுத்தப்படுகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனால், வில்பத்துக் காடு அழிக்கப்பட்டு, அங்கு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள், தெற்கில் தொடர்ந்தும் ஏற்படுத்தப்படுகின்றன. 

அக்குற்றச்சாட்டு, அமைச்சர் பதியுதீனைத் தாண்டி, முஸ்லிம் மக்கள் மீதான குற்றச்சாட்டாகவே வெளிப்படுத்தப்படுவதையும் நாங்கள் பார்க்கிறோம். “வில்பத்துவைக் காப்பாற்றுங்கள்” என்ற கோஷம், தெற்கிலுள்ள “சுற்றுச்சூழல் ஆர்வலர்களால்”, தொடர்ச்சியாக எழுப்பப்படுவதோடு, அமைச்சர் ரிஷாட் பதவி விலக வேண்டுமெனக் கோரப்படும் அளவுக்கு, அவ்விமர்சனங்கள் காணப்படுகின்றன.  

ஆனால், அப்படிக் காடழிப்பு இடம்பெற்றிருந்தால், முன்னைய அரசாங்கத்தின் காலத்திலேயே அது இடம்பெற்றிருக்கும். எனவே, அவ்வாறு காடழிக்கப்படும் வரை, அப்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் ஏன் வாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விகளோ, கோரிக்கைகளோ முன்வைக்கப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர் ரிஷாட்டையும் முஸ்லிம்களையும் மாத்திரம் இலக்குவைப்பதாகவே, இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.  

முஸ்லிம்கள் மீது வில்பத்து எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோன்று தான், தமிழர்கள் மீது இச்சிறுத்தை விவகாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனத்தை முன்வைப்பதில், எத்தவறும் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.  

விலங்குகளுக்கான கோரிக்கைகளை முன்வைப்பதில் எத்தவறும் இல்லை. இலங்கை என்ற அழகான தீவுக்கு, அழகான விலங்குகளும் பறவைகளும் தான், மேலும் மெருகூட்டுகின்றன. ஆனால், இறுதிக்கட்டப் போரில், பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, “உடனழிவு” அல்லது “உடன்சேதம்” (collateral damage) என்று கடந்துசெல்லும் நாட்டில், சிறுத்தையொன்று கொல்லப்பட்டவுடன் முழு நாடும் கிளர்வதைப் பார்க்கும் போது, ஓரப் புன்னகை செலுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.    


சிறுத்தைகளும் விலங்குரிமைப் பாசாங்குகளும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.