2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சீனா 70: வரலாறும் வழித்தடமும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது.   

அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.   

சீனா பற்றி, தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிம்பம் கட்டப்பட்டுள்ளது. சீனா, தமிழ் மக்களின் எதிரி என்றும் இலங்கை அரசாங்கத்தின் நண்பன் என்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது.   
இந்தியா பற்றியும் மேற்குலகு பற்றியும் நாம் அனுபவரீதியாக உணர்ந்த பின்னரும், தமிழ் மக்களின் மீட்பர்களாக இந்தியாவையும் மேற்குலகையும் நோக்குவது அபத்தம்.   

மக்கள் சீனம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை அண்மையில் சீனா நினைவுகூர்ந்தது. சீனாவின் இந்த 70 ஆண்டுகால வரலாறு, எமக்கு விட்டுச்சென்றுள்ளவை பல.   
இன்று உலகின் தன்னிகரற்ற சக்தியாகவும் பல துறைகளில் முன்னோடியாகவும் சீனா திகழ்கிறது. ஆனால், இது எவ்வாறு சாத்தியமாகியது என்ற கேள்வி இயல்பானது. இன்று, ஈழத்தமிழர்கள் மத்தியில் சீனா பற்றிய பிம்பம் எதிர்மறையானது. அதற்கான காரணங்களில் பிரதானமானவை, இந்தியா மீதான ஈர்ப்பும் மேற்குலகின் மீதான விசுவாசமும் ஆகும்.   

இன்று தமிழர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ உலகின் தவிர்க்கவியலாத சக்தியாக சீனா வளர்ந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது.   

மாஓ சேதுங்கால் வழிநடத்தப்பட்ட சீனப்புரட்சி 1949ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முதலாம் திகதி வெற்றிபெற்றது. இதை, மாஓ அன்றைய தினம் ‘தியனமென்’ சதுக்கத்தில் அறிவித்தார். அன்று மக்கள் சீனக் குடியரசு பிறந்தது. இதைச் சாத்தியமாக்கியது சீனப்புரட்சியே.   

இன்று சீனா அடைந்துள்ள விருத்தியும் செழுமையும் சீனப்புரட்சியின் பாரம்பரியத்தில் வந்தவை. மகத்தான சீனப்புரட்சி, லெனின் தலைமைதாங்கி வழிநடத்திய ரஷ்யப் புரட்சிக்கு அடுத்தபடியான முக்கியமான புரட்சிகரக் கட்டமாகும்.   

தத்துவார்த்த அடிப்படையிலும் நடைமுறை ரீதியிலும் மார்க்ஸியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி, செழுமைப்படுத்திய பெருமை மாஓவையும் சீனப்புரட்சியையும் சாரும்.   

இன்று, சீனா எழுந்து நிற்பதற்கான அடிப்படைகள், மாஓவின் காலத்தில் இடப்பட்டவை. அவை, உள்ளூராட்சி அமைப்புகளாக இருக்கட்டும்; சீனாவின் அயலுறவுக் கொள்கையாக இருக்கட்டும் அனைத்தும் கவனமாய் மக்கள் நல நோக்கில் சீனாவால் முன்னெடுக்கப்பட்டவை ஆகும்.   

சீனாவில் சுயாட்சியும் திபெத்தும்  

1949இல், மாஓ சேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைந்த அன்றிலிருந்து, சோஷலிசப் பாதையில், சீனா முன்னேற்றங்களைக் கண்டு வந்தது. அவற்றில் ஒன்றாக, அந்நாட்டின் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்வுக்குக் கொண்டுவரப்பட்டன.   

அரசமைப்பின் வாயிலாக, ஒற்றையாட்சியின் கீழ்த் தேசிய இனங்களுக்கான பிராந்திய சுயாட்சி அமைப்புகள் நிறுவப்பட்டன. சுயாட்சி அமைப்புச் சட்டத்தின் முகவுரையில், ‘சீனா சகல தேசிய இனங்களாலும் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சியுடன் கூடிய பல்லின அரசு’ என்றே கூறப்பட்டுள்ளது. சகல தேசிய இனங்களும் சமமானவை என்றே சீன அரசமைப்புக் கூறுகிறது.  

சீனாவில் 55 தேசிய சிறுபான்மை இனங்கள் இருந்து வருகின்றன. பல பிரதேசங்களில் வெவ்வேறு இனங்களாகவும் பல்வேறு மொழிகள் பேசுவோராகவும் அவர்கள் இருந்துவருகிறார்கள்.அவர்களது உரிமைகளும் சுயாட்சியும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது சீனா உள்நாட்டுப் போர்கள் அற்ற நாடாக இருப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டது.   

திபெத் நிலைவரம் என்ன என்ற கேள்வி எழலாம். சீனாவின் புரட்சிக்குப் பிறகு, என்ன நடந்தது என்பதற்குத் திபெத் நல்லதோர் உதாரணமாகும். திபெத்திய உள்ளூரதிகாரம், 1951 வரை நிலவுடைமையாளர்களின் நலன்களைப் பேணுதற்காக மட்டுமே செயற்பட்டது.  

 பண்ணை அடிமைகள் தமது அடிப்படை உரிமைகள் பற்றிக் குரல் எழுப்ப இயலாதபடி மிகவும் கண்டிப்புடன் கண்காணிக்கப்பட்டனர். ஒவ்வொரு மடாலயத்திலும் இருந்த ஏழை லாமாக்களின் நிலைமை அதிகம் வித்தியாசமாக இருக்கவில்லை.   

புத்த மடாலயங்களுக்கும் கல்வி புகட்டலுக்கும் உலகெங்கும் ஒரு வரலாற்றுத் தொடர்பு இருந்து வந்துள்ளது. எனினும் திபெத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை. ஏழை லாமாக்களுக்குப் புத்த சமயச் சூத்திரங்களை வாசிப்பதற்குப் போதியளவுக்கு மேல், எவ்விதமான கல்வியறிவும் வழங்கப்பட்டதாகக் கூற இயலாது.  

திபெத்தை விடுதலை செய்த பின்பு, சீன அரசாங்கத்தின் கையில் இருந்த சுமை, எத்தகையது என்பதை இதன் மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். கல்வியறிவு, தொழில்விருத்தி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த திபெத், மொழி, கலை இலக்கியச் செயற்பாடுகளில் கூடப் பின்தங்கியே இருந்தது. எனவே, சகலதுறைகளிலும் திபெத்தை முன்னேற்ற வேண்டி இருந்தது. 

அதேவேளை, திபெத்தின் நிலவுடைமையாளர்களது அதிகாரம் முற்றாகவும் தூக்கி எறியப்படாத நிலையில், அது எளிதில் சாத்தியமாகவில்லை. அதன் அடிப்படைத் தேவையாகவும் முக்கிய முன் நிபந்தனையாகவும் பண்ணை அடிமைகள் விடுதலை செய்யப்படுவதும் காணிச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதும் அவசியமாயிருந்தது.  

சீன அரசாங்கம் இம் மாற்றங்களைப் படிப்படியாக மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. சீனாவில் 1957 முதல் ஏற்பட்ட துரிதமான மாற்றங்கள் போல, எதுவுமே திபெத்தில் நிகழவில்லை.   
எனினும் நிலப்பிரபுக்களின் தூண்டுதலினதும் வழிகாட்டலினதும்  கீழ், மேற்கொள்ளப்பட்ட எழுச்சி, இந்த அவசியமான சீர்திருத்தங்களுக்கான நாளை மிகவும் முன்கொண்டு வந்த அளவில், அதுவும் நன்மைக்கானதே என்றுதான் கூறவேண்டும்.  

திபெத்திய மொழியில் கல்வி கற்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தொழிலும் வணிகமும் விருத்தி செய்யப்பட்டன. திபெத்தின் சகல நிர்வாக அலுவல்களிலும் திபெத்திய உள்ளூராட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.   

திபெத்தியரின் மத நம்பிக்கைகளும் வழக்கங்களும் மதிக்கப்பட்டு வழிபாட்டிடங்கள் புனரமைக்கப்பட்டன. கட்டாயத்தின் பேரில் லாமாக்களாக்கப்பட்டோர் தங்கள் குடும்பங்களிடம் போகச் சுதந்திரம் வழங்கப்பட்டது. நிலப்பிரபுகளின் நிலங்கள் அவற்றில் உழைப்போரின் பொறுப்பில் பகிர்ந்தளிக்கப்பட்டன. மடாலயங்கள் தமது சொந்த உழைப்பின் மூலமோ, உரிய கூலி வழங்கியோ தமக்குரிய நிலங்களைப் பராமரிப்பில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டன. 

கல்வியறிவின் வளர்ச்சியின் விளைவாகத் திபெத்திய மொழியில் பழைய காவியங்களும் மதஞ்சார்ந்த நூல்களும் அச்சிடப்பட்டன. அதுபோலவே நவீன கல்வியும் தொழில்நுட்பமும் திபெத்திய மொழிக்கு அறிமுகமாயின.  

சீனாவின் அயலுறவுக் கொள்கையும் இலங்கையும்  

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமையைத் தனது பிரதான அயலுறவுக் கொள்கையாகச் சீனா கொண்டுள்ளது. இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறது.   

சீனா, மாவோ காலத்தில் சோசலிச நாடாக இருந்தவரை, விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. இன்று முதலாளித்துவ நாடாக மாறிய பிறகு, ஆக்கிரமிப்பு அரசுகளுக்கு ஆயுதங்களை விற்பதாக ஆகிவிட்டது. ஆனால், இன்றும் மூன்றாமுலக நாடுகளின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா அல்ல.   

இலங்கையின் மீதான ஆதிக்கத்துக்கான அவா, சீனாவினுடையது என்று முடிவுக்கு வருதல் கடினம். ஆனால் சீனா, இலங்கையில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை மறுக்கவியலாது. குறிப்பாக, சீனா முன்னெடுத்துள்ள ‘ஒரு பட்டி ஒரு வழி’ திட்டத்தில், இலங்கை முக்கிய பங்காளியாகும்.   

இப்போது சிலர், சீன ஏகாதிபத்தியம் பற்றிப் பேசுகின்றனர். அதில் சிங்கள ஏகாதிபத்தியம் பற்றிப் பேசி வந்த தமிழ்த் தேசியவாதச் சிறுபிள்ளைத்தனத்தின் தொடர்ச்சியையும் காணலாம். அதைவிடச் சீனா, இந்தியாவை முற்றுகையிடத் திட்ட மிடுகிறது என்று சொல்லும் சீனாவின் ‘முத்து மாலைக்’ கதை, இன்னமும் தொடர்கிறது.  

 இந்தியாவுக்கே இல்லாத இந்தக் கவலை, இங்கே உள்ளவர்களுக்கு ஏன் வருகிறது என்பதைக் கவனித்தால், இலங்கையை இலக்குவைக்கும் மேற்குலகிடமிருந்து கவனத்தைத் திருப்புகிற முயற்சி என்றே கருதவேண்டும். இப்பிரசாரம், குறிப்பாகத் தமிழரிடையே முக்கியத்துவம் பெறுவதும் கவனத்துக்குரியது.  

சீனா சோசலிச நாடல்ல. அது, ஏகாதிபத்திய எதிர்ப்பில் அக்கறையுடைய நாடுமல்ல; அது தீவிரமாக முதலாளித்துவப் பாதையில் போகிறது என்பதிலும் ஐயமில்லை. அது ஒரு முதலாளித்துவ நாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒரு வலிய முதலாளித்துவ அரசு காலப்போக்கில் ஏகாதிபத்தியமாக வளரும் வாய்ப்பையும் நாம் மறுப்பதற்கில்லை. 

ஆனால், சீனா ஏலவே ஒரு ஏகாதிபத்திய நாடா என்பதில் கடும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எவ்வாறாயினும் மேற்குலகின் பொருளாதாரச் சரிவு, சீனாவின் முதலாளித்துவத்தை ஆதிக்க நிலைக்குக் கொண்டுவரும் வாய்ப்பையும் அதன் விளைவுகளையும் புறக்கணிக்க இயலாது. எவ்வாறோ ரஷ்யாவைத் தங்களுடன் அரவணைக்க ஆயத்தமாயிருந்த முதலாளித்துவ வல்லரசுகள் (ஜி-7 எனப்படும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான்) சீனாவை எட்டத்தில் வைக்க விரும்புகின்றன. சீனாவுக்கு மேற்குலகுடன் ஓர் ஆழமான முரண்பாடு உள்ளமை முக்கியமானது.  

ஏகாதிபத்திய நாடுகள் வழமையாகக் கடைப்பிடிக்கும் பல நடைமுறைகளைச் சீனா இன்னமும் கடைப்பிடிக்கத் தொடங்கவில்லை. அவற்றில், சீனா அந்நிய நாடுகளில் படைத்தளங்களை நிறுவாமையும் உள்நாட்டு அலுவல்களிளோ ஆட்சிமாற்றத்திலோ ஈடுபடாமையும் முக்கியமானவை.   

அதைவிட, நேரடியான உற்பத்தி முதலீடுகள் என்று வருகின்றபோது, இன்னமும் சீனாவுக்குள் நுழைக்கிற முதலீடுகளின் அளவு சீனாவின் அயல் முதலீடுகளிலும் அதிகமாகவே உள்ளது. சீன மக்களின் மலிவான உழைப்புச் சுரண்டப்படுகிறது. இது நிரந்தரமல்ல. சீனா ஒரு ஏகாதிபத்தியமாக முழுடையடைய இன்னஞ் சிலகாலம் எடுக்கும்.   

இதனாலேயே இலங்கை விடயத்தில் சீனாவை ஏனைய நாடுகளில் இருந்து விலக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கை மீதான செல்வாக்கு எதற்கானது என்பதில் வேறுபாடுண்டு. இந்தியாவிற்குத் தனது தென்னாசிய மேலாதிக்கத்திற்கு இலங்கை மீது செல்வாக்க அவசியம். சீனாவுக்குத் தனது கடல் வணிகம், பாதுகாப்புப் போன்றவற்றுக்கு எதிரான அமெரிக்க மிரட்டலையும் முற்றுகையையும் தவிர்க்க இந்து சமுத்திரப் பிரதேசத்தில் நட்புச் சக்திகள் தேவை.   

சீனாவுக்கு எதிராக, இலங்கையை அமெரிக்கா பாவிக்க இயலாமல் இருப்பது சீனாவுக்குப் போதுமானது. கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையின் எந்த ஆட்சி மாற்றமும் சீனாவின் எந்தத் திசைமாற்றமும் இலங்கை - சீன உறவைக் குலைக்காமல் பாதுகாப்பதில் சீனா கவனமாக இருந்துள்ளது. எனவே, சீன நோக்கங்களை இந்திய, அமெரிக்க நோக்கங்களினின்று விலக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.  

நிறைவாகச் சொல்ல வேண்டிய செய்தியொன்றுண்டு. சீனாவின் பொருளாதார ஆதிக்கமோ, இராணுவச் செல்வாக்கு, அரசியல் குறுக்கீடோ இலங்கைக்கு நல்லதல்ல. வேறு வல்லரசு எதுவுமே குறுக்கிடுவதை எதிர்ப்பவர்கள், சீனச் செல்வாக்கை விமர்சிப்பது நேர்மையானது. ஒர் அந்நிய ஆதிக்கத்தை வரவேற்க வேண்டி, இன்னொன்றின் ஆதிக்கம் வரக்கூடும் என்று மிரட்டுவது இலங்கையை நேசிக்கும் எவரதும் நிலைப்பாடாகாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X