2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஜே.ஆரின் முன்மொழிவுகள்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜூலை 30 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 154)

ஜே.ஆர் முன்மொழிந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை  

1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்தின் பின்னர் மீண்டும் ஒன்றுகூடிய சர்வகட்சி மாநாட்டில், புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு, ஜே.ஆர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.   

இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக, மாநிலங்களின் சபை ஒன்றை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த, ஜே.ஆர் அரசாங்கம் விளைந்திருந்தது.   

படிநிலையின் அடித்தளத்தில், கிராமமட்டத்தில் ஏறத்தாழ 4,500 கிராமோதய மண்டலங்களை ஸ்தாபிக்கவும்; அதற்கடுத்த தளத்தில், ஏறத்தாழ 250 அளவிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளாகப் பிரதேச சபைகளை ஸ்தாபிக்கவும்; மூன்றாவது மட்டத்தில், ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், ஆனால் அதைவிடவும் சற்றே அதிகாரங்கள் கூடிய 25 மாவட்ட சபைகளை ஸ்தாபிக்கவும் முன்மொழியப்பட்டிருந்தது.  

 இதற்கு மேலாக, நான்காவது மட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, மாகாண சபையொன்றை ஸ்தாபிக்கக் கூடியதாகவும் முன்மொழியப்பட்டிருந்தது.   

அதாவது, ஒரு மாகாணத்துக்குட்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள், தாம் இணைய விரும்பினால், அதற்கு அம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் ஒப்புதல் அளித்தால், அவை மாகாண சபையாக உருவாக முடியும்.

அத்தோடு மாவட்ட சபைகள், தமது அதிகாரத்திலிருந்து குறித்த மாகாணசபைக்குப் பாரப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டமைவதோடு, மாவட்ட சபைகள் தீர்மானிப்பதன் அடிப்படையிலாக, மாகாண சபை உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இதைவிடவும் மாகாண சபையின் முதலமைச்சராக, மாகாண சபையின் ஆதரவைப் பெற்ற நபரை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு உரியதாக இருக்கும். 

மேலும் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது மாகாண சபை உறுப்பினர்களை, மாகாண அல்லது மாவட்ட சபை அமைச்சராக நியமிக்க முடியும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இந்தப் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையின் ஐந்தாவது தளத்தில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக, 75 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களின் சபை அமைக்கப்படும். இதில், 25 மாவட்ட சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் அங்கம் வகிப்பார்கள். இதைவிட, ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும், தலா இருவர் என்ற அடிப்படையில், மொத்தம் 18 பேர் நியமிக்கப்படுவார்கள். 

இவர்கள், அம்மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட சபைகளில், போதியளவு பிரதிநிதித்துவம் பெறாது, சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். 

இதைவிட, ஏழு பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள் என்றும்,அந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையில்  முன்மொழியப்பட்டிருந்தது.   

குறித்த மாநிலங்களின் சபை, ஆலோசனை வழங்கும் சபையாகவே அமையும் என்பதுடன், சட்டவாக்கத்தைத் தாமதிக்கச் செய்யும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.  

 குறித்த முன்மொழிவு அடங்கிய சட்டமூல வரைவும், குறித்த முன்மொழிவு பற்றிய ஜே.ஆரின் காரண காரிய விளக்கமும் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சர்வகட்சி மாநாடு 1984 டிசெம்பர் 21ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த முன்மொழிவுகள் பற்றிக் கருத்துரைத்த சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளரும், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லலித் அத்துலத்முதலி, “குறித்த சட்டவரைவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்பு, மக்களின் கருத்துகள் பெறப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.   

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு  

இந்த முன்மொழிவு, ஜே.ஆர் அரசாங்கத்துக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருதரப்புக்குள்ளும்  இரண்டு தரப்புகளை, இந்த முன்மொழிவுகள் தோற்றுவித்திருந்தன.  

 இந்த முன்மொழிவுகளுக்கு, முதலில் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரையும் சம்மதிக்க வைக்க வேண்டிய தேவை, ஜே.ஆருக்கு இருந்தது.   

இது தொடர்பில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில், குறித்த முன்மொழிவுகளின்படியானதொரு கட்டமைப்பு, இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையைக் கொண்ட அரசமைப்புக்கு ஆபத்தானதா என, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும் என, அன்றைய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாச, தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.   

பிரேமதாசவுக்கு அடுத்ததாகப் பேசிய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, “புதிய முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது சபையோ, மாகாண சபைகளோ, சமஷ்டிக் கட்டமைப்பை ஸ்தாபிக்கவில்லை. ஆகவே, நிச்சயமாக அதனால், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குப்  பாதிப்பு வராது” என்று கூறியதுடன், தனிநாடு கோரிநிற்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, அந்தக் கோரிக்கையைக் கைவிடச் செய்வதற்கு மாவட்ட சபைகளைவிடச் சற்றே மேம்பட்டதொரு கட்டமைப்பை வழங்கவேண்டியதாக உள்ளதைக் குறித்த முன்மொழிவுக்கான தன்பக்க நியாயமாகப் பதிவுசெய்தார்.   

ஆனால், இந்த நியாயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஜே.ஆர் அரசாங்கத்திலும் இருந்த, ‘சிங்கள-பௌத்த’ கடும்போக்குத் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதாக இருக்கவில்லை. இதைவிட, குறித்த முன்மொழிவுகள் சிங்கள-பௌத்த தேசியவாத பௌத்த பிக்குகளையும் திருப்திப்படுத்துவதாக இருக்கவில்லை. ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு எதிரான பெரும் எதிர்ப்பு, பௌத்த பிக்குகளிடமிருந்து வந்தது.    

அமரபுர நிக்காயாவின் தலைவராக இருந்த மாதிஹே பண்ணசீஹ தேரர், குறித்த முன்மொழிவுகள் பற்றி ஆராய, பெளத்த பிக்குகளுக்கான கூட்டமொன்றை ஜெயவர்தனபுர கோட்டை நாக விகாரையில் உடனடியாகக் கூட்டியிருந்தார்.   

இந்தக் கூட்டத்தில், குறித்த முன்மொழிவுகள், இலங்கையின் அரசமைப்புக்கும் பௌத்தத்துக்கும்  சிங்கள இனத்துக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தென்று குறிப்பிட்ட அவர், இந்த மாகாணசபை முறைமைக்கு முழுமையான எதிர்ப்பு, சத்தியாக்கிரகப் போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.   

ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு எதிராக, கட்சிக்குள்ளும் வௌியேயும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியிருந்தன.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு  

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள்ளும், குறித்த முன்மொழிவுகள் பற்றி, முரண்பட்ட நிலைப்பாடுகள் உருவாகி இருந்தன.   

கொழும்பில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழுவில், எம்.சிவசிதம்பரத்தை உள்ளடக்கிய சிலர், குறித்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏதுவானவையாக இல்லை என்பதால், அவை நிராகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்.   

மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை உள்ளடக்கிய சிலர், குறித்த முன்மொழிவுகள், முழுமையாகத் திருப்திகரமானதாக இல்லாத போதும், அவற்றை நிராகரித்தால், அது ஜே.ஆர் அரசாங்கத்துடனான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையிடுவதாகவே அமையும் என்றும் கருதினர்.    

அவருடைய எண்ணம், இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த முன்மொழிவுகளை மேம்படுத்த, ஜே.ஆர் அரசாங்கத்தோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கு, தமிழர்களிடையே சரிந்துகொண்டிருந்தது. இந்தச் சூழலில், அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தி இந்தப்பிரச்சினைக்கு உகந்ததொரு தீர்வுகாண்பதுதான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடம் இருந்த ஒரே அரசியல் மூலதனமாகும்.  

 இதை இழக்க, அமிர்தலிங்கம் விரும்பி இருக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், இந்தப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடையுமானால், அதற்கு மாற்றாக எழுச்சியடைந்து வந்த வழி, பேரழிவும் இரத்தமும் துன்பமும் நிறைந்த வழி என்பதும், இங்கு தமிழர்களைப் பொறுத்தவரை கருத்திற்கொள்ள வேண்டிய விடயமாக இருந்தது.  

 குறித்த முன்மொழிவுகள் பற்றிய, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டைத் தௌிவாக எடுத்துரைக்கத் தயாராகிக் கொண்டு, 1984 டிசெம்பர் 21ஆம் திகதி மீளக் கூடிய சர்வகட்சி மாநாட்டில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சமுகமளித்தார்.   

ஆனால், சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆரின் நடவடிக்கை, அமிர்தலிங்கத்துக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது.   

 அமிருக்கு, ஜே.ஆர் கொடுத்த அதிர்ச்சி  

சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜே.ஆர், “எனது அரசாங்கத்தின் முன்மொழிவுகள் பற்றிய கருத்துகளை, அனைத்துத் தரப்பினரும் எழுத்துமூலம் சமர்ப்பிக்கவும்” என்று கூறியதுடன், குறித்த முன்மொழிவுகளை, மிகக் கவனமாகப் பரிசீலிக்குமாறு சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற அழைக்கப்பட்டிருந்த மஹா சங்கத்தினரிடம் வினயமாகக் கேட்டுக் கொண்டார்.   

மேலும் குறித்த முன்மொழிவுகளை, மக்கள் முன் சமர்ப்பித்து, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் அல்லது தேர்தல் ஒன்றின் மூலம் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததுடன், மறுதிகதி அறிவிக்காமல், சர்வகட்சி மாநாட்டை ஒத்தி வைத்தார்.  

 இந்த ஒத்திவைப்பு, அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சியைத் தந்தது. மறுதிகதி அறிவிக்காமல் ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமிர்தலிங்கம், தான் கருத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.   

கருத்துரைக்க அமிர்தலிங்கத்தை அனுமதிக்காத ஜே.ஆர், தன்னுடைய ஆவணங்களை எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வௌியேறிவிட்டார். முகத்தில் அறைந்தாற்போன்ற ஜே.ஆரின் அணுகுமுறை, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருக்குக் கடும் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.   

அதே தினம் இரவில், மீண்டும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியற்குழு கூடியபோது, முன்மொழிவுகளை எதிர்த்தவர்களின் கரம் ஓங்கியிருந்தது. ஜே.ஆர் நம்பத்தகாதவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று அவர்கள் சொன்னபோது, அமிர்தலிங்கத்தால் அக்கூற்றை இப்போது, நிச்சயம் மறுத்திருக்க முடியாது.   

மறுநாள் வௌியான அமிர்தலிங்கத்தின் அறிக்கை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த முன்மொழிவுகளை ஏற்கவில்லை என்பதாக அமைந்திருந்தது. 

அனெக்‌ஷர் ‘சி’ முன்மொழிவுகளின் படியான அம்சங்கள், பிராந்திய சுயாட்சி குறித்த முன்மொழிவுகளில் இல்லை என்பதை, அமிர்தலிங்கம் தன்னுடைய அறிக்கையில் தௌிவாகக் கோடிட்டுக்காட்டியிருந்தார்.   
மறுபுறத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த முன்மொழிவுகளை எதிர்த்தது.   

இந்த நாட்டு மக்கள், மிகத்தௌிவாக இந்த முன்மொழிவுகளை நிராகரிக்க வேண்டும் என்று, சிறிமாவோ தன்னுடைய அறிக்கையில் வேண்டியிருந்தார்.   

கட்சிக்குள்ளும் எதிர்ப்பு  

குறித்த முன்மொழிவுகளுக்குப் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு வலுத்திருந்த வேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின.

அதுமட்டுமல்ல, ஜே.ஆரின் அமைச்சரவைக்குள்ளும் குறித்த முன்மொழிவுகளுக்கான கடும் எதிர்ப்பு சிங்கள-பௌத்த பேரினவாதியாக அறியப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூவிடமிருந்து வந்தது. “குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னால், யாருக்கும் ஆலோசனை வழங்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். 

குறித்த முன்மொழிவுகளுக்கு எதிராக, குறித்த முன்மொழிவுகள் கைவிடப்படவேண்டும் என்று, அமைச்சர் சிறில் மத்யூ எழுதிய திறந்த கடிதமொன்று, ஜே.ஆருக்குக் கடும் விசனத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பலகாலம் முன்பு எடுத்திருந்திருக்க வேண்டிய ஒரு முடிவை, தற்போது ஜே.ஆர் எடுத்திருந்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .