தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம், பத்து இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தியால் குழம்பிப் போயுள்ளார்.  

அத்தோடு, மேலும் 118 பேர் அவ்வாறு அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதால், அது கடந்த வாரம் முழுவதும் நாட்டின் பிரதான செய்தியாகி இருந்தது.  

இச்செய்திகளை அடுத்து, ஊழல் பேர்வழிகளிடம் அவ்வாறு பணம் பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய, மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், அலோசியஸிடம் பணம் பெற்றதாக எவரும், இதுவரை சந்தேகம் எழுப்பவில்லை.   

எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும், அந்த அரசாங்கங்களிடமிருந்து தமது தொழில்களுக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கிக் கொள்வதற்காகப் பெரும்பாலான வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் தேர்தல்களுக்கு முன்னரே, அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு பணம் வழங்குகிறார்கள்.   

அந்தவகையில், முஸ்லிம் கட்சிகள் அரசாங்கங்களில் பங்காளிகளாகலாம் என்பதால், அவற்றின் உறுப்பினர்கள் அலோசியஸிடம் பணம் பெற்றிருக்கலாம் என்று, சிலவேளை சிலர் ஊகிக்கலாம்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு அரசாங்கத்தில் பங்காளியாகும் நிலைமை இல்லாதிருந்ததால் அக்கட்சியை எவரும் சந்தேகிப்பதில்லை. ஆனால், அவர்களும் தேர்தல் காலத்தில் பெருமளவில் பணம் செலவழிக்கிறார்கள்.  

அலோசியஸின் நிறுவனம் ஒன்றிடமிருந்து, தாம் பணம் பெற்றதை தயாசிறி ஜயசேகர ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் தாம், அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, அரசாங்கத்திலிருந்து விலகியவுடன், தமக்கு எதிராக, இவ்வாறான குற்றச்சாட்டொன்று சுமத்தப்படுவது ஏன் என்று, அவர் கேள்வி எழுப்புகிறார். இது, தம்மைப் பழிவாங்குவதற்கான முயற்சி என அவர், திருப்பிக் குற்றஞ்சாட்டியும் உள்ளார்.  
தம்மைப் பழிவாங்குவதாக அவர், யாரைக் குற்றஞ்சாட்டுகிறார்? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையா? அது தெளிவாகவில்லை.  

 ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அந்தத் தேவை இருக்கலாம். தமக்கு எதிராகக் கூட்டு எதிரணியால் கொண்டு வரப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் திகதி தோல்வியடைந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக, ஜயசேகரவும் வாக்களித்ததால், பிரதமர்தான் ஜயசேகரவின் பெயரை வெளியிட்டார் என்றும் ஊகிக்கலாம்.   

அதேவேளை, ஜயசேகர உட்பட 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள், அண்மையில் எதிர்க்கட்சியில் சேர்ந்தனர். அவர்கள், முன்னாள் ஜனாதிபதியுடன் இணையப் போவதாகவே தெரிகிறது. எனவே, அந்த 16 பேர்களுக்கும் எச்சரிக்கையாக, ஜனாதிபதிதான் ஜயசேகரவின் பெயரை வெளியிடச் செய்தார் என்றும் ஊகிக்கலாம்.  

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், முக்கிய அரசியல்வாதி ஒருவரும், 10 இலட்சம் ரூபாய் வீதம், அலோசியஸிடம் பணம் பெற்றுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தனர். 

பின்னர், சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள், அவ்விருவரில் ஒருவராக, ஜயசேகரவின் பெயரை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர். அது, பத்திரிகைகளில் வெளியாகவே, தாம் மட்டுமன்றி மேலும் 118 பேர் அலோசியஸிடம் பணம் பெற்றதாகவும் தாம், பணம் பெற்றாலும், பிணைமுறி விவகாரத்தின் போது அலோசியஸூக்கு ஆதரவாகச் செயற்படவில்லை என்றும் ஜயசேகர கூறியிருந்தார்.  

இப்போது எல்லோரும், ஜயசேகரவை விரட்டி விரட்டிக் கேள்வி கேட்கிறார்கள். அதற்கிடையில், நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்ட மற்றைய முக்கிய அரசியல்வாதியை, எல்லோரும் மறந்துவிட்டார்கள்.  

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தாம் போட்டியிட இருந்த நிலையில், அத்தேர்தல் செலவுக்காகவே அர்ஜூன் அலோசியஸ், தமக்குப் பணம் வழங்கியதாகவும் வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் தேர்தல்களுக்காக அரசியல்வாதிகளுக்குப் பணம் வழங்குவது, எல்லோரும் அறிந்த சாதாரண விடயம் என்றும் அவ்வாறு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடுவோர் மட்டுமன்றி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவோரும் பணம் பெறுவதாக,  ஜயசேகர மேலும் கூறியிருந்தார்.  

அவர் கூறியதை எவரும் மறுக்கவில்லை. பிணைமுறி விவகாரத்தின் போது அவர், அலோசியஸூக்கு ஆதரவாகச் செயற்பட்டதாக, இதுவரை தகவல் இல்லை. 

ஒரேயொரு பிரச்சினை என்வென்றால், பிணைமுறி விவகாரம் தொடர்பான ‘கோப்’ எனப்படும் அரச பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் விசாரணையின் போது, அலோசியஸ் ஒருமுறை ஜயசேகரவுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.   

அதேவேளை, பிணைமுறி விவகாரத்தைப் பாரிய குற்றமாகக் கூறியே, அதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை, ஒன்றிணைந்த எதிரணியினர் கொண்டு வந்தனர்.   

ஜயசேகர அதனை ஆதரித்ததன் மூலம், பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அலோசியஸூக்கு எதிராக, அவர் செயற்பட்டதாகவும் கூறலாம். அதாவது, அதன் மூலமும் அவர், அலோசியஸிடம் பணம் பெற்ற போதிலும் பிணைமுறி விடயத்தில், தான் அலோசியஸூக்கு உதவவில்லை என்றும் வாதிடலாம்.   

ஆனால், முழு நாட்டையும் வெகுவாகப் பாதிக்கும், பாரிய ஊழலொன்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரிடம், அந்தக் குற்றச்சாட்டை அறிந்திருந்தும் பணம் பெற்றமை சரியா என்ற கேள்வி இங்கே எழுகிறது. பிணைமுறி மோசடி 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியே முதன் முறையாக இடம்பெற்றுள்ளது.   

ஜயசேகர, அதே ஆண்டு ஜூலை மாதமே, அலோசியஸிடம் பணம் பெற்றுள்ளார். அப்போது இந்த மோசடி அம்பலமாகியிருந்தது. அதை ஓர் அரசியல்வாதி அறிந்திருக்கவில்லை எனக் கூறமுடியாது. 

அதாவது, அலோசியஸ் ஊழல் பேர்வழி என்பதை அறிந்த நிலையிலேயே, அவர் பணத்தைப் பெற்றுள்ளார். அதை அவர், எவரிடமும் அறிவிக்கவில்லை.  

அமைச்சர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மட்டும், தாமாகவே முன்வந்து, அலோசியஸ் தமக்கும் ஓர் இலட்சம் ரூபாய் பணம் அனுப்பியிருந்ததாகக் கூறியிருக்கிறார். “நீங்கள் பணம் பெற்றீர்களா” என்று ஊடகவியலாளர்கள் வேறு சிலரிடம் கேட்டபோது, அவர்கள் நேரடியாகப் பதில் கூறாமல், சமாளித்து  விட்டனர்.  

பிணைமுறி விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அலோசியஸிடம், நிதிச் சலுகைகளைப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது அரசியல்வாதி ஜயசேகர ஆவார். இதற்கு முன்னர், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அலோசியஸிடம் சலுகைகளைப் பெற்றதாக, பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது அம்பலமானதை அடுத்து கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கருணாநாயக்க அப்போது தாம் வகித்த வெளிநாட்டமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்தார்.  

ஆனால், எவரும் ஜயசேகரவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு கூறவில்லை. அதேவேளை, தாம் பணம் பெற்றதை நியாயப்படுத்துவதற்காக, அவர் மேலும் 118 பேர் பணம் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.   

உண்மையிலேயே, பிணைமுறி விவகாரம் தொடர்பாக விசாரணை செய்த, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், அவ்வாறு 118 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று இருக்கிறது என்று ஆணைக்குழுவோடு சம்பந்தப்பட்ட எவரும் கூறவில்லை. அவ்வாறு இருக்க, இப்போது பலர், ஜயசேகரவின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறானதொரு பட்டியலைத் தேடி அலைகிறார்கள்.  

அலோசியஸிடம் பணம் பெற்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.   

அதேவேளை, ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பி வரும் ‘கபே’ எனப்படும், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், அந்தப் பெயர்ப் பட்டியலைக் கோரி, சிறைச்சாலை விளக்க மறியலில் தற்போது வைக்கப்பட்டு இருக்கும் அலோசியஸிடமும் அவரது நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேனவிடமும் இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளார்.  

இந்த விவகாரம், உண்மையிலேயே நாட்டை யார் ஆள்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. வியாபாரிகளும் தொழிலதிபர்களும் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு ஏன் பணத்தை அள்ளி வீசுகிறார்கள். 

அலோசியஸ் மட்டும், கடந்த பொதுத் தேர்தல்க் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு 160 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்திருப்பதாக, ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும் (convener) மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க கூறுகிறார்.   

தேர்தல் காலங்களில், வேட்பாளர்கள் செலவிடும் பணத்தின் அளவைப் பார்த்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் தேர்தல் காலத்தில், வர்த்தகர்கள் பணம் வழங்குவதாக, தயாசிறி ஜயசேகர கூறுவதை நம்பலாம்.   

ஆதரவாளர்களுக்கு மதுபானம் வழங்காமல், பாரியளவில் பொலித்தீன் பாவிக்காமல், மேல் மாகாண சபைத் தேர்தலில்த் தாம் போட்டியிட்டாலும், தமது தேர்தல் செலவு, 80 இலட்சத்தை விஞ்சியதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ஒரு முறை கூறியிருந்தார்.   

கடந்த நாடாளுமன்றத் தேர்தலொன்றின் போது, மாத்தறை மாட்டத்தில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல், தேர்தலுக்காகச் செலவிட்டதாக, ஒன்றிணைந்த  எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, ஒருமுறை கூறியிருந்தார்.   

தேர்தல் காலத்தில் மட்டுமன்றி, தேர்தலுக்குப் பின்னரும் வர்த்தகர்கள், அரசியல்வாதிகளுக்குப் பெருமளவில் பணம் அள்ளி வழங்குகிறாரகள். 2001ஆம் ஆண்டு எஸ்.பி திஸாநாயக்க உள்ளிட்ட 12 பேர், சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவினர். 

அப்போது, சந்திரிகாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்கள், திஸாநாயக்க நான்கு கோடி ரூபாய் செலவில் ஹங்குரங்கெத்தவில் மாளிகை போன்ற பெரிய வீடொன்றை நிர்மாணித்துள்ளதாக வான் படங்களையும் உபயோகித்துப் பிரச்சாரம் செய்தன. அப்போது, “அந்த வீட்டை நிர்மாணிப்பதற்காகத் தமது நண்பர்களே உதவினர்” என திஸாநாயக்க கூறினார்.  

குறிப்பிட்டதோர் அரசியல்வாதிக்கு குறிப்பிட்டதொரு வர்த்தகர், தேர்தல் செலவுக்காகப் பணம் வழங்கினால், அது ஏதோ தனிப்பட்ட உறவின் காரணமாக வழங்கப்படுகிறது என்று கூறலாம். ஆனால், பொதுவாக சகல அரசியல்வாதிகளுக்கும் பல வர்த்தகர்கள் பணம் வழங்குவதாக இருந்தால், அது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.   

அதாவது, எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் பெரும்பாலான வர்த்தகர்கள் நன்மை அடைகிறார்கள். பெரும்பாலும் ஊழல்கள் மூலமாகவே அவர்கள் நன்மையடைகிறார்கள்.   

உதாரணமாக, பலர் அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், பிணைமுறி விவகாரம் அம்பலமாகவே எத்தனை பேர் அலோசியஸையும் அவரது நிறுவனத்தையும் பாதுகாக்கக் கஷ்டப்பட்டார்கள் என்பது சகலரும் அறிந்த விடயம்.   

அது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பின்னர் அலோசியஸ், அமைச்சர் ரவி கருணாநாயகவின் வீட்டுக்கான வாடகையாக, மாதாந்தம் 14 இலட்சம் ரூபாயைச் செலுத்தி வந்ததாகப் பிணைமுறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணையின் போது அம்பலமாகியது.   

அதாவது, வர்த்தகர்களும் ஊழல்பேர்வழிகளும் தமது பணத்தை செலவழித்து அரசியல்வாதிகளைப் பதவிக்கு கொண்டு வருகிறார்கள். பின்னர், வர்த்தகர்களுக்கும் ஊழல்பேர்வழிகக்கும் தேவையான முறையில் அரசியல்வாதிகள்  நாட்டை ஆள்கிறார்கள். 

அந்த ஆட்சியால் பயனடையும் வர்த்தகர்களும் ஊழல்பேர்வழிகளும் தொடர்ந்தும் அரசியல்வாதிகளுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம், இரு சாராரும் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத அளவில் பணம் சம்பாதிக்கிறார்கள்.  

 இதை விளங்கிக் கொள்ளாத சாதாரண மக்கள், கட்சிகளாகப் பிரிந்து சண்டையிட்டு, தமது சொத்துகளையும் உயிர்களையும் இழக்கிறார்கள்.  

இந்த மோசடியில், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமபந்தப்படவில்லை என்று கூற முடியாது. ஏனெனில், அவர்களிலும் பலர், அரசியலுக்கு வந்ததன் பின்னர், கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள்.   
எவ்வாறு?

அவர்கள் எவருக்கும், மாதமொன்றுக்கு ஓர் இலட்சம் ரூபாயாவது சம்பளமாகக் கிடைப்பதில்லையே.   
பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில், அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபடுவதால் தான், எந்தத் துறையிலும் நாடு முன்னேறுவதில்லை.   

எனவேதான், அரசியல்வாதிகளின் தேர்தல் செலவைக் கண்காணிக்கும் பொறிமுறையொன்று இருக்க வேண்டும் என ‘கபே’ போன்ற தேர்தல் கண்காணிப்புக்கான அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.   


தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.