2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நெருப்பில் பூத்த மலர்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பிரதேச மக்கள், பல வருடங்களாகக் கோரி வந்த உள்ளூராட்சி சபையை, அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபை அந்தஸ்தை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.
பல்வேறு விதமான சாத்வீகம், அரசியல் வழிமுறைகளிலான போராட்டங்கள் மூலமாகவே, தமது கோரிக்கையை, சாய்ந்தமருது மக்கள் வென்றெடுத்து உள்ளார்கள். 

30 வருடங்களுக்கு முன்னர் இருந்த கரைவாகு தெற்கு (இப்போதைய சாய்ந்தமருது பிரதேசம்), கரைவாகு மேற்கு, கரைவாகு வடக்கு ஆகிய மூன்று கிராம சபைகளையும் கல்முனை பட்டின சபையையும் ஒன்றாக இணைத்து, பிரதேச சபை சட்டத்தின் கீழ், 1987ஆம் ஆண்டு, கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. பின்னர் நகர சபையாகவும் மாநகர சபையாகவும் அது, தரமுயர்த்தப்பட்டது.

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி, பெரும் நிலப்பரப்பைக் கொண்டது. அதிகளவு மக்கள் அங்கு வாழ்கின்றனர். இதனால், தமது அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில், உரிய முறையில் குப்பைகளைச் சேகரிப்பதற்குக் கூட முடியாமல், கல்முனை மாநகர சபை நிர்வாகம் திணறிய கதைகளெல்லாம் ஏராளம் உள்ளன.

கூர்மையடைந்த உணர்வு

இந்தப் பின்னணியில்தான், கல்முனை மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் இருக்கும் தமது பிரதேசத்தைப் பிரித்து, தமக்கென்று தனியான உள்ளூராட்சி சபையொன்றை வழங்குமாறு, பல வருடங்களாக, சாய்ந்தமருது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவ்வப்போது மென்போக்காகத்  தமக்கான உள்ளூராட்சி சபையை, சாய்ந்தமருது மக்கள் கோரி வந்த போதும், அந்தக் கோரிக்கை, போராட்ட வடிவம் பெறுவதற்கு, அடிப்படையாக அமைந்த ‘கதை’யொன்று உள்ளது. 

சாய்ந்தமருது பிரதேசம் சார்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக, கல்முனை மாநகர சபையின் மேயராக நியமிக்கப்பட்ட சிராஸ் மீராசாஹிப் என்பவரின் பதவியை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அந்தப் பதவியின் அரைவாசிக் காலம் கழிந்த நிலையில் மீளப்பெற்று, அதைக் கல்முனையைச் சேர்ந்த சட்டத்தரணியும் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய செயலாளருமான நிஸாம் காரியப்பருக்கு வழங்கினார். இந்தச் சம்பவம், 2013ஆம் ஆண்டு இடம்பெற்றது. 

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சி சார்பாகத் தெரிவாகிய உறுப்பினர்களில், சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிப் என்பவர், அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். அதனால், அவருக்கு கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி வழங்கப்பட்டது. 

உள்ளூராட்சி சபையொன்றின் ஆயுட்காலம் நான்கு வருடங்களாகும். அந்த வகையில், இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீராசாஹிபை பதவி விலகுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.  

ஆரம்பத்தில், “முடியாது” என மறுத்த சிராஸ், ஒரு கட்டத்தில் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். 

இதையடுத்து, கல்முனை மாநகர சபையின் அப்போதைய உறுப்பினரும் சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரை மேயராக, மு.கா தலைவர் ஹக்கீம் நியமித்தார்.

ஏற்கெனவே, கல்முனையைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருக்கும் நிலையில், சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட மேயர் பதவியைப் பறித்தெடுத்து, அதையும் கல்முனைக்கே வழங்கியமையானது, சாய்ந்தமருது மக்களுக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

தமது பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட மேயர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிராக, சாய்ந்தமருதில் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன. அந்த நிகழ்வுதான், கல்முனை மாநகர சபையிலிருந்து தாம் பிரிய வேண்டும் என்கிற உணர்வையும் தமக்கென உள்ளூராட்சி சபையொன்று வழங்கப்பட வேண்டும் என்கிற கோசத்தையும் சாய்ந்தமருது மக்களிடத்தில் கூர்மைப்படுத்தியது.

அச்சம்

இதையடுத்து, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்குமாறு அங்குள்ள அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து, பொதுமக்கள் பல்வேறு வழிகளிலும் கோரிக்கைகளை முன்னெடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில், இந்தக் கோரிக்கை சாத்வீகப் போராட்டங்களாகவும் வீதி மறியல் போராட்டங்களாகவும் மாற்றமடையத் தொடங்கின. 

பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில், இந்தப் போராட்டங்களுக்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தலைமை வழங்கியது. கிட்டத்தட்ட பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ், ஊர் ஒன்றுபட்டது; போராட்டம் தொடர்ந்தது.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனையைச் சேர்ந்தவருமான எச்.எம்.எம். ஹரீஸ் விரும்பவில்லை என்று, சாய்ந்தமருது மக்கள் சந்தேகித்தனர். 

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து சென்றால், கல்முனை மாநகர சபையின் அதிகாரம் முஸ்லிம்களிடத்தில் இருந்து நழுவி விடும் என்கிற அச்சமே, அதற்குக் காரணமாகும். சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சிக் கோரிக்கையை, கல்முனை மக்களும் விரும்பவில்லை. 

அதனால், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுக் கொடுப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் உடன்படவில்லை. 

கல்முனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், சாய்ந்தமருதில் திருமணம் முடித்துள்ளபோதும், அவர் தனது சொந்த ஊர், கல்முனையின் நலன் சார்பாகவே செயற்பட்டார் என்ற சந்தேகமும் வலுத்தது.  

இதனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸுக்கும் எதிராக, சாய்ந்தமருது மக்களின் போராட்டம் திரும்பியது. 

மு.கா தலைவரின் வாக்குறுதிகள்

இதனால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு கட்டத்தில் இணக்கம் தெரிவித்தார். 

ஆனால், 1987ஆம் ஆண்டுக்கு முன்னர், கல்முனை பிரதேச சபையை உருவாக்குவதற்கு இணைக்கப்பட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளையும் மீண்டும் ஒரே தடவையில் பிரிப்பதன் மூலம்தான்,  சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தர முடியும் என்று ஹக்கீம் நிபந்தனை விதித்தார். கல்முனை தரப்பும் இதற்கு உடன்பட்டது.

ஆனால், இதற்குச் சாய்ந்தமருது உடன்படவில்லை. காரணம், இதில் கால இழுத்தடிப்புக் காணப்பட்டது. அதனால், தமக்கான உள்ளூராட்சி சபையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து செவ்வதால், கல்முனை மாநகரம் முஸ்லிம்களின் கைகளிலிருந்து நழுவி விடாது என்றும் சாய்ந்தமருது தரப்பு வாதிட்டது.

இந்த இழுபறிகளுக்கு இடையில், 2015ஆம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்கவும் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 

ஆயினும், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்கப்படும் என்று, தாம் எழுதிக் கொடுத்ததைத்தான், கல்முனைக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க வாசித்ததாக, பின்னாளில் மு.கா தலைவர், பகிரங்கக் கூட்டமொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

களமிறங்கிய சுயேட்சை அணி

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், எந்தவோர் அரசியல் கட்சிகளையும் தாம் ஆதரிப்பதில்லை என்று, சாய்ந்தமருது சார்பாக, அந்த ஊர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்தது. 

அதனால், அந்தத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பாகப் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றை பள்ளிவாசல் நிர்வாகம் களமிறக்கியது.  தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்ட அந்தக் குழு, சாய்ந்தமருதிலுள்ள அத்தனை வட்டாரங்களையும் வென்று, ஒன்பது உறுப்பினர்களைப் பெற்றது.

இதன் பின்னர், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவேன் என்று, பல தடவை மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்டுவந்த வாக்குறுதிகள் போதும் நிறைவேற்றப்படவில்லை. 

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான அரசியலில், ஈடுபட்டு வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், இந்த விவகாரத்தில் தலையைக் கொடுத்தது. 

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையை, முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்தால், கிட்டத்தட்ட 19 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட அந்த ஊரே, முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் சாய்ந்து விடும் என்கிற பதற்றத்தில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை, தாம் பெற்றுத் தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஒரு கட்டத்தில் அந்தப் பிரதேசத்தின் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு வாக்குறுதியளித்தார். ஆனால், அதுவும் நிறைவேறவில்லை.

கோட்டாவை ஆதரித்தல்

இதனால், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன், சாய்ந்தமருது மக்கள் மென்மேலும் ஆத்திரமடைந்தனர். அந்த நிலையில்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

அந்தத் தேர்தலுக்கு முன்னதாக, ராஜபக்‌ஷ தரப்பைச் சந்தித்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர், தமக்கான உள்ளூராட்சி சபையை வழங்குவதாக வாக்குறுதி அளித்தால், கோட்டாபய ராஜபக்‌ஷவை சாய்ந்தமருது ஆதரிக்கும் என்று கூறினர். அதற்கு ராஜபக்‌ஷ தரப்பும் இணங்கியது. 

அதையடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவை, தாம் ஆதரிப்பதாகச் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்தது. அதன் பின்னர், சாய்ந்தமருதில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தற்போதை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தாம் ஆட்சிக்கு வந்தால், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், சாய்ந்தமருது தரப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவும் வென்றார். இந்த நிலையில், தமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட உள்ளூராட்சி சபையை, ராஜபக்‌ஷ தரப்புடன் பேசிப் பெற்றுத் தருமாறு, அதாவுல்லாஹ்விடம் சாய்ந்தமருது தரப்பு கோரிக்கை விடுத்தது. அதாவுல்லாஹ்வும் இந்த விடயத்தில் தீவிர ஈடுபாடு காட்டி, விடயத்தை வென்று கொடுத்து விட்டார். 

சாய்ந்தமருது மக்கள், இப்போது பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் அதாவுல்லாஹ்வை, அரசியல் ரீதியாகத் தூக்கிப் பிடித்துப் பேசுகின்றனர். தங்கள் அரசியல் ‘ஹீரோ’, அதாவுல்லாஹ்தான் என்று சாய்ந்தமருது தரப்புப் புகழ்கிறது. 

கல்முனையின் கோபம்

மறுபுறமாக, “சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற, தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக, சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு நகர சபையைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம், கல்முனைக்கு வரலாற்றுத் துரோகத்தை அதாவுல்லாஹ் செய்து விட்டார்” என்று, கல்முனை மக்கள் கோவப்படுகின்றனர். இந்த விடயத்தில் அதாவுல்லாஹ்வை ஒரு வில்லனாக, அவர்கள் பார்க்கின்றனர்.

“அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் தலைநகர் என்கிற பெயருடன் இருந்து வரும் கல்முனையின் அரசியல் அதிகாரத்தை, முஸ்லிம்கள் இழப்பதற்கான ஒரு நிலைவரத்தை அதாவுல்லாஹ் ஏற்படுத்தி விட்டார்” என்று, கல்முனை மக்கள் மட்டுமன்றி, அதாவுல்லாஹ்வுக்கு எதிரான அரசியல் கட்சி சார்ந்தோரும் விமர்சிக்கின்றனர்.

இத்தனைக்கும், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்துதான் சாய்ந்தமருதுக்கான நகர சபை அமுலுக்கு வரும் என்று, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போதைய கல்முனை மாநகர சபையின் பதவிக்காலம் முடிவடையும் தினத்தில் இருந்துதான், சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபை உதயமாகும் என்று கூறப்படுகிறது. 

அதாவுல்லாஹ்வின் பதில்

இந்த நிலையில், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையைப் பெற்றுக் கொடுத்த விவகாரம் தொடர்பில், தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்துள்ள அதாவுல்லாஹ், தனது இந்த நடவடிக்கையில், எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

“சாய்ந்தமருதுக்கான எல்லைகள், ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமையால், அந்தப் பிரதேசத்துக்கு நகர சபையொன்றைத் தற்போது பிரகடனப்படுத்தி உள்ளோம். 1987ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போன்று, மற்றைய மூன்று உள்ளூராட்சி சபைகளையும் நாம் நிச்சயமாகப் பிரிப்போம். அதற்காக, ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழர்களுக்கும் உள்ளூராட்சி சபையொன்று கிடைக்கும்” என்று, அதாவுல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.

எது எவ்வாறாயினும், “சாய்ந்தமருது நகர சபை என்பது, எதிர்வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து, ஆளும் தரப்பு வழங்கியுள்ள இலஞ்சம்” என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. 

“சாய்ந்தமருது நகர சபை, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமுலுக்கு வரும் என்பதை, இப்போது பதறியடித்துக் கொண்டு, பிரகடனப்படுத்த வேண்டிய தேவை என்ன” என்று, அந்தக் குற்றச்சாட்டை முன்வைப்போர் கேட்கின்றனர். 

அதாவுல்லாஹ்வின் சொந்தப் பிரதேசத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சவூதி அரேபியா வழங்கிய நிதியில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள 500 வீடுகள், 10 வருடங்களுக்கும் மேலாகப் பாழடைந்து கிடக்கும் நிலையில், அது குறித்துத் தற்போதைய ஆட்சியாளர்களுடன் பேசி, உரிய பயனாளிகளுக்கு அந்த வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அதாவுல்லாஹ் முயற்சிக்காமல், சாய்ந்தமருது நகர சபையை இத்தனை அவசரமாக ஏன் பெற்றுக் கொடுத்தார் என்று, சமூக வலைத்தளங்களிலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கப்பட்டுள்ள கதையில், ‘ஹீரோ’வாகவும் வில்லன் ஆகவும் அதாவுல்லாஹ்வே பார்க்கப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X