2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

புட்டும் தேங்காய்ப் பூவும்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 165)

தமிழ் - முஸ்லிம் உறவும் கிழக்கும்   

இலங்கை அரசியல் வரலாற்றில், 1985 ஏப்ரல் மாதத்தை மீட்டுப் பார்க்கும் போது, பொதுவாகப் பலரும் மீட்டுப் பார்க்காத, ஆனால், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், முக்கியத்துவம் மிக்கதொரு சம்பவம், 1985 ஏப்ரலில், கிழக்கில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.  

அது, தமிழ் - முஸ்லிம் வன்முறைகளாகும். பிரித்தானியரின் ‘பிரித்தாளும் தந்திரம்’தான், இலங்கையின் தேசிய இனங்களை, இனரீதியாகப் பிளவுபடுத்தக் காரணமானது என்ற பொதுக்கருத்தைப் பலரும் சொன்னாலும், அதே இனரீதியாகப் பிரித்தாளும் தந்திரம், சுதந்திரத்தைத் தாண்டியும் உயிர்வாழ்ந்தது; உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  

இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக, தமிழ் - முஸ்லிம் மக்களிடையே தூண்டிவிடப்பட்ட வன்முறைகளை, நோக்க முடியும்.   

இலங்கையில் தமிழ் - முஸ்லிம் உறவைப் பற்றிப் பேசும் போது, ‘புட்டும் தேங்காய்ப் பூவும் போல’ என்ற உவமையைப் பலர் சொல்வர். குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியோடும், சா.ஜே.வே செல்வநாயகத்தோடும் இணைந்திருந்த, தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்த மசூர் மௌலானா, இந்த உவமையைப் பலமுறை பயன்படுத்தி இருக்கிறார்.   

இரு இனங்களும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற உயர் எண்ணத்தைத் தாண்டி, இந்த உவமை வேறு எதைச் சொல்கிறது? நாம் ஒன்றாக இருக்கமுடியும்; ஆயினும், அடிப்படையில் நாம் வேறானவர்கள் என்பதையா? அல்லது, நாம் தனித்தனியாக இருப்பதிலும், இணைந்திருப்பதுதான் சிறப்பானது என்பதையா?   

இலங்கையில் காணப்படும் தமிழ் - முஸ்லிம் இன அடையாளப்படுத்தல்கள், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அந்நியமானதும், புதுமையானதுமான அடையாளமாக இருக்கும்.  அங்கு, தமிழ் என்பது இனமாகவும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன மதமாகவும் நோக்கப்படுவதால், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாகவே தம்மைக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களது மதம்தான் இஸ்லாம். ஆனால், இலங்கையின் நிலை, இதிலிருந்து வேறுபட்டது. இதன் தோற்றுவாய், உருவாக்கம், விருத்தி என்பன, தனித்த மானுடவியல் ஆராய்ச்சிக்கு உரியது.   

ஆனால், அரசியல் ரீதியில் நோக்கினால், எவ்வாறு வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் ஒரு தளத்தில் இணைந்து, பின்னர், தமது அரசியல் அபிலாஷைகளின் வேறுபாடுகள் காரணமாகத் தனிவழி பிரிந்தார்களோ, அதேபோலவே தமிழ் - முஸ்லிம் உறவும் அமைந்தது எனலாம்.   

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அதன் உருவாக்கம் முதல், முஸ்லிம்கள் அங்கம் வகித்திருந்திருக்கிறார்கள், அதன் மேடைகளில் அரசியல் முழக்கம் புரிந்திருக்கிறார்கள். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில், முஸ்லிம் இளைஞர்கள் அங்கம் வகித்திருந்திருக்கிறார்கள்.   

ஆகவே, தமிழ் பேசும் முஸ்லிம்கள், குறிப்பாக, வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லிம்கள், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பயணித்திருந்தார்கள் என்பது மறுக்க முடியாத வரலாறு. இதேவேளை, தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அருகருகே இருந்த கிழக்கு மாகாணத்தில், தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருந்தன என்பதும் மறுக்க முடியாத வரலாறு.  

 1981இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தோடு, முஸ்லிம் மக்களுக்கான தனித்துவமான அரசியல் வாகனமொன்று உருவாகிறது. முஸ்லிம்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமக்கான தனிவழி அரசியலை முன்னெடுக்கத் தொடங்கிய காலம் இது எனலாம்.   
1985 ஏப்ரல் வன்முறைகள்

இந்த நிலையில், 1985 ஏப்ரல் 12ஆம் திகதி, கிழக்கு மாகாணத்தின் காரைதீவில், தமிழ் மக்கள் மீது, முஸ்லிம் இளைஞர்களால் கொடூரத் தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதென, இது தொடர்பான தன்னுடைய கட்டுரையொன்றில், கே.என்.தர்மலிங்கம் விவரமாக விவரிக்கிறார்.  

காரைதீவு தமிழ் அகதிகள் சங்கத்தைச் சேர்ந்த ஈ.விநாயகமூர்த்தியை மேற்கோள் காட்டும் கே.என்.தர்மலிங்கம், ஏறத்தாழ 800 முஸ்லிம் இளைஞர்கள், 1985 ஏப்ரல் 12 வௌ்ளிக்கிழமை, தொழுகையின் பின் காரைதீவுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து, வீடுகளையும் கடைகளையும் தாக்கியதுடன், அவற்றை எரியூட்டியதாகவும் தொடர்ந்து அங்கிருந்த பத்தினி கோவில் (கண்ணகி அம்மன் கோவில்) கூட விட்டுவைக்கப்படவில்லை எனவும், அந்தக் கோவிலின் ஒரு பகுதி எரியூட்டப்பட்டதுடன், சுற்றுச்சுவர் தரை மட்டமாக்கப்பட்டதெனவும் பதிவு செய்கிறார்.  

இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பதாகத்தான், தற்பாதுகாப்பு, தமது பயிர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, கிழக்கில் பொதுமக்கள், முறையான அனுமதியுடன் வைத்திருந்த துப்பாக்கிகள், அரசாங்கத்தால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன.

இதைக் கோடிட்டுக் காட்டும் தர்மலிங்கம், தமிழ் மக்களின் தற்பாதுகாப்பை இல்லாது செய்து, அவர்களை இந்த வன்முறைக்குப் பலியாக்கியதில், அரசாங்கத்தின் கை இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.   

தொடர்ந்த வன்முறைகளில், சில உயிர்கள் பலியானதுடன், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களையும் தொழில் நிலையங்களையும் இழந்து, நிர்க்கதியானதாகவும் சுட்டிக் காட்டும் தர்மலிங்கம், இந்தத் தாக்குதலானது மறுதினம், 1985 ஏப்ரல் 13ஆம் திகதியும் தொடர்ந்ததாகவும், அதில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தோட்டங்களும், பயிர்களும் எரியூட்டப்பட்டதுடன், வீடுகள், கடைகள் என்பனவும் அழிக்கப்பட்டதாகவும் பதிவு செய்கிறார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு, ஜிஹாத் இயக்கம்தான் காரணமென்றும் அவர் குறிப்பிடுகிறார்.   

இந்த வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக, 1985 ஏப்ரல் 14ஆம் திகதியும் இடம்பெற்றதாகப் பதிவு செய்யும் தர்மலிங்கம், இந்த மூன்றுநாள் கொடூர வன்முறைத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், பலரும் காயமடைந்ததாகவும், ஏறத்தாழ ஆறு இந்துக் கோவில்கள் தாக்குதலில் பாதிப்படைந்ததாகவும், 802 வீடுகள், 84 கடைகள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதாகவும், பலநூறு கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும், அரச வைத்தியசாலையொன்றும் இரண்டு தனியார் வைத்திய நிலையங்களும் பாதிப்படைந்தன எனவும், 17 கார்கள், இரண்டு டிரக்டர்கள், 22 மாட்டு வண்டிகள், 987 சைக்கிள்கள் எரியூட்டப்பட்டன எனவும் அவர் தனது கட்டுரையில் பதிவு செய்கிறார்.   

சித்திரை வருடப்பிறப்பு நாள்களில் நடைபெற்ற இந்த வன்முறைத் தாக்குதல்கள், தமிழர் மனங்களில் ஆறாத வடுக்களாகப்  பதிந்ததுடன், ஏற்கெனவே முறிந்திருந்த தமிழ் - முஸ்லிம் உறவை, மேலும் தகர்ப்பதாகவே அமைந்தது என்பது, சோகத்திலும் சோகம்.   

தர்மலிங்கத்தின் இந்தப் பதிவோடு, இதை நிறுத்திவிடுவது மறுதரப்பின் நியாயத்தைக் கேட்கும் மாண்பைச் சிதைத்துவிடும். மறுபக்கக் கருத்துகளையும் இங்கு பதிவு செய்வது அவசியமானதாகும்.   

வரலாறுகள் ஒருதரப்பால் மட்டும் எழுதப்பட்டால், அது வரலாற்றுக்குச் செய்யும் துரோகமாகும். இந்தப் பிரச்சினை பற்றி விவரமாக எழுதாவிடினும், ‘இலங்கைப் பிரச்சினையில் முஸ்லிம் காரணி (ஆங்கிலம்)’ என்ற தனது கட்டுரையில், 1985 ஏப்ரல் தமிழ்-முஸ்லிம் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி குறிப்பிடும் மன்சூர் முஹம்மட் பாஸில், ‘தமிழ் ஆயுதக் குழுக்கள், முஸ்லிம் மக்களிடமிருந்து கப்பம் பெறுதல், ஆயுதமுனையில் அவர்களிடம்ற கொள்ளையடித்தல் என்பவற்றில் ஈடுபட்டமையும் அத்தகைய நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்தமையுமே, முஸ்லிம்களின் எதிர்ப்புக்குக் காரணம்’ என்று குறிப்பிடுகின்றார்.   

அவர், மேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடும்போது, ‘இந்த நிலைமை அதிகரித்த போது, முஸ்லிம்கள் அதை இஸ்லாமியச் சட்டங்கள் வழங்கிய வழிமுறைகளின் படியே தணிக்க முயன்றார்கள். 

ஆனால், அக்கரைப்பற்று முஸ்லிம் வர்த்தகரொருவரிடம் கப்பம் பெறும் நோக்கில், தமிழ் ஆயுதக் குழுக்கள் அவரது மகளைப் பணயமாகப் பிடித்து வைத்திருந்தமை, இந்த நிலையை மாற்றியது. ஆயினும் கூட, 1985 ஏப்ரல் எட்டு முதல் 12ஆம் திகதி வரை, அக்கரைப்பற்று முஸ்லிம்கள் குறித்த நடவடிக்கைக்கு எதிராக, அமைதிவழியில் ஹர்த்தால் ஒன்றின் மூலமே போராடியிருந்தார்கள். அவர்கள் இலங்கைக் கொடியை ஏற்றி, ஒற்றை இறைமைக்கும், நாடு பிரிபடாதிருக்கவுமென இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்’ என, தனது கட்டுரையில், மன்சூர் முஹம்மட் பாஸில் பதிவு செய்கிறார்.   

ஏப்ரல் 14ஆம் திகதி, அக்கரைப்பற்றின் வடக்கே, ஏறத்தாழ 10 கிலோ மீற்றர் தொலைவிலிருந்த கிராமமொன்றுக்குள் நுழைந்த தமிழ் ஆயுதக் குழுவினர், அங்கிருந்த பள்ளிவாசலுக்கு அருகில் திறந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஆயினும் அவர்களது வாகனம் தடம் புரண்டதிலும், அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும், பாஸில் குறிப்பிடுகிறார்.   

1985 ஏப்ரல் தமிழ்-முஸ்லிம் வன்முறையை அவர், ‘துரதிர்ஷ்டவசமான சம்பவம்’ என்று விளித்தாலும், ஏப்ரல் 12 முதல் 15 வரை, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இதே போன்று, தர்மலிங்கமும், தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம் மக்களிடம் கப்பம் பெற்றமை, ஆயுதமுனையில் கொள்ளையடித்தமை பற்றி குறிப்பிடாமையும் கவனிக்கப்பட வேண்டியதே.   

இந்த வன்முறைகள் பற்றி, ‘நெருக்கடி தொடர்பான சர்வதேசக் குழு’ வினுடைய ‘இலங்கை முஸ்லிம்கள்: தாக்குதலிடையில் சிக்கிக்கொண்டவர்கள்’ (ஆங்கிலம்) என்ற அறிக்கையில் விவரிக்கையில், தமிழ்-முஸ்லிம்களுக்கு இடையிலான பல்வேறு வன்முறைகளில், பாதுகாப்புப் படைகளின் ஈடுபாடு காணப்பட்டதாகக் கருதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 1985 ஏப்ரல் தாக்குதலானது, முஸ்லிம் இளைஞர்களால் ஆயுதப்படைகளின் உதவியுடன் நடத்தப்பட்டதாகக் கருதப்படுவதாகவும், அதன் பின்னர், தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறைகள் பொது நிகழ்வாக மாறிவிட்டிருந்ததாகவும், அரசாங்கம், சில முஸ்லிம்களுக்கு அவர்களது பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியிருந்ததாகவும், அவர்கள் அண்மித்த தமிழ்க் கிராமங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமையானது, தமிழ் மக்களிடமிருந்து எதிர்வினையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடுகிறது.   

1985 ஏப்ரல், தமிழ்-முஸ்லிம் வன்முறைகள் பற்றி சிந்திக்கத்தக்க இன்னொரு விடயமுண்டு. ஏப்ரல் 12 முதல் 15 வரை, வன்முறைகள் தொடர்ந்தபோது, அதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பில், அரச இயந்திரம் மெத்தனத்தோடு செயற்பட்டதாகத் தர்மலிங்கம் பதிவு செய்கிறார். இதுவே, இந்த வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் கை இருக்கிறது என்ற ஊகத்துக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். இதுபற்றித் தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும் ரஜீவ விஜேசிங்ஹ, “ஊடகங்கள் கூட, இந்த வன்முறைகள் தொடர்பில் மிகக் குறைவான அக்கறையையே காட்டியிருந்தன. இலங்கையின் பெரும்பான்மை, குறிப்பாக சிங்களவர்கள் இதனால் பாதிக்கப்படாதது, இதற்குக் காரணமாக இருக்கலாம்” என்று அவர் தெரிவிக்கிறார்.  

 ரஜீவ விஜேசிங்ஹவும், “இந்த வன்முறைகளின் பின்னணியில் விசேட அதிரடிப் படையினரின் கை இருக்கிறது” என்ற கருத்தை முன்வைக்கிறார். தமிழ் - முஸ்லிம் மக்களிடையே விசமத்தனமான வன்முறைத் தீயைப் பற்ற வைத்தவர்கள், அதற்கு எண்ணெய் ஊற்றியவர்கள் வௌியிலிருந்து அங்கு கொண்டுவரப்பட்டவர்களே என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ தொடர்பிலேயே சுயாதீன விசாரணை நடத்தப்படாத நிலையில், இந்தச் சம்பவத்தினதும் உண்மை, பொய்கள் வௌியே தெரியாது; அவ்வாறே மறைக்கவும் காலவோட்டத்தில் மறக்கவும் பட்டுவிடும்.   

ஆனால், நாம் இந்த வரலாறு பற்றி யோசிக்கும் போது, கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி, வடக்கு-கிழக்கில் ‘புட்டும் தேங்காய்ப்பூவும்’ ஆக வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே, பிரிவினையையும் முரண்பாட்டையும் வன்முறையையும் உருவாக்கியதால் பயனடைந்தது, இன்றும் பயனடைந்து கொண்டிருப்பது யார் என்பதுதான்.

இந்த வன்முறைகளின் பெருந்துன்பியல் விளைவானது, இது தணியாது; காலவோட்டத்தில் ஆற்றொணாக் காயங்களை, இரு இனங்களிலும் ஏற்படுத்தியதுதான். அவை நாம் மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாதவை; வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .