மதசார்பற்ற நாடு அவசியமா?

இலங்கையின் அரசமைப்பு உருவாக்கத்துக்காகச் செயற்படும் அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, சில வாரங்கள் கடந்துவிட்டாலும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது.  

இவ்வாறான கலந்துரையாடல்களில், முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது: இலங்கை அரசின் தன்மை குறித்தது. இரண்டாவது: இலங்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய அல்லது வழங்கப்படக் கூடாத முதலிடம் அல்லது முன்னுரிமை தொடர்பானது.  

இதில் முதலாவது விடயம், அதிகமான அரசியல் பின்னணிகளைக் கொண்டது. அதிகமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய, முக்கியமான ஒன்று. இருதரப்புகளும் விட்டுக்கொடுப்புகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.  

இரண்டாவது விடயம், முதலாவது விடயத்தைப் போலவே சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது. இவ்விடயத்தில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ள, தமிழ்த் தரப்புத் தயாராக இருக்கிறது போன்ற ஓர் எண்ணப்பாடு காணப்பட்டாலும் கூட, பெரும்பான்மையினத் தரப்பு, இவ்விடயத்தில் தமது தெளிவான, மாற்ற முடியாத நிலைப்பாட்டை, தொடர்ந்தும் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றது.  

தற்போது காணப்படுகின்ற அரசமைப்பின் அத்தியாயம் IIஇல் காணப்படுகின்றன உறுப்புரை 9, பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறது.  

“இலங்கைக் குடியரசில், பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ஆம், 14 (01)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை, எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளை, பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும், அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்” என்பது, அந்த உறுப்புரை ஆகும்.  

சிந்தனை செய்யும் சுதந்திரம், மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் ஆகியன பற்றி, உறுப்புரை 10 கூறுகிறது. 14 (01)(உ)ஆம் உறுப்புரையும், மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ பின்பற்றுவதற்கான உரிமை பற்றிக் கூறுகிறது.  
இலங்கையில் தற்போது காணப்படும் அரசமைப்பின்படி, பௌத்தத்துக்கு முன்னுரிமை கிடைக்கப்பெற்றாலும், ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நிலைமை காணப்படுகிறது. ஓர் அரசு, ஒரு மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்பது, எவ்வளவுக்குப் பொருத்தமானது என்ற கேள்வி, காலங்காலமாக எழுப்பப்பட்டு வந்திருக்கிறது.  

இந்நிலையில் தான், புதிதாக ஓர் அரசமைப்பு உருவாக்கப்படுமாயின் அல்லது திருத்தமொன்று ஏற்படுமாயின், இதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்பது, சிறுபான்மையினரில் குறிப்பிட்ட பகுதியினரின் கோரிக்கையாக இருந்தது.  

இந்நிலையில், தற்போதைய இடைக்கால வரைவு அறிக்கையில், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலாவது பரிந்துரை, தற்போது காணப்படும் அதே உறுப்புரையைக் கொண்டதாக அமைந்துள்ளது. இரண்டாவது பரிந்துரை, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவதாக இருந்தாலும், ஏனைய மதங்களைச் சமமாக நடத்துதல் என்ற விடயத்தை முன்வைக்கிறது.  

“இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும். எல்லா மதங்களையும் அதன் நம்பிக்கைகளையும், மரியாதையுடனும் மாண்புடனும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன், அரசமைப்பால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, எல்லா ஆட்களுக்கும் உத்தரவாதமளிக்கும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும், அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்” என, இரண்டாவது பரிந்துரை குறிப்பிடுகிறது.  

அரசமைப்பு உருவாக்கம் என்ற பேச்சு எழுந்ததுமே, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற விடயத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை என்பதை, பெரும்பாலான பௌத்தத் தரப்புகள் தெளிவாகக் கூறியிருந்த நிலையில், இந்த இடைக்கால அறிக்கையின் பின்னர், இது குறித்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளமையை நாம் காண முடிகிறது.  

இந்த விடயத்தில், குறிப்பிட்டதொரு மதத்துக்கான முன்னுரிமையின் தேவை என்ன என்பதைப் பற்றியும், அவ்வாறில்லாத நிலைமையில் என்னவாறான விளைவுகள் ஏற்படுமென்பதையும் ஆராய முற்படுவது அவசியமானதாகும்.  

உலகின் கணிசமானளவு நாடுகள், மதசார்பற்ற நாடுகளாகவே காணப்படுகின்றன. எமக்குத் தெரிந்த முக்கியமான இரு நாடுகளாக, எமது அயல்நாடான இந்தியாவையும், உலகப் பொலிஸ்காரன் ஐக்கிய அமெரிக்காவையும் நாம் குறிப்பிட முடியும். ஐ.அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளில், “அரசையும் தேவாலயத்தையும் பிரித்தல்” என்பது, புகழ்பெற்ற சொற்றொடராகும்.  

இலங்கையைப் பொறுத்தவரை, மேலே குறிப்பிட்டதைப் போன்று, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலை காணப்பட்டாலும், அரச மதம் என்ற நிலை, இலங்கையில் இல்லை. எனவே, முழுமையான மதசார்புள்ள அரசு என, இலங்கையைக் கருத முடியாது. எனினும், பௌதத்துக்கு முதலிடம் என்பது, மதசார்பற்ற நாடாகவும் இலங்கையைக் கருத முடியாமல் வைக்கிறது.  

இதில் குறிப்பிடத்தக்கதாக, ஜாதிக ஹெல உறுமய, இலங்கையின் அரச மதமாக பௌத்தத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற அரசமைப்புத் திருத்தத்தை, 2004ஆம் ஆண்டில் பிரேரித்திருந்தது. எனினும் அது, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. எனவே, இலங்கையை, முழுமையான மதசார்புள்ள நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூற முடியாது.  

இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில், மதமென்பது, இப்போதும் மிக முக்கியமானதொன்றாக, மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இலங்கையின் சில பிரதேசங்களுக்குச் சென்றால், சில நூறு மீற்றர்களுக்கு ஒரு கோவில், தேவாலயம், பள்ளிவாசல், அல்லது விகாரை காணப்படுவதை, எம்மால் அவதானிக்க முடியும். “உங்களுடைய மதத்தைப் பின்பற்றாதீர்கள்” என்று கூறுவது, மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக அமையும் என்பதோடு, அந்த மக்களின் முக்கியமான ஓர் அங்கத்தையும் இல்லாது செய்கின்ற நிலையை ஏற்படுத்தும். எனவே, மக்களின் வாழ்விலிருந்து மதத்தை இல்லாது செய்வதென்பது, மதசார்பற்ற நாடு என்ற கோரிக்கையின் பின்புலம் கிடையாது.  

மாறாக, அரசு என்பது, மதசார்பற்ற ஒன்றாக இருக்க வேண்டுமென்பது, பாகுபாடின்மை, சமத்துவம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது. பாகுபாடு என்பது, ஒருவரை விட ஒருவருக்கு முன்னுரிமை வழங்குவது அல்லது இனம், மதம், தோலின் நிறம், அல்லது வேறு காரணங்களால், ஒருவரைப் புறக்கணிப்பது என்று பொருள்கொள்ள முடியும். அந்த அடிப்படையில், அரசின் உத்தியோகபூர்வ மதம், இது தான் என்று கூறுவது என்பது, நிச்சயமாகவே பாகுபாடாகவே கருதப்பட வேண்டும். அதேபோன்று தான், குறித்ததொரு மதத்துக்கான முன்னுரிமை என்பதுவும் கருதப்பட வேண்டும்.  

“மதத்தின் அடிப்படையில் எவரையும் நாங்கள் பாகுபாட்டுக்கு உட்படுத்துவதில்லை” என, இலங்கை உள்ளிட்ட நாடுகள் கூறக் கூடும். ஆனால் உண்மையில், அந்தப் பாகுபாடு இருக்கிறது என்பதை, நாம் அனைவரும் அறிவோம்.  

உதாரணமாக, இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவையும், புத்த சாசனத்தைக் கட்டிக்காக்கும் தேவையும் அரசுக்கும் அரசாங்கத்துக்கும், அரசமைப்பின்படியே இருக்கும் நிலையில், இலங்கையின் முக்கியமான அரசியல் மாற்றங்கள் குறித்தும் சட்டவாக்க விடயங்கள் குறித்து, பௌத்த மதத்தலைவர்களைச் சந்திக்கவும் அவர்களது ஆசிகளைப் பெறவும் வேண்டிய தேவை காணப்படுகிறது. இவ்வாறான நிலைமையில், பௌத்தத்துக்கு ஆதரவான அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் உருவாகக்கூடிய நிலைமை, அதிகளவில் காணப்படுகிறது.   

இலங்கையில் பௌத்தம் என்பது, கிட்டத்தட்ட முற்றுமுழுதாகவே சிங்கள மக்களைக் கொண்டுள்ள நிலையில், பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குதல் என்பது, சிங்கள மக்களுக்கு முன்னுரிமை வழங்குதல் என்ற நிலையையே ஏற்படுத்துகிறது. அதுதான் இங்கு முக்கியமானதாக இருக்கிறது.  

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமாக இருக்கலாம், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பிரஜைகளைக் காப்பதற்கான சட்டமூலமாக இருக்கலாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதாக இருக்கலாம், நிலைபேறுகால நீதியாக இருக்கலாம், போர்க்குற்ற விசாரணைகளாக இருக்கலாம், இவை எவற்றுக்கும் பௌத்தத்துக்கும் இடையில் நேரடியான தொடர்பு கிடையாது. மாறாக, பௌத்த மதத்தைப் பயன்படுத்தி, சிங்கள அரசியல்வாதிகளையும் சிங்கள வீரர்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட இராணுவத்தையும் காப்பாற்றுவதற்கே முயலப்படுகிறது.  

எனவே தான், மதசார்பற்ற அரசு என்பது, நாட்டின் நிலையான தன்மைக்கு மிக அவசியமானது என்பதை, பெரும்பான்மை மக்களில் முன்னேற்றத்தை வேண்டி நிற்கும் பிரிவினரும் சிறுபான்மையினரும் உணர வேண்டும்.  

அண்மைக்கால உலக வரலாற்றில், மதத்தை முன்னிறுத்துவதால் ஏற்பட்ட அழிவுகளுக்கு மிகச்சிறந்த உதாரணமாக, துருக்கி காணப்படுகிறது. மதசார்பற்ற நாடாக இருந்த அந்த நாடு, பின்னர் இஸ்லாமிய ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. தற்போதைய ஜனாதிபதி றிசெப் தய்யீர் ஏர்டோவானின் கீழ், மதசார்பற்ற நிலைமையை அழிப்பதற்காக, இஸ்லாமியக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இதன்காரணமாக, நாட்டிலுள்ள மதங்களைப் பின்பற்றாத ஏராளமான பிரஜைகள், தங்களது கல்வி வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளும் இழந்துள்ளனர். இத்தனைக்கும், உலகின் மதநம்பிக்கை மிகவும் குறைவான முஸ்லிம்களை அதிகளவில் கொண்ட நாடு என்ற பெருமை, துருக்கிக்கு உண்டு. அவ்வாறான ஒரு நாட்டிலேயே இந்த நிலைமை காணப்படுகிறது என்பது, நாமெல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே உள்ளது.  

உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக, மதசார்பற்ற தேசமாக, இலங்கையை மாற்றி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போகிறோமா, இல்லையெனில் துருக்கி போன்ற, சீரழிந்து செல்லும் நிலைமை உருவாக்கப் போகிறோமா என்பது, எமது கைகளில், எமது பிரதிநிதிகளின் கைகளிலேயே உள்ளது.    


மதசார்பற்ற நாடு அவசியமா?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.