மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேற்றம்: ‘இருந்தென்ன போயென்ன’

உலக அரசியல் அரங்கில், ‘மனித உரிமை’ என்ற சொல்லாடல், பல பொருள்கோடல்களுக்கு உள்ளாகியுள்ளது. மனித உரிமைக்கான வரைவிலக்கணங்கள் ஒருபுறம் இருந்தாலும். மீறப்படுவது யாருடைய உரிமைகள் என்பதும், மீறுவது யார் என்பதுமே, மீறப்படுவது மனித உரிமைகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றன.   

மனித உரிமையின் அரசியல், அதிகம் பேசப்படாத விடயமாக உள்ளது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை, தனக்கான மனித உரிமைப் பேரவையை நிறுவியது முதல், மனித உரிமையின் உலகளாவிய அரசியலைப் பொது வெளிக்குக் கொணர்ந்துள்ளது.   

ஆனாலும், மனித உரிமைகள் இன்னமும் எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை என்பதை, இப்பேரவையின் செயற்பாடுகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்துள்ளன.  

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து, அமெரிக்கா வெளியேறுவதாக, வெளிப்படையாக அறிவித்துப் பேரவையிலிருந்து விலகியது.   

இது ஒருபுறம், தமிழ் மக்களிடையே ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகிறது. 

மறுபுறம், இலங்கையின் தேசியவாதிகளிடையே இதுவொரு வெற்றியாகவும், இலங்கை, பேரவையில் அளித்திருந்த உறுதிமொழிகளிலிருந்து, விலகியிருப்பதற்கான சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது என்ற வகையில், அமெரிக்காவின் முடிவு கொண்டாடப்பட்டது.  

இலங்கைக்கு எதிராக, மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதிலும் அமெரிக்காவின் முக்கிய பங்களிப்புடன்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் வல்லமை, அமெரிக்காவின் வௌியேறும் தீர்மானத்தால், வேறுபட்ட மனநிலை வெளிப்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளன.   

இப்பின்னணியில், அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பிலும், இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்தும் நோக்கலாம்.   

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் வரலாறு, கொஞ்சம் நீண்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவுடன், தோற்றம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் (UN Human Rights Commission) 1946ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது.   

அதனுடைய 60 ஆண்டுகால வரலாற்றில், ஏராளமான மனித உரிமை மீறல்களை, இவ்வமைப்புக் கடந்து வந்துள்ளது. ஆனால், இவ்வமைப்பால் எதையும் சாதிக்க முடியவில்லை.  

 இதனால், ஐ. நா மனித உரிமை ஆணையகம் மீது, ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவால், இன்னொரு புதிய அமைப்புக்கான தேவை உணரப்பட்டது. 2006ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தோற்றம் பெற்றது. இக்கதைக்கும் ஒரு பின்புலமுண்டு.   

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, மனித உரிமைகள் கவனிப்புக்குள்ளாயிருந்த போதும், 1990களின் பிற்பகுதியில் அக் கவனம் ஒரு புதிய அரசியல் பரிமாணத்தைப் பெற்றது. 

கெடுபிடிப் போரின் பின்னர், ஒற்றை முனைய உலகின் ஆதிக்கச் சக்திகள், உலக நாடுகளில் தலையிடுவதற்கான புதிய வழிமுறைகளைத் தேடின. இந்நிலையில், 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில், 100 நாட்களில் எட்டு இலட்சம் பேரைக் கொன்ற, கொடிய இனப்படுகொலையும் அதன் போதான, ஐ.நாவின் கள்ள மௌனமும் கையாலாகாத்தனமும்  சர்வதேச அளவில், மனித உரிமை பற்றிய புதிய அக்கறைகளை உருவாக்கின.  

அதன் தொடர்ச்சியான கோட்பாட்டுருவாக்க முயற்சிகளதும் அதையடுத்த நிறுவனமாக்கற் செயற்பாடுகளதும் விளைவாகவே ஐ.நா மனித உரிமைப் பேரவை தோன்றியது.   

ஐ.நா சபையும் மேற்குலகும் குறைப்பிரசவமாகப் பெற்ற வலதுகுறைந்த குழந்தையே ஐ.நா மனித உரிமைப் பேரவையாகும். பல ஆண்டுகள் கடந்தும், அது இன்னும் வளரவுமில்லை; வலுப் பெறவுமில்லை என்பதே உண்மை.  

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உருவாக்கத்தின் மூலம், ஐ.நா சபை, உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் ஒரு செயன்முறையை ஆக்கியிருக்கிறது. மொத்தத்தில், மனித உரிமைகளின் அளவுகோல்களின் தீர்மானகரமான சக்தியாக ஐ.நா மனித உரிமைப் பேரவை வடிவுபெற்றுள்ளது.   

மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு ஏதும் இல்லாமையை விட, ஐ.நாவினுடைய அமைப்பு ஒன்று இருப்பது நன்மை தரும் என, அதன் ஆதரவாளர்கள் வாதிடுவார்கள்.   

எனினும், எதையுமே செய்ய இயலாதபோதும், குறிப்பிட்ட சில நாடுகளின் நலன்களுக்காக, பக்கம் சார்ந்து செயற்படும் ஓர் அமைப்பு இருப்பதை விட, இல்லாமை மேல் என்பது, மறுசாரார் வாதம்.   

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.   

அப்போது பேசிய நிக்கி ஹாலே, “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை, கேலிக்குரியதாகச் செயற்பட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகுவதாகத் தெரிவித்தார்.   

மனித உரிமைப் பேரவையைச் சீரமைக்க, அமெரிக்கா செய்த முயற்சிகளுக்கு ரஷ்யா, சீனா, கியூபா, எகிப்து ஆகிய நாடுகள் முட்டுக்கட்டை போட்டதாகக் குற்றம் சாட்டினார்.  

 மெக்சிகோவில் இருந்து, அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கும் விதமாக, குறிப்பிட்ட வயதினருக்கு மேல், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.  

 இதன் காரணமாகக் குடியேறிகளின் குழந்தைகளையும் பெற்றோரையும் அமெரிக்க அதிகாரிகள் பிரித்து வைத்த விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்தது. இது, அமெரிக்காவுக்குக் கடும் சினத்தை உண்டுபண்ணியது என்பதே உண்மை.   

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, “அரசியல் பாகுபாடு மிகுந்த, சாக்கடைக் குழி’ என்று விவரித்த ஹேலே, இப்பேரவையானது பாசாங்குத்தனம் மிகுந்த, தன்னாட்சி அமைப்பாகி, மனித உரிமைகளை எள்ளி நகையாடுகிறது” என்றார்.  

இஸ்‌ரேல் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகளை விளிக்கும்போதே, நிக்கி ஹேலே குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையை இஸ்‌ரேல் வரவேற்றுள்ளது.  

 “அமெரிக்காவின் துணிச்சலான நடவடிக்கை, இஸ்‌ரேலைப் பழிவாங்க நினைக்கும் நாடுகளுக்கு, நல்லதொரு பாடம்” என இஸ்‌ரேலியப்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.   

கடந்த சில காலங்களாக, பலஸ்தீனத்தின் மீதான, இஸ்‌ரேலிய நடத்தை தொடர்பாக ஐ.நாவில், இஸ்‌ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு, அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததோடு, இந்த நிலை தொடர்ந்தால், மனித உரிமைப் பேரவையிலிருந்து வெளியேறி விடுவோம் என, ஏற்கெனவே கூறியிருந்தது.  

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு, யுனெஸ்கோ அமைப்பில் இருந்தும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியுள்ளதோடு, ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.   

எனவே, அமெரிக்காவின் இம்முடிவு ஆச்சரியம் மிக்கதல்ல. இன்னொரு வகையில் எதிர்பார்க்கப்பட்டதே. மாறுகின்ற உலக ஒழுங்கு, அமெரிக்காவின் விருப்பப்படி, உலகம் இயங்குவதை அனுமதிக்க மறுக்கிறது. அமெரிக்கா விரும்பும் மாற்றங்கள் இடம்பெறாத போது, இவ்வாறான முடிவுகளை அமெரிக்க எடுக்கிறது.   

இனி, இம்முடிவு குறித்த தமிழ் மக்களின் கவலைகள் பற்றியும், ஐக்கிய நாடுகள் சபையே, தமிழ் மக்களின் இறுதிப் போக்கிடம் என்று விதைக்கப்பட்டிருக்கின்ற நம்பிக்கைகள் பற்றியும் சில விடயங்களை நோக்கலாம்.   
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடந்துகொண்ட முறை தொடர்பில், 2012 இல் வெளியிடப்பட்ட ஐ.நாவின் உள்ளக மீளாய்வு அறிக்கை, ‘இலங்கையில்,  இனப்படுகொலையை அரங்கேறாமல் தடுப்பதற்குரிய வழிகள் இருந்தும், அசமந்தப்போக்குடன் ஐ.நா செயற்பட்டது’ என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. அதேவேளை, ‘போர் முடிந்த பின்னர், முட்கம்பி வேலிகளுக்குள் மக்கள் துன்பப்படுகையில் ஐ.நா வாழாவிருந்தது’ என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.   

வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பாக, ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனையும் அவரது பிரதான அலுவலர் விஜய் நம்பியாரையும் குற்றச் சாட்டுகின்றன. 

நடந்தேறிய மனிதப்படுகொலைக்கான இரத்தம் தோய்ந்த கரங்களாக இவ்விருவரையும் சுட்டின. ஆனால் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   

ஆனால், மனித உரிமைகளின் பெயரால் நேரடி, மறைமுக அந்நியத் தலையீடுகளுக்கு வழி அமைக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேணை, தமிழர்களின் நலம் கருதிக் கொண்டு வரப்பட்டது என்று ஒருவர் சொல்லுவரானால், அது அறியாமையால் அல்ல; அறிந்து, தெரிந்து சொல்லப்படும் பொய் என்பதை, உறுதியாக நம்பலாம்.   

அந்நியத் தலையீடுகள், பொதுவாகவே பிரச்சினைகளைத் திசைதிருப்பிச் சிக்கல்களை அதிகரிப்பன. இன்றைய உலக ஒழுங்கில் இதன் விளைவு, ஒரு பிரச்சினையை இன்னொன்றாக்குவதாகும். (அதாவது, பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை வேறொன்றாக மாற்றுவது) உதாரணமாக, இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வு என்பது, இறுதிக்கட்டப் போரின் போதும், அதையடுத்தும் மனிதப் பேரவலங்களிலிருந்தும் மக்களைக் காப்பதாக மாறி, பின்னர், மனித உரிமைப் பிரச்சினையாகி, இன்று உள் விசாரணையாகி உள்ளது.   

அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கத்துக்கும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கத்துக்கும் இடையில், இன்றுள்ள தற்காலிக உடன்பாடும், தென்னாசிய நாடுகளின் இறைமைக்கும் அரசியல் உறுதிப்பாட்டுக்கும் கேடானவை. மேலாதிக்கவாதிகள், மேலாதிக்கவாதிகளாகவே நடப்பர் என்பது, மீண்டும் தெட்டத் தெளிவாகியுள்ளது.   

மனித உரிமைகள் பற்றியும் போர்க் குற்ற விசாரணைகள் பற்றியும் எவரும் பேசுவது, ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டோரின் மீட்சிக்காக அல்ல என, நமக்கு இப்போதைக்கு விளங்கியிருக்க வேண்டும்.

மேற்குலகு, தான் விரும்பாதோரைத் தண்டிக்கவும் தன்னைப் பணியாதோரைப் பணிய வைக்கவும் பயன்படுத்துகின்ற கருவிகள் மட்டுமே அவை.  

சூடான், கொங்கோ, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில், தீராத அல்லது நீடிக்கப்படும் உள்நாட்டு யுத்தங்களைக் காட்டி, எவ்வாறு மனிதாபிமான நடவடிக்கை அல்லது மனிதாபிமானக் குறுக்கீடு என்ற பெயரில் அந்நாடுகளுள் அந்நியத் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் நிகழ்ந்தன என்பதை நினைவு கொள்ளல் தகும். இத் தலையீடுகளில் மனித உரிமையினதும் மனித உரிமைப் பேரவையினதும் பங்கு பெரியது.   

இன்று, பலஸ்தீனத்தில் நடப்பவை பற்றிய கவனம், மனித உரிமைகள் பற்றியதல்ல; ஐரோப்பாவுக்குள் நுழைந்து அல்லலுறும் அகதிகளின் அவலமும் மனித உரிமைகளும் பற்றியதல்ல. ஏனெனில், முடிவின்றித் தொடரும் யுத்தங்களும், அவற்றுக்கான ஆயுத விற்பனையும் மனித உரிமை அலுவல்களல்ல.   

இவற்றையெல்லாம் தாண்டி, ஐ.நா மனித உரிமைப் பேரவையில், மனித உரிமைகள் பற்றி உரையாடுகிறார்கள் என்றால், எதைப் பற்றி உரையாடுகிறார்கள், யாருக்காக உரையாடுகிறார்கள், யார் உரையாடுகிறார்கள், யாரைப் பற்றி உரையாடுகிறார்கள் என்பன, கேட்க வேண்டிய கேள்விகளாகின்றன.   

இவற்றை மனதில் கொண்டு, அமெரிக்காவின் வெளியேற்றத்தை நாம் நோக்கலாம். மாறுகின்ற உலக ஒழுங்கு, அமெரிக்கா விரும்புவனவற்றை ஐ.நாவின் அமைப்புகள் ஊடு, செய்ய இயலாமல் செய்திருக்கிறது.   

இது, மூன்று வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஒன்று, அமெரிக்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதும் ஒதுங்கியிருப்பதும் அமெரிக்காவின் இயலாமையைக் காட்டுகிறது. 

இரண்டாவது, அமெரிக்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதானது, அமெரிக்கா சர்வதேச சட்டங்கள், சமவாயங்கள் என்பவற்றை மதிக்காமல், தன்னிச்சையாகச் செயற்படுவதற்கான இலவச ஒப்புதலை வழங்குகிறது. (அமெரிக்கா எப்போதும் சர்வதேச சட்டங்களை மதித்ததில்லை என்பது வேறுகதை). 

மூன்றாவது, அமெரிக்காவை மையப்படுத்தாத (அமெரிக்காவை விலக்கிய) பலமான உலக ஒழுங்கு உருவாவதை, இது எடுத்துக் காட்டுகிறது.   

அமெரிக்கா இவ்வமைப்பில் இருந்த காலத்தில், அமெரிக்காவில் மனித உரிமைகள் எவ்வாறு இருந்தன என்பதற்குக் கடந்தாண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம் போதுமானது. 

கடந்தாண்டு, பெண்களுக்கு எதிராக வன்முறை இடம் பெறும் நாடுகளின் பட்டியல் ஒன்று, சர்வதேச அமைப்பு ஒன்றால் வெளியிடப்பட்டது.   

எதிலும் முதலாவதாக இருக்க விரும்பும் அமெரிக்கா, அதன் விளைவாலோ என்னமோ, இந்தப் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது. அதிலும் குறிப்பாக, பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அமெரிக்காவிலேயே அதிகம் நடைபெறுகின்றன.   

அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 96,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் 80% தொடர்பில் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.  

 இதற்கான காரணங்களை ஆராயும் அந்த அறிக்கை, முக்கியமான இரண்டு அவதானிப்புகளைச் செய்கிறது.
முதலாவது, அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது, மிகவும் பணச் செலவான ஒரு செயற்பாடாகும்.   

இலவசமாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு வழக்கு தாக்கல் செய்தாலும் வழக்கு நீண்ட காலத்துக்கு இழுபடும். எனவே, நீதி கிடைப்பதற்கு அதிகளவு பணம் செலவழிக்க வேண்டும். நீதியைப் பணமே தீர்மானிக்கிறது.   

அறிக்கை சொல்லும் இரண்டாவது காரணம், அமெரிக்க நீதித்துறை, பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளை, அக்கறையாகக் கருத்தில் கொள்வது இல்லை. இதனால் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்குத் தீர்ப்புகள் ஒழுங்காக வழங்கப்படுவது இல்லை.  

 உலகெங்கும் மனித உரிமைகள் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் அறிவுரை சொல்லும் அமெரிக்கா, தன் நாட்டு மக்களுக்கே மனித உரிமைகளை வழங்குவது இல்லை.  

அமெரிக்கா பேசிய பேசிவருகின்ற மனித உரிமைகள் பொதுவானவை அல்ல; சிரிய விடயத்தில் அல்லது வெனிசுவேல, கியூபா விடயங்களில் பேசப்படும் மனித உரிமைகள், பலஸ்தீன, சவூதி அரேபிய விடயங்களில் பேசப்படுவதில்லை.   

அமெரிக்காவுடனான குறித்த நாட்டின் உறவு, மனித உரிமைகள் குறித்துப் பேசுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றன. மனித உரிமைகளைப் பொதுவில் வைக்காத, அதை மதிக்காத ஒரு நாடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இருந்தென்ன போயென்ன.  


மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேற்றம்: ‘இருந்தென்ன போயென்ன’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.