2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

மரண தண்டனையெனும் கூச்சல்

Gopikrishna Kanagalingam   / 2018 ஜூலை 19 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் அமுல்படுத்தப்படாமல் உள்ள மரண தண்டனையை, மீளவும் அமுல்படுத்துவதற்கான முடிவை, இலங்கையின் அமைச்சரவை எடுத்திருக்கிறது. இதற்காக முன்னின்றவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமானவர்.  

2015ஆம் ஆண்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, ஜனாதிபதியால் கூறப்பட்ட காரணம், சிறுவர் துஷ்பிரயோகம், கொலைகள் ஆகியவற்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோருக்கு மரண தண்டனை வழங்குவது என்பதாகும். ஆனால் இப்போது கூறப்படும் காரணம், போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பது என்பதாகும். எனவே, வெறுமனே இரண்டரை ஆண்டுகளில், என்ன காரணத்துக்காக மரண தண்டனை வேண்டுமென்பதிலேயே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.  

இது தான், உண்மையிலேயே என்ன காரணத்துக்காக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முயலப்படுகிறது என்பது தொடர்பான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அப்போது சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள் முக்கியமானவை என்றால், இப்போது போதைப்பொருள் விடயங்கள் முக்கியமானவையாக, மக்கள் உணர்கிறார்கள். மக்களின் அவ்வுணர்வைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீளக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, குற்றங்களைக் குறைக்கும் உண்மையான எண்ணம் இருக்கிறதா என்பது சந்தேகமே.  

மக்களைப் பொறுத்தவரை, உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைத்து விடயங்களிலும் உறுதியான, சரியான முடிவை அவர்களால் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனால் தான், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். மக்களுக்கு அவசியமான முடிவுகளை, ஆராய்ந்தறிந்து எடுக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்குத் தான் இருக்கிறது. மக்களின் தலைவர்களாக இருக்க வேண்டியவர்கள், அவர்கள் தான்.  

அரசியல்வாதிகள் என்று வரும் போது, அவர்கள் நடந்துகொள்ளக் கூடிய வகைகளில், இரண்டு பிரதான பிரிவுகள் இருக்கின்றன:  

1. மக்களுக்கு ஏற்கெனவே இருக்கின்ற சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் மேலும் வலுவூட்டுவது. மக்களின் பலவீனங்களை மேலும் பயன்படுத்தி, அவர்கள் விரும்புகின்ற, ஆனால் நீண்டகாலத்தில் அவர்களுக்குப் பயன்தராத, முடிவுகளை எடுப்பது.  

2. மக்களுக்குப் பிடிக்காத விடயங்கள் குறித்து விளக்கமளித்து, மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தி, மக்களுக்குத் தேவையான முடிவுகளை எடுப்பது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த பரம்பரை பற்றிக் கவலைப்படுவது.  

இதில், மரண தண்டனைக்கு மக்களிடத்தில் இருக்கும் ஆதரவைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்ற முயலும் அரசியல்வாதிகள், முதல் வகையினர்.  

சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் கொண்டுசெல்லப்படுகின்றன என்பது தான், மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமெனக் கருதுவதற்கான காரணமாக, ஜனாதிபதி சிறிசேன கூறும் காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைச்சாலைக்குள் இருந்து போதைப்பொருட்களை விநியோகிப்போர் அல்லது அது தொடர்பான கடத்தலில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை வழங்க வேண்டுமென்று தான் அவர் கூறுகிறார்.  

ஆனால், முக்கியமானதொரு விடயம் இங்குள்ளது. சிறைச்சாலைகளுக்குள், உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லவே பெருமளவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், அவற்றுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடிய நிலைமை எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  

அப்படியானால், அரச அதிகாரிகளாக இருந்துகொண்டு, போதைப்பொருள் விநியோகத்துக்கு அனுசரணை வழங்குவதென்பது, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதற்குப் பின்னரும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதை விட மோசமானதல்லவா? அப்படியாயின், இலங்கையின் சட்ட அமுலாக்கத்துறை, பயனற்றதாக இருக்கிறது என்பதை, ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறார்களா?  

அப்படியாயின், அவர்களுக்கான தண்டனைகளை வழங்கி, அவர்களைக் களையெடுக்க வேண்டியது அவசியமல்லவா? அதற்கான என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன?   

மறுபக்கமாக, பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அரசியல்வாதிகள் விடயத்தில் மாத்திரம், விசாரணைகளும் வழக்குகளும் தண்டனைகளும் தாமதிக்கும் விந்தை ஏன்? பாகுபாடான நீதி நடைமுறை தான் இலங்கையில் இருக்கிறது என்பது அதற்கான அர்த்தமா?  

நீதித்துறை என்று வரும் போது தான், அதைப் பற்றியும் கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது. உலகிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும், இலங்கையின் நீதித்துறை தொடர்பான கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. நம்பகத்தன்மை இல்லாத நீதித்துறை ஒன்றை வைத்துக்கொண்டு, மரண தண்டனை எனும், கொடூரமான தண்டனை பற்றிக் கலந்துரையாட முடியுமா? 

போர்க் காலங்களில், ஏராளமான தமிழர்கள், சட்ட அமுலாக்கத் துறையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, தாங்கள் செய்யாத குற்றங்களைச் செய்ததாக ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இலங்கையின் நீதித்துறை, அனைத்து இனத்தவர்களையும் சமமாக மதிக்கிறது என்பதை, யாராவது உறுதியாகக் கூற முடியுமா?  

உலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட, தவறான முறையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, பல தசாப்தங்களை, தவறாகச் சிறையில் கழித்த ஏராளமானோர் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது. இலங்கை எம்மூலைக்கு?  

இப்படி, அடிப்படையான விடயங்களிலேயே, மரண தண்டனை என்பது பொருத்தமற்ற தண்டனையாகத் தெரியும் போது, நுணுக்கமான வாதங்களைப் பற்றியெல்லாம் ஆராயத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. மரண தண்டனை என்பது, நீதித்துறையால் மேற்கொள்ளப்படும் கொலை; இத்தண்டனை நிறைவேற்றப்பட்டால், மீண்டும் அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை; உயிரை எடுப்பதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி போன்றவையெல்லாம், ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, அந்நிலைமைக்குப் போவதற்கான தேவை கூட எமக்கில்லை.  

இதில், மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்காக, பொய்யான பிரசாரங்களிலும் அரசாங்கத் தரப்பு ஈடுபடுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் குறிப்பாக, நல்லிணக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் மனோ கணேசன், “சதாம் ஹுஸைனுக்கு, அமெரிக்கா தூக்குத் தண்டனை வழங்கிய போது, சர்வதேச மன்னிப்புச் சபை எங்கே போனது? இலங்கைக்கு மாத்திரம் ஏன் அழுத்தம்?” என்ற ரீதியில் கருத்தை வெளியிட்டிருந்தார்.

மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் மீதான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், மரண தண்டனை போன்ற விடயங்களில், அவ்வமைப்புகள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன. அமைச்சர் குறிப்பிட்ட சதாம் ஹுஸைனின் மரண தண்டனை நிறைவேற்றல் விடயத்தில் கூட, தனது முழுமையான எதிர்ப்பை, மன்னிப்புச் சபை வெளியிட்டிருந்தது. எதிர்ப்புக்கு ஒருபடி மேல் போய், ஹுஸைன் மீதான வழக்கு விசாரணையின் நடைமுறைகள் குறித்த கேள்விகளையும் அது எழுப்பியிருந்தது. எனவே, ஐ.அமெரிக்கா என்றவுடன் அச்சபை அடங்கிப் போனது என்ற குற்றச்சாட்டு, மிகவும் பொய்யானது.  

இவற்றையெல்லாம் தாண்டி, மரண தண்டனையை அமுல்படுத்தித் தான் ஆகவேண்டுமென இருந்தால், இன்னொரு தீர்வும் இருக்கிறது. ஏனைய குற்றங்களை விடுத்து, மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென, சட்டமொன்றை இயற்றி, அதை நடைமுறைப்படுத்துமாறு, “குற்றங்களைக் குறைக்க விரும்புகிறோம்” என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடம் நாம் கோர முடியும். ஒரு ரூபாயாக இருந்தாலும், அரச பணம் கொள்ளையிடப்பட்டால் இல்லாவிட்டால் கையாடப்பட்டால், அதற்குத் தண்டனை, மரண தண்டனை தான் என, முடிவெடுக்கப்படட்டும். 

அரசியல்வாதிகள் அனைவரும் அதற்குச் சம்மதிப்பார்களாக இருந்தால், ஏனைய குற்றங்களுக்கும் தண்டனை வழங்க முடியுமெனக் கூற முடியும்.  

ஆனால், அவ்வாறான ஒரு முயற்சிக்கு, எந்தவோர் அரசியல்வாதியும் சம்மதிக்கப் போவதில்லை. மரண தண்டனைக்கு அவர்கள் ஆதரவு வழங்குவதெல்லாம், தமக்கு அதனால் நேரடியான பாதிப்பு வராது என்ற அடிப்படையில் தான்.

எனவே, குற்றங்களைக் குறைக்க வேண்டுமென்ற உண்மையான கூச்சல் இருக்குமாயின், முதலில் அரசியல்வாதிகளிடமிருந்து அதை ஆரம்பிக்கப்பட்டும். அதைவிடுத்து, நம்பிக்கை தொடர்பான கேள்விகளை இன்னமும் கொண்டுள்ள நீதித்துறை, சட்ட அமுலாக்கத் துறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மனித வாழ்வை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய மரண தண்டனை பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதே, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நடவடிக்கையாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--