2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவின் பலவீனத்தின் வெளிப்பாடு?

கே. சஞ்சயன்   / 2019 மார்ச் 31 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஜபக்‌ஷ குடும்பம் முடிவு செய்து விட்டது என்றும், அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை, கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்து விட்டார் என்றும் பரபரப்பான செய்திகள், ஊடகங்களில் அடிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், “அப்படியான முடிவு எதையும் எடுக்கவில்லை” என்று, குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்‌ஷ.  

ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே அவர், கோட்டாபய ராஜபக்‌ஷவை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவு எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.  

“வெற்றிபெறக் கூடிய வேட்பாளரைத் தான், பொதுஜன பெரமுனவின் சார்பில் நிறுத்துவேன்” என்றும், “பொருத்தமான வேட்பாளரை, இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.  
மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்தக் கருத்து, அரசியல் மட்டத்தில், மீண்டும் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.  

ஏற்கெனவே, கோட்டாபய ராஜபக்‌ஷதான், வேட்பாளர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னரும், கோட்டாபய ராஜபக்‌ஷவும் கூட, அதற்குச் சாதகமாகவே கருத்துகளை வெளியிட்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்‌ஷ, அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கைவிரித்திருப்பது முக்கியமானது.  

உண்மையிலேயே, மஹிந்த ராஜபக்‌ஷ இது தொடர்பாக முடிவை எடுக்கவில்லையா அல்லது, எடுத்த முடிவை அறிவிப்பதற்கு அவர் தயங்குகிறாரா என்ற சந்தேகங்கள் இப்போது வலுப் பெற்றிருக்கின்றன.  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட கோட்டாபய ராஜபக்‌ஷ முடிவு செய்த பின்னரும் கூட, அவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து முடிவு செய்யவில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகிறார் என்றால், அதில் ஓர் அரசியல் உத்தி இருப்பதாகத்தான் தெரிகிறது.  

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும், எட்டு மாதங்கள் தான் இருக்கும் நிலையில், கடைசி நேரம் வரை, யார் வேட்பாளர் என்ற பரபரப்பு நிலை நீடிப்பதை, மஹிந்த ராஜபக்‌ஷ விரும்புகிறார் போலத் தெரிகிறது.  

கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னதாக, அவரது அமெரிக்கக் குடியுரிமை நீக்கப் பணிகள் நிறைவடைய வேண்டும்.  

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கு முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், சிலவேளைகளில், அமெரிக்கக் குடியுரிமை நீக்கல் விடயத்தில், அது சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மறைத்துக் கொள்வதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ முயற்சித்திருக்கலாம்.  

அதேவேளை, வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை, இன்னமும் தேடிக் கொண்டிருப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருப்பது, சற்று கவனத்தில் கொள்ள வேண்டியது.  

அவ்வாறாயின், தனது குடும்பத்தைச் சாராத ஒருவரை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர் எதிர்பார்த்திருக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.  

ஏனென்றால், ராஜபக்‌ஷ குடும்பத்தில் யாரை நிறுத்தலாம், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிவது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஒன்றும் கடினமான செயலாக இருக்காது.  

அதனால் அவர், ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு அப்பாலுள்ள ஒருவரைத் தேடுகிறாரா? ஒருவேளை அது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருக்கலாமோ? நிச்சயமாக இல்லை.   

ஏனென்றால், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஒருவரைத் தான், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப் போவதாக, மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். 

பொதுஜன பெரமுனவில் இப்போது யார் யார் உறுப்பினர் என்று கூடத் தெரியாது, மஹிந்த ராஜபக்‌ஷ கூட, பொதுஜன பெரமுனவில் சேர்ந்து விட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிச் சிக்கல் வந்த போது, உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தேன். இன்னமும் உறுப்புரிமை கிடைக்கவில்லை என்று குத்துக்கரணம் அடித்திருந்தார்.  

அதுபோக, கோட்டாபய ராஜபக்‌ஷ இன்னமும் பொதுஜன பெரமுனவில் சேர்ந்திருக்கிறாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது,  

ஆனால், நிச்சயமாக ஒன்று மட்டும் தெரியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுஜன பெரமுனவில் இல்லை. அதனால், அவரை மஹிந்த ராஜபக்‌ஷ வேட்பாளராகத் தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லை.  

ஒக்டோபர் 26ஆம் திகதிய ஆட்சி மாற்றத்தின் போது, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து, எந்த உடன்பாடும் செய்து கொள்ளவில்லை; எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.  

எனவே மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்புக் கிட்டாது.  

“வெற்றியைப் பெறக்கூடிய வேட்பாளரை, இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்ற மஹிந்த ராஜபக்‌ஷவின் கருத்து யோசிக்க வைக்கிறது.  

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வாய்ப்புகள் பற்றி, அவருக்கு சந்தேகம் வந்து விட்டதா என்ற கேள்வியை இது ஏற்படுத்துகிறது.  

ஏனென்றால், மஹிந்த ராஜபக்‌ஷ கைகாட்டக் கூடிய வேட்பாளர் யாராயினும், அவரால் வெற்றிபெற முடியும் என்று தான், பொதுஜன பெரமுனவினர் கூறி வந்தனர்.  

அம்பாறையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பசில் ராஜபக்‌ஷ, விமலவீர திஸநாயக்கவை நிறுத்தினால் கூட, ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவால் வெற்றி பெற வைக்க முடியும் என்று கூறியிருந்தார். இது ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முந்திய நிலை.  

அப்போது, மஹிந்த ராஜபக்‌ஷ கைகாட்டக் கூடியவரால் இலகுவாக வெற்றியைப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை, பொதுஜன பெரமுனவினர் மத்தியில் இருந்தது.  

ஆனால், இப்போது மஹிந்த ராஜபக்‌ஷவிடமே அந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது, வெற்றியைத் தரக் கூடிய வேட்பாளர் அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை. இது, வெற்றி மீது அவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.  

ஒக்டோபர் 26ஆம் திகதிய ஆட்சிமாற்றத்தால், தமது செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை மஹிந்த ராஜபக்‌ஷ ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையும் பொருத்திப் பார்க்கும் போது, சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.  

நம்பிக்கையீனம் இல்லையென்றால், ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு ஏன் மஹிந்த ராஜபக்‌ஷ தயங்குகிறார்? மஹிந்த ராஜபக்‌ஷவே அதற்கு ஒரு காரணத்தையும் முன்வைத்திருக்கிறார்.   

ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. அவர்கள் வேட்பாளரை அறிவித்த பின்னர், சரியான போட்டியைக் கொடுக்கக் கூடியவரைப் பொருத்தமான நேரத்தில் போட்டியில் நிறுத்துவோம் என்று அவர் கூறியிருக்கிறார்.  

இதன் மூலம், தனது வேட்பாளரை விட, ஐ.தே.க வேட்பாளரின் மீதே அவர் கவனமாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஐ.தே.க வேட்பாளரின் பலவீனத்தை அடிப்படையாக வைத்தே, தனது பலத்தைக் கட்டியெழுப்ப முனைகிறார்.  

இது ஓர் உத்தியாகப் பார்க்கப்பட்டாலும், பலவீனமான நிலையை காட்டுகிறது. தனது வேட்பாளரின் வெற்றி மீது நம்பிக்கையை வைக்கும் ஒரு தலைவரால், இதுபோன்று இன்னொரு கட்சியின் வேட்பாளரின் பலவீனத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது.  

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில், கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால், அதனை முறியடிப்பதற்கான எதிர் வியூகங்கள் எப்படி இருக்கும் என்ற கணிப்பையும் அவரால் சரியாகச் செய்ய முடியாமல் இருக்கிறது.  

மைத்திரிபால சிறிசேனவும் அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் என்ன முடிவை எடுக்கப் போகின்றன என்ற ஒரு கேள்வி இருக்கிறது.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் போட்டியில் குதித்தால், மும்முனைப் போட்டியில் கரையேறுவது என்பது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சிக்கலாக இருக்கும்.  

அதைவிட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களும், பொதுஜன பெரமுனவுக்குள் கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்க்கின்ற தரப்புகளும் வேறொரு வியூகத்தை வகுப்பதற்கும் முற்படலாம்.  

குடும்ப ஆட்சிக்கு எதிரான ஒரு மாற்று வியூகம் வகுக்கப்படும் போது, அதிலும், கோட்டாபய ராஜபக்‌ஷ திணறுகின்ற நிலை ஏற்படலாம்.  

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் இவையெல்லாம் சவால்களாக இருந்தாலும், ஒரு பலம்மிக்க அரசியல் தலைவராக தன்னைக் காட்டிக் கொள்பவரால், உறுதியாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாமல் இருப்பது என்னவோ பலவீனத்தின் வெளிப்பாடாகத் தான் பார்க்கப்படுகின்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .