முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும்

முஸ்லிம்களின் வரலாற்றில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் பள்ளிவாசல்களுக்கு முக்கிய இடமிருக்கின்றது. பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்கள் வழிப்படுத்தப்படுவதும் அதை மையமாகக் கொண்டு, ஒரு குடையின் கீழ் சமூகம் வருவதும் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்றல்ல.   

அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டும் பள்ளி நிர்வாகத்தின் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டும் பள்ளிவாசல்கள் செயற்படுவதால், அல்லது பள்ளியில் அரசியல் கதைப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பதால், கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் வாராந்த குத்பா (நல்லுபதேச) பிரசங்கம் உள்ளடங்கலாக, எந்த விடயத்திலும் அரசியல் ஒரு பேசுபொருளாக இருந்ததில்லை. பள்ளிவாசல்கள் அரசியலை வழிநடாத்தியதாகவும் சொல்ல இயலாது.  

ஓர் அரசியல்வாதி தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யப் புறப்படுகின்ற வேளையிலும், வெற்றிபெற்று ஊருக்கு வருகின்ற வேளையிலும் வந்து, மார்க்கச் சடங்குகளைச் செய்துவிட்டுப் போகின்ற ஓர் இடமாகவே பள்ளிவாசல்கள் இருந்திருக்கின்றன.   

பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியலை வழிப்படுத்த முடியாமல் போனமைக்கான பிரதான காரணம், முஸ்லிம் அரசியல்வாதிகளின் எகத்தாள போக்காகும். பள்ளியின் அதிகாரம் கூட, தமது சட்டைப்பையில் இருக்க வேண்டுமென்றுதான் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள். எனவே பள்ளிவாசல்களும் அதன் நிர்வாகங்களும் அரசியல் அசிங்களில் இருந்து தூர விலகியிருக்கின்றன.   

இலங்கையில் பள்ளிவாசல்களையோ மதத் தலங்களையோ மையமாக வைத்து அரசியல் செய்ய முடியாது. ஆனால், நாம் இங்கு சொல்ல வருவது, அரசியலும் வாழ்வின் முக்கிய விடயம் என்றாகிவிட்ட பிறகு, அதை விட்டு முஸ்லிம்கள் விலகியிருக்க முடியாது.   

எனவே, முஸ்லிம் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் போக்குகள், செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் உன்னிப்பாக அவதானித்து, நேரடியாக அரசியலுக்குள் இறங்காமல், நல்லுபதேசங்கள் மற்றும் பரிந்துரைகள் ஊடாக அந்த மக்களை வழிப்படுத்துவதில் மதஸ்தலங்கள் வெற்றிகாணவில்லை என்றே கூற விளைகின்றோம்.   

அந்தவகையில் அரசியல் ரீதியாக முஸ்லிம்களை வழிப்படுத்துவதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளை தட்டிக் கேட்பதில் மார்க்கப் பெரியார்கள், மௌலவிமார், குர்ஆனையும் ஹதீஸையும் படித்தறிந்தவர்கள் தங்களுக்கிருக்கும் பொறுப்பை நிறைவேற்றியிருக்கின்றார்களா என்ற கேள்வி, இன்னும் கேள்வியாகவே இருக்கின்றது.   

இந்தக் கேள்வியின் அர்த்தம், பள்ளிவாசலை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவதோ, மார்க்க அறிஞர்கள் எல்லாம் அரசியல் பேசுவதோ என்று யாரும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.   

மாறாக, முஸ்லிம்களின் வாழ்வியலில் அரசியலும் முக்கிய கூறாக ஆகிவிட்டிருக்கின்ற நிலையில், அரசியல் தொடர்பில் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக மேற்சொன்ன தரப்பினரால் எவ்வாறான காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற சுயவிசாரணையே இந்தக் கேள்வியின் உள்ளர்த்தம் ஆகும்.   

அப்படிப்பார்த்தால், முஸ்லிம் சமூகத்துக்குள்ளே இருக்கின்ற (ஒரு சிலரை தவிர மற்றெல்லா) புத்தி ஜீவிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், சமூக நலன்விரும்பிகள் இந்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, பலப்படுத்தி, அதனூடாக முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கச் செய்வதில் எந்தளவுக்கு தவறு விட்டிருக்கின்றார்களோ அதேயளவு ஈடுபாடற்ற தன்மையை முஸ்லிம் மார்க்கப் பெரியார்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே,பொதுவான அபிப்பிராயமாகும்.   

முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் செய்யத் தவறிய எத்தனையோ விடயங்கள் தொடர்பில், அல்லது செய்து கொண்டிருக்கின்ற கேடுகெட்ட காரியங்கள் தொடர்பில், மேற்குறிப்பிட்டோர் தமது பரிந்துரைகளை முன்வைக்காமல் அல்லது முன்வைத்தும் அதில் வெற்றியடைய முடியாமலேயே உள்ளனர்.  

இந்த நிலைமை, தமிழ்ச் சமூகத்துக்குள்ளும் இருக்கின்றது. சிங்களச் சமூகத்தின் அரசியலின் போக்குகளைத் தமக்கேற்றால் போல் சீரமைப்பதில், பௌத்த பீடங்கள் குறிப்பிடத்தக்க வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.   
இந்த அடிப்படையில், அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், அண்மைக் காலத்தில் எடுத்த நிலைப்பாடு மிகுந்த கவனஈர்ப்பை பெறுகின்றது. ஒரு தேர்தல்காலத்தில், இந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்ட நகர்வுகள், பிராந்திய மற்றும் தேசிய அரசியலில் முக்கியமான சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த நகர்வுகளை வரவேற்றலும் விமர்சித்தலும் சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.   

இந்தக் கதை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதும், முன்கதைச் சுருக்கம் என்னவென்பதும் உங்களுக்குத் தெரியும். கல்முனை மாநகர சபையின் கீழ் இன்றுவரைக்கும் இருந்து வரும் சாய்ந்தமருது மக்கள், தமக்குத் தனியான ஓர் உள்ளூராட்சி சபை வேண்டும் என்று, குறைந்தது பத்து வருடங்களாகக் கோரி வருகின்றார்கள். அக்கோரிக்கை உச்சக்கட்டமடைந்திருந்த நிலையில், சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.   

சாய்ந்தமருது மக்களின் நியாயங்கள், கல்முனை மாநகர சபையைத் துண்டாடினால், கல்முனைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு, இவ்விரு பிரதேசங்களினதும் புவியியல் அமைவிடங்கள், இதை இரண்டு அல்லது நான்கு சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பரந்துபட்ட சிந்தனை எதுவும் இன்றி, வழக்கமான தேர்தல் வாக்குறுதி போல, இரண்டு பிரதேசங்களுக்கும் இருவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.   

இதற்குப் பின்னால் எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அவரது கட்சி சார்பு பிரதியமைச்சராலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், அவருடைய கட்சி சார்பு அரசியல்வாதியாலும் முறையாக வழிநடாத்தப்படவில்லை என்பதை ஹக்கீமும் ரிஷாட்டும் இப்போதுதான் உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.   

சாய்ந்தமருது மக்களுக்கு, ‘இதோ உள்ளூராட்சி மன்றம் கிடைக்கப் போகின்றது’ என்று ஆசைகாட்டப்பட்ட வேளையில், அதற்கெதிராக கல்முனை மக்கள் தூண்டிவிடப்பட்டனர்.   
பின்னர், ‘இல்லை எமக்குத் தந்தே ஆகவேண்டும்’ என்ற கோஷத்தோடு சாய்ந்தமருது மக்கள் எழுச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு இரு பிரதேசங்களுக்கிடையிலும் முறுகல் வந்தமையால் உள்ளூராட்சி சபையைப் பிரகடனப்படுத்தவே முடியாத நிலை வந்த பிறகுதான், இதை யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு செய்வது என்ற மீள்பரிசீலனை ஒன்று, முஸ்லிம் அரசியலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.   

முன்-பின் காரணங்கள், பின்புலங்களை அறியாமல் வெறும் கைதட்டல்களுக்காகவும் வாக்கைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்குகின்ற வெற்று வாக்குறுதிகளினால் முஸ்லிம் சமூகம் அடைந்துள்ள மிகப் பிந்திய பின்னடைவுக்கு உதாரணமாகச் சாய்ந்தமருது விவகாரத்தையும் அதன் வழிவந்த குழப்பங்களையும் கருதலாம்.   

இந்தநேரத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் ஒரு முக்கிய பாத்திரத்தை எடுத்தது. தேர்தல் நெருங்கிவந்த காலத்தில், மக்களை ஒருகுடையின் கீழ் ஒன்றுபடுத்தி, அதனூடாக அரசியல் அழுத்தத்தை கொடுப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டது. இது பலதரப்பாலும் கவனிக்கப்பட்ட ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். 

சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்னின்றமையும் அதற்குப் பின்னால் 95 சதவீதமான மக்களை ஒன்றுதிரட்ட முடிந்தமையும் கடந்த 30 வருடங்களிலான முஸ்லிம் அரசியல், சமூக செயற்பாட்டுக் களத்தில் மிக முக்கியமான மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.   
இந்தப் பின்னணியோடு, சாய்ந்தருது எழுச்சி கொண்டது. இவ்வளவு காலமும் இதைவிடப் பெரிய ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்ட நேரங்களில் அரசியல், சமூகக் காரணங்களுக்காகப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ், முஸ்லிம்கள் ஒன்றுசேரவில்லை என்பதுடன், பள்ளிவாசல்கள் தஞ்சமடையும் இடங்களாகவே பயன்படுத்தப்பட்டன.   

என்றாலும், சாய்ந்தமருது பள்ளிவாசலின் நகர்வும் அதனூடான ஜனநாயகப் போராட்டமும் முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி முழுமொத்த தேசிய அரசியலிலுமே முன்னெப்போதும் இல்லாத அதிர்வொன்றை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.   

ஆனால், இந்த விவகாரம் தற்போது வேறு ஒரு பரிணாமத்தை எடுத்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமையும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் வகிபாகவும் பரவலாக மெச்சப்பட்டாலும் கூட, அது இப்போது ஒரு சட்டச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளது அல்லது மாட்டிவிடப் பட்டுள்ளது.   

தார்மீகம் - ஜனநாயகம் - சட்டம் ஒழுங்கு என்ற மூன்று விடயங்களும் ஒரேநேர்கோட்டில் பயணிக்க முடியாத சூழல் வந்தபோது, சட்டத்தின் பிரயோகம் அங்கு மேவி நிற்பதை இப்போது காண்கின்றோம்.  

யாருக்கு கோபம் வந்தாலும், சில விடயங்களைப் பேசியே ஆகவேண்டியுள்ளது. முஸ்லிம் கட்சிகள் தம்மை ஏமாற்றிவிட்டன என்று கூறியும், தனியான உள்ளூராட்சி சபை தரும்வரை எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை என்று கூறியுமே சாய்ந்தமருது மக்கள் தனியான ஒரு சுயேட்சைக் குழுவை நிறுத்தினார்கள்.   

அந்தக் குழுவுக்கு 90 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. இந்த ஒற்றுமைப்பட்ட நகர்வு, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் ஒரு முன்மாதிரி என்பதை மறுக்க முடியாது. அந்தவகையில் சாய்ந்தமருது பள்ளி நிர்வாகமும் ஏற்பாட்டாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.   

இதனைப் புரிந்து கொண்டு, மக்கள் காங்கிரஸ் கட்சி தமது வேட்பாளர்களை அங்கு நிறுத்துவதில்லை என்ற ஒரு தார்மீகமான அறிவிப்பை விடுத்தது. ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, சாய்ந்தமருதில் வேட்பாளர்களை நிறுத்தியது.   

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மு.கா தலைவர், தமது ஊருக்குள் வரமுடியாத நிலைமையை உருவாக்கினார்கள். ஆனால், ஜனநாயக நாடொன்றில், தேர்தல் காலத்தில் பள்ளிவாசலை முன்னிறுத்திச் செயற்படும் ஊரொன்று இவ்வாறு செயற்படுவது நல்லதல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.   

இலங்கையில் இனவாதம் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பள்ளிவாசல்களில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகின்றது; கடும்போக்குவாதம் போதிக்கப்படுகின்றது என்று இனவாத சக்திகள் கூறிவருகின்ற ஒரு நாட்டில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.   

இந்தநேரத்தில், ஒரு ஜனநாயகப் போராட்டத்துக்குப் பள்ளிவாசல் தலைமை தாங்குவதும், அந்த ஊரே அதன்பின்னால் நிற்பதும், இனவாதிகளுக்கு மட்டுமன்றி ஆட்சியாளர்களுக்கும் ஜீரணிக்க முடியாத விடயமாகவே இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.   

பள்ளிவாசல் தலைமை தாங்குவதால், சாய்ந்தமருதில் எந்தவித கெட்ட சம்பவமும் பதிவாகவில்லை. இது பாரிய கிளர்ச்சியாக வெடிக்கவும் இல்லை என்பது வரவேற்கத்தக்கது.   

ஆனால், ஊரின் ஒரு மூலையில், சில இளைஞர்கள் முரண்பட்டுக் கொள்வதையும், யாரோ சில பக்குவமற்றவர்கள் கல்லெறிவதையும் என....பள்ளிவாசல் நிர்வாகம் ஒவ்வொரு விடயமாகப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. அது சாத்தியமும் இல்லை.   

ஆனால், சாய்ந்தமருதில் என்ன சிறிய சம்பவம் நடந்தாலும் அது ‘பள்ளியின் வழிப்படுத்தலில் உள்ள தவறு’ என்றே சிங்கள சக்திகளாலும், அதிகாரிகளாலும் பார்க்கப்படலாம். அதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் எண்ணெய் ஊற்றுவார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.   

சாய்ந்தமருது நிர்வாகத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கலைக்கப் போகின்றது என்று இறக்காமத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றியதை, தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்திருந்தாலும், சாய்ந்தமருது விடயத்தில், சாய்ந்தமருது நிலைவரங்களை ஆணைக்குழு தொடர்ந்து அவதானித்து வந்திருக்கின்றது என்பதும் பொதுவான அபிப்பிராயங்களும் அனுமானங்களும் ஆகும்.   

அதாவது, தேர்தல் ஆணைக்குழு நேரடியாகப் பள்ளிவாசல் நிர்வாகத்திலோ அதனது செயற்பாட்டிலோ தலையீடு செய்ய முடியாது என்றாலும், தேர்தல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத் தரப்பு என்ற வகையில், அச்சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்துவதையும் தேர்தல்கால ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உரிய தரப்புக்கு அறிவிப்பதற்கும் ஆணைக்குழுவால் முடியும்.   

அந்த அடிப்படையிலேயே, சாய்ந்தமருது விவகாரத்தில் அதிகாரத் தரப்புகள் நடந்து கொண்டுள்ளதாகக் கருத நிறைய இடமுள்ளது. சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஆயுட்காலம் வறிதாக்கப்பட்டமைக்கும் வக்பு சபையால் வேறு நிர்வாக சபை தற்காலிகமாக நிறுவப்பட்டமைக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை, உய்த்தறிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று.   

இவ்வாறு பள்ளிவாசலின் நடவடிக்கைகள் விடயத்தில் அதிகாரத் தரப்புகள் சட்டப்படி நடந்து கொண்டிருந்தாலும், சாய்ந்தமருதில் வேறு நிர்வாக சபை பதவிக்கு வந்திருந்தாலும் அவ்வூரின் அரசியல் களநிலை மாறப் போவதில்லை என்பது மிகவும் முக்கியமானது.   

இதனால், இன்னும் அந்த மக்கள் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றார்களே தவிர, எந்த வெளிக்கட்சிக்கும் அங்கு வாக்கு அதிகரிக்கவில்லை என்றே தெரிகின்றது.   

எனவே, முஸ்லிம் அரசியலில் பள்ளிவாசல்களின் வகிபாகம் மிக இன்றியமையாதது. ஆனால், பல்லின நாட்டில் நேரடியாக அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. மாறாக, மக்களை வழிப்படுத்தலாம்; அறிவுறுத்தலாம்.   

ஆனால், எல்லாவற்றிலும் இஸ்லாமிய ஒழுக்கம் நிலைநாட்டப்பட வேண்டியது கட்டாயமானது. அதேபோல், எந்தக்கட்சிக்கும் எங்கும் தேர்தலில் போட்டியிடவும் பிரசாரம் செய்யவும் உரிமை இருக்கின்றது.  

அவர்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றால், எல்லோரும் ஒன்றுபட்டு வாக்களித்து, அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமே தவிர, நம்மீது சட்டம் கெடுபிடிகளைச் செய்யுமளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது.  


முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.