2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் தலைவர்கள் எல்லையை மீறக்கூடாது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஜூன் 12 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதத்தை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகியமை, தற்போது இலங்கை அரசியலில் முக்கிய நிகழ்வொன்றாகப் பேசப்படுகின்றது.   

இலங்கைப் பௌத்தர்களின் முக்கிய மூன்று பிரிவுகளான மூன்று நிக்காயாக்களின் தலைமைப் பிக்குகள், அம்முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு, பதவி விலகியோரைக் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ மூன், 2010ஆம் ஆண்டு, இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ‘தருஸ்மன் குழு’வை நியமித்த போது, ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் ஒன்றை நடத்திய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்தக் கூட்டுப் பதவி விலகல், ஒரு நாடகம் என்று கூறியிருந்தார்.   

ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் தவிசாளராகவிருந்த ஓமல்பே சோபித்த தேரர், “பயங்கரவாதத்துக்கு உதவிய தீவிரவாதிகளான ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி, ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உதவி” என்று கூறியிருந்தார். இம்மூவரும் பயங்கரவாதத்துக்கு உதவினார்களா என்பதை நிரூபித்துவிட்டு, அந்தத் தேரர் இவ்வாறு கூறியிருந்தால், அது பொருத்தமாகும்.  

“ரிஷாட், பயங்கரவாதிகளுக்கு உதவினார் என்பது நிரூபிக்கப்பட்டால், பதவி விலகியோர் என்ன செய்யப் போகிறார்கள்” என, மஹிந்த அணியின் தலைவர்களில் ஒருவரான மஹிந்தானந்த அலுத்கமகே கேள்வி எழுப்பியிருந்தார்.   

அவ்வாறு நிரூபிக்கப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே! ஆனால், நிரூபிக்க நீதிமன்றத்தை நாடாமல், நாட்டைக் குழப்பி, முஸ்லிம்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்பட்டமையே, பிரச்சினையாகியது.   

அதேவேளை, பயங்கரவாதிகளுக்கு ரிஷாட் உதவவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராகக் கூச்சலிட்டு, இனவாதத்தைத் தூண்டியவர்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்றும், கேட்க வேண்டியுள்ளது.   

உண்மையிலேயே, இன்று பலர், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகிய சூழலை மறந்துவிட்டு அல்லது வேண்டும் என்றே அச்சூழலை ஒதுக்கித் தள்ளிவிட்டு, “மூவரைப் பதவி விலகச் சொன்னால், எல்லோரும் பதவி விலக வேண்டுமா” என்று கேட்கின்றனர்.   

இவ்வாறு கேட்போர், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்பதால், முஸ்லிம்கள் அப்போது என்ன மனநிலையில் இருந்தார்கள் என்பதை உணர முடியாமலேயே, அவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர்.   

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, முஸ்லிம் வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சில வீடுகளில் கண்டெடுக்கப்பட்ட வாள்கள், கத்திகள் அரபு மொழிப் புத்தகங்கள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை ஊதிப் பெருப்பித்து, முஸ்லிம்களைப் பயங்கரமான சமூகமாகச் சிங்கள ஊடகங்கள் சித்திரித்தன.   

இதனால் நாட்டில், சிங்கள மக்கள் மத்தியில், முஸ்லிம் எதிர்ப்பலையொன்று பலமாக உருவாகியது. இதனால், முஸ்லிம்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். சில பகுதிகளில், முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் பகிஷ்கரிக்கப்பட்டன; ஓட்டோக்கள் பகிஷ்கரிக்கப்பட்டன; சிங்களப் பாடசாலைகளுக்குச் செல்லும் முஸ்லிம் மாணவர்கள் இம்சிக்கப்பட்டனர்; இழிவுபடுத்தப்பட்டனர்.  

முஸ்லிம் பெண்கள், ‘புர்க்கா’ தடையை மதித்து, ஆனால், தமது சமயத்தின் பிரகாரம், தலையை மறைத்து வெளியே செல்ல முடியாத நிலைமை உருவாகியது. பல அரச நிறுவனங்களுக்குச் சென்ற பெண்கள், அவர்கள், தமது தலையை மறைத்த துணிகளை அகற்ற வற்புறுத்தப்பட்டனர்.   

அரசாங்கமும் இந்த முஸ்லிம் எதிர்ப்பை ஆதரிப்பதைப் போல், ‘புர்க்கா’ தடையைக் கொண்டு வந்தது. முஸ்லிம் பெண்களை, மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில், அரச அலுவலகங்களில் கடமையாற்றும் பெண்களின் ஆடைகள் தொடர்பாகச் சட்டம் கொண்டுவரப்பட்டது.   

இதற்கிடையே, இத்தகைய முஸ்லிம் எதிர்ப்பின் காரணமாக குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளில், முஸ்லிம்களின் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்தாக்குதல்கள் பரவும் அபாயம், தொடர்ந்தே வந்தது. எப்போதும் எங்கும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.   

அத்தோடு, குருநாகல் மருத்துவமனையில் முஸ்லிம் மருத்துவர் ஒருவர், 4,000 சிங்களப் பெண்களுக்கு, அவர்களுக்குத் தெரியாமல்  கருத்தடைச் சிகிச்சை செய்துள்ளதாகச் செய்தியொன்றை ஊடகங்கள் பரப்பின. அதன் மூலம், முஸ்லிம்கள் மீதான சிங்களவர்களின் எதிர்ப்பு வலுத்தது; நிலைமை மேலும் மோசமாகியது. பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக, முஸ்லிம்கள் அஞ்சிப் பயந்து, நடைப் பிணங்களாக வாழ வேண்டிய நிலைமை உருவாகியது.   

சகல முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல என்று கூறிய அரச தலைவர்கள், இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பௌத்த சமயத் தலைவர்கள், முஸ்லிம் வீடுகள் பற்றி எரியும் போது, வாய் திறக்கவில்லை.  

இந்த நிலையில் தான், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோர், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதாக, எந்தவித ஆதாரமுமின்றி குற்றஞ்சாட்டப்படலாயினர். அவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவா எனத் தாம் இரகசியப் பொலிஸாரிடம் வினவியதாகவும் அதற்கு அவர்கள், அம்மூவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அவற்றை நிரூபிக்கக்கூடிய எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என, இரகசியப் பொலிஸார் தெரிவித்தாகவும் அமைச்சர் மனோ கணேசன், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.  

எனவே, இம் மூவருக்கு எதிரான கூச்சல்கள், தொடரும் முஸ்லிம் விரோத நெருக்குவாரத்தின் ஓரங்கமாகவே, முஸ்லிம்கள் கருதுகின்றனர். மிக மோசமான முறையில் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தப்பட்ட நிலையில், ரத்ன தேரர் இம் மூவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு வற்புறுத்தி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அதன் மூலம், நாட்டில் பதற்றம் அதிகரித்தது.   

ஜூன் இரண்டாம் திகதி, உண்ணாவிரதம் இருக்கும் ரத்ன தேரரைப் பார்க்கச் சென்ற பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், “நாளை நண்பகலுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு முழுவதிலும் ‘திருவிழா’ நடைபெறும்” என்றார்.  

அரசாங்கமோ, சிங்களத் தலைவர்களோ அதற்கு எதிராக வாய் திறக்கவில்லை. சட்டம், ஒழுங்கு தனி நபர்களின் கைக்கு மாறி, ஜனநாயகம் கபளீகரம் செய்யப்பட்டது.   

இந்த நிலையில், அம்மூவரும் பதவி விலகுவது கட்டாயமாகிவிட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது, முழுச் சமூகத்தின் மீதான, பேரினவாதிகளின் மிரட்டல் காரணமாக, அவர்கள் பதவி விலகுவதானது, முழுச் சமூகத்துக்கே தலை குனிவாகிவிடும்.   

இந்த நிலையில், சமூகத்தின் எதிர்ப்பைச் சிங்களச் சமூகத்துக்கு ஆத்திரமூட்டாத வகையில் தெரிவிக்கும் ஒரு யுக்தி, அவசியமாகியது. கூட்டு இராஜினாமாவின் பின்னானலான கதை இதுவே. இதன் மூலம், குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் தண்டிக்கப்பட்ட மூன்று அரசியல்வாதிகள், தனிமைப்படுத்தப்படாமல் இருக்கவும் முடிந்தது.  

ஒரு மாதத்துக்குள் அம்மூவருக்கும் எதிராக விசாரணை நடத்தவேண்டும் என, முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். அரசாங்கம் அதற்காக, ஒரு பொலிஸ் குழுவை நியமித்தது. 
ஆனால், அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்ததாகப் போதிய ஆதாரத்துடன் இன்னமும், ஒரு முறைப்பாடாவது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.  

 இவர்கள் பயங்கரவாதிகள் எனக் கூறி, உயிரை மாய்த்துக் கொள்வதாகத் தெரிவித்து, உண்ணாவிரதமிருந்த ரதன தேரர், எந்தவொரு முறைப்பாட்டையும் செய்யவில்லை.   

ஒரு சமூகமாகப் பாதிக்கப்படும் போது, ஒரு சமூகமாகவே அதனை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. 

ஆனால், அரசியலில் முஸ்லிம்கள், ஏனைய சமூகங்களோடு இரண்டறக் கலந்து செயற்படுவதே சிறந்தது. அதற்கான சூழலை, ஏனைய சமூகங்கள் அழித்துவிடக் கூடாது.  

எனினும், முஸ்லிம்கள் தமது எல்லைகளை அறிந்து, அவற்றை மீறாமல் இருக்கவும் வேண்டும். 1983ஆம் ஆண்டு, தமிழ்த் தலைவர்கள் அனைவரும், நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரித்ததைப் போன்று, முஸ்லிம் தலைவர்களும் நாடாளுமன்றத்தை விட்டும் அகலாமல் இருந்தமை பொருத்தமானதாகும்.   

இந்தப் பிரச்சினையால், முஸ்லிம் தலைவர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, நீடிக்கும் எனக் கூற முடியாது. நீடிப்பதே, பாதுகாப்புக்கு உகந்தது. அவ்வாறு நீடித்தாலும் இல்லாவிட்டாலும், முஸ்லிம் என்ற வட்டத்துக்குள் முடங்கிவிடாமல், தேசியப் பிரச்சினைகளின் போது, கூடியவரை தமது பங்களிப்பை வழங்கினால், ஏனைய சமூகங்களுடனான விரிசலைக் குறைக்கவும் சமூகத்துக்குள் தேசப்பற்றை மேலும் வளர்க்கவும் அது உதவும்.     

தமிழரின் பகிஷ்கரிப்பும் முஸ்லிம்களின் இராஜினாமாவும்

பேரினவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதில், முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகியதைப் பலர், 1983ஆம் ஆண்டு, தமிழ்த் தலைவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரிக்க எடுத்த முடிவோடு ஒப்பிட்டு, முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாகலாம் என, அச்சம் தெரிவிக்கின்றனர்.   

அன்று, தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரித்தன் விளைவாக, தமிழ் மக்களுக்கான ஜனநாயக அரசியல் வழி மூடப்பட்டது. எனவே, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆயுதப் போராட்டமே, ஒரேவழி என்ற நிலைமை உருவாகியது. 

பின்னர், 1989ஆம் ஆண்டு, போராளிகளின் கை வெகுவாக ஓங்கிய நிலையில், அந்தத் தலைவர்கள் மீண்டும் நாடாளுமன்ற அரசியலை ஆரம்பித்த போதும், அவர்களுக்கு அரசியலில் ஈடுபடப் போராளிகள் இடமளிக்கவில்லை. 

பாரியதோர் அழிவின் பின்னரே, மிதவாதத் தமிழ்த் தலைவர்கள், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் சுயமாக நாடாளுமன்றத்தில் இயங்க முடிந்தது.  

அவ்வாறானதோர் நிலைக்கு, முஸ்லிம் அரசியல் தள்ளப்பட்டு விடாது என்றே தெரிகிறது. ஏனெனில், தனிநாடு என்பதைப் போன்றதோர் இலக்கை, முஸ்லிம்களால் வகுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் நாட்டில், சிதறியே வாழ்கிறார்கள். 

அதேவேளை, முஸ்லிம் தலைவர்கள் அன்றுபோல், நாடாளுமன்ற அரசியலை முற்றாகக் கைவிடவில்லை; கைவிடவும் மாட்டார்கள். கைவிட்டாலும், அந்த இடத்தை நிரப்புவதற்காக, முஸ்லிம் ஆயுதக் குழுக்களும் இல்லை. அவ்வாறாக, ஆயுதக் குழுக்களால் அடையக்கூடிய இலக்கும் இல்லை.  

ஆயினும், இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியைப் போன்றதோர் நெருக்கடியே, அன்று, தமிழ்த் தலைவர்களை நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரிக்கச் செய்தது. பகிரங்கமாக அவமானப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதே, அவர்களின் பகிஷ்கரிப்புக்கு உடனடிக் காரணமாகியது.   

‘தமிழ் ஈழம்’ என்னும் தனித்தமிழ் நாட்டுக்கான ‘வட்டுக்கோட்டை பிரகடனம்’ நிறைவேற்றப்பட்டு, ஒரு வருடத்திலேயே, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலின் போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான சுலோகமும் தமிழ் ஈழமாகவே இருந்தது. “தமிழ் ஈழத்துக்கான ஆணையை வழங்குங்கள்” என்றே, கூட்டணியின் தலைவர்கள், அன்று தமிழ் மக்களிடம் கோரினர்.   

எனவே, அந்தத் தேர்தலின் போது, தென் பகுதியில் தமிழர்கள் மீதான எதிர்ப்பு வளர்ந்தது. அக்காலத்தில், பிரதான தேர்தல்களைத் தொடர்ந்து, தேர்தல் கலவரங்கள் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. 1977ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலை அடுத்தும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வன்செயல்கள் ஆரம்பிக்கப்பட்டதோடு, அது மிக விரைவில், ஏற்கெனவே வளர்ந்திருந்த, தமிழர் விரோத மனப்பான்மையின் காரணமாக, தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக மாறியது. 

குறிப்பாக, மலையகத் தமிழர்களே அதனால் பாதிக்கப்பட்டனர். வடக்கிலும், இஞைர்களுக்கு எதிரான அடக்குமுறையும் அதிகரித்தது.  

தெற்கே, நிலைமை வழமைக்குத் திரும்பிய போதிலும், 1981ஆம் ஆண்டு மீண்டும் வடக்கு, கிழக்குக்கு வெளியே, தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் பரவின. 

சில வாரங்களில் நிலைமை வழமைக்கு திரும்பியது. ஆனால், வடக்கில் அடக்குமுறை நீடித்தது. 1979ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, மூன்று மாதங்களில், வடக்கில் தமிழ்க் கிளர்ச்சிக்காரர்களை அடக்கிவிட்டு வருமாறு கூறி, அவரது மருமகனான பிரிகேடியர் வீரதுங்கவை அனுப்பினார். 

அவர், வடக்கில் மாபெரும் அழிவை ஏற்படுத்தினார். குடாநாடெங்கும்  சடலங்கள் சிதறிக் கிடக்கும் நிலை உருவாகியது.  

இந்த நிலையில் தான் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவ வீரர்கள், தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்பட்டடனர். இது, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் ஈஸ்டர் தாக்குதலைப் போல், அக்காலத்தில் பாரியதொரு சம்பவமாகி, நாடு அதிர்ந்தது. 

இதன் விளைவாகவே, 1983ஆம் ஆண்டு, தமிழர்களுக்கு எதிரான பெரும் கலவரம் ஏற்பட்டு, பாரியதோர் அழிவு ஏற்பட்டது.   

அதனால், பெரும் மன அழுத்தத்துக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களைத் தேற்றுவதற்குப் பதிலாக, ஜெயவர்தன அரசாங்கம், அவர்களை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளும் வகையில், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்தது. 

அதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச ஊழியர்கள் நாட்டுப் பிரிவினைக்கு எதிராகச் சத்தியப் பிரமாணம் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.   

தாமாக ஆரம்பிக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கைக்காக, தமிழ் இளைஞர்கள் உயிரைப் பணயமாக வைத்து, ஆயுதம் ஏந்தியிருக்கும் நிலையிலும், தமிழ் மக்கள், இனவாதத் தாக்குதல்களாலும் அடக்குமுறையாலும் நெருக்கடிக்கும் அவமானத்துக்கும் உட்படுத்தப்பட்டு இருந்த நிலையிலும், தமிழ்த் தலைவர்கள், நாட்டுப் பிரிவினைக்கு எதிராகச் சத்தியப் பிரமாணம் செய்யும் நிலையில் இருக்கவில்லை. 

எனவே, அவர்கள் நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரித்தனர். மூன்று மாதங்களில், அவர்களது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகியது. தமிழர்களின் அரசியல், முற்றாகவே ஆயுதக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

இது போன்றதொரு நிலைமை, முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட இடமில்லைத்தான். ஆனால், பேரினவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்தால், தொடர்ந்தால் முஸ்லிம் இளைஞர்களில் சிலராவது, தேசிய தௌஹீத் ஜமாஅத்காரர்களைப் போல் விபரிதமானதும் அர்த்தமற்றதுமான பயங்கரமான முடிவுகளை எடுக்கக்கூடும். 

எனவேதான், முஸ்லிம் தலைவர்கள் விவேகமாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .