மூன்றாம் உலகப்போரை நோக்கி

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பாவெலின் ஆலோசகராக இருந்த லோரன்ஸ் விலக்சன், மூன்றாம் உலகப்போர் ஒன்று எதிர்நோக்கப்படுமாயின் அது இஸ்‌ரேலின் தூண்டுதலாலேயே நடைபெறும் என, அண்மையில் எச்சரித்திருந்தார்.

அது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், எவ்வாறு முதலாம் உலகப்போர் ஒஸ்திரியாவின் சர்வாதிகார ஜனாதிபதி பெர்டினாண்டில் சரஜேவோவில் படுகொலை மூலம், ஜேர்மன் - பிரித்தானியா இடையே அடிப்படையில் தூண்டப்பட்டதோ, அவ்வாறு, மூன்றாம் உலகப்போர் ஒன்று ஏற்படுமாயின் அது இஸ்‌ரேல், ஈரான், சிரியா, லெபனாலில் ஷியா முஸ்லிம் ஆட்சியாளர்களை வெல்வதன் மூலமாக, மத்திய கிழக்கை சுன்னி முஸ்லிம்களின் ஆட்சியாதிக்கத்தின் கீழ் அமெரிக்க - இஸ்‌ரேல், சவூதி அரேபியா தலைமையிலான ஒரு பிராந்தியத்தை உருவாக்க முனைப்படும் ஒரு விளைவாகவே தோற்றம் பெறும் எனவும் எச்சரித்திருந்தார்.

அடிப்படையில் மத்திய கிழக்கு மோதல்கள், பிராந்தியம் சார்ந்தவையோ அல்லது வேறுபட்ட மதங்கள்  சார்ந்தவையோ அல்ல. இவை அடிப்படையில் இஸ்லாமியக் குழுக்களுக்கு இடையேயான வன்போக்கான தன்மையின் மீது கட்டப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களே ஆகும். சுன்னி, ஷியா இஸ்லாமியப் பின்பற்றல்களுக்கு இடையேயான குறித்த மோதல்கள், மற்றும் அதன் அடிப்படையில் தமது ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கு முனையும் இஸ்‌ரேலினதும் அமெரிக்காவினதும் செயற்பாடுகளின் மத்தியிலேயே, இப்பிராந்தியத்தின் அரசியல் நிலைமைகள் மோசமாக்கப்படுகின்றன.

வரலாற்றைப் பொறுத்தவரை, சுன்னி, ஷியா எனப்பட்ட இஸ்லாமியப் பிரிவினை, இஸ்லாமிய இறைதூதர் முஹம்மது நபி இறந்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு கலீஃபாவாக, அவருக்கு அடுத்தபடியாக யாரைப் பொதுவாக ஏற்றுக்கொள்ளுதலின் அடிப்படையில் தோற்றம் பெற்று, தொடர்ச்சியாக ஜமைல் போர், சிபின் போருக்கு வழிவகுத்தது. ஆயினும், கார்பாலா போரில் ஹுஸைன் அலி கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து தீவிரமடைந்த இப்பிரிவினைவாதமே, இன்றுவரை சர்வதேச அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சிநிரலில் வேறுபட்ட உருவாக்கம் கொண்டுள்ளது.

தற்போதைய நிலைமையின் அடிப்படையில், உலகின் ஒட்டுமொத்த முஸ்லிம்களில் 85-90% சுன்னி முஸ்லிம்கள் எனவும், 10-15% ஷியா பிரிவைச் சேர்த்தவர்கள் எனவும், புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், சுன்னி பிரிவைப் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஷியா இஸ்லாமியர்கள் ஈராக், பஹ்ரைன், லெபனான், ஈரான் ஆகியவற்றின் குடிமக்களில் பெரும்பான்மையினராகவும், பாகிஸ்தானிலும் சிரியாவிலும் யேமனிலும், அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராகவும் உள்ளனர். ஈரான், உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான ஷியா முஸ்லிம்களைக் கொண்ட நாடு ஆகும்.

இவ்விபரங்கள், ஒவ்வொரு நாட்டினதும் அரசியல் மற்றும் பிராந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்துவதுடன், அதன் அடிப்படையிலேயே அண்மைய சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கு இடையிலான நிழல் யுத்தம், அரபு வசந்தத்தின் ஒரு பகுதியாக பஹ்ரேன் வசந்தம், 2003 அமெரிக்கப் படையெடுப்புக்கு பின்னரான ஈராக் யுத்தம், மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிரிய யுத்தம், மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் (ISIS) உருவாக்கம் என்பன, ஏனைய புறக்காரணிகளின் காரணங்களுடன் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டியதாகும்.

இது ஒரு புறமிருக்க, வரலாற்றின் மறுபுறம் இஸ்‌ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான மோதல், யூத தேசியவாதத்துக்கும் அரபு தேசியவாதத்துக்குக்கும் இடையிலானது. எனினும் அக்குறுங்குழுவாத முரண்பாடுகள், 1947இல் முழு அளவிலான உள்நாட்டுப் போராட்டமாக பலஸ்தீனத்தில் வளர்ச்சியடைந்து, மே 1948இல் சுதந்திர இஸ்‌ரேலியப் பிரகடனத்தைத் தொடர்ந்து, அரபு-இஸ்‌ரேலிய முரண்பாடாக மாறியது. 1973ஆம் ஆண்டு யோம் கிப்பூர் போருக்குப் பின்னர், 1979இல் இஸ்‌ரேலும் எகிப்தும் இடையே சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதுடன், அதன் அடிப்படையில் இஸ்‌ரேல், சிங்காய் தீபகற்பத்திலிருந்து தனது படையைத் திரும்பப் பெற்றதுடன், மேற்குக் கரையிலும் காஸா பகுதிகளிலும் தனது இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. உடன்படிக்கையின் அடிப்படையில் இஸ்‌ரேலிய சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதுடன், இஸ்‌ரேல் ஒருதலைப்பட்சமாக கோலான் ஹைட்ஸ் பகுதியையும் கிழக்கின் ஜெருசலேம் பகுதியையும், தனதாகப் பிரகடனம் செய்திருந்தது.

குறித்த இஸ்‌ரேல் - அரபு யுத்தம், 1982 லெபனான் எதிர் இஸ்‌ரேல் யுத்தத்துடன் மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்ததுடன் இடைக்கால ஒஸ்லோ உடன்படிக்கைகள் மற்றும் இஸ்‌ரேலிய - பலஸ்தீனிய சமாதான முன்னெடுப்புகளின் பின்னணியில், குறித்த யுத்த நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 1994இல் பலஸ்தீனிய தேசிய அரசு உருவாகியிருந்தது. அதே வருடம், இஸ்‌ரேலும் ஜோர்தானும் சமாதான உடன்படிக்கையில் ஈடுபட்டு, இஸ்‌ரேலிய மற்றும் பாத்திஸ்ட் சிரியாவுக்கு இடையேயும், லெபனானுடனும் 2006இல் இருந்து ஒரு போர்நிறுத்தம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படியிலேயே ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி, 350 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனையொன்றை 2017இல் சவூதி அரேபியாவுக்கு மேற்கொண்டிருந்தமை, கடந்த பத்தி ஒன்றில் விவரிக்கப்பட்டவாறு, பிரித்தானியா அண்மையில் சவூதி அரேபியாவுக்கு பெருமளவிலான ஆயுத தளவாடம் விற்றமை என்பன, சவூதி - இஸ்‌ரேல் - அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மத்திய கிழக்கில் இராணுவ வல்லமையுடன் கூடிய செல்வாக்கைத் தக்கவைத்தல் என்பது பார்க்கப்படவேண்டியதாகும்.

மறுபுறத்தில் நேட்டோவும் அத்லான்டிக் சபையும், மார்ச் 25, 2018 அன்று, ஐரோப்பாவின் எல்லைப் பிராந்தியங்களில், ரஷ்யா குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை மேற்கொள்கின்றது எனவும் நேட்டோவின் எல்லைகளுக்குள் இராணுவத் துருப்புகளையும் ஏவுகணைகளைச் சுமக்கக்கூடிய வல்லமை கொண்ட போரியல் கப்பல்களையும் ரஷ்யா அனுப்பியுள்ளது என்ற விடயமும், அண்மையில் மேற்கத்தேய நாடுகள் பிரித்தானியாவில் நடைபெற்ற இரசாயனத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தமை - அதற்குப் பதிலாக ரஷ்யாவும் மேற்கத்தேய நாடுகளின் இராஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தமையும், ஏற்கனவே ஒரு பனிப்போரின் காலகட்டத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கில், குறிப்பாக சிரியாவுக்கும் ஈரானுக்கும் எதிராக ஏதாவது நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்‌ரேல் தலைப்படுமாயினும், அது மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச்செல்வது தவிர்க்கமுடியாமல் போய்விடும் என்பது, மறுக்கமுடியாத ஒன்றாகும்.


மூன்றாம் உலகப்போரை நோக்கி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.