2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 மே 16 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார்.  

 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.  

கடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்கவுள்ளதாக அவர் அன்று கூறினார். 

ஆனால், “2020 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை” என்று அவர் கடந்த வாரம் கூறினார்.   

வெசாக் வாரத்தில், மே மாதம் முதலாம் திகதி வந்தமையால், மே தினத்தை, மே மாதம் முதலாம் திகதி நடத்தாமல், மே மாதம் ஏழாம் திகதி நடத்துவதென அரசாங்கம் தீர்மானித்தது.

 அதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், கடந்த ஏழாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடியில் நடைபெற்ற போதே, தாம் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெறப்போவதில்லை என, ஜனாதிபதி கூறியிருந்தார்.  

ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர், “2020 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறவிருக்கிறீர்களா” எனக் கேட்பதாகவும் அதனாலேயே தாம், இவ்வாறு கூறுவதாகவும் அவர், அக்கூட்டத்தின் போது கூறினார். 

மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றும் தமது பொறுப்பு, முடிவடையாததாலேயே, 2020 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் அரசியலில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால மேலும் கூறினார்.  

ஊடகங்கள் உள்ளிட்ட பலர், தம்மிடம் கேட்கும் கேள்விக்குப் பதிலாக, தாம் இவ்வாறு கூறுவதாக மைத்திரிபால கூறினாலும், எவரும் அண்மைக் காலத்தில் அவரிடம் அவ்வாறு கேட்டதாக நாம் அறியவில்லை; ஒருவரும் அவ்வாறு கேட்வில்லை. அவருக்குத் தான், அவ்வாறு கூறத் தேவை ஏற்பட்டுள்ளது போலும்.   

இவ்வாறு தாம், 2020 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் அரசியலில் ஈடுபடப் போவதாக, மற்றோர் அரசியல்வாதி கூறியிருந்தால், அவருக்கு ஏதாவது மனக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறதோ என மக்கள் சந்தேகிக்கலாம்.   

ஆனால், மைத்திரிபால சிறிசேன அவ்வாறு கூறும்போது, ஏன் அவர் அவ்வாறு கூற வேண்டும், 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும், அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால், ஈடுபட வேண்டியதுதானே என எவரும் கூறப் போவதில்லை. 

ஏனெனில், “ஒரு முறை மட்டுமே, ஜனாதிபதி பதவியில் இருப்பேன்” என மைத்திரிபால ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்.  

அவர், அன்று அவ்வாறு கூறியதால்தான், “2020 ஆம் ஆண்டு, ஓய்வு பெறப் போவதில்லை” என அவர், மே தினத்தன்று கூறிய போது, ஊடகங்களுக்கு அது பெரும் செய்தியாகத் தென்பட்டது. எனவே, அனேகமாகச் சகல ஆங்கில மற்றும் சிங்களப் பத்திரிகைகளும் மறுநாள் தமது முன்பக்கத் தலைப்புச் செய்தியாக, ஜனாதிபதியின் அந்த உரையைப் பிரசுரித்தன. தமிழ்ப் பத்திரிகைகளும் அதற்குப் பெரும் முக்கியத்துவம் வழங்கியிருந்தன.  

ஆயினும் அவர், இந்தக் கருத்தை வெளியிட்ட முதலாவது முறை இதுவல்ல. தமது பதவிக்காலம் ஆறு வருடங்களில் முடிவடைகிறதா அல்லது ஐந்து வருடங்களில் முடிவடைகிறதா என அவர், கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தமை பலருக்கு நினைவில் இருக்கும்.  

 19ஆவது அரசமைப்பின்படி, ஐந்து  ஆண்டுகளில் பதவி துறக்க, ஜனாதிபதி மைத்திரிபால நினைத்திருந்தால், பதவிக் காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என உயர் நீதிமன்றத்திடம் கேட்கத் தேவையில்லை. அவர், ஆறு வருடங்கள் பதவியில் இருக்க விரும்பியதாலேயே, அவ்வாறு நீதிமன்றத்தின் கருத்தை விசாரித்தார் என்பதே பொதுவாக நம்பப்படுகிறது.   

அதையடுத்து, ஜனவரி மாதம் 18 ஆம் திகதி, கொழும்பு மாவட்டத்தில் கொஸ்கமவில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, “ஊழல்ப் பேர் வழிகளை, நரகத்துக்கு அனுப்பிவிட்டே பதவி துறப்பேன்” எனக் கூறியிருந்தார்.   

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்காக, மூன்று ஆண்டுகளில், இரண்டு பேருக்கு மட்டுமே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தின் மிகுதி இரண்டு வருடங்களில், ஏனையவர்களுக்குத் தண்டனை வழங்க முடியுமா என்பது சந்தேகமே. 

எனவே, இதுவும் ஜனாதிபதி 2020ஆம் ஆண்டுக்குப் பின்னரும், பதவியில் இருக்க விரும்புவதையே எடுத்துக் காட்டுவதாக அப்போது பலர் கூறியிருந்தனர்.  

2020ஆம் ஆண்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதில்லை என்றுதான் ஜனாதிபதி மைத்திரி கூறியிருக்கிறாரே அல்லாது, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் கூறவில்லையே எனச் சிலர் வாதிடலாம்.

ஆனால், தமது பொறுப்புகளை நிறைவேற்றவே தாம், ஓய்வு பெறாமல் இருக்கப் போவதாக ஜனாதிபதி கூறும் போது, ஜனாதிபதி என்ற முறையில், தமது பொறுப்புகளையே அவர் குறிப்பிடுகிறார் என்றே கருத வேண்டும்.  

அவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, ஒரு முறைதான் ஜனாதிபதியாகப் பதவிவகிக்க வேண்டும் என எவரும் அவருக்குக் கூறவில்லை. எத்தனை முறை ஜனாதிபதியாகப் போகிறீர்கள் என்று எவரும் கேட்கவும் இல்லை. எனவே, “நான் ஒரு முறைதான் ஜனாதிபதியாவேன்” என, அன்று மைத்திரிபால சிறிசேன கூறும்போது, நேர்மையாகவே கூறியிருக்க வேண்டும்.   

ஆனால், உயிர் வாழும்வரை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என எண்ணியிருந்த, மஹிந்த ராஜபக்ஷவின் அந்த எதிர்ப்பார்ப்புகளைச் சிதறடித்த மைத்திரிபால, ராஜபக்ஷ குடும்பத்தில் பலரை, நீதிமன்றத்தின் முன் நிறுத்தியபின், இப்போது தனித்து இருக்கிறார்.   

எனவே, மைத்திரிக்குத் தமது எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் ஏற்பட்டு இருக்கலாம். தம்மைச் சீண்டியவர்களை, மஹிந்த எவ்வாறு பழி வாங்குவார் என்பது, அவருக்கு நன்றாகத் தெரியும். 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கும் என்ன நடந்தது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.   

தாம், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தால், இப்போது ஆறடி நிலத்துக்குள்ளேயே இருப்போம் என, இதற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.  

 பஷில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகிேயாரை, நீதிமன்றங்களின் முன் நிறுத்துவதற்கு முன்னரே, மஹிந்தவின் கோபத்தைப் பற்றி அவர் அவ்வாறு அறிந்திருந்தார் என்றால், இப்போது அவர் தமது எதிர்க்காலத்தைப் பற்றி, எவ்வளவு அச்சம் கொண்டிருப்பார் என்பதை, ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்.  

பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, பெரும்பான்மையான மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.   

இதனால், மைத்திரிபால சிறிசேன மேலும் அச்சம் கொண்டிருப்பார். ஆனால், அவரால் தப்பியோட முடியாது. 2020ஆம் ஆண்டுக்குப் பின்னரும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வழி முறையொன்று, அவருக்கு இருக்க வேண்டும்.  

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்து, அவருக்கு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அரசியல் ரீதியாகவே அவர், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. எனவேதான், அவர் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடப் போகிறார் போலும்.  

மஹிந்த ராஜபக்ஷவும் இதேபோல்தான் நடந்து கொண்டார். 2015ஆம் ஆண்டு அவர், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர், அரசியலில் இருந்து ஓய்வு பெற இருந்தாரோ தெரியாது. அவ்வாறு அவர், ஓய்வு பெறவிருந்தாலும் இந்தப் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக, அவர் மீண்டும் அரசியலில் குதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.   

மைத்திரிபால சிறிசே,ன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது, மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் மிகவும் அச்சம் கொண்டனர். மஹிந்தவைப் போலவே, மைத்திரியும் தமது எதிரிகளுக்கு எதிராகத் தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பாவிப்பார் என்பதே, அவர்களது பயமாக இருந்தது.   

எனவே, பஷில் நாட்டைவிட்டு ஓடிவிட்டார். மஹிந்த, தம்மிடம் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியைத் தாமாகவே முன்வந்து மைத்திரிபாலவிடம் கையளித்தார். அவர், அன்று நினைத்து இருந்தால், கட்சியில் தமக்கு இருந்த ஆதரவைப் பயன்படுத்தி, கட்சியாப்பை மாற்றி, மைத்திரிபாலவிடம் அந்தப் பதவியை வழங்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், பதவியைக் கையளித்து விட்டார். அவருக்கு ஆதரவாக, அப்போது நாடாளுமன்றத்தில் 142 உறுப்பினர்கள் இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் 47 பேர் மட்டுமே இருந்தனர். 

அவ்வாறு இருந்தும் மைத்திரிபால, தமது பிரதமராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் போது, அந்த 142 பேரில் எவரும் அதை எதிர்க்கவில்லை.   

அவர்கள் நினைத்திருந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றின் மூலம், ரணிலின் பிரதமர் பதவியைப் பறித்திருக்க முடியும். ஆனால், அவர்களின் பயம் அதற்கு இடமளிக்கவில்லை.  

ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரையறையை, மஹிந்த 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் இரத்துச் செய்தார். 

ஆனால் மைத்திரிபால பதவிக்கு வந்து, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், அந்த வரையறையை மீண்டும் கொண்டுவந்தபோது, மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் அதை ஆதரித்தனர். இவையெல்லாம் பயத்தால் செய்யப்பட்டவை ஆகும்.  

ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தினர், ஒவ்வொருவராக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் போது, பயந்து பயனில்லை என்றதொரு நிலை உருவாகியது. எனவே, தோல்வியடைந்த கட்சிகள், மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் வழமையான காலத்துக்கு முன்பதாகவே, மஹிந்த அணியினர் அதற்காக முயற்சி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  

அத்தோடு, மஹிந்த அணியில் இருந்த சிறிய கட்சிகளான விமல் வீரவன்சவின் ‘தேசிய சுதந்திர முன்னணி’, உதய கம்மன்பிலவின் தலைமையிலான ‘பிவிதுரு ஹெல உருமய’ ஆகிய கட்சிகள், எவ்வாறோ மஹிந்தவை உசுப்பிவிட்டாலன்றி, தமக்கு வாழ்வே இல்லை என்பதை அறிந்து, ‘மஹிந்தவுடன் எழுவோம்’ (Rise with Mahinda) என்ற பெயரில், ஓர் இயக்கத்தை ஆரம்பித்து, நாடு முழுவதிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தின. அதன் மூலம், மஹிந்த அணி மீண்டும் தலை தூக்கிவிட்டது.  

ஆனால், மஹிந்தவின் மீள் எழுச்சிக்கும் மைத்திரியின் மீள் எழுச்சிக்கான முயற்சிக்கும் இடையே, பாரிய வேறுபாடொன்று இருக்கிறது. 

மஹிந்த, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அப்போதும் ஸ்ரீ ல.சு.கவும் ஐ.ம.சு.முவும் ஏறத்தாழ முழுமையாகவே அவருக்கு ஆதரவாகவே இருந்தது.   

ஆனால், மைத்திரிபால இப்போது ஸ்ரீ ல.சு.கவினதும் ஐ.ம.சு.முவினதும் தலைவராக இருந்த போதிலும், அக் கட்சிகளின் மிகச் சிறியதொரு பிரிவினரே அவரை ஆதரிக்கின்றனர்.   

அவரது இரு கட்சிகளுக்கும், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது, 15 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்த போதிலும், அதை நிலையானதோர் ஆதரவுத் தளமாகக் கருத முடியாது. ஏனெனில், அந்தத் தேர்தலின் பின்னர், நாட்டில் தென் பகுதிகளில், அரசியல் அலை திரும்பிவிட்டது.   

எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகளில், மக்கள் மனதைக் கவரும் வகையில் செயற்பட்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்ட மைத்திரிபால நினைத்தாலும், அவரால் அதற்காக அரசாங்கத்தை வழிநடத்த முடியாது.   

ஐ.தே.க விரும்பியவாறே, அரசாங்கம் இயங்கி வருகிறது. அதேவேளை, அரசாங்கம் பெரும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளது. 

எனவே, 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர், அரசியலில் ஈடுபடுவதானது மைத்திரிபாலவுக்கு வாழ்வா, சாவா என்ற நிலையிலான போராட்டமொன்றாகும்.

இந்த நிலையில், அவரிடம் இனப் பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வை எதிர்ப்பார்க்க முடியாது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .