2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஜினியின் குரல்: மௌனம் காக்கும் தி.மு.க, அ.தி.மு.க

எம். காசிநாதன்   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணர்,  அர்ஜூணன் போன்றவர்கள்” என்று, ரஜினிகாந்த் பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது.   

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ‘கேட்டல், கற்றல், வழி நடத்துதல்’ (Listening, Learning, Leading) என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னையில் நடத்தப்பட்டதே பலரது புருவங்களை உயர்த்தியது. துணைக் குடியரசுத் தலைவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இளம் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். 

அப்படிப்பட்ட நூலை எழுதியுள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு, தனது புத்தக வெளியீட்டு விழாவை டெல்லியில் வைத்திருந்தால், பிரதமர் பங்கேற்றிருப்பார்; குடியரசுத் தலைவர் பங்கேற்றிருப்பார். ஏன், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் கூடப் பங்கேற்று வாழ்த்தி இருப்பார்கள்.

ஏனென்றால், வெங்கய்யா நாயுடு அனைத்துக் கட்சித் தலைவர்களின் நண்பர் மட்டுமல்ல; அனைவருக்கும் பொதுவானவராகக் கட்சி சார்பற்ற முறையில், மாநிலங்களவையைக் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கிறார்.   

ஆனால், இந்தப் பொன்னான வாய்ப்பைத் தவிர்த்து விட்டு, துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும்; காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டது குறித்து, அவர் குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகச் சென்னையில் நடத்தப்பட்டது. 

அந்த மேடையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டிருந்தார். முதலமைச்சர் பழனிசாமி மிகவும் இலாவகமாக, காஷ்மிர் பிரச்சினை குறித்தோ, அதில் மத்திய அரசு எடுத்த முடிவு குறித்தோ பேசாமல், “தமிழக அரசாங்கத்தின் நண்பர், தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களுக்கு, அனுமதி பெற்றுத் தந்தவர் வெங்கய்யா நாயுடு” என்ற அளவில் மட்டும், அவரைப் பாராட்டினார்.  

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்பாக, முதலமைச்சர் காஷ்மிர் பிரச்சினை குறித்துப் பாராட்டிப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் காஷ்மிர் பிரச்சினை பற்றி எதுவுமே பேசாமல்த் தவிர்த்தது, பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்தது. 

அதுமட்டுமல்ல, இன்றுவரை மத்திய அரசின் சாதனை நடவடிக்கையான காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து இரத்துக் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமோ கருத்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

அதி.மு.கவின் சார்பில், இது குறித்துக் கருத்து எதுவும் கூறாத நிலையில், காஷ்மிர் பிரச்சினையைத் தமிழ்நாட்டில் முழுவதுமாகக் கையில் எடுத்தது தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான். 

தி.மு.கவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளை அழைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, “காஷ்மிர் மாநில சட்டமன்றத்தைக் கலந்து ஆலோசிக்காமல், அந்த மக்களின் கருத்தைக் கேட்காமல், சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டது தவறு” என்றும், ‘ஜனநாயக படுகொலை’ என்று தீர்மானம் நிறைவேற்றி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மிர் முன்னாள் முதலமைச்சர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிவித்தார். காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்தை இரத்துச் செய்யும் சட்டத்தை, காஷ்மிர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமையும் வரை, நிறுத்தி வைக்க வேண்டும் என்றே, ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

ஆகவே, தி.மு.கவின் இந்த முயற்சியின் முனையை மழுங்கடிப்புச் செய்யவும், காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்தை இரத்துச் செய்தது, மத்திய அரசாங்கத்தின் துணிச்சலான முடிவு என்பதைத் தமிழக மக்களுக்கு அறிவிக்கவே வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா பெரிதும் பயன்பட்டது. அப்படிப்பட்ட விழாவில்தான், பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் ரஜினி பாராட்டினார். தென்னகத்தில் கிடைத்த அந்தப் பாராட்டு, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இந்தப் பாராட்டுதலுக்கு எதிர்பார்த்தது போல் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இதற்குக் கண்டனம் தெரிவித்தன. 

இவை அனைத்தும், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆகும். ஆனால், ரஜினியின் கருத்துப் பற்றி, இக்கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தி.மு.க எவ்வித விமர்சனமும் செய்யவில்லை.  ஒரு பக்கம், மத்திய அரசாங்கத்தின் காஷ்மிர் நடவடிக்கையை அ.தி.மு.க ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை; மௌனமாக இருக்கிறது. 

இன்னொரு பக்கம், ரஜினியின் காஷ்மிர் ஆதரவுக் கருத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரை, அவர் பாராட்டியதையும் தன் கூட்டணிக் கட்சிகள் போல் விமர்சனம் ஏதும் செய்யாமல் அமைதி காக்கிறது தி.மு.க. 

ஆகவே, தமிழக அரசியலில் இனம் புரியாத ஓர் அமைதி, இந்த இரு திராவிடக் கட்சிகள் மத்தியில் இருப்பது, பலருக்கு வியப்பாக இருப்பதைக் காண முடிகிறது. 

இதை வைத்துப் பார்க்கும் போதுதான், ரஜினியின் பாராட்டு என்பது, காஷ்மிர் விடயத்தையும் தாண்டி, அவர் உருவாக்கப் போகும் புதுக்கட்சி வியூகத்திலும் மறைந்திருக்கிறது என்ற கருத்து, எங்கும் பரவியிருக்கிறது.

“சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். அதுவும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” என்றவர் ரஜினி. ஆனால், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு உடனடி வாய்ப்பில்லை என்பதால், புதுக்கட்சி தொடங்கும் அறிவிப்பை ரஜினி தள்ளிப் போட்டு வருகிறார். இனி, ரஜினி புதுக்கட்சி தொடங்க வேண்டும் என்றால், அவரது நோக்கத்தின்படி 2021 வரை பொறுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

அ.தி.மு.க ஆட்சி வழக்கம் போல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் வருடமும் அதுவே. இது போன்ற சூழலில், ரஜினியை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற யுக்தியை, பா.ஜ.க தலைமை புரிந்து கொண்டிருப்பது போலவே, இந்தப் புத்தக விழா அமைந்தது. 

அதனால்தான், காஷ்மிர் போன்ற முக்கிய விடயத்தில், ரஜினியின் பாராட்டைப் பெறுவோம்; அவர் கட்சி ஆரம்பிக்கும் போது, தமிழக அரசியலில் எத்திசையில் எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என, பா.ஜ.க தலைமை நினைத்திருக்கும். அதன் வெளிப்பாடுதான், ரஜினியின் இந்தப் பாராட்டு.  

பாராட்டியதோடு ரஜினி விடவில்லை; அதற்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பியவுடன், தன்னிலை விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அந்த விளக்கத்தில், ‘காஷ்மிர், தீவிரவாதிகளின் தாய் வீடாகவும் பயங்கரவாதிகளின் நுழைவு வாயிலாகவும் இருந்தது. இது மிகப்பெரிய இராஜதந்திர நடவடிக்கை. எதை அரசியல் ஆக்க வேண்டுமோ, அதை ஆக்குங்கள். இது நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். இதில் அரசியல் செய்வது தவறு’ என்று, தமிழகத்தில் தன்னை விமர்சித்த கட்சிகளுக்குப் பதிலடி தந்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் உள்ள மற்றைய அரசியல் கட்சிகள் எல்லாம், காஷ்மிர் விடயத்தில் அரசியல் பண்ணுகிறார்கள் என்ற செய்தி, ரஜினியின் குரலாக மாறியிருக்கிறது.  

பொதுவாக, தமிழ்நாட்டு மக்கள் நாட்டுக்கு எதிராகப் போர் நடைபெறுகின்ற நேரங்களில், தேசத்தின் பக்கம் நின்றவர்கள் என்ற பெயர் எப்போதும் உண்டு. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்ற பல முன்னணித் தலைவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வாக்காளர்கள்தான் காங்கிரஸின் வாக்காளர்களாகத் தமிழகத்தில் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு, அந்த வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு பல்வேறு திசைகளில் விலகிச் சென்று விட்டார்கள். அந்த வாக்காளர்களை ஒன்று திரட்ட, அவர்கள் மத்தியில், நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் இங்குள்ள கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்ற செய்தியை ரஜினி கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். ரஜினியின் இந்தக் குரல் யாருக்குப் பயன்படப் போகிறது? அவருக்கா, பா.ஜ.கவுக்கா என்பது முக்கியமான கேள்வி.  

ரஜினி பொதுவானவராக, அரசியலுக்கு வருவதுதான், இங்குள்ள தி.மு.கவுக்கோ அ.தி.மு.கவுக்கோ அச்சுறுத்தல். அவர்களின் வாக்கு வங்கிக்கும் ஆபத்து. 

ஆனால், பா.ஜ.கவின் ஆதரவாளராக, பா.ஜ.கவுடன் நட்பாக இருப்பவராக ரஜினி தமிழக அரசியலில் குதிப்பது தங்களுக்கு எவ்வித ஆபத்தையும் அளிக்காது என்று தி.மு.கவும் நினைக்கிறது; அ.தி.மு.கவும் நினைக்கிறது. 

இந்நிலையில், காஷ்மிர் விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து, தன் மீது பா.ஜ.க முத்திரையைக் குத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த முத்திரையுடன், அவர் கட்சி தொடங்கினால் நமக்கு ஒன்றும் கவலையில்லை என்று தி.மு.கவும் அ.தி.மு.கவும் நினைக்கின்றன. 

ஆகவேதான், மாநிலத்தில் வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளுமே, ரஜினியின் கருத்துகள் பற்றி, வேறு விமர்சனமோ, ஆதரவோ கொடுக்காமல் அமைதி காக்கின்றன. 

குறிப்பாக, தி.மு.கவுக்கு மிக நெருக்கமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை, வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பெற்ற அ.தி.மு.க, காஷ்மிர் விடயத்தில் வாய்மூடி இருக்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும் ‘புலி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன’  நம்மை கடித்துக் குதறாமல் போனால் போதும்’ என்ற எண்ணவோட்டத்திலேயே, ரஜினியைப் பார்க்கின்றன என்பதுதான் முக்கியமானது. அதனால் கவலைப்படாமல் இருக்கின்றன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .