2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றின் திருப்புமுனையில் வரலாறு படைப்போம்

காரை துர்க்கா   / 2019 ஜூலை 23 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈழத்தமிழர் வரலாற்றில் ஜூலை மாதம், கறைகள் படிந்த கறுப்பு மாதமாகவே, கடந்து செல்கின்றது. இவ்வருட ஜூலை மாதமும் இரத்தக்களரியை நோக்கிச் செல்கின்றதா என்ற பயமும் பதற்றமும் தமிழர் மனங்களில் குடிகொண்டு உள்ளது.   
தமிழர் தேசம் மீது, இரண்டு வகையான போர்கள், பேரினவாத அரசாங்கங்களால் ஏககாலத்தில் தொடுக்கப்பட்டு உள்ளன. முதலாவது, சிங்கள - தமிழ் இனப்பிணக்குத் தொடர்பான தீர்வுத் திட்டங்களைத் திட்டமிட்டவாறு, நொண்டிச் சாட்டுகளைக் கொண்டு காலம் கடத்திச் செல்வது.   

அதேநேரம், அக்காலப் பகுதியில் வடக்குக் கிழக்கின் தமிழர் இனப்பரம்பலை விரைவாக மாற்றி, அவர்களைப் பலம் குன்றச் செய்து, பௌத்த சிங்கள மயப்படுத்தி, மதமேலாதிக்கத்தை நிலைநாட்டுவதாகும். 

இதன் தொடராக, தீர்வுத் திட்டத்தையே நீர்த்துப் போகச் செய்வது. ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என வெற்றுக் கோசமிடுவது போன்ற திட்டமிடப்பட்ட சங்கிலித் தொடரான நடவடிக்கைகள் ஆகும்.   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் கொண்டு வரப்பட்ட (1956) தனிச்சிங்களச் சட்டமே, தமிழ் மக்களுக்கு தமிழ் (தாய்) மொழி மீதான பற்றை மேலும் அதிகரித்தது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதையை தலைவர் டி.எஸ் சேனநாயக்காவின் (1948) தமிழ் மண் பறிக்கும் திட்டங்களே, தமிழ் மக்களிடையே தமிழ் (தாய்) மண் காக்க வேண்டிய தேவைப்பாட்டைக் கூட்டியது. இதுவே, தமிழர் தாயகம், தமிழர் மரபு வழித்தாயகம், தாயகக் கோட்பாடு என்ற எண்ணக் கருக்களைத் தமிழர் மனங்களில் ஆழ விதைத்தது.   

தமிழ், தமிழர், தமிழர் தேசம் என்ற மூன்று அம்சங்களிலும் அடிப்படையிலேயே, தமிழ் மக்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்; தக்க வைக்க முடியும். ஆகவே, இவற்றைச் சிதைப்பதும் இல்லாமல் செய்வதுமே, அன்று தொட்டு, இன்று வரை பேரினவாதிகளது மந்திர உச்சாடனமாக உள்ளது. அதுவே, காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.   

தமிழர், சிங்களவர் இனப்பிணக்கைத் தீர்க்கும் முகமாகக் கொண்டு வரப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தம், 1958 ஏப்ரல் எட்டாம் திகதி, பௌத்த தேரர்களது அழுத்தம் காரணமாக, கிழித்து எறியப்பட்டது. அதையடுத்து, மே மாதம் ஐந்தாம் திகதி, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வவுனியாவில் நடைபெற்றது.   

அந்த மாநாட்டின் தலைவராக, திருமலை இராஜவரோதயம் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் உரையாற்றும்போது, “தமிழ் மக்களை இன்று (1958) ஒருவித சஞ்சலம் பிடித்திருக்கின்றது. அரசாங்கம், தங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக இல்லை என்ற உணர்ச்சி, அவர்தம் உள்ளங்களில் அலை மோதுகின்றது” எனத் தெரிவித்திருந்தார்.  இதே நிலைவரமே, இந்த நாட்டில் தமிழர்கள் விடயத்தில், 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் உள்ளது.   

இவற்றை எதிர்த்து, காலம்காலமாகக் குரல் எழுப்பிய தமிழ்த் தலைவர்களது கோரிக்கைகள் முற்றிலும் அசட்டை செய்யப்பட்டன; கண்டு கொள்ளப்படவே இல்லை. இவையே, மொழியையும் மண்ணையும் காப்பதற்காகத் தமிழ் இளைஞர்களை, ஆயுதம் தூக்க வேண்டிய நிலைக்குள் வலிந்து தள்ளின.   

தமிழ் மக்களது இருப்புக்கான விடுதலைப் போராட்டம், பேரினவாத அரசாங்கங்களால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இல்லாமல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சிங்களப் பௌத்த பேரினவாத அடாவடித்தனங்கள் உச்சம் தொட்டிருக்கின்றன. இவற்றால் தமிழ் மக்கள் கவலைகளாலும் மனச்சோர்வாலும் துவண்டு போய் இருக்கின்றார்கள்.   

அன்று, சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டமும் தோற்றது. அடுத்து, ஆயுதப் போராட்டமும் தோற்கடிப்புச் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ் மக்கள் இனி என்ன செய்வது, யாரிடம் முறையிடுவது,  முறையிட்டும் என்ன பயன் கிடைத்தது,  என்ன கிடைக்கப் போகின்றது? எனச் சஞ்சலமான நிலையிலேயே உள்ளனர்.   

தற்போது, பல கமெராக்கள் சுற்றிவரப் படமெடுக்கும் வேளையிலேயே, பேரினவாதம் தமிழர்களையும் அவர்தம் மதகுருக்களையும் கேவலமாக இழிவு படுத்துகின்றது. எச்சில் சுடுதேநீரை அவர்கள் தலையில் கொட்டுகின்றது; அதனை இரசிக்கின்றது. அவற்றை பொலிஸாரும் வேடிக்கை பார்க்கின்றனர். இதேநிலை, இன்று ஒரு பௌத்த மதகுருவுக்கு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிறமதங்களை மதிக்கும் பண்பை, கன்னியாவில் கண்ணியம் இல்லாது செய்து விட்டார்கள்.   

இந்நிலையில், மூடிய பிரதேசத்தில் அன்று நடைபெற்ற இறுதி யுத்தத்தில், பேரினவாதம் எப்படியெல்லாம் கரு அறுத்திருக்கும் என, ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.   

“பேரினவாதம் எங்களை மேலும் துன்புறுத்தத் துன்புறுத்த, வேதனைப்படுத்த, எங்கள் மண் மீதான காதல், எங்களுக்கு அதிகரிக்கின்றது” என ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் உணர ஆரம்பித்துள்ளார்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கும் தம் தேசம் மீதான நே(பா)சம் அதிகரிக்கின்றது. சொந்த மண்ணில் பல கொடுமைகளை அனுபவித்துப் புலம்பெயாந்தவர்கள், தங்கள் இரத்தங்கள் இன்னமும் கொடுமைக்குள் வாழ்வது தொடர்பில் விரக்தி கொண்டுள்ளனர்.   

இலங்கையில் பேரினவாதம், உண்மையான சமாதானத்தின் ஊடாக மாற்றத்தைக் கொண்டு வர, ஒருபோதும் தயாரில்லை. ஏன், அது தொடர்பில் சிந்திக்கவே இல்லை. உக்கிப் போன சிந்தனைகளையும் காலாவதியான யோசனைகளையும் கொண்டு, தனது வழமையான பாதையிலேயே பயணிக்கின்றது.   

ஆகவே, இந்நிலையில் எங்கள் நிலமும் புலமும் ஒன்று சேர்ந்து கூட்டுஅறிவை ஆயுதமாக்க (இராஜதந்திரப் போர்) வேண்டியதே இன்றைய அவசர தேவை ஆகும். தமிழ் மக்கள் அறிவார்ந்த ரீதியில் புதுவகையான, புதுமையான அரசியலை ஆரம்பிக்க வேண்டும். சர்வதேசம், தமிழ் மக்களது விடுதலைப் போரை ஸ்தம்பிக்கச் செய்ய, இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது.   

அதே சர்வதேசத்தை, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்கக் கூடிய காரியங்களை ஆரம்பிக்க வேண்டும். எங்கள் நாட்டில், எங்கள் இனம் (தமிழ்) மீது 70 ஆண்டு காலமாக, ஆட்சியாளர்களால் அவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டூழியங்கள் வெளிநாடுகளினது கதவு(இதயங்)களைத் தட்ட வேண்டும்.   

இன்று உலகம், உள்ளங்கைக்குள் வந்து விட்டது. அதனூடாக அனைத்து மொழிகளிலும் ஈழத்தமிழர் அவலங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். இலங்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஒரு வரையறைக்குள் மாத்திரமே செயற்பட முடியும். ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாது, சுயாதீனமாகப் புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர்கள் செயற்படலாம்.   

இன்று, தமிழ் மக்கள் சர்வதேசம் எங்கும் பரவி வாழ்கின்றனர். 1983இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது, வெறும் 150 தமிழர்களே கனடாவில் வசித்தார்கள். இன்று நாங்கள் அறிவுப் போராட்டத்தை ஆரம்பிக்கும் வேளையில் சுமார் நான்கு இலட்சம் தமிழர்கள் கனடாவில் வசிக்கின்றார்கள். இது போலவே, ஐரோப்பிய நாடுகளிலும் கணிசமான அளவில் தமிழ் மக்கள் வசிக்கின்றார்கள்.   

அசாதாரண நெருக்கீடுகள் ஏற்படும் வேளைகளில், அசாத்தியமான துணிவு வரும். அந்த அசாத்தியமான துணிவே பல முனைகளிலும் முறைகளிலும் தமிழர் இருப்பைக் கடந்த காலங்களில் காப்பாற்றியது. இந்தத் தீர்க்கமான நேரத்தில், எங்கள் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என அனைவரும் தங்களுக்குள் வினா எழுப்ப வேண்டும்.   

நிலத்தில், தமிழர் இருப்பைத் தக்கவைக்க இளைஞர்கள் இணைந்து உள்ளார்கள். முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் பெரும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில், 1,008 பானைகளில் பொங்கல் படைத்து, தமிழர் மரபைப் தொடர்ந்து பேணுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டு உள்ளார்கள். அதன் தொடராக, கன்னியா எனக் களங்கள் வரிவடைகின்றன. இதில் இந்து, கிறிஸ்தவ வேறுபாடுகள் கடந்து தமிழர்களாகத் தமிழ் இனமாக, மக்கள் அணி திரண்டு உள்ளனர்.   

‘பெரிய பிசாசு வந்தால் சிக்கல்; சின்னப் பிசாசு இருந்தால் ஓரளவு பரவாயில்லை’ என்ற இக்கட்டு நிலையே, தமிழ் மக்களிடம் உள்ளது. ஒவ்வொரு தடவையும் தமிழ் மக்களை, வாக்குப் போடும் இயந்திரமாகப் பார்க்கும் போக்கை மாற்றிக் காட்ட வேண்டும். அவர்கள் ஏவிவிடும் எமக்கான சவால்கள் அனைத்தையும் எமக்கான வாய்ப்பாக மாற்ற வேண்டும்.   

எம்மிடையே காணப்படுகின்ற பிரிவினைகளையும் மாறுபட்ட அம்சங்களையும் விலத்தி, எம்மை ஒன்றிணைக்கும் அம்சங்களில் பொதுமைப்பட வேண்டும். நிலத்திலும் புலத்திலும் இளைஞர் அமைப்புகள் ஒன்று கூட வேண்டும். 70 ஆண்டு காலமாகப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய சங்கதிகள், எங்கள் அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். எம் சமூகத்திடம் உள்ள வலி(மை)யையும் வெளிப்படுத்த வேண்டும்.   

இவை சொல்வதற்குச் சுலபமானவை; செய்வதற்குக் கடினமானவை. இவற்றை இடைவிடாது ஆற்ற, ஒழுங்கமைக்க ஆற்றலுள்ள மாற்றம் காணாத தலைமை வேண்டும். ஆதனாலேயே கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலங்களில், தமிழ் மக்களது சர்வதேச விடயங்களைக் கையாளுவதற்கென உபகுழு ஒன்று உருவாக்கப்பட்டது.   

ஆகவே, எங்களுக்கிடையிலான அற்ப பகைமை எண்ணங்களை அடியோடு அறுத்தெறிவோம். அச்சத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே அகப்பட்டுள்ள தமிழர் வாழ்வில் ஒளியேற்ற ஒன்றிணைவோம். ஏனெனில், நாம் கூடியிருந்து குதூகலிக்க, எங்களின் தாய்(மடி) மண் எமக்கு வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X