2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்?

காரை துர்க்கா   / 2020 ஜூன் 30 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பை விமர்சிக்கலாம்; அதை விடுத்து, தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்” எனத் தெரிவித்து உள்ளார்.  

“விக்னேஸ்வரனை, நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில், அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆனால், அவர் தற்போது என்ன செய்கின்றார்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரையில், யாரையும் நாம் விலக்கவில்லை; சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை, அவர்கள் இன்றுவரை கூறவில்லை” என, இரா. சம்பந்தன் மேலும் கூறியிருக்கின்றார்.  

தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்த (மே, 2009) பின்னர், விடுதலைக்கான போராட்டத்தை,  விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஜனநாயக ரீதியாகத் தொடர வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு, கூட்டமைப்பின் வசம் சென்றது. அதனூடாகத் தமிழ் மக்களது தலைமைத்துவம், சம்பந்தனிடம் சென்றது.  

நடைபெற்ற தேர்தல்களில், தமிழ் மக்களும் தங்களது ஆணையையும் ஆதரவையும் கூட்டமைப்புக்கே தொடர்ச்சியாக வழங்கி வந்தார்கள். ஆகவே, யார் என்ன சொன்னால் என்ன, எப்படிச் சொன்னால் என்ன, தமிழ் மக்களது தலைமை என்றால் அது, கூட்டமைப்புத்தான் என்ற நிலைமையே இன்று வரை தொடர்கின்றது.  

ஆனாலும், தமிழ் மக்களால் ஒப்படைக்கப்பட்ட எந்தப் பொறுப்பையும் கடமையையும் கணிசமான அளவில் கூட, கூட்டமைப்பினர் நிறைவேற்றத் தவறி விட்டார்கள் என்பதே, தமிழ் மக்களின் ஆதங்கமும் ஆத்திரமும் ஆகும்.   

விக்னேஸ்வரனால், தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று, சம்பந்தன் கேட்டுள்ளதை, மறுவளமாக, ‘சம்பந்தனால் கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது’ என்ற கேள்வியைத் தொடுக்க முடியும்.   

அதாவது, இந்தக் கேள்வியை, சி.வி. விக்னேஸ்வரனின் அணியில் (தமிழ் மக்கள் தேசிய கூட்டணி) போட்டியிடுகின்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) சுரேஸ் பிரேமசந்திரன் கேட்டுள்ளார்.  

இதுவும் நியாயமான கேள்விதானே? வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, சம்பந்தன் அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம்; அவரை வெல்லவும் வைத்திருக்கலாம். ஆனால், விக்னேஸ்வரனைத் தன்னுடன் (கூட்டமைப்புடன்) தொடர்ந்து இணைத்து வைத்திருக்க, சம்பந்தன் தவறி விட்டார்.   

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, யாரையும் நாம் விலக்கவில்லை; சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை, அவர்கள் இதுவரை கூறவில்லை” எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியிருக்கின்றார்.   

கூட்டமைப்பிலிருந்து யாரையும் விலக்கவில்லை என்பது, சரியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தாமாகவே விலகுவதற்கான நெருக்குவாரங்களை, கூட்டமைப்பு சிலவேளைகளில் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லலா? தற்போது கூட்டமைப்பில் தொடர்ந்து இருப்பவர்கள் கூட, தங்களது இருக்கைகளைத் தக்க வைப்பதற்காக, சகிப்புத் தன்மையுடன் இருக்கலாம் அல்லவா?   

இந்நிலையில், சி.வி. விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்தது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால், தனிக்கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளை அண்மிக்கப் போகின்றது. புதிதாக அரசியலுக்கு வருவோரும், புதிதாக அரசியல் கட்சிகள் தொடங்குவோரும், தமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றே வருகின்றார்கள்.   

ஆகவே, “தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்” என, வேறு யாராவது விமர்சித்திருக்கலாம். ஆனால், சம்பந்தன் கேட்கக் கூடாது. ஏனெனில், இப்படிக் கேட்பது, இன்னமும் தமிழ் மக்களால் மதிக்கப்படும் சம்பந்தனின் கனவான் அரசியலுக்கு இழுக்காகலாம்.   

ஆனால், அதற்காக விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்தது சரி என்றோ, அதன் ஊடாக அவர் நாடாளுமன்றம் சென்று (தனிநபராக அல்லது ஒரு சிலராக) தமிழ் மக்களுக்கான விடுதலையைக் பெற்றுக் கொடுப்பார் என்றோ கூற வரவில்லை.   

ஏனெனில், பல தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன், சம தரப்பாக, சம படை பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடைய முடியாத சுயநிர்ணய உரிமையை, கடந்த முறை 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தும் பெற முடியாத தீர்வுத் திட்டத்தை (புதிய அரசியல் யாப்பை) வெறும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, செய்ய முடியுமா என்பதும் வினாக்குறியே.   

வடக்கு மாகாண சபையில், விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப் பகுதியில், ஒன்றுமே உருப்படியாகச் செய்யவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், விக்னேஸ்வரன் உருப்படியாகச் செய்ய, கூடவே இருந்தவர்கள் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் ஆக்கபூர்வமாக வழங்கவில்லை என்ற எண்ணமும் தமிழ் மக்களின் மத்தியில் உள்ளது.   

ஐந்து ஆண்டுகளாக, வடக்கு அரசியலில் இருந்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும் என்றால், அண்ணளவாக 40 ஆண்டுகளாக அரசியலிலும் பத்து ஆண்டுகளாகத் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்திலும் இருக்கும் சம்பந்தனால், அவர் சார்ந்த கட்சியால், தமிழ் மக்களுக்குப் பெரிதாகவும் குறிப்பிட்டுத் கூறும்படியாகவும் என்ன செய்ய முடிந்தது?   

ஆகவே, அவர் என்ன செய்தார், அவரால் என்ன செய்ய முடியும், இவர் என்ன செய்தார், இவரால் என்ன செய்ய முடியும்? என்பதெல்லாம் வீண் பேச்சு. நிஜத்தில் எவராலும் (தமிழ் அரசியல் தலைவர்கள்) ஒன்றுமே செய்ய முடியாத நிலையிலேயே, இலங்கையின் அரசியல் களம் உள்ளது.   

உண்மையில், தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ் மக்கள் கூடுதல் தேசப் பற்றுக் கொண்டவர்களாக உள்ளார்கள். தனிப்பட்ட நலன்களுக்காக, கட்சி (கொள்கை) மாறும் அரசியல்வாதிகள் உள்ள ஊரில், தனிப்பட்ட நலன்களைக் காட்டிலும் தேசியத்தின் மீது கொண்ட பற்றுதலால், என்றைக்கும் கட்சி மாறாத (மறவாத) தேசாபிமானிகள் எம்மவர்கள்.   

இன்று கூட, வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையானோர்,  தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை, கூட்டமைப்புத்தான்  தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்; விரும்புகின்றார்கள். இந்நிலையில்தான், கூட்டமைப்பின் உடைவை, ‘கொழும்பு’ விரும்புகின்றது.   

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில், தமிழ் மக்கள் ஒன்றாக, ஓர் அணியாகத் திரள்வதை, ‘கொழும்பு’ என்றைக்கும் விரும்பாது. ஏனெனில், அதன் ஊடாகத் தமிழ் மக்களது அரசியல் கோரிக்கைகளுக்கான பலம் கிடைத்து விடும் என, உள்ளூரக் கருதுகின்றது.   

கூட்டமைப்பு 20 ஆசனங்ளைக் கைப்பற்றும் (கைப்பற்ற வேண்டும்) என்ற சம்பந்தனின் அறைகூவலுக்கு ஏற்ப, இன்றைய களநிலைவரங்கள் இல்லை. தமிழ்க் கட்சிகள் சிதைந்து, பல துண்டுகளாகத் தேர்தலில் இறங்குகையில், தமிழ் மக்களது வாக்குச் சிதறலையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.   

தற்போதைய உத்தேச கள மதிப்பீடுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், கடந்த முறை கிடைத்தது போல, ஐந்து ஆசனங்ளைப் பெறுவது, கூட்டமைப்புக்கு கடினமான காரியமாகவே இருக்கப்போகின்றது.    

அது போலவே, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்ளை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், கடந்த முறை போல, கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப் பெறுவது கடினமான காரியமே ஆகும்.   

வன்னி மாவட்டத்தில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) சார்பில் விக்கினேஸ்வரனின் அணியில் போட்டியிடுகின்ற நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்கள் செல்வாக்கு உள்ளவராக உள்ளார்.   

தற்போது தேர்தல் கதைகள், சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள வேளை, யாழ்ப்பாண பஸ் நிலையத்தில், பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஐயா ஒருவரை, “என்ன மாதிரி, யாருக்கு வாக்களிக்க உத்தேசம்” எனக் கேட்டேன்.   

“இதுவரை காலமும், எங்கட தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையோட, இவைக்கு (கூட்டமைப்பு) வாக்களித்தனான். உவர், விக்னேஸ்வரன் நீதியரசர் தானே; ஒரு நீதியரசர் எங்களுக்கு நீதி கிடைக்க, நாடாளுமன்றத்திலையும் சர்வதேசத்திலையும் கதைத்தா என்னவெண்டு யோசிக்கின்றேன்” என்றார்.   

சம்பந்தனோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனைக் கொழும்பு விரும்புவதில்லை. இலங்கையில் இனப்பிணக்குத் தீர, தீர்வு ஒன்று வருகின்றது என்றால், அது நிச்சயமாக, சர்வதேச அனுசரனை, அழுத்தம் இன்றி நடைபெறப் போவதில்லை. 

இந்நிலையில், சர்வதேசத்தின் செவிகளுக்கு, தமிழர் பிரச்சினை செல்வதற்காக, விக்னேஸ்வரன் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும்  என்பதே, மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X