2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது.

மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கான அங்கிகாரம் மெல்ல மெல்லக் கீழிறங்கத் தொடங்கிவிடும்.

அதையே, தமிழ்த் தேசிய அரசியலும் பிரதிபலித்து வருகின்றது. அண்மைய நாள்களில், முன்னாள் போராளிகளும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும், பல்வேறு தரப்புகளாலும் எவ்வாறெல்லாம் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்த்தாலே, அதை உணர்ந்து கொள்ள முடியும்.

அப்படியான சமூக ஒழுங்கும் உளவியலும் காணப்படும் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், “முதலமைச்சர்” எனும் அங்கிகாரத்தை விக்னேஸ்வரன் இழந்த பின்னரும் மேல் நிலையில் நிலைத்து நிற்பதென்றால், அதற்கான உழைப்பை அதிகமாக வழங்க வேண்டும். ஆனால் அவர், அதிக உழைப்பை வழங்கிய தருணங்கள் என்றும் எதையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. அவர், “பிரமுகர் அரசியலின்” ஒரு சாட்சி.

தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது, இரண்டு வடிவங்களில் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் உருவாக்கி வந்திருக்கின்றது. ஆயுதப் போராட்டம், அதிக தருணங்களில் கடைநிலையிலிருந்து திறமை, தைரியம், வழிநடத்தும் பாங்கு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி, தளபதிகளையும் முக்கியஸ்தர்களையும் உருவாக்கி வந்தது.

ஆனால், கட்சி அரசியல் என்பது, அதிக தருணங்களில் “பிரமுகர் அரசியல்” சார்பிலேயே அதிக கவனம் செலுத்தி வந்திருக்கின்றது. கடின உழைப்பாளிகளாக இருந்த தொண்டர்கள், கட்சி அரசியலில் மேல்நிலைக்கு வந்தமை மிகவும் குறைவு.

ஆனால், கட்சி அரசியல், ஆயுதப்போராட்ட அரசியல் எனும் தனித்த இரண்டு சூழல்களுக்குப் பின்னரான இன்றைய அரசியல் என்பது, இருவடிவங்களும் பகுதியளவில் கலந்த ஒன்றாகவே இருக்கின்றது. அல்லது, அதையே, இளம் தலைமுறையொன்று எதிர்பார்த்து நிற்கின்றது. 

அந்த நிலைக்குள்ளும் நிறையும் குறையும் அதிகமாக இருந்தாலும், அந்த நிலையொன்று, குறிப்பிட்டளவான தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அப்படியான சூழலில், “பிரமுகர் அரசியலின்” முகமாக மாத்திரம் இருக்கும் விக்னேஸ்வரனால், தமிழ்த் தேசிய அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா என்கிற கேள்வி எழுகின்றது.

தமிழ் மக்கள் பேரவையின் அண்மைய கூட்டமொன்றில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தன்னுடைய எதிர்கால அரசியல் தெரிவுகள் பற்றி, நான்கு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில், புதிய கட்சியை ஆரம்பிப்பது, பேரவையை மக்கள் இயக்கமாக முன்னிறுத்திக் கொண்டு நகர்வது ஆகிய இரு விடயங்களும், பல்வேறு தரப்பினராலும் கவனிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்னர், வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவருடனான சந்திப்பின் போது, புதிய கட்சியை ஆரம்பிப்பதிலுள்ள சிக்கல்கள் பற்றிய தன்னுடைய தயக்கத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். அப்படியான சூழலில், பேரவை முன்னிறுத்திய அரசியல் ஒன்றில் தங்கியிருப்பதிலேயே, அவர் ஆர்வம் காட்டுவதாகக் கொள்ள முடியும். அது, தன்னை அதிகளவில் சேதாரத்துக்கு உள்ளாக்காது என்றும் அவர் நம்பலாம்.

ஆனால், முதலமைச்சர் என்கிற நிலை விக்னேஸ்வரனுக்கு வழங்கிய அங்கிகாரத்தை, பேரவையின் தலைவர் என்கிற அடையாளத்தால் வழங்க முடியுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

ஏனெனில், பேரவையில் கட்சிகள் அங்கம் வகித்தாலும், அது வைத்தியர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் வட்டமாகவே அதிகம் அடையாளப்படுத்தப்படுகின்றது. அந்த அடையாளத்தால், தேர்தல் அரசியல் கோலோச்சும் சூழலில், ஒருநிலை தாண்டி மேலே வர முடியாது. கூட்டமைப்போடு விக்னேஸ்வரன் முரண்பட ஆரம்பித்த கடந்த மூன்று ஆண்டுகளில், அவர் பெற்றுவந்த முக்கியத்துவம் என்பது, குறிப்பிட்டளவானது.

அதுவரை, இரா.சம்பந்தனின் விசுவாசியாக அடையாளப்படுத்தப்பட்ட விக்னேஸ்வரனை, சம்பந்தனுக்கு மாற்றான தலைவராக அடையாளப்படுத்தப்படும் அளவுக்கான நிலையொன்றை, சில தரப்புகள் கட்டியெழுப்ப முனைந்தன.

கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமைக்கான வெற்றிடம் என்பது, கடந்த பத்து ஆண்டுகளில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரால் நிரப்பப்பட முயலப்பட்டது.

ஆனால், அது இயலாத போது, கஜேந்திரகுமாரால் கூட விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாக ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானது. தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகளின்போது, விக்னேஸ்வரனுக்காக வீதிக்கு இறங்கும் அளவுக்கு, கஜேந்திரகுமார் தன்னுடைய நிலையை விட்டுக்கொடுத்திருந்தார்.

சம்பந்தனுக்கு எதிரான மாற்றுத் தலைமையைத் தேடும் பயணத்தில், கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் மாத்திரமல்ல, சிவில் சமூக இயக்கங்கள், புலம்பெயர் தரப்புகள், பேரவை உள்ளிட்ட பல தரப்புகளும் இன்னமும் ஈடுபட்டு வருகின்றன.

அவ்வாறான தரப்புகளுக்கு, தேர்தல் அரசியலில் பங்களிக்காத ஓர் இயக்கத்தின் தலைமையாக விக்னேஸ்வரனைக் கொண்டிருப்பதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில், தற்போதுள்ள அரசியல் என்பது, தேர்தல்களின் போக்கிலும், அதன் வெற்றிகளின் போக்கிலும் எழுந்து வருவது.

அப்படியான நிலையில், தேர்தலில் பங்களிக்காத அமைப்பொன்றுக்குத் தலைவராக விக்னேஸ்வரனைக் கொண்டிருப்பதால், மாற்றுத் தலைமை என்கிற இடத்தையோ, இலக்கையோ அடைந்துவிட முடியாது என்பது, அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அப்படியான சூழலில், புதியதொரு கூட்டணி அரசியலுக்கு தலைமையேற்குமாறே, இந்தத் தரப்புகள், விக்னேஸ்வரனிடம் வேண்டி நிற்கின்றன. அதுவும், ஒரு வகையில், “பிரமுகர் அரசியலின்” போக்கில் வருவதுதான்.

அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டிருக்கும் அங்கிகாரத்தை, தேர்தலில் அறுவடை செய்வதனூடாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள், இன்னும் இன்னும் எழுந்துவர முடியும் என்று நம்புகின்றன.

அவை, இடைநிரப்புத் தலைமையொன்றுக்கான ஏக்கத்தையே, விக்னேஸ்வரன் சார்பில் கொண்டிருக்கின்றன. ஏனெனில், அவரோடும், அவரது நிலைப்பாடுகளோடும் நின்று நீடித்து அரசியல் செய்ய முடியும் என்பதில், பேரவை உள்ளிட்ட மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்களுக்கும் பெருமளவு நம்பிக்கை இல்லை. கடந்த காலங்களில், அதற்கான கட்டங்களை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருக்கவும் இல்லை.

அத்தோடு, விக்னேஸ்வரனின் வயதும் உடல்நிலையும் கூட, கடின உழைப்பை வழங்கி, கட்சி அரசியலில் சுற்றிச் சுழன்று வேலை செய்வதற்கான கட்டத்தில் இல்லை என்பதுவும், ஒரு பின்னடைவே. புதிய கட்சியை ஆரம்பிக்கும் கட்டத்திலிருந்து, அக்காரணமும் அவரைப் பின்வாங்க வைத்திருக்கின்றது.

அப்படியான கட்டத்தில், இருப்பதில் கௌரவமான நிலையொன்றைத் தக்கவைப்பதற்காக, பேரவையும் பேரவையோடு இணக்கமான கட்சிகளும் முன்மொழியும் நிலைப்பாடொன்றை நோக்கி, விக்னேஸ்வரன் நகர வேண்டி ஏற்படும். அது, அடுத்த மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட அரசியல் கூட்டணிக்குத் தலைமையேற்பதோடு முடிந்து போகலாம். அது ஒருவகையில், கூட்டமைப்புச் செலுத்த நினைக்கும் ஏகபிரதிநிதித்துவ அரசியலுக்கு, குறிப்பிட்டளவான கடிவாளத்தைப்போட உதவும். அந்த வகையில் அதை வரவேற்கலாம்.

ஏனெனில், பலத்த போட்டி இல்லாத அரசியல் களமும் தேர்தல் களமும், சமூகமொன்றைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். அப்படியான கட்டத்தில், கூட்டமைப்புக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் அளவுக்கான தேர்தல் கூட்டணியொன்றுக்கு விக்னேஸ்வரன் தலைமையேற்பது, சாதகமான கட்டங்களை, சில நிலைகளில் ஏற்படுத்தலாம்.

அது, உள் முரண்பாடுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பை, மீள ஒருங்கிணைக்கலாம்; உத்வேகப்படுத்தலாம்; கேள்விகளையும் விமர்சனங்களையும் உள்வாங்கிப் பிரதிபலிக்கும் ஆரோக்கியமான கட்டத்துக்கு நகர்த்தலாம்.

இன்னொரு புறத்தில், விக்னேஸ்வரனின் தன்முனைப்பு மனநிலையையும் தடுமாற்றங்களையும், புதிய தேர்தல் கூட்டணிக்காகக் காத்திருக்கும் தரப்புகள் எவ்வாறு வெற்றிகரமாகக் கையாளப்போகின்றன என்பதுதான், அவர்களின் அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கும். இல்லையென்றால், வடக்கு மாகாண சபை, கடந்த ஐந்து ஆண்டுகளில் அரங்கேற்றி ஓய்ந்த நாடகங்களின் அடுத்த கட்டம், புதிய கூட்டணிக்குள்ளும் அரங்கேறும். அது, மாற்றுத் தலைமைக்கான நம்பிக்கையாளர்களை மாத்திரமல்ல, விக்னேஸ்வரனையும் கூட, தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து அகற்றம் செய்துவிடலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X