2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விடுதலைப் போராட்டத்துக்கு விளம்பரம் போடுதல்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலநாள்களுக்கு முன், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கான விளம்பரங்கள் வெளியாகி இருந்தன. இந்த விளம்பரங்கள், சில செய்திகளைச் சொல்லாமல் சொல்கின்றன.   

‘எழுக தமிழ்’, தமிழ்த்தேசியத்தின் எழுச்சிக்கான குரல் என்ற தொனியிலேயே, அதன் ஏற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். ‘எழுச்சியின் குரல்’ என்பது, விளம்பரங்களின் வழி உருவாவதல்ல; மக்களை அழைக்க, இதுவொன்றும் இசை நிகழ்ச்சியோ, சினிமாப் நட்சத்திரங்களின் கூத்தோ அல்ல.   

தமிழ்த் தேசியத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு, இந்த விளம்பரங்கள் ஆச்சரியத்தைத் தரா! இது, தமிழ்த் தேசியத்துக்கு உரிமை கொண்டாடுபவர்களின் உரிமைச் சண்டையில், கிழிந்த சட்டையுடன் போடப்பட்ட விளம்பரம் ஆகும்.

தமிழ்த் தேசியவாதம், ஒருபோதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்துப் போராடவில்லை. மக்களை அறிவூட்டித் திரட்டிப் போராடும் அரசியல் மரபு, தமிழ்த் தேசியத்துக்குக் கிடையாது. 

அதைப்போலவே, தமிழ்த் தேசியத்தைக் கையில் எடுப்பவர்களுக்கும், மக்கள் அரசியல் தெரியாது. ஏனெனில், அந்தப் போராட்ட வழிமுறை நீண்டதும் தொடர்ச்சியானதும் கடின உழைப்பை வேண்டுவதுமாகும்.   

மக்கள் போராட்டம், மக்களை அறிவூட்டுவதிலிருந்து தொடங்குகின்றது. அதன் அடிப்படை, பொது நன்மைக்கான ஒன்றுபடுதலும் அடிப்படை ஜனநாயகத்தை நிலைபெறச் செய்வதுமாகும். இவை இரண்டும், தமிழ்த் தேசிய அரசியல் மரபுக்கு உவப்பில்லாதவை.   

தமிழ் மக்களின் எழுச்சி என்பதன் பெயரால், தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியவாதம் தொடர்ந்து ஏமாற்றி வந்திருக்கின்றது. இது காலத்துக்குக் காலம், சில தமிழ் அரசியல் தலைவர்களின் இருப்பைத் தக்க வைப்பதற்குப் பொங்கி வழிவதற்கு அப்பால், காத்திரமான பங்களிப்பை வழங்கியதில்லை. உணர்ச்சிகர அரசியலின் பாதகங்களை, வேறெவரையும் விட ஈழத்தமிழரே நன்கறிவர்.   

இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ‘எழுக தமிழ்’ என்ன வேலைத்திட்டத்தை வைத்துள்ளது? முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு, இவர்கள் எவ்வாறு செயல்வடிவம் கொடுக்கப்போகிறார்கள்?  கடந்த முறை நடத்தப்பட்ட எழுக தமிழின் கோரிக்கைகள் என்னவாகின? இந்தக் கணத்தில் தமிழ் மக்கள் கேட்கவேண்டிய நியாயமான கேள்விகள் இவையாகும்.

விமர்சனத்துக்கும் கேள்வி கேட்பதற்கும் தமிழ்ச் சமூகம், தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிடில், முள்ளிவாய்க்காலை விட மோசமான அவலம், எம்மை வந்து சேரும்.   

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பது என்ற வாசகம், போர் முடிந்த பத்தாண்டுகளாகச் தொடர்ந்து சொல்லப்பட்டுவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக, சர்வதேசத்தின் கவனத்தை ஏன் ஈர்க்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தையோ, சுயவிமர்சனத்தையோ, தமிழ்த் தேசியவாதிகள் வைத்ததுண்டா? எந்தச் சர்வதேசத்திடம் நீதியைக் கோருகிறார்களோ, அதே சர்வதேசம், இழைக்கப்பட்ட அநீதியில் பங்கு கொண்டது என்பதை, வெளிப்படையாகச் சொல்லத் தயாரா? சர்வதேச விசாரணை கோரித் தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை, தமிழ் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கின்ற, இந்திய இழுவைப் படகுகளால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தோ, சுன்னாகம் நிலத்தடி நீர் குறித்தோ, சம்பூர் அனல் மின்நிலையம் குறித்தோ தீர்மானம் நிறைவேற்றாமல் போனதேன்? 

உணர்ச்சிக் கோஷங்களால் வழிநடத்தப்படும் ‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகள், குறுகிய ஆயுளை உடையவை. அவை, அவரவர் அரசியல் இலாபங்களுக்காக நடத்தப்படுகின்றன. அதற்கப்பால், அதற்குப் பெறுமதி இல்லை. இவை, விடுதலை நோக்கிய பாதையில் பயணிப்பனவல்ல. வேலைத் திட்டமில்லாததும் மக்கள் மயப்படாததும் மேய்ப்பர் மனோநிலையில் இயங்கும், இன்னொரு திருவிழாவே இந்த ‘எழுக தமிழ்’. அத்திருவிழாவுக்கான அழைப்பே, பத்திரிகை விளம்பரங்கள்.   

விடுதலை என்பது, காலக்கெடு வைத்து சொல்லப்படுவதல்ல; எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவோர் அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய, ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள், விடுதலைப் போராட்டத்தைத் தனது தோள்கள் மீது, ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை, விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல.  

 எந்தவொரு போராட்ட வெற்றியையும் எடுத்து, அதை விடுதலையாக மாற்றுகின்ற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள், இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையை, குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை, இந்த விளம்பரங்கள் பறைசாற்றி நிற்கின்றன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X