2020 ஜூலை 11, சனிக்கிழமை

13ஆவது திருத்தம் படும் பாடு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்ஸ்மன் 

“கடந்த 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்து பதவிக்கு வந்த தலைவர்கள், ஒரேயோர் உறுதிமொழியையே அளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால்,  இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்வுக்கும் எதிராக, நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின்  விருப்பத்துக்கு எதிராக, எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். எந்தச் சிங்களவரும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி செய்யாதீர்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் எனச் சொல்லமாட்டார்கள். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு”.

இது  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷவின் கருத்து. இந்திய விஜயத்தின் போது, ‘ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இக்கருத்தை  அவர் உதிர்த்திருக்கிறார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, பிராந்திய நலனுக்கு நல்லது என்றாலும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாதது என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். 

அப்படியானால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சொன்ன, 13 பிளஸ், பிளஸ்,  பிளஸ் எல்லாமே பொய்யானவைகள்தான்.

அதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்ததாலேயே, தமிழ் மக்கள், சஜித் பிரேமதாஸவுக்கு  வாக்களித்தார்கள். இல்லையானால், கோட்டாபயவுக்குத்தான் வாக்களித்து இருப்பார்கள் என்று சொல்வதிலும் உண்மையில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டிருந்தார்கள். முடிவு அதுவே!

இனி விடயத்துக்குள் வருவோம், அதிகாரப்பகிர்வு என்ற விடயதானம் இலங்கை சுதந்திரம் பெற்றது முதல், தொடங்கி விட்டது என்பதற்கு ஜனாதிபதியின் கருத்தும் ஓர் ஆதாரம். ஒவ்வொரு தடவையும் பலராலும் பயன்படுத்தப்படுகின்ற அஹிம்சை வழியிலான, ஆயுதப் போராட்டங்களின் பின்னரும் பல அழிவுகளின் தொடர்ச்சியாகவும் எதையும் விட்டுக் கொடுத்து விட முடியாது என்கிற நிலைமையே காணப்படுகிறது.

இந்த 70 என்கிற வருடக் கணக்கில், பல்வேறு சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள், யுத்தங்கள் நடந்து முடிந்துவிட்டன. இதற்குள் எத்தனையோ ஜனாதிபதிகள் மாறிவிட்டனர்; பிரதமர்கள் மாறியிருக்கின்றனர். ஆனாலும் முடிவுகளில் மாத்திரம், எந்த வித மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

நமது  நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. மத்திய அரசுகளின் நடவடிக்கைகளால் பல சமூகங்களின் இருப்பு அச்சுறுத்தப்படுகின்றது.  

இதனால்தான், ஒரு நாட்டில் வாழும் சகல சமூகத்தினரும் தமக்குத் தேவையான முறையில் தமது ஆட்சியையும் அபிவிருத்தியையும் கொண்டு செல்வதற்கு, அதிகாரங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது.

இந்த அதிகாரங்களை, ஒவ்வொரு இனக்குழுமத்துக்கும்  வழங்கும் ஏற்பாடுகளை, நாம் அதிகாரப் பரவலாக்கல் என்கின்றோம். அதாவது, மத்திய அரசாங்கத்தின் சில அதிகாரங்களை நாட்டின் வெவ்வேறு பிரதேச மக்கள், இனக்குழுமங்கள் பகிர்ந்து எடுத்துக் கொள்வது என்று இதற்குப் பொருளாகும். 

உலகில் காணக்கூடிய ஒவ்வொரு சமூகத்தினதும் தம்மைத் தாமே தக்க வைத்துக் கொள்வதற்கான உரிமை இதுவாகும். இதைச் சுயநிர்ணய உரிமை என்போம். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு முறையில், அதிகாரப் பரவலாக்கல்  நிகழ்ந்திருக்கின்றது; நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனால்தான்  அதிகாரப்பரவலாக்கல் வேண்டும் என்கின்ற கோரிக்கையைத் தமிழ் மக்கள் முன்வைத்தனர். இது ஒரு தவறா?

13 ஆவது திருத்தச் சட்டமானது, இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினை, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், 1987 இல் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருந்தது. அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்தச் சட்டத்தையே இந்தியா வலியுறுத்தி வருகிறது. 

இதற்குக் காரணமும் இருக்கிறது. அது சொந்த நலன் சார்ந்ததுதான். 1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன, இலங்கையின் ஜனாதிபதியானதன் பின்னர், தாராள பொருளாதாரக் கொள்கையைச் செயற்படுத்தி, அமெரிக்கச் சார்புள்ள அரசியல் கொள்கையை முன்னெடுத்தார். இந்து சமுத்திரப் பிராந்தியம், தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கின்ற இந்தியாவுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்குள் தலையிட்டது.

இந்தியாவின் தலையீடு, பெரும்பாலும் தமிழ்ப் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரிப்பதாகவும் வளர்ப்பதாகவும்  தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக, பூட்டானின் திம்புவிலும் இந்தியாவின் புதுடில்லியிலும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்துக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

ஆனால், அவை தோல்வியில் தான் முடிந்திருந்தன. 1987ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இராணுவம், வடமராட்சியில் ‘ஒபரேஷன் லிபரேஷன்’ என்ற இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டபோது, இந்திய விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை விநியோகிக்கப்பட்டது. 

இதன் மூலம், இராணுவ ரீதியாகவும் இலங்கைப் பிரச்சினையில் தலையிடத் தயாராக இருக்கிறோம் என்பதை இந்தியா புலப்படுத்தியது. இதையடுத்தே, இந்தியாவுடன் இலங்கை, இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு, 13ஆவது திருத்தச்சட்டம் உருவானது. 

வடக்கு, கிழக்கு உட்பட இலங்கை முழுவதுமாக ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு அதிகமாக அரசியல் அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன என்று சிங்களவர்கள் எதிர்த்தனர்; தமிழ் மக்களுக்கு, இந்த ஒப்பந்தம் போதுமானளவு அதிகாரங்களைப் பகிரவில்லை என்று விடுதலைப் புலிகளும் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தனர். 

இந்திய அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின்  பேரில், ஒப்புக் கொள்ளப்பட்டு 1987ஆம் ஆண்டு, இலங்கை, இந்திய ஒப்பந்தம் நிறைவேறியது. அடுத்து வந்த 13ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவதைக் கண்காணிக்க, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அதன்பின்னர் பல்வேறு பிரச்சினைகள் நடந்தன. யாரும் எதிர்பார்க்காதளவு கோரமானவைகளாகவும் இருந்தன.

1988இல்  தெரிவு செய்யப்பட்ட முதல் வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே கொழும்பு அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. இது  நடந்து 17 ஆண்டுகளின் பின்னர் 2007ஆம் ஆண்டில் வடகிழக்கு இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதன் பின், தேர்தல் நடத்தப்பட்டு 2008இல் கிழக்கு  மாகாணசபை உருவானது.  

13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத வகையில், அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மீண்டும் புதிய அரசாங்கத்திடமிருந்து 13வது திருத்தத்தின் நடைமுறையை இந்தியா எதிர்பார்க்கிறது என்பதுதான், புதிய ஜனாதிபதிக்கான இந்தியாவின் முதல் அழைப்பின் சாரம்.

இந்தச் சாரத்தின் அடிப்படையில்தான், அடுத்த பூகோள இராஜதந்திர நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.  இந்த இடத்தில்தான், இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி, இந்தியப் பிரதமருடன் என்ன பேசிக் கொண்டார் என்பதற்கான பதில், ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல் மாத்திரமே.

13ஆவது திருத்தத்தின் அமுலாக்கத்தை, இந்தியா விரும்பினாலும், பெரும்பாலான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்; அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் ஒரு சில விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை நாங்கள் தெளிவாகத் தெரியப்படுத்த விரும்புகிறோம்’ என்று பதிலளித்திருப்பது இந்தியா விரும்பும் 13இன் அமுலாக்கமாக அமையாது. 

13 போதாது என்று இருந்த தமிழ்த் தரப்பு, எல்லா விடயங்களும் நிறைவேறாமல்தான் பெற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு உட்படுவார்கள்.

13ஆவது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்று வழிகள் ஏதாவது இருக்கின்றனவா என்பது தொடர்பாக இன்னமும் தெளிவில்லாத நிலைப்பாடு இருக்கிறது. எல்லா விதமான செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையோடு இந்தியாவுக்கு அறிவிப்பதற்கு தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது, காணப்பட்ட சீனச் சார்பு நிலைப்பாடு, எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்? அந்தச் சீனச்சார்பு இல்லாமல், இந்தியாவை அனுசரித்துக்கொண்டு, சீன நட்பு நிலைப்பாட்டுக்குரிய நகர்வுகளை இலங்கை கையிலெடுக்கும் என்றாலும், அது வெளிப்படையாக இருக்காது. இந்த நிலைப்பாடு இந்தியாவுடனான இராஜதந்திர உறவின் இடைவெளியை அதிகரித்து, இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடிய நிலைமையாக மாறக்கூடாது.  

இப்போது உருவாகியிருக்கின்ற இந்தப் பூகோள ‘அவசரங்கள்’ மற்றைய நாடுகளின் கைபோடலை இல்லாமல் செய்யும். ஆனால், ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்குவதை, இந்தியாவோ அமெரிக்காவோ விரும்பவில்லை. இந்த விருப்பமின்மைக்கான பதிலை, இந்தியாவின் ஊடாக, இலங்கைக்குச் சொல்லி இருப்பதாகக் கொள்ள முடியும்.  

இருந்தாலும், இந்தப் பிராந்தியத்தில் முக்கியமாக, ஏற்கெனவே  இலங்கையினுடைய பல்வேறுபட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், நங்குகூரம் இட்டுள்ள சீனாவை, எவ்வாறு அவ்வளவு சாதாரணமாகச் சமாளிக்க முடியும்?

தமிழீழம் இலங்கையில் உருவாவதை விரும்பாத சீனா, அதற்கெதிராக இயக்கம் கொள்ளுமே தவிர, இந்தியாவுடன் இணைந்து செயற்படாது என்பதில் சந்தேகமில்லை.

அந்தவகையிலேயே, சீனாவுக்கு நெருக்கமாக இருந்த ஜனாதிபதியின் ஆட்சியைக் கவிழ்த்து, இந்தியாவின் உதவியுடன் நல்லாட்சி அமைக்கப்பட்டது. இதே நிலைமை மீண்டும் வராமலிருக்குமா?

இலங்கையின் இனப்பிரச்சினையில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியோடு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு முடிந்துவிட்டது என்ற எண்ணப்பாங்கு யாருக்கும் இருக்கக்கூடாது. அந்தவகையில்தான் மேற்குலகில் இருந்து தாம் தப்பித்துக் கொள்ளலாம் என இலங்கை கணக்குப் போட்டிருக்கலாம்.

எது எவ்வாறானாலும், தெற்காசிய நாடுகளின் முதலீடுகளையும் துணிந்து செய்தல், 13ஐ அமுல்படுத்துதல், இந்திய சீன உறவுகளுக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வது என்று, பல சிக்கல்களை இலங்கையின் புதிய ஜனாதிபதி  எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜனாதிபதி கோட்டாபய, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையையும் காப்பாற்ற வேண்டியவராக இருக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமா?

அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்ற, அதிகரிக்கத் தொடங்குகின்ற வேளையில் எது நடக்கும் என்பது தெரியாமல், நாமெல்லாம் சிந்திப்பதை விடவும், உலகின் அத்தனை நாடுகளிலும் இருக்கின்ற தமிழர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.

கோட்டாபய என்பவர் தமிழர்களுக்கு எதிராக, மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர்.இனியும் செயற்படுவார் என்றுதான் அந்த அச்சம் இருக்கிறது. கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் அத்தனையும் இப்போதுள்ள, வரப்போகும் அரசாங்கத்தின் காலத்தில் ஒன்றுமில்லையென்றுதான் ஆகும். இதுவரை சர்வதேச, மேற்குலக நாடுகளின் முழுப் பலத்துடன் நடைபெற்ற முயற்சிகள் இலங்கைக்குள்ளேயே இந்தியாவின் அனுசரணையுடன் நடைபெற்றாக வேண்டும்.

13ஆம் திருத்தச் சட்டத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்று, காலங்கடத்தல்கள்தான் இருக்கின்றதே தவிர, பிரயோசனங்கள் இல்லை. ஜனாதிபதி   சொன்னது போல, அதிகாரப்பகிர்வு என்கிற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற காலங்கடத்தல்களை, யாரும் நம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்பதுதான் உண்மை.இதனைப் புரிந்து கொண்டவர்களாக, தமிழ் அரசியல் தலைவர்கள் இருந்த போதும் தொடர்ந்தும் ஏன் யதார்த்தத்தையும் மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிர். 

அத்துடன், இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அதிகாரப்பரவலாக்கலுக்காக விடுத்த கோரிக்கையைப் பூர்த்தி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் யாருக்கு என்ன செய்தது என்று நொந்து கொள்ள மட்டுமே முடியும்.

‘வரவேற்கிறோம்’  -இராதாகிருஷ்ணன்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் இந்திய விஜயத்தின் போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் மோடி கூறியதை, நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோல், இந்த விஜயத்தின் பொழுது, இந்தியாவில் இவரின் வருகைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களை நடத்தியமையையும் வெகுவாகக் கண்டிக்கின்றோம்” என்று முன்னாள் அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், கோட்டாபயவின் இந்திய விஜயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது, தெரிவித்திருந்தார். அவர் மேலும் தொடர்ந்து தெரிவித்த கருத்துகளின் சுருக்கும் பின்வருமாறு உண்மை நிலைமையை வௌிப்படுத்துவதாகக் காணப்படுகின்றன.   

“இந்த நாட்டில், இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வு, இன்னும் எட்டப்படாத நிலைமை தொடர்கிறது. நாடும் மக்களும் உரிய அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டுமானால், இந்த நாட்டில் நீண்ட காலமாகப் புரையோடிப்போய்க் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள், இதயசுத்தியுடன் எட்டப்பட வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தற்போது இந்தியா சென்று நாடு திரும்பி உள்ளார். அவரின் விஜயத்தின் பொழுது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காண வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். 

“ஜனாதிபதி, இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் 30 வருட கொடூர யுத்தத்துக்கும் ஒற்றுமை இன்மையே காரணமாகும். 

“இதனால் பல பின்னடைவுகளை நாடு சந்தித்தது. தற்போது அபிவிருத்தியில் பின்னடைவை நோக்கி உள்ள நிலையில், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு உள்ளார். அவர் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்று கொடுக்க வேண்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாகும். அதுவே தற்போது நடைபெற்று வருகின்றது.  

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, தற்போது அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் நிம்மதியாகவே வாழ்ந்து வருகின்றனர். பெருபான்மை இன மக்களின் கெடுபிடிகள் இல்லை. அவர்களும் நாட்டின் நிலைமையைப் புரிந்துகொண்டு, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.  

“இவ்வாறான நிலையில், இலங்கையின் ஜனாதிபதி, இந்தியா சென்றிருந்த வேளையில், அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை,  இங்குள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்களை, ஆத்திரமடையச் செய்யும் செயற்பாடாகும். 

“சிங்கள மக்கள் கொந்தளித்தால், மீண்டும் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் நிம்தியாகவே வாழ முடியாது. அங்கு ஆர்ப்பாட்டங்ளைச் செய்து விட்டு, அவர்கள் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருந்து விடுவார்கள். இங்கு அடி வாங்குவது நாங்களே.   

“அதனால், இந்தியாவில் வாழும் எங்களது தொப்புள் கொடி உறவுகளே! உங்களின் உணர்வுகளுக்கு, நாங்கள் மதிப்பு அளிக்கின்றோம். உங்களது செயற்பாடுகள் அனைத்தும், எங்களது நிம்மதியான வாழ்க்கைக்காக இருக்க வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமானால், உங்களது அழுத்தங்கள் இங்குள்ள மக்களின் அபிவிருத்திகள், 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்துதல் தொடர்பாக இருக்க வேண்டும். 

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது, இலங்கையில் உள்ள இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வரையப்பட்ட தீர்வுச் சட்டமாகும். அதனை அமுல்படுத்தினாலே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இதையே இந்தியப் பிரதமர் மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார்.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .