2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பிரித்தானியாவில் ஏற்பட்ட தோல்வி: 'பலிக்கடா' ஆகப் போவது யார்?

Super User   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கே.சஞ்சயன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானியப் பயணம் தோல்வி கண்ட ஒன்று என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.

அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு அனுதாப அரசியல் நடத்த வேண்டிய நிலையில் இருப்பது அதன் துரதிஷ்டமே.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற அழைத்து விட்டு, அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் திருப்பி அனுப்பிய விவகாரம் மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

இப்போது அரசாங்கம் இந்தத் தோல்வியை யாருடைய தலையில் கட்டிவிடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்ற பின்னர் இந்த விவகாரத்துக்குக் காரணமானவர்கள் என்று பலர் மீது குற்றச்சாட்டுகள் விழுந்து விட்டன.

ஹீத்ரோ விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தன முதலில் தேசத்துரோகி ஆக்கப்பட்டார்.

அதன்பின்னர் அந்த விவகாரம் பற்றிக் கருத்து வெளியிடப் போய், ஐதேக பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்தாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

அதேவேளை விருந்தினராக ஜனாதிபதியை அழைத்து விட்டு பிரித்தானியா கதவைச் சாத்திக் கொண்டது என்றும், அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதிக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாதளவுக்கு அந்த நாடு தனது தரத்தைத் தாழ்த்திக் கொண்டதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம்சாட்டினார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவோ பிரித்தானியா புலிகளின் பூமியாகி விட்டதாகக் கூறினார்.
இப்போது என்னவென்றால் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மீது எரிந்து விழுந்திருக்கிறார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் உல்லாச வாழ்க்கை நடத்துவதாகவும், இலங்கை மக்களின் வரிப்பணத்தை மில்லியன் கணக்கில் செலவழித்து அவர்கள் மகப்பேற்றுக்கான சிகிச்சை செய்து அங்குள்ள மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுவும் பிரித்தானிய நிகழ்வுகளின் தொடர்ச்சியான ஒன்றே.

பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் சரியான முறையில் செயற்படவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

மேற்கு நாடுகளில் உள்ள தூதுவர்களையெல்லாம் திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசதரப்புக்குள் இருந்து தான் எழுந்துள்ளது.

அதைவிட இந்தப் பயணத்தினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு வெளிவிவகார அமைச்சு மீதும், ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அரசாங்கத்துக்குள்ளேயிருந்து பல்வேறு தரப்புகள் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பத் தொடங்கியுள்ள நிலையில், ஐ.தே.கவோ இதற்குக் காரணம் ஜனாதிபதியைச் சுற்றியுள்ளவர்களே என்கிறது.
ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக்கி பலிக்கடாவாக்க அவருடன் உள்ளவர்களே முனைவதாக மங்கள சமரவீர கூறியிக்கிறார்.

அவர்களின் சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்தால் போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்பாணை நிச்சயம் சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து ஜனாதிபதிக்கு வருவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னொரு பக்கத்தில் ஜேவிபியின் ரில்வின் சில்வாவோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவுக்குப் போய் தூங்கிக் கொண்டிருந்த புலிகளை தட்டி எழுப்பி விட்டு வந்திருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

இப்படிப் பல விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன.

அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிக்கல் வரும் என்று தெரிந்து கொண்டே பிரித்தானியாவுக்குப் பயணமானார் என்ற உண்மையை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.


பலரது ஆலோசனைகளையும் புறக்கணித்துவிட்டு அச்சுறுத்தல்களுக்கு அடிபணியக்கூடாது என்ற துணிவில் தான் அவர் அங்கு சென்றதாக அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.

அப்படித் துணிவுடன் அங்கு சென்ற ஜனாதிபதிக்கு ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது ஒரு தோல்வி.
 

அடுத்து திட்டமிட்டபடி பயணத்தைத் தொடர முடியாமல் முன் கூட்டியே திரும்பவும் நேரிட்டது.

எப்படிப் பார்த்தாலும் பிரித்தானியாவில் ஜனாபதிபதிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அரசாங்கத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியாதிருப்பதையும், அதற்கான பழியை யார் மீது போடலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிகிறது.

அரசாங்கம் புலம்பெயர் தமிழர்கள் மீது, அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் மீது, பிரித்தானிய அரசு மீது, ஒக்ஸ்போர்ட் யூனியன் மீது, பிரித்தானியாவில் உள்ள தூதரகம் மீது, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியவர்கள் மீது என்று ஏகப்பட்ட தரப்பினரை இந்த விவகாரத்துக்காகக் கூண்டில் ஏற்றத் தயாராக இருக்கிறது.

இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷபுதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.

'தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தவிருந்த உரையில் தெளிவுபடுத்துவதற்கு திட்டமிட்டிருந்தேன்.
 

எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காகச் செயற்பட்ட சிலர் அந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனர்' என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு பற்றி ஒக்ஸ்போர்ட்டில் வெளியிடப் போவதாக ஒருபோதும் அவர் கூறியிருக்கவில்லை.

அதேவேளை, உள்நாட்டில் அதை வெளியிடுமாறு எத்தனையோ கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் அதுபற்றி அரசாங்கம் செவி சாய்க்கவேயில்லை.

ஆனால், ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற முடியாது போயுள்ள நிலையில், அங்கு அரசியல்தீர்வை வெளியிடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி.
இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது.

புலம்பெயர் தமிழர்களால் தான் தமிழர் பிரச்சினைக்கான அரசியல்தீர்வை அறிவிக்க முடியாது போய்விட்டது என்று அவர் கூற முற்படுகிறார் என்பதே அது.

பிரித்தானியாவில் இருந்து ஜனாதிபதி திரும்பிய பின்னர், வன்னியின் பல பகுதிகளிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகள் நடத்தப்பட்டன.

இந்தப் பேரணிகளில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் சுலோக அட்டைகளும் கொண்டு செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

'இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி உள்நாட்டில் தான் தெளிவுபடுத்த வேண்டுமே தவிர பிரித்தானியாவில் அல்ல.
சர்வதேச சமூகத்திடம் அதை தெளிவுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை.'
இப்படித்தான் அரசாங்கம் சொல்லி வந்தது.

இப்போது என்னவென்றால் ஒக்ஸ்போர்ட்டில் அதை வெளியிடவிருந்ததாகக் கூறுகிறது.

அதைவிட அரசியல்தீர்வை ஒக்ஸ்போர்ட்டில் தான் வெளியிட வேண்டும் என்றில்லை.
அதை  நாடாளுமன்றத்திலேயே வெளியிட்டிக்கலாம்.

ஆனால் அரசியல்தீர்வை ஒக்ஸ்போர்ட்டில் மட்டும் தான் வெளியிடலாம் என்பது போன்றுள்ளது அரசாங்கத்தின் வாதம்.

இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது ஜனாதிபதியின் பிரித்தானியப் பயணமானது அரசாங்கத்தைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

அரசாங்கம் என்ன சொல்வது? என்ன செய்வது என்று தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறது.
இது பிரித்தானியாவில் ஏற்பட்ட கசப்பான பாடத்தின் விளைவு.
 

இந்தநிலையில் இருந்து அரசாங்கம் எப்போது எப்படி விடுபடப் போகிறது?
 


  Comments - 0

 • Mohamed Monday, 13 December 2010 04:33 PM

  இவ்விஜயத்தால் ஐ தே க யும் வலுவடைந்துள்ளது.

  Reply : 0       0

  xlntgson Monday, 13 December 2010 08:58 PM

  சூடானின் ஜனபதி யுத்தக்கொடுமைக் குற்றச்சாட்டுக்காக தேடப்படுகிறவர், அவரை பிடித்து விட்டார்களா? இவரைப்பற்றி நான் ஏற்கனவே பலமுறை கூறி இருப்பதால் அதிகம் விபரிக்க விரும்பவில்லை.

  Reply : 0       0

  xlntgson Sunday, 19 December 2010 09:28 PM

  ஜெயலத் சிங்களவர் அவருக்கு தமிழ் தெரியாது ஆனால் அவர் சிங்களப்புலி என்று முத்திரை குத்தப்படுகின்றார். சிங்களவர் ஒருவர் பௌத்தராகவும் இருக்க வேண்டும் என்னும் புதிய நியதியும் உருவாகிவருகிறது. தமிழருக்கு இருக்கும் பாதுகாப்புகூட பௌத்தரல்லாத சிங்களவருக்கில்லை என்று கூறும் நிலை உருவாகும். சிங்களத்தை படித்தால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்ற காலம் போய் சிங்களவர் தமிழ் படித்தால் அந்த உத்தியோகம் தமிழர் ஒருவருக்குப் போகாது என்ற நிலை உருவாகிறது. மும்மொழி திட்டம் இதய சுத்தி இல்லாவிட்டால் வெற்றி கொள்ளப்படாது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--