2017 சமாதானத்துக்கான நொபேல் பரிசு: பரிசின் தவறும் தவறின் பரிசும்

பரிசுகள் மீதான மதிப்பு தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளது. ஆனால், பரிசின் மீதான அவாவும் அது யாருக்கும் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இன்னமும் பரிசுகளைக் கவனிப்புக்குரியவையாக வைத்திருக்கின்றன. இன்னொரு வகையில், ஊடகங்கள் கட்டமைக்கிற பொதுவெளியில் பரிசுகளுக்கான அங்கிகாரத்தின் சமூகப் பெறுமானமும் பரிசுகளை வழங்கவும், பெறவும் வாய்ப்பளித்திருக்கிறது.   

பரிசுகளின் தன்மையும் அதைப் பெறுபவர்களின் செயல்களும் பரிசைத் தனக்கு அளித்து அவமதிப்பார்களோ என்ற அச்சத்தை சிலருக்கு உருவாக்கியும் இருக்கிறது. இதைப் பரிசின் தவறென்பதா? அல்லது தவறின் பரிசென்பதா?  

நாளை மதியம் இவ்வாண்டுக்கான சமாதானத்துக்கான நொபேல் பரிசை வெல்லப்போவது யாரென்று தெரிந்துவிடும். ஆனாலும், அப்பரிசுக்குரியவர் யார் என்பதை எதிர்வுகூறுவதில் உள்ள சுவாரஸ்யம் யாருக்குப் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இப்பரிசுகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு இப்பரிசை கொஞ்சம் கவர்ச்சிகரமாக்கியுள்ளது.   

முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இவ்வாண்டு சமாதானத்துக்கான நொபேல் பரிசைத் தெரிவதற்கான குழுவுக்கு காலம் கொஞ்சம் சரியில்லை என்றே சொல்லலாம். மியான்மாரில் றோகிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டமிட்ட வன்முறைகள் நடந்தேறுகின்ற நிலையில் அவ்வாட்சியின் தலைமைப்பீடத்தில் சமாதானத்துக்கான நொபேல் பரிசை வென்ற ஆங் சாங் சூ கி அமர்ந்திருப்பதும் அவர் அங்கு நடக்கின்ற கொலைகளை மூடிமறைப்பதும் நியாயப்படுத்துவதும் நடக்கிறது. அவுங் சான் சூகி க்கு வழங்கப்பட்ட நொபேல் பரிசைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்ற நிலையில், இவ்வாண்டுக்கான வெற்றியாளரைத் தெரிய வேண்டிய கட்டாயத்தில் பரிசுத் தெரிவுக்குழு உள்ளது.   

இதேவேளை, 2010ஆம் ஆண்டு சீனாவின் லியு ஜியாபோவுக்கு பரிசை வழங்கியதற்கான கொடுந்தண்டனையை பல ஆண்டுகளாக நோர்வே அனுபவித்தது. சீனாவின் மனித உரிமைப் போராளி என்றும் சீன அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்தவர் என்ற காரணம் காட்டப்பட்டு லியு ஜியாபோவுக்கு பரிசு வழங்கப்பட்டது. குற்றங்களுக்காகக் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த லியு ஜியாபோவுக்கு இவ்விருதை வழங்குவதன் மூலம் அவரை விடுதலை செய்யவியலும் என்ற நம்பிக்கையில் இவ்விருதை பரிசுத் தெரிவுக்குழு அறிவித்தது.   

இச்செயலை வன்மையாகக் கண்டித்த சீனா, பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் செயலை பரிசுக்குழு செய்துள்ளது என்று கூறி நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது. இது, உலக அரசியல் அரங்கிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்புகளையும் நோர்வேக்கு ஏற்படுத்தியது. மிக நீண்டகால இராஜதந்திர நகர்வுகளின் பின்னர் இவ்வாண்டு தொடக்கத்தில் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் முழுமையான ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதோடு, நோர்வே தூதராலயம் சீனத் தலைநகரில் திறக்கப்பட்டது.   

இவ்வாண்டு லியு ஜியாபோ காலமானார். ஆனால், அவருக்கு நொபேல் பரிசு கிடைத்தபோது இருந்த ஊடக ஒளி, அவர் மறையும் போது கிடைக்கவில்லை. அதேபோல, அவருக்கு வழங்கப்பட்ட பரிசால் அவரை சிறையில் இருந்து விடுவிக்கவும் இல்லை. லியு ஜியாபோ இவ்விருதைப் பெறுவதற்கு முன், சீனாவிலேயே அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இவ்விருதுக்குப் பின்னரே அவரைப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தெரிந்துகொண்டார்கள்.   

அவரைப் பரிசுக்குத் தகுதியாக்கிய, சிலவற்றை அவர் செய்திருக்கிறார். அமெரிக்காவின் அத்தனை மேலாதிக்க போர்களுக்கும் அவர் துணைபோயிருக்கிறார். சீனாவில் இருந்து கொண்டே தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். கொரியா, வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்பு போர்களையும், ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர்களையும் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார். 2004ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஈராக் போருக்கு ஆதரவாகப் பேசிம் ஜார்ஜ் புஷ்ஷை புகழ்ந்திருக்கிறார். இவர் ஆதரித்த அத்தனை ஆக்கிரமிப்புகளும் போர்களும் இலட்சக்கணக்கான மக்களின் மனித உரிமைகளைப் பூண்டோடு அழித்திருக்கிறது.   

இவர், மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்‌ரே​ைல நிலைப்பாட்டை ஆதரித்து, பாலஸ்தீனியர்களைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்துள்ளார். இங்கு கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. சீனா மனித உரிமையை மீறியதா, பின்பற்றுகிறதா என்பதெல்லாம் பிரதானமான கவலை அல்ல. அப்படி இருந்திருந்தால் மலிவாக நுகர்வதற்காக சீனத் தொழிலாளிகள் கசக்கிப் பிழியப்படுவது குறித்தும், நிலக்கரி சுரங்க விபத்தில் ஆண்டுதோறும் பல நூறு தொழிலாளிகள் இறந்து போவது குறித்தும் மேற்குலகின் மனித உரிமைக் காவலர்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால், என்றுமே அப்படி பேசியதில்லை. அதற்கான பொருளாதாரக் காரணிகள் வலியன.  

அதேபோல 2006ஆம் ஆண்டு பரிசை வென்ற பங்களாதேஷைச் சேர்ந்த கிராமின் வங்கியின் நிறுவனர் முஹமது யூனுஸ் இன்னொரு மோசமான வட்டிக்கடைக்காரன் தான் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறுங்கடன்களின் முன்னோடி என்று கருதப்படுபவர் யூனூஸ். அவரது கிராமின் வங்கி வழங்கிய குறுங்கடன்கள் மூலம், பங்களாதேஷில் பலரை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தியிருக்கிறார் என்றும், ஏழ்மை ஒழிப்புக்கு இது தான் மிகச் சிறந்த வழியென்றும் சர்வதேச அளவில் புகழப்பட்டவர். இதே குறுங்கடன்கள் தான் இலங்கையின் வடக்கில் உள்ள மக்களை நூதன வழிகளில் சுரண்டுவதற்கும் என்றுமே மீளவியலாத கடனில் அவர்கள் வீழ்வதற்கும் வழிவகுக்கிறது.   
2011ஆம் ஆண்டு மே மாத மத்தியில் பங்களாதேஷில் இருந்து வெளியாகும் “ஷப்தஹிக் 2,000” என்கிற ஏடு குறுங்கடன் எனும் பெயரில் சுமார் 30 - 40 சதவீதம் வரை அநியாய வட்டி விதிக்கும் கிராமின் வங்கி, தவணையைத் திருப்பிச் செலுத்த இயலாத ஏழைகளை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் அப்படியும் தவணை தரமுடியாமல் தவிப்பவர்களின் கால்நடைகளைக் கவர்ந்து வருவதையும் பல ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் போட்டுடைத்தது.   

நோர்வே, சுவீடன், ஜேர்மனி போன்ற நாடுகளிடமிருந்து கிராமீன் வங்கி நிவாரணப் பணிக்காக பெற்ற சுமார் 10 கோடி அமெரிக்க டாலர்களை கிராமீன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கிராமீன் கல்யாண் என்ற தனியார் நிறுவனத்துக்கு கைமாற்றியதாக நோர்வே அரசுத் தொலைக்காட்சி 2010 ஆம் ஆண்டில் ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பியது. இதை உறுதிசெய்த நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹேம், நோர்வே வழங்கிய தொகையை முஹமது யூனுஸ் திருப்பியளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.   

இதேபோல கடந்தகால வெற்றியாளர்களில் நாட்டுக்குள் கறுப்பர்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தாத ஆளில்லாத சிறிய விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் பல்லாயிரக்கணக்காணேரைக் கொல்ல அனுமதியளித்ததாகக் கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பல கொலைகளுக்குப் பொறுப்பாகியுள்ள கொலம்பிய ஜனாதிபதி இமானுவேல் சான்தோஸ் எனப் பல குற்றவாளிகள் கடந்த பத்தாண்டுகளில் இப்பரிசை வென்றுள்ளனர்.   

இவ்வாண்டு பரிசுக்காக மொத்தம் 318 பரிந்துரைகள் நொபேல் பரிசுத் தெரிவுக்குழுவுக்குக் கிடைத்துள்ளன. அதில் 216 தனிநபர்களும் 103 அமைப்புகளும் அடக்கும். இம்முறை இப்பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகிறார் எனக் கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்​ேலாவில் உள்ள சமாதான ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் (Peace Research Institute of Oslo) இயக்குநர் தனது எதிர்வுகூறலைக் கூறுவது வழக்கம். 2017ஆம் ஆண்டுக்கான எதிர்வுகூறலில் அவர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் இணைத்திருந்தார். இது இவ்வாண்டு இலங்கையில் கொஞ்சம் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.   

இவ்வாண்டு பரிசு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சிலரை இனி நோக்கலாம்.   அதில் முன்னிலையில் இருப்பது, அணுசக்திக் கட்டுப்பாடும் அதை அமைதியான வழியில் பயன்படுத்தியமையும். அவ்வகையில், ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையை சாத்தியமாக்கிய ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முஹமட் ஜாவிட் சரீப் முன்னிலை வகிக்கிறார். அத்தோடு, இவ்வுடன்படிக்கையில் ஒப்பமிட்ட ஐரோப்பிய ஒன்றிய வெளிவிகார அலுவல்களுக்கான உயர் பிரதிநிதி பிரட்ரிகா மொக்கரேனிக்கு வாய்ப்புகள் உள்ளன.   

வடகொரியா மீதான அமெரிக்காவின் போர்முரசும் அணுசக்தியைப் பயன்படுத்துவதானது ஏற்படுத்தும் பாரிய அழிவுகள் குறித்த அச்சமும் அணுசக்திக் கட்டுப்பாட்டை முக்கிய பேசுபொருளாக்கியுள்ளன.   

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை செல்லுபடியற்றதாக்கப் போவதாகவும் அவ்வுடன்படிக்கை அமெரிக்க நலன்களுக்கு எதிராக இருக்கின்றது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார். இவை அனைத்தும் உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள். இப்பின்புலத்தில் ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையை முக்கியமான மைல்கல்லாக பரிசுக்குழு கணிக்கலாம்.  

இதேபோல எதிர்பார்க்கப்படும் இன்னொரு விடயம் உலகளாவியுள்ள அகதிகள் பிரச்சினை ஆகும். சிரியா முதற்கொண்டு பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் உயிருக்கு அஞ்சி மத்தியதரைக் கடலைத் தாண்டி ஐரோப்பியாவுக்குள் புகுந்துள்ளனர்.   

சிரிய யுத்தம், யேமன் யுத்தம், அரசற்ற லிபியா, ஈராக், துருக்கியில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் வெறியாட்டம் என்பன இந்நாட்டு மக்களை அதன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்த்துள்ளது. ஆபிரிக்காவில் நடைபெறும் உள்நாட்டுப் போர்களும் காலநிலை மாற்றங்களின் விளைவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் பல்லாயிரக்கணக்கானோரை ஆபிரிக்காவுக்குள் இடம்பெயர்த்துள்ளது.   

மியான்மாரில் உள்ள றோகிஞ்சியா முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். இன்று உலகின் மிகப் பாரிய பிரச்சினையாக அகதிகள் பிரச்சினை இருக்கிறது. இப்பிரச்சினை மனிதாபிமான அடிப்படையில் நோக்கியோருக்கு இப்பரிசு வழங்கப்படலாம். அவ்வகையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR) இதில் முன்னிலையில் இருக்கிறது.   

கடந்த சில ஆண்டுகளாக தனிமனிதர்களுக்கே இப்பரிசு வழங்கப்பட்டு வந்துள்ளது. பாரிய விமர்சனங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்பான தெரிவாகவும் அமைவது நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சமாதானத்துக்கான நொபேல் பரிசே. அவ்வகையில் இம்முறை UNHCRக்கு வாய்ப்புகள் உள்ளன. அகதிகள் ஐரோப்பாவுக்குள் வந்தபோது அவர்களை வரவேற்று அனுமதித்து முன்னுதாரணமாக்கிய பெருமை ஜேர்மன் சான்சலர் அங்கெலா மேக்கலைச் சாரும்.   

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த முடிவானது அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என நன்கறிந்தும் அவர் அம்முடிவை எடுத்ததோடு, கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது தடவையாக சான்சலாகியருக்கிறார். ஐரோப்பாவின் மிகவும் அதிகாரம் மிக்க மனிதர் அவர் என்பதும் அவரது முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் திசை வழியையே தீர்மானிப்பவை என்பதும் முக்கியமானது.   

இவ்விரு தெரிவுகளிலும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒருவர் பரிசில் உள்ளடக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வலுவான காரணங்கள் உள்ளன. நோபல் பரிசுக் குழு அமெரிக்கா சார்பானதாகவே தனது பரிசுகளை காலங்காலமாக அறிவித்து வந்துள்ளது. ஆனால், மாறுகின்ற உலகச் சூழல் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் எதிரெதிர்த் திசைகளில் நகர்த்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ஜேர்மன் சான்சலர் அங்கெலா மேக்கலும் முரண்பாட்டுத் தொனியில் பேசுகிறார்கள். இது அமெரிக்கா, ஐரோப்பாவில் இல்லாத அண்டை நாடுகளுக்கு சவாலானது. நோர்வே பன்னெடுங்காலமாக அமெரிக்காவுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. அதேவேளை, ட்ரம்பின் தெரிவின் பின்னரான மாறுகின்ற உலக ஒழுங்கு ஐரோப்பாவின் தவிர்க்கவியலாத முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.   

ஈரான் அணுசக்தி உடன்படிக்கைக்கு பரிசு வழங்கப்படுமாயின், அது நேரடியான டொனால்ட் ட்ரம்புக்கு விடுக்கப்படும் சவாலாகக் கருதப்படலாம். அதேவேளை அங்கெலா மேக்கலுக்கு விருது வழங்கப்படுவதானது, ஐரோப்பாவை நோர்வே அணைக்கிறது என்ற கருத்தை உருவாக்கும். சமாதானத்துக்கான நொபேல் பரிசுக்குழு அரச சார்பற்றது, சுயாதீனமானது என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அதன் அரசியல் நோக்கங்கள் அப்பரிசுக்குத் தெரிவானவர்களால் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் அரசியல் நன்கறிந்தது.   

இப்பரிசில் கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. நோர்வேயின் வெளிவிவகாரக் கொள்கையின் பகுதியாகவுள்ள சர்வதேச உதவிக்கான முன்னிறுத்தும் கருப்பொருட்கள் சார்ந்தும் பல தடவைகள் வெற்றியாளர்கள் தெரிவாகியிருக்கிறார்கள். அவ்வகையில், பெண்கல்வி முன்னிறுத்தப்பட்டபோது மலாலாவும் கொலம்பியாவில் தீர்வை எட்ட நோர்வே நீண்டகாலம் இடைத்தரகராக இருந்தது. எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கை நோர்வேயின் மத்தியஸ்தத்துக்குக் கிடைத்த வெற்றி என புகழப்பட்டது. அதற்குப் பங்களித்த கொலம்பிய ஜனாதிபதி சென்றமுறை பரிசை வென்றார்.   

பெண்கள் உரிமைகள் நோர்வேயின் பிரதான கொள்கையானபோது 2011இல் மூன்று பெண்கள் இவ்விருதை வென்றனர். 2007இல் காலநிலை மாற்றம் நோர்வேயின் சர்வதேச உதவிக் கொள்கையின் பகுதியாக முதன்முறையாக உருவெடுத்தபோது பரிசும் அது சார்ந்தவர்களுக்கே சென்றது.   

இப்பரிசு யாருக்கும் கிடைக்கலாம். ஆனால், இப்பரிசுத் தெரிவானவர் சொல்லுகிற செய்தியை விட அப்பரிசுக்குரியவர் கொண்டுள்ள அரசியல் ஒளி வட்டம் முக்கியமானது. அது பரிசை விட அதிகமாகவே உலக அரசியல் அரங்கின் நிலைப்பாட்டை அறிய உதவும் பயனுள்ள கருவியாகும். அவ்வகையில், மேற்சொன்ன இரு தெரிவுகளுக்கு வெளியே சிலரை நோக்கவியலும். முதலாவது மனிதாபிமான உதவிகள் என்பதன் அடிப்படையில் சிரியாவில் இயங்கும் “வெள்ளைத் தொப்பிக்காரர்கள்” (White Helmets), காலநிலை மாற்றம் அத்தோடு சேர்ந்துள்ள நின்றுநிலைக்கக்கூடிய அபிவிருத்தி இன்னொரு முக்கிய புள்ளியாக உள்ள நிலையில், இதற்கு பங்களித்த ரோம் குழு (Club of Rome), ஹேர்மன் டேலி (Herman Daly) ஆகியோருக்குக் கிடைக்கலாம். ஒருவேளை, இதற்கான அங்கிகாரத்தை அதிகரிக்க இவர்களோடு பாப்பரசர் பிரான்சிஸ் இணைக்கப்படலாம்.  

ஆபிரிக்காவின் அபிவிருத்தி, அமைதி ஆகியவற்றின் மீது அதிக கவனம் குவிகிறது. அவ்வகையில், எக்கோவாஸ் என்றழைக்கப்படுகின்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பொருளாதாரச் சமூகமும் (The Economic Community of West African States - ECOWAS) பரிசுக்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனச் சொல்லப்படுகிறது.   

நாளை, இப்பரிசு அறிவிக்கப்படும்போது இங்கு எதிர்வுகூரப்பட்ட யாராவது ஒருவருக்கு இப்பரிசு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், இப்பரிசு சிலரையும் சில விடயங்களையும் எதிர்வுகூரல்களின் ஊடு உலகின் கவனத்தை ஈர்க்கிறது. “குற்றம் செய் பரிசு கிடைக்கும்” என்பதை இம்முறையும் இப்பரிசு நிரூபிக்குமா என்பதே நம்முன்னுள்ள கேள்வி.   


2017 சமாதானத்துக்கான நொபேல் பரிசு: பரிசின் தவறும் தவறின் பரிசும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.