க. அகரன் / 2017 நவம்பர் 13 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இடைக்கால வரைவை வைத்துக் கொண்டு, மக்களைக் குழப்பக்கூடாது என,தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார்.
இவ்விசேட கூட்டம், வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“இன்றைய (ஞாயிறு) கூட்டத்தில், அரசமைப்புத் தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட்டிருந்தன. இடைக்கால அறிக்கையே, தற்போது வெளிவந்துள்ளது. இதன் பிரகாரம், வர இருக்கின்ற இறுதி வரைவில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
“ஆகவே இடைக்கால வரைவை வைத்து மக்களைக் குழப்பாமல், அரசமைப்புக்கான முழுமையான வடிவம் வந்ததன் பின்னரேதான், மக்களுக்கு உண்மை விடயங்களைச் சொல்ல முடியும் என்பது தொடர்பாக, கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
“உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி, அதனோடு இணைந்திருக்கக் கூடிய பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைகளையும், மத்தியகுழு உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
“இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும், வடக்கில் பல்லின மக்கள் வாழக்கூடிய இடங்களிலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் கூட்டாக எவ்வாறு இந்தத் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதேவேளை, கூட்டமைப்புக்குள் ஒற்றுமை நிலைக்குமா என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த சிறிதரன் எம்.பி, “தமிழரசுக் கட்சி, ஒற்றுமைக்காகவே கூடுதலான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஒற்றுமையை விரும்புவதனால்தான், எங்கள் கட்சி தொடர்பாக பலர் விமர்சனத்தை முன்வைக்கின்ற போதிலும், எங்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் போதும், தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக, நாம் கூடியளவு மௌனத்தை வழங்கி, ஒற்றுமைக்காகத் தியாகம் செய்துகொண்டிருக்கின்றோம். அந்த தியாகம் வீண் போகாது” என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .