2026 ஜனவரி 04, ஞாயிற்றுக்கிழமை

‘இனப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வு கைநழுவி போய்விட்டது’

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இனப்பிரச்சினைத் தீர்வுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சளைக்காது உழைத்து, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் உட்பட கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், வர்த்தக பிரமுகர்கள், யாழ்ப்பாண-மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் தலைவர்கள் ஆகியோர் அக்கறையுடன் செயற்பட்டு அயராது உழைத்து, 2004ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறந்த வாய்ப்பு கைநழுவிபோய்விட்டது. அதுவே இனப் பிரச்சினைக்கான இறுதியான சந்தர்ப்பமானதாகவும் இருந்ததென நான் கருதுகிறேன்” என்று,  தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள உடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“முன்னணியில் செயற்பட்ட அரசியல் தலைவர்கள் சிலர், தமது மக்களை மீட்டெடுக்க கிடைத்த அரிய சந்தர்ப்பங்களை தவறவிட்டமை கவலைக்குரிய விடயமாகும். அதற்குப் பதிலாக, அந்த வாய்ப்புகளை தங்களின் சுய இலாபத்துக்காக பயன்படுத்தியது மட்டுமன்றி எமது மக்களை மரணத்தின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தினர். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கிடைத்த வாய்ப்புக்களுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டு இப்போது ஏனையவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கும், துரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளம் அவர்களுடைய பேராசைகளை நிறைவேற்றியது. அந்த அடையாளம் பல வழிகளில் பிழையான வழியில் பிரயோகிக்கப்பட்டாலும் அவர்களுக்கு வேண்டியதை அடைவதற்கும் உலகின் சகல பகுதிகளுக்கு தாங்கள் செல்வதற்கான அனுமதிபத்திரமாகவே பயன்படுத்தப்படுகின்றது.

இதுவரை காலமும் விடுதலைப்புலிகள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தினார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் விடுதலைப்புலிகளின் அரசியல் சக்தி என்றும் பொதுமக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஓர் அரசியல்வாதியிடம் இருந்து வருகின்ற வேண்டுகோள், கட்டளைகள் ஆகியன விடுதலைப்புலிகளிடம் இருந்து வருகின்றதென்றால் அதனை மீறமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்களை நம்பவைத்து, அச்சுறுத்தி சில முன்னணி அரசியல்வாதிகள் கையாண்டுவந்த தந்திரமாகும். இந்தத் தந்திரத்தையே கடந்த காலத்திலும், தொடர்ந்து இன்றும் கையாண்டு பல வழிகளிலும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

பதவி பேராசை கொண்டவர்களால் கிளிநொச்சியில் மேற்கொண்ட சதிமுயற்சியே இறுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது.

அரசாங்கம் - கூட்டமைப்பு ஆகிய இரு சாராருக்கும், விடுதலைப் புலிகளின் சம்மதமும் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளமையால் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு நியாயமான வாய்ப்புகள் கிடைத்திருக்கும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை மீளப்பெற கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தமை பரிதாபத்துக்குரியதாகும். அதுமட்டுமல்ல நூற்றுக்கு நூறுவீதம் ஒற்றுமையை வலுப்படுத்தக்கூடிய வகையில் எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்த விடுதலைப் புலிகளின் அமைப்பு சின்னாபின்னமாவதிலுந்து தடுத்திருக்கலாம்.

தீர்வை அடைய கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நாம் எவ்வாறு தவறவிட்டோம், யாரால் தவறவிட்டோம் என்பதை முறையான விசாரணை செய்து காரணமானவர்களை அடையாளம் காண வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X