2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

’உப-குழுவை நியமித்தது அரசாங்கத்துக்குப் பாதிப்பு’

Editorial   / 2021 மார்ச் 01 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய, உப-குழுவொன்று நியமிக்கப்பட்டமையால், அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஆளும்தரப்பு உறுப்பினர் என்ற வகையில் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி, அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் நிமித்தம், அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.

கொழும்பில், நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'ஏப்ரல்- 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, தற்போதைய அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளாகக் குறிப்பிட வேண்டும். குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையை மாத்திரம் சமர்ப்பித்துள்ளது' என்றார். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புகள் ஆகிய குறுகிய தரப்பினரை மையப்படுத்தியதாக, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், 
இந்த  முழுமையற்ற அறிக்கையை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையாக நிராகரிக்கிறது. இரு வேறுபட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைப் பல விடயங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது என்றார். 


 குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்களைப் பகிரங்கப்படுத்த  விசாரணை ஆணைக்குழு தவறியுள்ளது எனத் தெரிவித்த அவர், 
பல எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவித்தார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மைக் காரணிகள் பகிரங்கப்படுத்தப்படும் என்பது ஒட்டுமொத்த மக்களினதும் பிரதான எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது என்றார். 

'அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், அரசாங்கம் செயற்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, குறுகிய காலத்தில் இல்லாமலாக்கப்பட்டதால், தேசிய அரசாங்கத்தை முழுமையாக மக்கள் நிராகரித்தனர். ஆகவே, கடந்தகால அரசியல் சம்பவங்களை, அனைத்துத் தரப்பினரும் ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும்' என்றார். 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X