2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; டுபாயில் கைதான மூவர் விடுதலை

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கை திரும்பியுள்ளனர்.

சிலாபம் - தொடுவாவ பகுதியைச் சேர்ந்த டயிள்யூ.ரமேஸ் பெர்ணான்டோ, காலி பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.விஸ்வ டீ சில்வா, மட்டக்களப்பைச் சேர்ந்த குணதாஸ டிரோன் ஆகிய மூவரே, இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  

டுபாயிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் குறித்த மூவரும் பணயாற்றி வந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.  

மட்டக்களப்பைச் சேர்ந்த குணதாஸ டிரோனின் உறவினர்களது பிள்ளைகள் இருவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பான படங்களை, அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, தமது மதத்தை அவமதிக்கும் வகையில் அவரது பதிவு அமைந்துள்ளதாகத் தெரிவித்து, குறித்த ஹோட்டலில் பணியாற்றிய நபரொருவர் டுபாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  

குறித்த முறைப்பாட்டையடுத்து, நண்பர்களான குறித்த மூவரையும் அல்வர்சோ பொலிஸார், கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதியன்று கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  

இதனையடுத்து, டிசெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மூவரும் தலா 5 இலட்சம் ரியாலை தண்டப் பணமாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், தண்டப் பணத்தைத் செலுத்த தவறும் பட்சத்தில், மூன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

இவ்வாறான நிலையில், காரணங்கள் எதனையும் அறிவிக்காது, தங்களை டுபாய் நீதிமன்றம் திடீரென விடுதலை செய்ததாக, இலங்கைக்கு வருகைதந்த ரமேஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். டுபாயிலுள்ள நண்பர்களின் உதவியால், தாம் இலங்கையை வந்தடைந்ததாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .