2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

’உல்லாசப் பயணத்துறையைக் கட்டியெழுப்ப ஊக்குவிப்பு வேலைத்திட்டம்’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள உல்லாசப் பயணத்துறையை, பல படிமுறைகளின் கீழ் கட்டியெழுப்புவதற்கான, ஐந்தாண்டுகால உலகளாவிய ஊக்குவிப்பு வெலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக, இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி கிர்மாலி பெர்ணான்டோ, நேற்று (23) தெரிவித்துள்ளார்.

உல்லாசப் பயணத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள 11,071 நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கும் 39,253 அறைகள் அடங்கிய சுமார் 2,669 தங்குமிடங்களுக்கு, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரணங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தர மதிப்பீடு, தாக்க மதிப்பீடு மற்றும் அமைவிடத்துக்கான பாதைகளைக் குறித்தல் என்ற மூன்று படிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உதவி கிடைக்கவுள்ளதாகவும் இதற்கு, அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதென்றும், அவர் தெரிவித்தார்.

உல்லாசப் பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தவர்களில் 12 ஆயிரத்து 329 பேர், தொடர்ந்தும் இலங்கையிலேயே தங்கியுள்ளனர் என்றும் இவர்களுக்குத் தேவையான வசதிகளை, அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளதென்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக, நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சமூக இடைவெளி காரணமாக, உல்லாசப் பயணத்துறையானது, சர்வதேச ரீதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும் உள்நாட்டில் அதை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அழகான சுற்றுலா அனுபவம், ஆயுர்வேதம், உள்நாட்டு ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வமான மசாலா, மூலிகைகள் மற்றும் பல விடயங்கள், கலாசார மரபுகள் ஊடாகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X