2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

’கொரோனா தடுப்பூசிக்கு தனியாரிடம் பிச்சை’

Editorial   / 2021 ஜனவரி 18 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களுக்குத் தேவையான கொரோனா வைரஸ்  தடுப்பூசிகளைப் பெறுவதில், அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லையெனக் குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்துகொள்வதற்காக, நிதியுதவி செய்யுமாறுஇ தனியார் துறையினரிடம் அரசாங்கம் பிச்சை எடுக்கிறது என்றார். 

நுகேகொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

'கொரோனா வைரஸ் தடுப்பூசி, இலங்கையர்கள் அனைவருக்கும் மார்ச் மாதத்துக்குள் கிடைக்குமென அரசாங்கம் கூறியது பொய்யாகும், இதற்காக இறக்குமதி வர்த்தகர்களிடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் கோரியுள்ளதாகத் நான் அறிந்து கொண்டேன்' எனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்கஇ இந்தத் தொகையை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திலிருந்து (பட்ஜெட்) அரசாங்கம் ஒதுக்கியிருக்க முடியும். எனினும், அவ்வாறு செய்யாமல், அரசாங்கம் பிச்சையெடுக்கிறது என்றார்.

'தடுப்பூசியைக் கொள்வனவு செய்ய வேண்டுமாயின், கடந்த நவம்பரில்  அறிவித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வருடம் ஜனவரி மாதமே அறிவித்துள்ளனர். அத்துடன், உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல தடுப்பூசிகள் தோல்வியடைந்துள்ளன. அதனால், நாம் சரியானதைத் தெரிவு செய்ய வேண்டும். உற்பத்தியை விடக் கேள்வி அதிகம். அதனால் அனைத்து நாடுகளுக்கும் 3 சதவீத தடுப்பூசியே வழங்கப்படுகின்றது' என்றார். 


தடுப்பூசிகளை வழங்க தேசிய திட்டமிடல், ஒருங்கிணைப்பு, ஆகியவற்றுக்கான செலவை   வரவு- செலவுத் திட்டத்தில் உள்ளீர்க்குமாறும் தேசிய திட்டமொன்றை உருவாக்குமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இலங்கை இதுவரை திட்டமொன்றையும் தயாரிக்கவில்லை என்றார்.

இத்திட்டத்துக்காக தேசிய குழுவொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். இக்குழுவின்  பிரதானியாக சுகாதார உயர் அதிகாரிகள் இருக்க வேண்டும். இலங்கையில் அவ்வாறானதொரு குழு உருவாக்கப்படவில்லை எனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இதுதொடர்பில் இலங்கையில் முறையொன்று ஏற்படும் வரைஇ தடுப்பூசி கிடைக்குமா எனத் தெரியவில்லை என்றார்.

நாம் வாழ்வதற்கு இருக்கும் ஒரே வழிஇ இலவச சுகாதாரம். எனவே,  அரசாங்கம் இதற்காகச் செலவழிக்க வேண்டிய பணத்தை பட்ஜெட்டில்  தேட முடியும். இதற்காக முதலாவதாக பட்ஜெட்டில் 20,000 டொலர் மில்லியன் ஒதுக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்த ரணில், அப்படி எதுவும் செய்யாமல், தனியார் துறையினரிடம் அரசாங்கம் பிச்சை எடுக்கிறது.

அதற்காகச் செலவு செய்வதற்கு, அரசாங்கம் தயாரில்லை என்றார்.
'தடுப்பூசிக்காக ஒவ்வொருவரிடமும் சென்று, பிச்சை எடுக்காமல், நாட்டுக்குக் காரணத்தைத் தெளிவுபடுத்தி, எமது ஒத்துழைப்பைப் பெற்று, நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .