2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பெற்றோரை இழந்த வன்னி சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்பு - த.தே.கூ

Super User   / 2010 மே 21 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுகந்தினி ரட்னம்


வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமது பெற்றோரை இழந்த சிறுவர்கள் மற்றும் அங்கவீனமான சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கவனிப்பாரற்ற நிலையில் அனாதரவாக உள்ளனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சற்றுமுன் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், வன்னியின் பல பகுதிகளிலும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தனர்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகிய இருவரையும் தவிர்ந்த ஏனைய 12 உறுப்பினர்களும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் தமிழ்மிரர் இணையதளம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது :-

வவுனிய கிழக்கு, நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மதியமடு கிராமம், நெடுங்கேணி நகரம், ஒலுமடு, முல்லைத்தீவில் வற்றாப்பளை, விளாங்குளம் மற்றும் துணுக்காய் போன்ற பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அம்மக்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்தனர்.

பாதுகாப்புத் தரப்பினரின் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளைகள் மற்றும் கணவர்மாரை மீட்டுத்தருமாறும், சுயதொழிலுக்கான (விவசாயம்) உபகரணங்களைப் பெற்றுத்தருமாறும், 6 மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள  உலர் உணவுத் திட்டத்தை ஒரு வருடமாக நீடிக்குமாறும், போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறும், கிணறுகளை துப்புரவு செய்துதருமாறும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களைப் பெற்றுத்தருமாறும், வைத்தியசாலை வசதியை ஏற்படுத்தித்தருமாறும் பெற்றோரை இழந்து உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் உள்ள சிறுவர்களுக்கு சிறந்த வாழ்க்கை முறைமையினை ஏற்படுத்தித்தருமாறும் அம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர்களின் நாளைய விஜயத்தின்போது செட்டிகுளம், வவுனியா பிரதேச தடுப்பு முகாம்களிலுள்ள மக்களைச் சந்திக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார் .

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--