2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த 10 பேருக்கு சிறை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த 10 பேரை குற்றவாளியாக இனங்கண்ட பாணந்துரை மேல்நீதிமன்றம் அவர்களுக்கு தலா நான்கரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பதிவியிலிருந்த போது அந்த பிரிவில் கடமையாற்றிய 10 பேருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாடகர்களான ரூகாந்த மற்றும் சந்திரலேக்கா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற வழக்கின் பிரதிவாதிகளான 10 பேரையும் குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி குசல வீரவர்தன மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன்இ ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த ஆ.பீ. சோமரத்னவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ததுடன் ஏனைய 10 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் ஐந்து குற்றச்சாட்டுகளில் அவர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் இனங்கண்டது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு கடும் வேலைகளுடன் கூடிய 6 மாத சிறைத்தண்டனையும் ஏனைய நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் கடும் வேலைகளுடன் கூடிய ஒருவருட சிறைத்தண்டனையும் விதித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரும் சிறைத்தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தீர்ப்பிற்கு எதிராக தாம் மேன்முறையீடு செய்யவுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த இவர்கள் 13 வருடங்களுக்கு மேலதிகமாக இந்த வழக்குடன் தொடர்பு பட்டிருப்பதுடன் அவர்களுடைய வேலையும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாடகர் ரூகாந்த மற்றும் சந்திரலேக்கா வசித்த பொல்கஸ்வோவிட்ட கொட வீட்டுத்தொகுதியில் வைத்து 2000 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இரவு 8 மணியளவில் அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து அவர்களின் தலை முடியை வெட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .