2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

த.தே.கூட்டமைப்பு பதிலளிக்காமை குறித்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம் கவலை

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து கலந்துரையாட வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பதிலளிக்காமைக் குறித்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஐந்தாவது தடவையாக இன்று மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் கூடியது. இக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கடந்த கூட்டத்தில்  எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அக்கட்சி உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்காமை குறித்து இவ்வரங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றது என்பதை தெரிவிக்கின்றது.

இன்றைய தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி ஆராயப்பட்டதுடன் அவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்,

1.அர்த்தமுள்ள மீள்குடியேற்றம்

2.உட்கட்டமைப்புடன் கூடிய மீள்கட்டுமானம்

3.உயர் பாதுகாப்பு வலயங்கள், மீள் குடியேற்றங்கள்

4.மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுவரும் இராணுவக் குடியேற்றங்கள்

5.முழுமையான சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்துதல்

6.ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை, உறவுகளை, அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளை பெற்றுக்கொடுத்தல்

7.வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தளர்த்துதல்

8.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்துதல்

9.மீள் குடியேற்றத்தை வெளிப்படையாகச் செய்வதுடன் அதற்கு மக்கள் பிரதிநிதிகள், சர்வதேச உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மாகாண சபைகளுக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக  அமுல்படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்துவரும் கூட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகள், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ள போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும்  இக்கூட்டத்தில் தீர்மானங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதில் கலந்து கொண்ட ஒன்பது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்  வி.ஆனந்த சங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்,  தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,  தந்தை செல்வாவின் மகனும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவருமான எஸ்.சி.சந்திரஹசன், ஈ.பி.ஆர்.எல்.எப். பிரதிநிதி இரா.துரைரத்தினம், ஸ்ரீ டெலோ பிரதிநிதி பி.உதயராசா, மற்றும் புளொட் கூட்டமைப்பின் இ.இராகவன் ஆகியோர் இந்த அறிக்கையில்  கையொப்பமிட்டுள்ளனர்.

 (R.A & R.N)


  Comments - 0

 • Thilak Sunday, 15 August 2010 12:24 AM

  மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உருப்படியாக எதையேனும் செய்யப்பாருங்கள். இல்லையேல் இப்படியே கவலை தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டியதான்.

  Reply : 0       0

  Ramesh Sunday, 15 August 2010 12:36 AM

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தனது பிரதிநிதியொருவரை இந்த அரங்கத்திற்கு அனுப்பி அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்தால் தவறில்லை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .