2021 மார்ச் 08, திங்கட்கிழமை

சுயவிருப்பமின்றி பல இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்: போவன்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயவிருப்பமின்றிய நிலையில் மேலும் பல இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்டனர்.  அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து மற்றுமொரு இலங்கையர்களைக் கொண்ட  குழுவினர் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்தின் மூலம்  அவர்களின் சுயவிருப்பமின்றி கொழும்புக்கு நேற்று திருப்பியனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள  அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த வாரம் அல்லது அதற்கு முன்னைய நாட்களில் 30 ஆண்களைக் கொண்ட குழுவினர் படகுகளில் அவுஸ்திரேலியா வந்தனர். இவர்களின் நிலைமை சம்பந்தமாகவும் அவுஸ்திரேலியாவிலிருந்து இவர்கள் வெளியேற்றப்படக்கூடிய சூழ்நிலை பற்றியும் இவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் சர்வதேச கடப்பாடுகள் தொடர்பான எத்தகைய பிரச்சினைகளையும் அவர்கள் எழுப்பவில்லை.

செல்லுபடியான வீஸா இல்லாமல் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு எத்தகைய சட்டபூர்வ உரிமையையும் கொண்டிருக்காததனால், அவர்கள் அங்கிருந்து துரிதமாக வெளியேற்றப்பட்டனர்.

கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்தி உயிராபத்தையும் இம்மக்கள் எதிர்நோக்குகின்றனர். இவர்கள்; பெருந்தொகை பணத்தை வீண்விரையமாக்குகின்றனர். அவுஸ்திரேலியா வந்து சேர்ந்ததும் இவர்களுக்கு வீஸாவோ, துரித பெறுபேறுகளோ, விசேட கவனிப்புக்களோ கிடைப்பதில்லை.

ஆட்கடத்தலை முறியடிப்பதற்கும் அபாயகரமான இப்படகுப் பயணங்களை அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் மேற்கொள்வதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் திடசித்தம் கொண்டுள்ளது.

நௌருவுக்கும் வெகுவிரைவில் மனுஸ் தீவுக்கும் ஒழுங்கான அடிப்படையில் தொடர்ந்தும் மக்களை நாம் இடமாற்றம் செய்யவிருக்கின்றோம்.

அவுஸ்திரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளுக்கு உட்படாத மக்களை, பொருத்தமான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டுக்கு திருப்பியனுப்பும்.

அவுஸ்திரேலியாவில் கிடைக்கக்கூடிய வசதிகள் தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளையே கடத்தல்காரர்கள் வழங்குகின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதியிலிருந்து 156 இலங்கையர்கள் சுயவிருப்பத்தின் பேரிலோ அல்லது சுயவிருப்பமின்றியோ நாடு திரும்பியுள்ளனர்.  சுயவிருப்பற்ற நிலையில் திருப்பியனுப்பப்பட்ட மக்களுக்கு மீளிணைந்துகொள்ளும் உதவி கிடையாது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .