2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

24ஆம் திகதி வரை கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவு

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரசபையின் மேயர் உள்ளிட்ட ஐந்து பேரை கைதுசெய்வதற்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து, குருநாகல் நகர மேயர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை நேற்று(11) தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக,  குருநாகல் புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உட்பட ஐவருக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் படி பதில் பொலிஸ்மா அதிபரினால் குறித்த பிடியாணை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்தேக நபர்களின் அலைபேசி கலந்துரையாடல் ஊடாக, அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குருநாகல் நகர மத்தியில் அமைந்திருந்த இரண்டாவது புவனேகபாகு மன்னர் பயன்படுத்தியதாக கருதப்படுகின்ற அரசவை கட்டடம் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண, நகர ஆணையாளர் பிரதீப் நிஷாந்த திலகரட்ண, நகரசபை பொறியியலாளர் ஷமிந்த பண்டார அதிகாரி உட்பட ஐவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .